Friday, February 21, 2020

#பணம்_பணம்

#பணம்_பணம்
————————-
இன்றைக்கு காலை ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள பழைய கவிதா ஓட்டல் அமைந்த இடத்திற்கு செல்லக் கூடிய பணி இருந்தது. பக்கத்தில் தான் வைஜெயந்தி மாலா பாலி வீடும் இருந்தது. கவிஞர் கண்ணதாசனின் அதிகமான இருப்பு கவிதா ஓட்டல். அவரைக் காண  அங்கே  அடிக்கடி செல்வதுண்டு. கவிதா ஓட்டல் குலோப் ஜாம் நன்றாக இருக்கும்.

இன்றைக்கு  தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த நிர்வாகத்தில் உள்ளவர் அந்த பகுதிக்கு என்னோடு ஒரு வேலையாக வந்திருந்தார். அவர் பணம் பணம் என்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு வந்த போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கடந்த காலத்தில் கூறிய வார்த்தைகள் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பின் 1976 என்று  நினைக்கிறேன், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்கிரஸ் இணைப்பு விழா பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்ற நேரம் அது. ஒரு காங்கிரஸ் மூத்த  தலைவர்ஒருவர் , இப்போது அவர் இல்லை, இணைப்பு விழா பணிகளுக்கு அவரிடம் கொடுத்த பணத்திற்கு சரியான கணக்கு வழக்கு  இல்லை  என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதைக் குறித்து  கவிஞர்  கண்ணதாசன் சொல்லும்  போது, மனிதன்  ஏன் திருமண்ணும் விபூதியும் நெற்றியில் இடுகிறான் என்றால் இறுதியில் நீ தனியாக பிணமாக மண்ணுக்கு தான் போகின்றாய்  என்பதை தினமும் தெரிந்துக் கொள்வதற்காக தான் இந்த பழக்கங்கள். உன்னுடைய இறுதிப் பயணத்தில்  உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் வருவார்கள். இடுகாட்டில் சடங்குகள் முடிந்தவுடன் உனக்காக கொண்டு வந்த  பானையைக் கூட உடைத்துவிட்டு உன்னுடைய முடிவை அறங்கேற்றி  விட்டு  திரும்பிக் கூட பார்க்காமல் வந்து விடுவார்கள். இது தான் மனித வாழ்வு என்றார். அப்போது கவிஞர் ஏற்ற இறக்கத்தோடு அவருடைய தொனியில் சொல்லும்போது இந்த வார்த்தைகள்  கவனத்தை  ஈர்த்தது. கவிஞரும்  இந்த  மாதிரி  பணத்தை சேர்த்து வைத்து பணம் தான் எல்லாம் என்று நினைக்கின்ற நினைக்காத ஒரு ஆளுமை ஆவார். அவர் பணத்திற்கு எப்போதும்   முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இந்த கருத்தை உடன் வந்த  கார்ப்பரேட்  நண்பரிடம் சொன்னபோது அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.02.2020

#ksrposts
#ksradhakrishnanposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...