இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது வருட எழுச்சி நாள் : உயிர்ப்புடன் இருக்கும் மக்கள் ஆணை !
இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்பதனை உலகிற்கு முரசறைந்து தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆண்டு அமைந்துள்ளது.
1976ம் ஆண்டு மே 14ம் நாளன்று, தந்தை செல்வா அவர்களின் தலைமையில்; அனைத்து தமிழ் கட்சிகளாலும், அமைப்புக்களாலும் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது, தமிழ்மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள்; வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது.
இத்தீர்மானம், பின்வரும் விடயங்களை முரசறைந்திருந்தது :
(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.
(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.
இவ்வாறு வட தமிழீழத்தின் வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இத்தீர்மானத்தினை தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு 1977ம் ஆண்டு இடம்பெற்றிருந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் தங்களது தெளிவான ஆணையையும் வழங்கியிருந்தனர்.
பௌத்த மேலாதிக்க இனவாத அரச கட்டமைப்பினைக் கொண்டிருந்த சிறிலங்காவின் அரசமைப்பு, தனது 6வது அரசியற்சட்டத் திருத்தம் ஊடாக ஓர் இன மக்கள் தாங்கள் விரும்புகின்ற அரசியற் நிலைப்பாட்டினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கான அடிப்படை மனித உரிமையினை மறுத்திருந்தது.
இது, சிறிலங்காவின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் ஊடாக தமிழர்கள் தங்களின் அரசியற் விருப்பினை அடைமுடியாது என்ற நிலையும், ஈழத் தமிழர் தேசம் மீது சிங்கள ஆட்சியாளர்கள் அரச பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்த போக்கும் தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தது.
சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிராக கரந்தடி தாக்குதல்களாக விரிந்த தமிழர்களின் ஆயுதப் போராட்டம், ஆயிரம் ஆயிரம் போராளிகளது வீரத்தினாலும், மாவீரர்களதும், மக்களதும் விலைமதிக்க முடியதா அர்பணிப்புக்கள் தியாகங்கள் ஊடாக, மரபுழி இராணுவ முறைமையாக பரிமாணம் பெற்றது.
இது தமிழீழத் தனியரசுக்கான படிநிலையாக ஓர் நடைமுறைத் தமிழீழ அரசினை ஈழத் தமிழர் தேசத்தில் நிறுவியது.
இலங்கைத் தீவில் தமிழீழம் – சிறிலங்கா என்ற இரண்டு தேசங்கள் எனும் வலுச் சமநிலையினை மட்டுமல்ல, தமிழர்களுக்கான ஓர் அரசியல் வெளியினையும் இந்த நடைமுறைத் தமிழீழ அரசு வெளிப்படுத்தியிருந்த நிலையில், பெரும் இனவழிப்பு போர் ஒன்றின் ஊடாக நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்து ஈழத் தமிழர் தேசத்தினை சிங்கள அரச பயங்கரவாதம், மே 2009ல் ஆக்கிரமித்துக் கொண்டது என்பது ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் துயர் நிறைந்த பக்கங்களாகும்.
ஈழத்தமிழர் தேசம் சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டு இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளியற்ற வேளை, இலங்கைத் தீவுக்கு வெளியேயான அனைத்துலக வெளியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஈழத்தமிழர்கள் உருவாக்கிக் கொண்டனர்.
புலம்பெயர் தேசங்களில் சனநாயக வழிமுறைத் தேர்தல் ஒன்றின் மூலம் இந்த அரசாங்கத்தினை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மூச்சு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்ற செய்தியினை 2010 மே18ல் உலகிற்கு உரக்க தமிழ்மக்கள் கூறினர்.
இதன் தொடர்சியாக, நாளைய தமிழீழம் எத்தகைய உரிமைகளை வழங்கி நிற்கும் என்பதனை உலகிற்கு எடுத்துக்கூறும் பொருட்டு, மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தமிழீழ சுதந்திர சாசனம் 2013, மே18ல் முரசறையப்பட்டது.
இவ்வாறு ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் தடம், பல்வேறு ஏற்ற இறக்கங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மலர்ந்துள்ள 2016ம் ஆண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக அமைந்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு இவ்வாண்டில், வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தினை மக்கள் தளத்திலும், அரசியற் தளத்திலும், கருத்தியல் தளத்திலும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது காலத்தின் கடமையாகவுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த மே14 நாளினை மையப்படுத்தி, வரும் மே 13 முதல் 18 வரையிலான காலப்பகுதியில், மெய்நிகர் தமிழீழ அரசாங்க செயன்முறையொன்றின் ஊடாக தமிழீழத்துக்கான அரசியல் யாப்பு வரைதல், பொதுசன வாக்கெடுப்பு ஆகிய விடயங்களுக்கான செயன்முறை பெரு நிகழ்வரங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் நிகழ்த்துகின்றது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை அரசியல் ரீதியாக அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்குரிய செயல்முனைப்பாக இது மேற்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள், புதிய அரசியல் அமைப்பின் ஏற்பாடொன்றின் ஊடாக, தமிழர் பிரச்சனைக்கு அரசியற் தீர்வு என்ற பெயரில் ஒன்றினை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு முற்படுகின்றனர்.
இந்நிலையில், வட்டுகோட்டைத்தீர்மானத்தினை மையப்படுத்தி தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பு வரைவுக்கான முனைப்பு மற்றும் அரசியற் தீர்வுக்கான பொறிமுறையாக தமிழீழம் உள்ளடங்கிய வகையில் பொதுசன வாக்கெடுப்புக்கான அறைகூவல் ஆகியன ஈழத்தமிழர்களின் தெளிவான நிலைப்பாட்டினை உலகிற்கு வெளிப்படுத்தும் விடயமாக அமைகின்றது.
No comments:
Post a Comment