Wednesday, May 11, 2016

அறிவோம் அரசியலை

நண்பர், ஆங்கில இந்து ஏட்டின் சிறப்பு செய்தியாளர் திரு. Kolappan Bhagavathy அவர்களுடைய அறிவோம் அரசியலை என்ற பதிவு கவனத்தை ஈர்த்தது. சிலர் அரசியலை போகிற போக்கில் சாக்கடை என்கிறார்கள். இலட்சியவாதிகளுக்கு, பொதுவாழ்வில் நேர்மையாக உள்ளவர்களுக்கு அரசியல் ஒரு தவம். அரசியலில் சுயநல நோக்கில் உள்ளவர்களுக்கு அது வணிகம். சிலருக்கு பொழுதுபோக்கு. சில கிரிமினல்களுக்கு அது பாதுகாப்பு. இதையெல்லாம் மீறி நல்ல அரசியல் என்ற ஒன்று உண்டு. அரசியலில் கற்க வேண்டியது உலக அளவாகும்.

அரசியல் என்பது குறிபார்த்து சுடும் ஏகலைவ அம்பு விளையாட்டல்ல. வேத விற்பன்னர்களும், யாம் தெய்வமென பாவிக்கும் யூதர்களும், ஸ்லாவிக் ருஷியர்களும் கொண்டாடும் சதுரங்கம். இது சுறாக்கள் ரத்த வெறியெடுத்து அலையும் கடலில் அசைந்தாடும் கட்டுமரம் மேல் அமர்ந்து விளையாடும் சதுரங்க விளையாட்டு.

பிதாகோரஸ், ஆர்கிமிடிஸ், நியூட்டன், பாஸ்கல், சென்ட்ரிஃபிகல், சென்ட்ரிஃபெடல் ஃபோர்ஸஸ் போன்ற விதிகளை உள்ளடக்கிய கணிதம், பௌதிகம், ரசாயனத்தோடு சார்ந்ததுதான் அரசியல். எனவே அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். நேர்மையான அரசியல் களப்பணியாளர், சமூக பொறியாளர் என்று அறியப்படுவதும் உண்டு.


பொதுவாழ்வை பற்றி சாமுவேல் ஜான்சன் சொன்ன "Patriotism is the last refuge of scoundrels" இந்த கருத்து ஏற்புடையதல்ல. அரசியல் சதுரங்கத்தில் சூதுகளும், பகைகளும், உழைப்பை சுரண்டும் நன்றியற்றத்தனங்கள், அவிழ்க்க முடியாத முடிச்சுகளையும் லாவகமாக சந்தித்து வெறுப்பு, விரக்தியில்லாமல் தொடர் களப் பணிகளில் இருப்பதுதான் பொதுவாழ்க்கையின் அடிப்படை. வெற்றியோ, தோல்வியோ, பின்னடைவோ என்பதையெல்லாம் புறந்தள்ளி நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையோடு நேர்மையாக சென்றாலே, எதையும் எதிர்கொண்டு சாதிக்கலாம். இதுதான் அரசியல். தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைக் கொண்டு நிர்ணயிப்பது அரசியல் அல்ல. என்னிடம் 43ஆண்டுகளாக களத்தில் இருக்கின்றீர்களே, எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலையே என்று கேட்கும்போது வருத்தப்படுவதில்லை. மன்னிக்கவேண்டும். எனது உதவியாளர்கள் கூட அந்தப் பதவிக்கு வந்துவிட்டார்கள். சில சமயம் இதை கேட்கும்போது கோபம் வரும். சில சமயம் நகைப்பும் வரும். இவர்களுக்கெல்லாம் கடந்த காலங்களில் என்னுடைய முயற்சிகளான உச்சநீதிமன்றத்தில் தேசிய நதி நீர் இணைக்கவேண்டும் என்ற 30 ஆண்டு போராட்டமும், நீதிமன்றங்கள் மூலமாக கண்ணகி கோட்டம், விவசாயிகளுடைய கடன் நிவாரணம்-ஜப்தி நடவடிக்கைகள் நிறுத்தல், கூடங்குளம் அணுஉலை பிரச்சினை, ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலைப் பிரச்சினை, மனித உரிமைகள் மீறல், கைதிகளுக்கு வாக்குரிமை, தேர்தல் சீர்திருத்தம், போக்குவரத்து நெரிசல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சில முடிவுக்கு வந்துவிட்டன. சில நிலுவையில் உள்ளன. இந்தப் போராட்டங்களையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நீங்கள் எம்.பி. அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகவில்லையே என்று கேட்கும்போது அட பைத்தியக்கார அரவேக்காடுகளே என்றுதான் மனதில் படுகிறது. வெறும் பதவியே பொதுவாழ்க்கையின் குறியீடு என்றால் அப்படிப்பட்ட அரசியல் அபத்தமானது. பதவிகள் நம்மை நோக்கி வரவேண்டும். இப்படி அவமானங்களும் பொதுவாழ்க்கையில் பெறவேண்டி உள்ளது.

சிலருக்கு பொதுவாழ்வில் சில இலட்சியங்கள் உண்டு. அதை வென்றெடுப்பதுதான் உண்மையான அரசியல்வாதியின் கடமை. இதில் தேர்தலில் வெற்றி பெறுவது ஓர் அங்கம்தான். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல. தோல்வியுற்றவர்கள் எல்லாம் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்ல. அரசியல் ஒரு குறுகிய வட்டத்தில் அடைந்ததல்ல. அதில் வெற்றி பெறுவது என்பது கொள்கைகளையும், இலட்சியங்களையும் மீட்பதுதான். வ.உ.சி.யோ, பாரதியோ, பெரியாரோ, ஜெயப்பிரகாஷ் நாராயணனோ, ஆச்சார்யா நரேந்திர தேவோ, அச்சுத பட்டவர்த்தனோ, நாராயண குருவோ, விநோபாவோ போன்றவர்கள் எந்த பதவிகளையும் அமர்ந்ததும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையும் அவர்கள் கண்டெடுத்துத் தந்த தத்துவங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

அரசியல், விவசாயி பருவ காலங்களில் பயிர் செய்யும் விவசாயமும் அல்ல. ஒரு நீண்ட தொலைநோக்கு பார்வையோடு ஏற்ற இறக்கங்களோடு எட்டுத் திக்கும் பயணிக்க வேண்டியதுதான் அரசியல்.

பூமி பந்து சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களில் மனமிருந்தால் மாற்றங்களை பொதுவாழ்வில் திடமாக கொண்டு வரலாம். அரசியல் சதுரங்கத்தில் நேர்மையாக களமாடினால் வரலாற்று பதிவில் நேர்மையான இடமிருக்கும்.

அரசியல் என்பது அம்சதுளிகா மஞ்சமல்ல என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணரவேண்டும்.

திரு. கோலப்பன் அவர்களுடைய பதிவில் உள்ள சங்கதிகளை அனைவரும் கவனிக்கவும் வேண்டும். பரிசீலிக்கவும் வேண்டும்.

அறிவோம் அரசியலை
======================

அரசியலையும் அரசியல்வாதிகளையும் எள்ளி நகையாடும் மனோபாவம் இந்திய நடுத்தர வர்க்கத்திடம் அதீதமாக உள்ளது. "எனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்ல சார்" என்று சொல்வது ஒரு வகையான பேஷன். "யார் ஜெயிச்சா என்ன? நாம உழைச்சாதான் நாம சாப்பிட முடியும்" என்று வேறு சிலர் தத்துவம் பேசுவார்கள். அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்வது எளிது. அரசியலில் இருந்து அந்நியப்பட்டு மக்கள் நிற்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்பதை உணர மறுக்கிறோம். மக்களின் தினசரி வாழ்க்கையை அரசியலும் அரசாங்கமும்தான் தீர்மானிக்கின்றன. அரசியலைப் புரிந்து கொண்டால் நாம் சந்திக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயம் இருக்கும். இக்கருத்துகளை ஜெர்மானிய நாடக ஆசிரியர் பெர்டோல்ட் பிரக்டை போல் மிகத் தீவிரமாக யாரும் வெளிப்படுத்தியதில்லை. இன்று காலை ஒரு நண்பரிடம் இரு்நது பிரக்டின் கருத்து அடங்கிய வாட்ஸ் அப் செய்தி வந்தது. அரசியல் தெரியாதவன்தான் கல்வியறிவு அற்றவன் என்கிறார் அவர்.

“The worst illiterate is the political illiterate, he doesn’t hear, doesn’t speak, nor participates in the political events. He doesn’t know the cost of life, the price of the bean, of the fish, of the flour, of the rent, of the shoes and of the medicine, all depends on political decisions. The political illiterate is so stupid that he is proud and swells his chest saying that he hates politics. The imbecile doesn’t know that, from his political ignorance is born the prostitute, the abandoned child, and the worst thieves of all, the bad politician, corrupted and flunky of the national and multinational companies.”

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...