Thursday, May 12, 2016

கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்க இலங்கை கப்பல் படை பணிகளை ஆரம்பித்துள்ளது - Katchatheevu


பிரச்சினைக்குரிய பாக் ஜல சந்தியில் உள்ள கச்சத் தீவில் பழமை வாய்ந்த அந்தோணியார் கோவிலை 1930இல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார். அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டிலிருந்து கொண்டு வந்த ஓடுகளை 1951இல் வேய்ந்தனர்.

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு பிப்ரவரி மாத இறுதியில், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கச்சத்தீவுக்கு சென்று, அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

பழமை வாய்ந்த ஓடுகளால் வேயப்பட்ட இந்த அந்தோணியார் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு வருவது வாடிக்கை. இன்றைக்கு இந்த தேவாலயம் இருக்கும்போது இன்னொரு புதிய தேவாலயம் கட்ட இலங்கை கடற்படை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 10.5.2016 அன்று ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய தேவாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. இந்த நிகழ்வில் யாழ்பாணம் பிஷப் ஞானப்பிரகாசம் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கடற்கரை தளபதி பியல்.டி. செல்வா, யாழ்பாணம் பங்கு தந்தை அருள்திரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம், அந்தோணி ஜெயரஞ்சன், நிக்சன், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனா போன்றோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த பணிகள் இலங்கை கடற்படை கண்காணிப்பு வளையத்துக்குள் நடக்க இருப்பதாக செய்தியாளர்களிடம் சொல்லியுள்ளனர். இதற்காக பாதுகாப்பு கோபுரங்களும், முகாம்களும், இலங்கை கடற்படை அமைத்துள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலையே விரிவுபடுத்தலாம். இந்த இருநாட்டு மக்களும் இந்த கோவிலை புனிதமாக கருதுகிறார்கள். இந்நிலையில் கத்தோலிக திருச்சபை, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி விகாஸ் ஸ்வரூப் குறிப்பிடும்போது, "இது குறித்த விவரங்களை இலங்கை அரசிடம் கேட்க இருக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்களின் படகுகள் வெறும் 13 படகுகள் தான் இந்தியாவின் வசம் உள்ளது. ஆனால் தமிழக மீனவர்களின் படகுகள் நூற்றுக்கணக்கில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். 34 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை குறித்து தமிழக மீனவர்களிடமும், மத்திய அரசிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரச்சினைக்குரிய இந்த கச்சத்தீவு விவகாரத்தில் மேலும் சிக்கலை உருவாக்கிவிடுமோ என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது. தமிழகத்தின் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதையே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்பொழுது, அங்கு புதிதாக ஒரு தேவாலயம் கட்டுவது ஒரு இணக்கமான நிலை ஏற்படுமா என்றுதான நமக்கு கவலை ஏற்படுகின்றது. ஏற்கெனவே இந்திய மீனவர்கள் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு செல்வதற்கும், தங்களுடைய வலைகளை உலர்த்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் செல்லலாம் என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும், அதை இலங்கை அரசு திட்டமிட்டு புறக்கணித்து பாராமுகமாக உள்ளது. புதிய தேவாலயம் அமைப்பதை விட இருக்கின்ற பழமை வாய்ந்த தேவாலயத்தை விரிவு படுத்தியிருக்கலாம்.

கச்சத்தீவு தீராத பிரச்சினையாகவும், ரணமாகவும் தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதை இலங்கை அரசு உணரவேண்டும்.

இது குறித்து பல்வேறு கட்டங்களில் தினமணியில் வெளிவந்த கச்சத்தீவு குறித்த விரிவான கட்டுரைகளை என்னுடைய இணையதளத்திலும் (www.ksradhakrishnan.in), வலைதளத்திலும் (http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/) காணலாம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...