அழகர் அணை திட்டம்
வானம் பார்த்த பழைய ராமநாதபுரம் மாவட்டம், இன்றைய விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் பகுதிகளுக்கு நீர்ப் பாசனத்துக்காகவும், குடிநீர் வசதிக்காகவும் அழகர் அணை திட்டம் நாட்டு விடுதலைக்கு முன்பே 1929லிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
மழை மறைவுப் பகுதியில் அமைந்து அவதியுறும் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் தாலுகா (தற்போதைய இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் விருதுநகர் தாலுகாக்கள்) விவசாயிகளை,
19.10.49 ஆம் நாள் பக்தவத்சலம் அவர்கள் விருதுநகரில் சந்தித்து மேற்கில் மழை நிறைவுப் பிரதேசமான வரிசை நாட்டுப் பகுதியில் உற்பத்தி ஆகும் வள்ளல் (வைகை) நதி நீரை சுரங்கப் பாதை அமைத்து கிழக்கே கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்து அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்று உறுதியும் அளித்தார். ஆனால் எந்த செயல்பாடுகளும் அப்போது இது குறித்து ஈடேறவில்லை.
தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் இதற்கான திட்டம் 1969ல் வகுக்கப்பட்டது. பின்னர் 3.2.1971 அன்று தலைவர் கலைஞர் அவர்களால் அழகர் அணை ஆய்வு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அப்போதைய பொதுப்பணித்துறை இணைச் செயலாளர், திரு. யூ. ஆனந்தராவ் அவர்களின் ஆர்வத்தின் காரணமாக, 18.5.73 அன்று இந்த அணையின் சாத்தியக் கூறு அறிக்கை (Feasibility Report) அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் சாரம் வருமாறு:
1. பெரியார்-வைகைப் பாசனத்தில் எஞ்சி நின்று கடலில் வீணாகும் தண்ணீரின் ஒரு பகுதியே அழகர் அணையில் தேக்கப்படும். இதனா பயன்பெறும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு செண்ட் நிலம் கூடப் புதியதாக நஞ்செய் நிலமாக மாற்றப்படாது.
2. அழகர் அணையில் ஆண்டுக்கு 1200 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கினால் போதும்.
3. வைகையின் உபரி நீர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 2500 மில்லியன் கன அடி கடலில் கலந்து விடுகிறது.
4. அழகர் அணை ஒரு சம்பிரதாயமான அணைக்கட்டே அல்ல. (Not a Conventional Dam)
5. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுமார் 1000 கண்மாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை
அல்லது
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர் வழங்கும் தன்மையில் பெரியாறு-வைகைப் பாசனத்திற்குத் தேவையில்லாத காலத்தில் வீணாகும் தண்ணீரின் ஒரு பகுதியை மலையுச்சியில் தேக்கி வைத்து விருதுநகர் மாவட்டக் கண்மாய்களுக்குத் தண்ணீர் வழங்கும் ஒரு பெரிய கண்மாய்தான் அழகர் அணை.
ஆனந்தராவ் அவர்களின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திர சூடன் [D Dis 54242/73 dated 23/3/74] இது குறித்து ஆணை பிறப்பித்தார்.
அந்த ஆணையில்,
'In these circumstances, reported by the executive Engineer P.W.D. and the Asst Collector Sivakasi CONCURRENCE IS HEREBY ACCORDED on the preliminary proposals sent up by the Executive Engineer P.W.D. Project Investigation Division, Madurai on the Vaigai - Peyanaru Scheme now renamed as ALAGAR DAM Irrigation Scheme at an estimated cost of Rs.7.95 Crores
Sd/. Chandra Choodan
Collector
1971 ல் இதற்கான பணிகள் 23 கோடி ரூபாயில் துவக்கப்பட்டும், இன்றைக்கும் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அப்போது தி.மு.க. ஆட்சி. அவசர நிலைக் காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபின் இந்த திட்டமும் இன்னும் கோரிக்கை வடிவில்தான் உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ரா. கிருஷ்ணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூர், சங்கரன்கோவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திக்குளம் போன்ற கரிசல்மண் பகுதிகளுக்கு பயன்படும் அழகர் அணை, செண்பகத் தோப்பு, பிளவக்கல், இருக்கன்குடி நீர்ப்பாசனத் திட்டங்கள் நீண்ட காலமாக பேசப்பட்டு செயல்பாட்டுக்கு இது வரை வரவில்லை. இவ்வட்டாரத்தில் ஏறத்தாழ 8 ஆயிரம் கண்மாய்கள், 1 லட்சம் கிணறுகள் எப்போதும் வறண்டு உள்ளன. அழகர் அணை, செண்பகத் தோப்பு திட்டமும் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதி வளம் பெறும். செண்பகத் தோப்பு மலைகளின் பின்புறம் 'ப' வடிவில் உள்ள கழுகு மலை, பேய் மலை, உன்னி மலை, பனியன் பாறை பகுதிகள் அதிகமாக மழைப்பிடிப்பு பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்து சற்று வடக்கு நோக்கி சென்று திருவில்லிபுத்தூரில் உள்ள அழகர் மலைப் பகுதிக்கு வருகின்றது.
அழகர் மலைப் பகுதியில் தற்போது தண்ணீர் பாறை ஆறு, செருக்கம் பாறை ஆறு, அழகர்கோவில் ஆறு என 3 சிறிய ஆறுகள் ஓடுகின்றன. இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4065 அடி உயரத்தில் பம்பை ஆறு உள்ளது. இந்த பம்பை ஆற்றுப் பகுதியில், தென் மேற்குப் பருவ, வட கிழக்குப் பருவ மழை காலங்களில் நல்ல மழை பெய்யும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 250 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. பம்பை ஆறும், காக்கியாரும் சேரும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி தேக்க வேண்டும். அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, கோட்டை மலையான் கோவில் காவு வழியாக அணை நீரை திருப்பி அழகர் அணைக்கு கொண்டு வரவேண்டும். இந்த 20 கிலோ மீட்டர் தூரமும் திறந்தவெளி வாய்க்கால் மூலமே தண்ணீரைக் கொண்டு வர முடியும். கோட்டை மலையான் கோவில் காவில் ஒரு மதகு அமைக்க வேண்டும்.
வைகை ஆற்றின் குறுக்கே வாலிப்பாறை அருகே 613 மி.கன அடி கொண்ட ஒரு அணை அமைக்கப்பட்டு, இந்த அணையிலிருந்து இரண்டு முக்கிய கால்வாய்கள், ஒரு சிறு கால்வாய் மற்றும் குகைக் கால்வாய் மூலம் தண்ணீரை பேயனாறு பள்ளத்தாக்குக்கு கொண்டு சென்று அங்கு ஒரு அணைக் கட்டி அதில் சேமிப்பதுதான் அழகர் அணை திட்டமாகும். இதன் அருகே உள்ள செண்பகத் தோப்பு என்ற இடத்தில் அணை கட்டப்பட்டு, இந்த அணையிலிருந்து வலது, இடது பக்கங்களிலும் இரண்டு கால்வாய்கள் வெட்டப்பட்டு 165 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். 1974ல் இத்திட்டத்தின் மதிப்பீடு 7.96 கோடி ஆகும். பின்பு 27 கோடி ரூபாயாக திட்ட மதிப்பீடு கூடுதலாக்கப்பட்டது. 1991ல் மறு மதிப்பீடு 157 கோடியாக கூடுதலானது. இப்போது இதன் மதிப்பீடு கிட்டத்தட்ட 280 கோடிக்கு மேலாகும். இதற்கிடையில் மத்திய-தேசிய நீர் வளர்ச்சி குழுமும் கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி பாயும் உபரி நீரை கிழக்கு நோக்கி திருப்பும்போது அழகர் அணையின் கொள்ளளவும் உயரும். அழகர் அணை திட்டத்தினால் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுவது மட்டுமல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வரையில் குடிநீர் வசதியும் கிடைக்கும். இந்த அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால் மின் உற்பத்தி செய்ய சிறு புனல் மின் நிலையமும் அமைத்து 1114 மின் யூனிட் மின்சாரமும் கிடைக்கும்.
அழகர் அணையில் மூன்று கால்வாய்கள் வெட்டப்பட்டு கிருஷ்ணன் கோவில் வழியாக அர்ச்சுனா ஆற்றில் கலந்து இந்த நீரை பரமக்குடி வரை கூட கொண்டு செல்லலாம் என்ற திட்டங்கள் உள்ளன. மூன்றாவது கால்வாய் வெட்டி வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வழியாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள கேரளா அச்சன்கோவில்-பம்பை-தமிழக வைப்பாறோடு இணைக்கலாம்.
1929 ஆம் ஆண்டிலேயே மெக்-டவுலி என்னும் நிபுணரால் குறியிட்டுக் காட்டப்பட்டு 1959ல் வைகை அணை கட்டி முடிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்து ஆண்டுதோறும் வைகை அணைக்கட்டி உபரி நீர் கடலில் போய் வீணாகக் கலக்கின்றது.
வைகை ஆற்றின் மூலமாகக் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீர் அளவு
1963 - 64 ஆம் ஆண்டு 9229 மில்லியன் கன அடி
1964 - 65 ஆம் ஆண்டு 3232 மில்லியன் கன அடி
1966 - 67 ஆம் ஆண்டு 7415 மில்லியன் கன அடி
1967 - 68 ஆம் ஆண்டு 5491 மில்லியன் கன அடி
1968 - 69 ஆம் ஆண்டு 475 மில்லியன் கன அடி
1970 - 71 ஆம் ஆண்டு 245 மில்லியன் கன அடி
1971 - 72 ஆம் ஆண்டு 5234 மில்லியன் கன அடி
1972 - 73 ஆம் ஆண்டு 252 மில்லியன் கன அடி
1973 - 74 ஆம் ஆண்டு 26 மில்லியன் கன அடி
1974 - 76 இரண்டு ஆண்டுகள் ----
1976 - 77 ஆம் ஆண்டு 12436 மில்லியன் கன அடி
1977 - 78 ஆம் ஆண்டு 2387 மில்லியன் கன அடி
1978 - 79 ஆம் ஆண்டு 17776 மில்லியன் கன அடி
1979 - 80 ஆம் ஆண்டு ----
1980 - 81 ஆம் ஆண்டு 8736 மில்லியன் கன அடி
வீணாக கடலுக்குச் செல்லும் இந்த நீரை வைகை-பெரியாறு ஆயக்காட்டு விவசாயிகள் விவசாயிகள் பயன்படுத்த இயலாது.
1929 ஆம் ஆண்டு பொறியியல் வல்லுநர் மெக்-டவுலி இதை முன்னோக்கிக் குறிப்பிட்டு 'வரிசை நாட்டு'க்கு மேலே மலைப்பகுதியில் ஓர் அணை கட்டி ராமநாதபுரத்தின் (இன்றைய காமராசர் மாவட்டம்) மேற்குப் பகுதியில் திருவில்லிபுத்தூர் சாத்தூர் தாலுகாக்களுக்கு நீர் வழங்க இயலும் எனத் தொலைநோக்கோடு திட்டமிட்டார்.
வரிசை நாட்டில் வாலிப்பாறை அருகில் மூலை வைகையில் முதல் அணை கட்டும் இடங்கள் பொறி இயல் முறையில் குறியீடு செய்யப்பட்டு, அங்கிருந்து இரண்டு சுரங்கப் பாதைகள் மூலமாக திருவில்லிபுத்தூருக்கு மேற்கே அழகர் கோவில் பள்ளத்தாக்கின் குறுக்கே அணை கட்டுமிடம் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அழகர் அணைத் திட்டம் நிறைவேறுவதால்,
1. வைகை அணைக்கட்டுப் பாசனதாரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் விருதுநகர், அதை ஒட்டிய நெல்லை மாவட்டங்கள் எல்லாம் பயன்பெறும். இப்பகுதியெல்லாம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள்.
2. இவ்வட்டாரத்தில் பருத்தியும் மிளகாயும் மட்டுமே, மழை, நிலத்தடி நீரை நம்பி இதுவரை பயிர் செய்யப்பட்டுவருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் முப்போகமும் சாகுபடி செய்யலாம்.
3. ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகிரி, சேத்தூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை வரை குடிநீர் வசதியும் பெறலாம். விருதுநகர், நெல்லை மாவட்டத்தின் வடபகுதி, பரமக்குடி வரை, இருக்கன்குடி, விளாத்திக்குளம் வட்டாரம் வரை இந்த அணையினால் பயன்பெறும்.
4. இந்த அணை நிறைவேற்றப்படும்போது ஏற்கெனவே மத்திய அரசின் செயல்திட்டத்தில் உள்ள கேரள அச்சன்கோவில்-பம்பை தமிழக வைப்பாறோடு இணைக்கும்போது இதனுடைய உபரிநீர் தெற்கு கால்வாய் மூலம் அந்த இணைப்பில் சேரும். மழைக்காலத்தில் வைகையில் வரும் வெள்ளத்தை வீணாக்காமல் பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.
5. வறட்சிக் காலங்களில் விருதுநகர் மாவட்டத்தில் நீண்டகாலப் பலன் எதுவும் இல்லாமல் தற்காலிகமாக வறட்சி நிவாரணத்துக்காக செலவழிக்கப்படும் 20 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு மீதமாகும்.
தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத்தொழிலே இங்குள்ள மக்களின் ஜீவனமாக உள்ளது. இந்த கந்தக பூமியில் மழை பெய்தால்தான் விவசாயம். இந்த நிலையில் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டியது அவசரமும், அவசியமும் ஆனதாகும்.
அழகர் அணைத் திட்டத்திற்கு ஆகும் செலவு 70 கோடி அல்லது அதற்கு மேலானாலும் நீண்டகால தவணையில் நஞ்செய், புஞ்செய் நில உடைமையாளர்கள் செலுத்தத் தயாராக உள்ளனர். இதற்கான விவசாயிகளின் ஒப்புதலை ரத்தக் கையெழுத்திட்டு அரசுக்கு விண்ணப்பங்களில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
1972, 73 காலகட்டங்களில் அரசின் அஞ்சல் போக்குவரத்து கோப்புகள் கிடப்பில் போடப்பட்டதால் இத்திட்டம் இன்னும் உறக்கத்திலேயே உள்ளது. உலக வங்கியும் இத்திட்டத்தை அங்கீகரித்து கடன் தருவதாக உறுதி அளித்தும் கேரள அரசின் பிடிவாதப் போக்கும், தமிழக அரசின் மெத்தன போக்கினாலும் இத்திட்டம் இதுவரை கிடப்பில் உள்ளது.
தி.மு.க. 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருந்த அண்ணன் பெ. சீனிவாசன் அழகர் அணை குறிப்புகளை குறித்து என்னிடம் பெற்று சட்டமன்றத்திலும் பேசினார். இது குறித்து நான் தயாரித்த மனுவை கலைஞர் அவர்களிடம் அவரும், நானும் 5.8.1989 அன்று நேரிடையாக வழங்கினோம். இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்திலும் பல நேரங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
1983ல் நதிநீர் இணைப்பு வழக்கை நான் தாக்கல் செய்து கடந்த 27.2.2012ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் அழகர் அணை திட்டமும் பிரதான பிரச்சினையாகவும் குறிப்பிட்டிருந்தேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அழகர் அணை திட்டமும் மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் என்ற நிலை உள்ளது. கள்ளழகர் அழகர் கோவிலிருந்து நகர்ந்து வருவது போல, மதுரைக்கு தாமதமாக வந்து வைகையாற்றில் இறங்கியதைப் போல, அழகர் அணையும் தாமதமாகத்தான் வருமோ என்ற மனக்குறை இன்றைக்கும் உள்ளது.
No comments:
Post a Comment