Friday, May 20, 2016

செண்பகவல்லி அணை இடிப்பு குறித்து விரிவான பதிவு

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும்  இராஜபாளையம் வரை வேளாண்மை மற்றும் குடிநீருக்கு எதிர்காலத்தில் பயன்படும் திட்டமான செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு திடீரென இடித்துள்ளது. இந்த இடிப்பை சீர் செய்து, இத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோவில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி ஜமீன் நிர்வாகத்தால் கட்டப்பட்டது.

இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட  கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகை 5 லட்சத்து 15 ஆயிரத்தை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக இங்கிருந்த தடுப்பணையின் சுவரை கேரள அரசு இடித்துவிட்டது.

செண்பகத்தோப்பு அல்லது செண்பகவல்லி என்று அழைக்கப்படுகின்ற அணைத் திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் வட்டாரங்களில் அப்போது கடுமையான வறட்சி. விவசாயம் பாதிக்கப்பட்டு கால்நடைகளும் மடிந்தன. சிவகிரி ஜமீன்தார் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்கின்ற மழைநீரை மேற்கு முகமாக கேரளாவிற்கு செல்வதைத் தடுத்து கிழக்கு முகமாக தமிழகத்தின் இந்த பகுதிகளுக்கு நீரை திருப்பி விட்டார். திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒப்புதலின்படி வாசுதேவநல்லூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு தடுப்பணை 1733 ல் அமைக்கப்பட்டது. சிவகிரி ஜமீனைச் சார்ந்த கஸ்தூரி ரங்கன் என்பவர் மேற்பார்வையில் செண்பகவல்லி குறுக்கணை கன்னிமர் மதகு என்ற இடத்தில் கட்டப்பட்டு மதகுகள் அமைக்கப்பட்டன. மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்கு சென்று கலந்த நீர் கிழக்கு முகமாக திருப்பப்பட்டது.

இதனால்தான் முல்லைப்பெரியாறின் நதிமூலம் சிவகிரி மலைகள் என்று குறிப்பிடுவதுண்டு. 267 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை, காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நிர்மாணிக்கப்பட்டது.  1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமெண்ட் இல்லாமல் சுண்ணாம்பு கற்கலால் அணையின் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அக்காலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

செண்பகவல்லி அணையிலிருந்து நீர்வரத்துகள் தீர்த்தப்பாறை என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து தலையணை என்ற இடத்தை அடைந்து இரண்டு பிரிவாக பிரிகின்றது. ஒரு பிரிவு குலசேகரப்பேரி கண்மாய், ராமநாதபுரம் கண்மாய், வாசுதேவநல்லூர் கிழக்கு கண்மாய், நெல்கட்டும்செவல் கண்மாய் வழியாக கரிவலம்வந்தநல்லூர்  கண்மாயை அடைந்து, அங்கிருந்து பருவக்கொடி, காரிசாத்தான், மரத்தோணி பெரியகுளம், திருவேங்கடம் கண்வாய்க்கு வந்து அங்கிருந்து வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் சேரும்.

இதைப்போலவே தலையணையில் பிரியும் இன்னொரு பிரிவு ராஜசிங்காப்பேரி  கண்மாய், பெரிய உடைப்பேரி  கண்மாய், விஜயரங்கப்பேரி கண்மாய், சிவகிரி கண்மாய், தென்கால் கண்மாய், இரட்டைக்குள கண்மாய் வழியாக செல்கிறது. ராஜசிங்கப்பேரி  கண்மாயிலிருந்து இன்னொரு கால்வாய் பிரிந்து, உள்ளாறுக்கு செல்கின்றது. சிவகிரி கண்மாயிலிருந்து வடகாலில் பிரிந்து கால்வாய், கோணார்குளம், பெரியகுளம், விஸ்வநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்லும். இந்த வெம்பக்கோட்டை அணை தண்ணீர் வைப்பாற்றில் திருப்பப்படுகிறது. திருப்பப்பட்ட தண்ணீர் சாத்தூர், இருக்கன்குடி, எட்டயபுரத்து வடபகுதி, விளாத்திகுளம் வழியாக வேம்பாறு அருகே தெற்கு வைப்பாறு என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சிமலை, கன்னிமலை ஆறு, அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் சுற்றளவில் உற்பத்தி ஆகிறது. ஆண்டு முழுவதும் நீர் வரத்து ஓடிக்கொண்டே இருக்கும். எனவே இந்த நதியை திருப்பினால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் பெறும். அது மட்டுமல்லாமல் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு இணைக்கும்பொழுது செண்பகவல்லி அணையிலிருந்து வரும் தண்ணீரும் அதில் இணைந்து தண்ணீருடைய அளவும் அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் இரண்டு போகம், மூன்று போகம் என்று சாகுபடி செய்யலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பெரும் மழையில் 1950ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கத்தால் செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பெடுத்து கிழக்கு நோக்கி பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாறில் கலந்துவிட்டது. இந்த உடைப்பை 1956-57 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு சீரமைத்தும் 1969ம் ஆண்டில் பெய்த கனமழையில் திரும்பவும் தடுப்புச்சுவர் இடிந்துவிட்டதால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப்பெரியாறுக்கே சென்றது. இந்த அணை உடைப்பால் நெல்லை மாவட்டம் அணைப் பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த உடைப்பு செண்பகவல்லி தடுப்பணையை 45 அடிதான் சற்று வலுவாக கட்டவேண்டும். அப்படி அதை கட்டிவிட்டு சீர் செய்தால் திரும்பவும் நீர் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயன்படும். அத்தோடு திட்டமிடப்பட்டுள்ள அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு எதிர்காலத்தில் இணையக்கூடிய சூழலும் ஏற்படும்.

இதை சீர்படுத்த 1984 ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் அரசு அதிகாரிகள் 28.2.1985 அன்று பார்வையிட்டு இந்த அணையின் உடைப்பை சரி செய்ய சுமார் 11 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டனர். தமிழக அரசின் பங்குத் தொகையும் உரிய நேரத்தில் கேரள அரசிடம் வழங்கப்பட்டது.  செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பை இதுவரை சரிசெய்யவில்லை. இதற்கான காரண காரியங்களும் தெரியவில்லை.  1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் வைகோ, அன்றையப் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அன்றைய அமைச்சர் தங்கவேலு, அடியேன், புளியங்குடி பழனிச்சாமி போன்றோர் எல்லாம் மலைக்கு மேலே சென்று ஆய்வு செய்து திட்டத்தை தயாரித்தபோது 1991 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக் குறித்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பல தடவை குரல் எழுப்பப்பட்டும் எந்தவிதமான மேல் நடவடிக்கைகள் இல்லை. என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கிலும் இது குறித்து எனது மனுவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

பண்டைய தமிழர்கள் நீர் மேலாண்மை குறித்து ஆதியிலிருந்தே கவனமாக கடமைகளை செய்துவந்தனர். அதனால்தான் இன்றைக்கும் பிரம்மாண்டமாக கல்லணை இருக்கின்றது. வீராணம் ஏரி, மதுரையில் அமைந்த வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவிலுள்ள பொற்தாமரைக் குளம் போன்ற பல நீர் நிலைகளை திட்டமிட்டு நம்மை ஆண்ட அரசர்கள் மக்களுக்காக கட்டி அர்ப்பணித்தார்கள். அப்போதெல்லாம் இன்றைக்குள்ள வசதி வாய்ப்புகள் இல்லை. அன்றைக்கும் அவர்களுடைய தொழில்நுட்ப விஞ்ஞான அறிவை பாராட்டவேண்டும். அதைப்போன்றுதான் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சிவகிரி அரசர் தொலைநோக்கு எண்ணத்தோடு செண்பகவல்லித் தோப்பை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பேசி அமைத்தார்.

இன்றைய ஜனநாயக நாட்டில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கையாக இருக்கும் செண்பகத்தோப்பு அணையை சீர் செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லையே?  இந்த அணையை புதிதாக கட்டவேண்டிய அவசியமும் இல்லை. உடைப்பெடுத்த சுவரை கட்டவேண்டும். மதிப்பீடும் குறைவுதான். பணியும் குறைவுதான். இதை கவனிக்க மனம் வரவில்லையே?

இப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளாறு சற்று வடக்கே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கட்டவேண்டிய அழகர் அணை திட்டங்களும் வெறும் கோரிக்கைகளாகவே உள்ளன. செண்பகவல்லி, உள்ளாறு, அழகர்அணை திட்டம் என்பவை மூன்றும் வானம் பார்த்த கரிசல் பூமியை வளம்கொழிக்கும் நீர் ஆதார திட்டங்கள் ஆகும். இத்தோடு கேரளாவில் பாயும் அச்சன்கோவில்-பம்மை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பபதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும். இந்தப் பிரச்சினைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இதன் கோப்புகள் யாவும் அரசு அலுவலகங்களில் தூசி படிந்து தூங்குகின்றன. இந்த திட்டங்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படுமோ என்பது தெரியவில்லை.

செண்பகவல்லி, செண்பகத்தோப்பு என்றால் நறுமணம் கொண்ட வல்லியாகவும், நறுமணம் வீசுகின்ற சோலைவனம் என்றும் பொருள். ஆனால் செண்பகத்தோப்பிலிருந்து வரும் நீர் குறைந்தபட்சம் வானம் பார்த்த வறட்சி பூமியான, கந்தக காட்டிற்கு செண்பகவல்லியின் நறுமணத்தோடு தாகத்தை தீர்க்காதா? என்பது கரிசல் காட்டு விவசாயியின் ஏக்கம். ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வார்களா?

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...