Wednesday, May 11, 2016

தென்மலை


குற்றாலத்தைத் தாண்டி செங்கோட்டையை கடந்து புளியறையிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சாலையில் பயணித்தால் ரம்மியமான தென்மலை உள்ளது. இது கேரளாவுக்கு உட்பட்ட பகுதியாகும்.  இதன் வழியாக பலமுறை கொல்லம், கொச்சி, திருவனந்தபுரம் பயணிக்கும்போது சிறிது நேரம் தங்கியிருந்து செல்வது வாடிக்கை. இது ஒரு ரம்மியமான சுற்றுலா தலமாகும். குற்றாலத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக சுற்றுச்சூழல் பாதுகாப்போடு அமைந்த சுற்றுலா கேந்திரமாகும். ஒரு காலத்தில் இப்பகுதியை தேன்மலை என்று அழைப்பதுண்டு. ஏனெனில் இங்குள்ள மரங்களில் சுவையான நல்ல தேன் கிடைத்தது. தேன்மலை மருவி தென்மலை ஆனது. இங்கு தொங்கு நடைபாலமும் உள்ளது. அதன் அருகே கல்லாடை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் எப்பொழுதும் தண்ணீர் சீறிப் பாய்வதை கண்டால் பார்க்க பரவசமாக இருக்கும். இங்கு படகுப் போக்குவரத்து உண்டு. மான்கள் மையமும், சுற்றுச் சூழலை பரப்பும் கல்வி மையமும் உள்ளது. எப்பொழுதும் கூட்டம் உண்டு. குற்றாலத்தைப் போல் நெரிசல் இல்லாமல் விரிந்த பகுதியில் அமைதியாக அமைதியை அனுபவிக்கலாம்.

தென்மலையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் ஓடும் கல்லாட ஆற்றை தமிழகத்திற்கு திருப்ப வேண்டும் என்றும், இந்த ஆற்றில் உள்ள உபரி நீரை கேரளாவில் பாயும் அச்சன்கோவில்-பம்பை இதன் வழியாக தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஏழாயிரம்பண்ணை வழியாக சாத்தூர் அருகே உள்ள வைப்பாற்றோடு இணைக்கவேண்டும் என்ற வழக்கு 30 வருடங்களாக போராடி உச்சநீதிமன்றத்தில் அடியேன் தீர்ப்பைப் பெற்றது அனைவரும் அறிவர். அந்த தீர்ப்பு செயல்பட்டால் தென்மலையின் இந்த பகுதி நதிகளை திருப்பும் ஒரு சந்திப்பு-ஒரு கேந்திரத் தலமாக விளங்கும். இந்த பகுதிக்கு போகும்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தின் வழக்கும், நதிநீர் இணைப்புதான் மனதில் ஊசலாடும். ஏனெனில் வானம்பார்த்த எங்களது கரிசல் மண்ணான சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், வாசுதேவநல்லூர், சிவகாசி, சாத்தூர், விளாத்திகுளம் பகுதிகள் நீர்வரத்து இல்லாமல் பாலைவனம் ஆகிவிடுமோ என்ற தவிப்பில்தான் தென்மலை மண்ணை மிதிக்கும்போதெல்லாம் மனதிற்கு என்னைப் பிரவேசித்த பூர்வீக மண்ணுக்கு தென்மலை வழியாக நீர் வராதா என்ற ஆதங்கமும் அக்கறையும் மேலோங்கும்.

ஆகவே தென்மலை மனதிற்கு பிடித்த இடம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...