Friday, May 13, 2016

மோடி-மைத்ரி சிறிசேனா சந்திப்பு - ஈழத்தமிழர்களுக்கு விடியல் உண்டா?

இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா இந்தியா வந்துள்ளார்.  மைத்திரி சிறிசேனாவும் அவருடைய சுதந்திரா கட்சியும், புதிதாக இலங்கையில் அர்ப்பணிக்க உள்ள அரசியல் சாசன சட்டத்தில் சமஸ்டி முறைக்கு வழியில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். நான் தான் யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்திய பிரதமர் என்று மார்தட்டிக்கொள்ளும் மோடி, இப்பிரச்சினை குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. அவை யாவும் நடைமுறைக்கு வரவில்லை. அங்குள்ள தமிழ் மக்களுக்கு தங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் பகுதியில் உள்ள ராணுவத்துக்கு அஞ்சி வாழ்கின்றனர். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கவேண்டும், நாங்கள் வற்புறுத்திய சமஷ்டி முறையை வழங்க சிங்கள அரசு மறுக்கின்றது என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். இந்தியா இதில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய பொறுப்பில் உள்ளது. ஆனால் இந்தியா பாராமுகமாக இருக்கின்றது. சமஷ்டி முறையை குறித்தும், அங்குள் தமிழர்கள் வாழ்வுரிமை குறித்தும் மோடி, மைத்திரி சிறிசேனாவிடம் பேசியிருப்பாரா என்பது கூட சந்தேகத்துக்குரிய விடயம்.

இந்திய அரசு நேபாள விவகாரத்தில் மிகத் தீவிரமாக ஆர்வம் காட்டுகிறது. அந்த ஆர்வம் இலங்கைப் பிரச்சினையில் இல்லை. நேபாள அதிபர் தன்னுடைய ராஜாங்க உறவை கூட இந்தியாவோடு நிறுத்திக்கொள்ள விரும்புகிறார். தன்னுடைய சுற்றுப்பயணத்தை கடந்த மே 6ம் தேதி திட்டமிட்டதைக் கூட ரத்து செய்தார். தன்னுடைய தூதரையும் திரும்ப பெற்றுக்கொண்டார். இப்படியான நிலையில் நேபாள பிரச்சினையில் காட்டுகின்ற இந்த ஆர்வம், இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஏன் மத்திய அரசு காட்டத் தவறுகிறது? சமீபத்தில் மைத்திரி சிறிசேனா சீனாவுக்கு சென்றபோது சீனாவோடு உறவுக்கரம் நீட்டி பழைய ராஜபக்சே கால ஒப்பந்தங்களை எல்லாம் புதுப்பித்துள்ளார். அந்த ஒப்பந்தங்கள் செயலுக்கு வந்தால் இந்தியாவை பாதிக்க செய்யும் என்பதைக் கூட உணர தவறிவிட்டது இந்திய அரசு. நேபாளும், இலங்கையும், சீனாவுடன் ஒட்டி உறவாட கரம் நீட்ட தயாராகிவிட்டது. இலங்கையை எப்படி சீனா தன் வசமாக்கிக்கொண்டதோ, நேபாளத்தையும் தன் பக்கம் கொண்டுவர சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இப்படியாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான முடிவு இல்லை என்பதனை இதன் மூலமே அறிய முடிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இலங்கை பிரச்சினையில், கொடுத்த உறுதிமொழிகளை இந்தியா கவனிக்காமல் இருந்தால் அங்குள்ள தமிழர்கள் திரும்பவும் பழைய மாதிரியான கொடூரங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து 7 ஆண்டுகள் முடிகின்றது. இதற்கு பிறகாவது அவர்களுக்கு ஒரு தீர்வு ஏற்படக்கூடாதா?

புதிய அரசியல் சமஷ்டி அமைப்போடு, இலங்கையில் அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வாக்கெடுப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நடத்தப்படவேண்டும். இதை கண்காணிக்க சுதந்திரமான சர்வதேச பார்வையாளர்கள் கொண்ட அமைப்பு இருந்தால்தான் இந்த வாக்கெடுப்பு நம்பிக்கை பெறும். ஏற்கெனவே இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெற்று, அவர்களிடம் இருந்து கபளீகரம் செய்த நிலங்களையும், வீடுகளையும் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியமானது. அத்தோடு காணாமல் போனவர்கள், போரில் இறந்தவர்கள் குறித்து முழு விவரத்தையும் பொதுமக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான தேடல் பணியும் நடைபெறவேண்டும். போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரணையும் நடத்தப்படவேண்டும். இதுதான் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையில் அணுகவேண்டிய முக்கிய விடயங்களாகும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...