Monday, September 18, 2023

#பரலி சு.நெல்லையப்பர்

#பரலி சு.நெல்லையப்பர் 
பரலி சு. நெல்லையப்பர் (செப்டம்பர் 18, 1889 - மார்ச்சு 28, 1971) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்டவர்.இன்று இவரின் பிறந்த நாள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சென்னைக்கு அருகிலுள்ள குரோம்பேட்டையில் 1971ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 28ஆம் நாள் மறைந்தார்.

நெல்லையப்பருக்கு அண்ணன்  பரலி சு. சண்முகசுந்தரம்பிள்ளை. இவர் வ.உ.சிதம்பரனாரோடு இணைந்து அவர்தம் சுதேசி இயக்கத்தைப் பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலும் முனைப்போடு இருந்தவர். சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகள் பலவற்றை திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தவர். அன்றைய மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்த சுப்பிரமணிய சிவாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து வ.உ.சிக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சுப்பிரமணிய சிவத்தால் வந்தே மாதரம் பிள்ளை என அழைக்கப்பட்டார்.

நெல்லையப்பருக்கு தம்பி பரலி சு. குழந்தைவேலன். நெல்லையப்பரோடு இணைந்து வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.

நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.

நெல்லையப்பர் மெட்ரிக்குலேசன் வரை பள்ளியில் படித்தவர். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ.சி. நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டில் மராட்டிய மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ.உ.சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றைப் படித்தும் இந்தியா இதழைப் படித்தும் பாரதிபால் அன்பு கொண்டார்.

வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி, நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார்.

1909ஆம் ஆண்டில் இறுதியில் வ.உ.சி.க்கு சட்டப்படி விடுதலைப் பெற்றுத்தர ஏதேனும் வழியிருக்கிறதா என அறிவதற்காக பாரிஸ்டர் பாலசுப்பிரமணிய ஐயர், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோரைச் சந்திக்க சென்னைக்கு நெல்லையப்பர் வந்தார். வாய்ப்பில்லை என அறிந்து வருந்தினார். அப்பொழுது புதுவையில் இருந்து சென்னை வந்திருந்த நீலகண்ட பிரமச்சாரியைச் சந்தித்தார். அவரோடு சேர்ந்து புதுவையில் வாழும் பாரதியாரைச் சந்திக்க புதுவை சென்றார். கலவை என்னும் இடத்தில் நீலகண்ட பிரமச்சாரியோடு சில நாள் தங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 1911ஆம் ஆண்டு சூன் வரை பாரதியார் வீட்டில் தங்கினார். 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல்வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். 1911 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கோயம்புத்தூர் சிறையிலிருந்த வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

வ.உ.சி.க்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை-பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குள் சென்று வ.உ.சி.யைச் சந்தித்து, அவர் இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912ஆம் ஆண்டின் நடுவில் வ.உ.சி.யை மலையாள நாட்டிலுள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றியதும், நெல்லையப்பர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

1912ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் விடுதலை பெற்ற வ.உ.சி. சென்னை சிந்தாரிப்பேட்டையில் குடியேறினார். அவரைக் காண்பதற்காக அங்கு வந்த நெல்லையப்பர் முதலில் வ.உ.சி.யின் வீட்டிலும் பின்னர் வெவ்வேறு இடங்களிலும் வாழ்ந்து, 1950ஆம் ஆண்டு முதல் தன்னுடைய இறுதிக்காலம் வரை குரோம்பேட்டையில் வசித்தார். தான் வாழ்ந்த பகுதிக்கு பாரதிபுரம் எனப் பெயர் சூட்டினார். அங்கிருந்த பிள்ளையாருக்கு பாரதி விநாயகர் எனவும் பெயரிட்டார்.

1921 செப்டம்பர் 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவருள் நெல்லையப்பரும் ஒருவர்.

 பாரதியின் இந்தியா ஏட்டில் இவரின் கட்டுரை வெளி வந்தது. புதுவையில் இருந்து பாரதியர் வெளியிட்டு வந்த சூரியோதயம் கிழமை இதழில் 1910ஆம் ஆண்டிலும் கர்மயோகி மாத இதழில் 1911ஆம் ஆண்டிலும் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
சென்னையிலிருந்து கோ.வடிவேலு செட்டியார் வெளியிட்ட லோகோபகாரி இதழில் 1913 – 15 ஆம் ஆண்டுகளிலும் 1917-18ஆம் ஆண்டுகளிலும் துணையாசிரியராக இருந்தார்.
தெ.பொ.கிருட்டிணசாமிப் பாவலர் என்பவருடன் இணைந்து 1915-16ஆம் ஆண்டுகளில் பாரதி என்னும் இதழை நடத்தினார்.
1917ஆம் ஆண்டு முதல் 1921 செப்டம்பர் வரை தேசபக்தன் இதழில் திரு.வி.க., வ.வே.சு.ஐயர் ஆகியோர் ஆசிரியராக இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1922ஆம் ஆண்டில் லோகோபகாரி இதழை விலைக்கு வாங்கி 1941ஆம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தார். அப்பொழுது மதுரையைச் சேர்ந்த ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழில் துணையாசிரியராக இருந்தார்.
மீண்டும் 1943 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை லோகோபகாரி இதழில் ஆசிரியராக இருந்தார்.

#பரலி_சு_நெல்லையப்பர்
#நிமிரவைக்கும்நெல்லை


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...