Friday, August 8, 2025

5 august

 இன்று (5-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில்

அதன் வாசகர்களுக்கு அளித்த எனது பேட்டி-1
—————————————————————————-
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மாணவ பருவத்திலிருந்து காமராஜர், இந்திரா காந்தி, நெடுமாறன் பின் கலைஞர் தலைமையில் 53 ஆண்டுகள் தொடர்ந்து அரசியல் களத்தில் இயங்கியவர். தமிழக உரிமைகளுக்காக 45க்கு மேலான பொது நல வழக்குகளை உச்சநீதி மன்றம் வரை தொடுத்த வழக்கறிஞர். அரிய நூல்களின் ஆசிரியர். எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரபாகரனோடு தொடர்பில் இருந்தவர். அவரை துக்ளக் வாசகர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதன் முக்கிய பகுதிகள் இங்கே:
வி.நாராயணன்: ஒரு வழக்கறிஞரான நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்தீர்கள்?
கே.எஸ் ராதாகிருஷ்ணன்: நான் வழக்கறிஞராவதற்கு முன்பாகவே அரசியலுக்கு வந்து விட்டேன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குறுஞ்சாக்குளம்தான் எனது ஊர். என் அப்பா ஒரு காங்கிரஸ் பிரமுகர். காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். எனது வீட்டிற்கு தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, அமெரிக்கன் ரிப்போர்ட்டர், சோவியத்தின் நாடு என்று பல்வேறு பத்திரிகைகள் வரும். சிறுவயதிலேயே அவற்றையெல்லாம் நான் வாசிக்க துவங்கி விட்டேன். எங்கள் வீடு நல்ல வசதியான வீடு. எங்கள் ஊருக்கு பஸ் போக்குவரத்து இருந்தது. சுற்றுவட்டார கிராமங்களுக்கெல்லாம் மின்சாரம் வராத போதும் 1955 வாக்கிலேயே எங்கள் வீட்டில் மின்சாரம் இருந்தது. எங்கள் வீட்டு திண்ணை சுமார் 200 பேர் அமரக்கூடிய அளவிற்கு பெரிதாக இருக்கும். அதனால் அந்த பகுதிக்கு எந்த வி.ஐ.பி. வந்தாலும் எங்கள் வீட்டிற்கு வருவது வாடிக்கையாக இருந்தது. பல ஆலோசனைக் கூட்டங்கள் எங்கள் வீட்டுத் திண்ணையில் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு எளிய அரசியல் தலைவர்களை அங்கு நான் கண்டு வியந்திருக்கிறேன். பாளையங்கோட்டை, டெல்லியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் ஈடுபாடு ஏற்பட்டது. பின் சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் போது முழு அரசியல்வாதியாக மாறி விட்டேன்.
சுராகி: காங்கிரஸிலிருந்த நீங்கள் கருணாநிதி, வைகோ மேல் ஈடுபாடு கொண்டது எப்படி நடந்தது?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: 1967-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஹிந்தி எதிர்ப்பு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, அரிசி தட்டுப்பாடு என்று காங்கிரஸ் ஆட்சி மீது பலத்த அதிருப்தி இருந்தது. எதிரே தி.மு.க.வோ ராஜாஜியின் சுதந்திரா கட்சி, பி.ராமமூர்த்தியின் தலைமையில் சி.பி.எம். கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், காயிதே மில்லத் தலைமையில் முஸ்லிம் லீக், மூக்கையா தேவர் தலைமையில் ஃபார்வேர்ட் ப்ளாக், ஜெயபிரகாஷ் நாராயணனின் எஸ்.எஸ்.பி, லோகியின் பி.எஸ்.பி.,.- இப்படி பல கட்சிகளை கூட்டணியாகக் கொண்டு போட்டியிட்டது. அரிசிக்கு தட்டுப்பாடு இருந்த நேரத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற அண்ணாவின் வாக்குறுதி மக்களை ஈர்த்தது. போதாக்குறைக்கு எம்.ஜி.ஆர். எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த புகைப்படங்களை தமிழகம் முழுக்க போஸ்டர்களாக ஒட்டி அனுதாபம் தேடியது தி.மு.க.. இதனால் காங்கிரஸ் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றும், ஸீட்டுகள் குறைவாக வென்று தோல்வி அடைந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் நாங்கள் காங்கிரஸிலே தொடர்ந்தோம். 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டது. அப்போது காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸில் பயணித்தோம். காமராஜர் மறைவுக்குப் பின் ஏ.பி.சி.வீரபாகு, ஆர்.வி.சுவாமிநாதன், பழ.நெடுமாறன், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திரா காங்கிரஸில் இணைந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்தேன். 1980-ல் பொதுத் தேர்தல் வந்தது. அ.தி.மு.க.வும், ஜனதா கட்சியும் கூட்டணி வைத்தன. காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. ஆர்.வி.ஸ்வாமிநாதன், பழ.நெடுமாறன், வீரபாகு உள்ளிட்டோர் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இந்திரா காந்தியிடம் வாதாடினார்கள். ஆனால் அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனார் தி.மு.க வுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தார். பழ.நெடுமாறன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நெடுமாறனை இந்திரா காந்தி 'மைடியர் சன்' என்றுதான் அழைப்பார். அந்தளவுக்கு நெருக்கமானவர். எனவே அவரை சமாதானம் செய்ய பி.வி.நரசிம்மராவை சென்னை அனுப்பி வைத்தார் இந்திரா. நரசிம்மராவும் ஏறத்தாழ இரு நாட்கள் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து நெடுமாறனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கு நெடுமாறன் இறுதி வரை ஒத்துக் கொள்ளவேயில்லை. அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நான் பழ.நெடுமாறனை வழிகாட்டியாக ஏற்று, அவர்வழி நடந்து வந்தவன். நெடுமாறனுடன் சேர்ந்து தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் என்ற புதிய இயக்கத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவக்கினோம். பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஐந்து ஸீட்டுகள் போட்டியிட்டு நான்கு ஸீட்டுகள் வென்றதாக நினைவு. அதன் பிறகு இலங்கையில் ஈழப் பிரச்னை பெரிதாக உருவெடுத்தது. அதுவரை யமுனைக்கரை (டெல்லி) அரசியல் செய்து வந்த நாங்கள், ஈழ அரசியலை நோக்கி திரும்பினோம். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். ஈழ அரசியலுக்கு ஆதரவாகதான் செயல்பட்டு வந்தார். இதையடுத்து கலைஞர், வீரமணி, ஃபார்வர்டு பிளாக் அய்யணன்அம்பலம் ஆகியோருடன் நெடுமாறனும், நானும் இணைந்து டெஸோ முதல் மாநாட்டை நடத்தும் சூழல் ஏற்பட்டது. இப்படிதான் நான் கருணாநிதியுடன் நெருங்கினேன். அவர் 1979 முதலே அறிமுகம். வேலுப்பிள்ளை பிரபாகரன் எனது வீட்டில்தான் தங்கியிருந்தார். அதன் பிறகு பாண்டிபஜார் சம்பவம் நடந்ததும் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாங்கள்தான் ஜாமினில் எடுத்தோம். வைகோவை சிறையிலிருந்த பிரபாகரனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்தேன். அதே காலத்தில் வைகோவை நெடுமாறனிடம் சந்திக்க வைத்து அவரும் மற்ற எம் எல் ஏக்கள் வாக்குகளையும் வைகோவிற்கு போட வைத்தேன்.
எல்.கோபால்: நீங்கள் சுமார் 54 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கிறீர்கள். அன்றைய அரசியல்வாதிகளையும், இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிட முடியுமா?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: சோமையாஜூலு அன்றைய திருநெல்வேலி எம்.எல்.ஏ.. காலையில் தூக்குச்சட்டியில் பழைய சாதமும், துவையலும் எடுத்துக் கொண்டு டவுன் பஸ்களில் ஏறி தொகுதி முழுக்க குறைகளை கேட்டுவிட்டு இருட்டிய பிறகுதான் வீடு திரும்புவார். சுதந்திரப் போராட்ட தியாகி பென்ஷன் வேண்டுமென்றால் அவரிடம் கையெழுத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும். ஆனால் இன்றைக்கு திருநெல்வேலியில் சோமையாஜூலு என்றால் யாருக்கும் தெரிவதில்லை. ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார்தான் தமிழகத்தின் முதல் முதலமைச்சர். சுதந்திரத்திற்கு பின் ஹைதராபாத் நிஜாம் தனது நிலப்பரப்பை இந்தியாவோடு இணைக்க மறுத்த போது, சர்தார் வல்லபாய் படேலுடன் சேர்ந்து ரெட்டியார்தான் சென்னை பட்டாலியனை ஹைதராபாத்துக்கு அனுப்பி அந்த நிலப்பரப்பை இந்தியாவோடு இணைத்தார். நேரு 'நிஜாமை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று சொன்னபோது 'ஜவஹர், நீங்கள் உங்கள் பிரதமர் பணியை பாருங்கள். நானும் பட்டேலும் இந்த பிரச்னையை பார்த்துக் கொள்கிறோம்' என்று நெஞ்சுரத்தோடு சொல்லி அந்த நிலப்பரப்பை இந்தியாவோடு இணைத்தார். அப்படி வீரமுள்ள ஓமாந்தூரார் எலிஸபெத் மகாராணி இந்தியா வந்தபோது அவரை சந்திக்க வேஷ்டி, ஜிப்பாவில் போனார். பலர் அவரை கோட், சூட் போட வற்புறுத்தினார்கள். அவரோ 'நான் ஒரு விவசாயி. இதுதான் என்னுடைய உடை. இந்த உடையோடு அனுமதித்தால் நான் கலந்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள்' என்று சுயமரியாதையோடு நடந்து கொண்டவர். காங்கிரஸாரே அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து விரட்ட முனைந்த போது, உடனடியாக முதலமைச்சர் இல்லத்திலிருந்து தனது சூட்கேஸுடன் வெளியேறி, மவுண்ட் ரோடில் தர்பார் ஹோட்டலருகே இருந்த டாக்ஸி ஸ்டாண்ட்டிற்கு (ஆன்றைக்கு அண்ணா சிலை இல்லை) நடந்தே சென்று டாக்ஸி பிடித்து வடலூருக்கு சென்று விட்டார். ஒரு முதலமைச்சர் பெட்டியுடன் நடந்து வருவதை பார்த்து அத்தனை பேரும் உயர்ந்தார்கள். பதவி வேண்டாம் என்று போனவர், செல்வமும் வேண்டாம் என்று தனது சொத்துக்களை வடலூர் வள்ளலார் அமைப்பிற்கு எழுதி வைத்துவிட்டார். இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு தமிழக சட்டமன்றத்தில் படம் கூட வைக்கப்படாமலே இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அவரது புகைப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது . நம் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் குமாரசாமி ராஜா. அவரது படம் இன்றும் கூட சட்டமன்றத்தில் இல்லை. தன் சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைத்தவர். அந்த புண்ணியவானையே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸார் தோற்கடித்தனர். இப்படிப்பட்ட தலைவர்களோடு இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை ஒப்பிடவே மனது கூசுகிறது. இன்று எல்லா இடங்களிலும் பொலிட்டிக்கல் புரோக்கர்ஸ் உருவாகி விட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதன்பிறகு இங்கு என்ன ஜனநாயகம் மிச்சமிருக்கிறது?
எஸ்.வெங்கட்: காமராஜர் ஏர்கண்டிஷன் தேவைப்படுகிற நிலையில் இருந்ததாகவும், அப்போது கருணாநிதிதான் அவருக்கு ஏ.ஸி. அமைத்து கொடுத்ததாகவும் சமீபத்தில் திருச்சி சிவா கூறியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. காமராஜரோடு நெருங்கி பழகிய நீங்கள் இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: அன்று திருச்சியில் ஈ வே ரா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிவாவிற்கு காமராஜரை பற்றி என்ன தெரியும்? காமராஜர் தனது இறுதி காலத்தில் ஏ.ஸி. பயன்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதியிடம் கெஞ்சினார் என்பதெல்லாம் கொஞ்சமும் உண்மையில்லை. மதிய உணவு அருந்திவிட்டு தனது உதவியாள வைரவனிடம் (அவர் கோவில்பட்டிக்காரர் என்பதால் எனக்கு பழக்கமானவர்) 'ஏ.ஸி.யை ஆன் செய்' என்று கூறி போய் படுத்தவர், சற்று நேரத்தில் பெல் அடித்து 'எனக்கு உடல்நிலை சரியில்லை. உடனே டாக்டர் சவரிராஜனை அழை' என்று கூறியிருக்கிறார். ஆனால் டாக்டர் வரும் முன்பே அவர் இறந்து போனார். அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைக்க கருணாநிதி உடனடியாக சம்மதித்ததை மறுக்கக் கூடாது. சட்டக்கல்லூரி மாணவர்களாக இருந்த நாங்கள் உடனடியாக பெருந்தலைவரின் பூதவுடலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பிற்பாடு கருணாநிதி கடற்கரையில் இடம் தராமல் கிண்டியில் இடம் தந்தார். நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, தண்டாயுதபாணி, பா.ராமச்சந்திரன் ஆகியோர்தான் அந்த இடத்தை பார்வையிட்டு சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு காமராஜர் அடக்கம் செய்யப்பட்டார். அன்று சரியான மழை! 'ராஜ்பவனியிலிருந்து நான் நடந்து வருகிறேன்' என்று இந்திராகாந்தி கூறினார். ஆனால் மழை காரணமாக அதை தடுத்து விட்டார்கள். இங்கெல்லாம் நான் பார்வையாளனாக இருந்திருக்கிறேன். திருச்சி சிவாவிற்கு என்ன தெரியும்? அதேபோல 'எமர்ஜென்ஸி காலத்தில் காமராஜர் திருப்பதிக்கு கிளம்பினார். அங்கு போனால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று கருணாநிதி தடுத்தார்' என்றும் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள். அந்த காலகட்டத்தில் கைது பட்டியலில் காமராஜர் பெயர் இல்லவே இல்லை. பெரும்பாலான ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் கைது பட்டியலிலேயே இல்லை. ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், சி.பி.எம்., சோசியலிஸ்ட்டுகள், நக்ஸலைட் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்கள்- ஆகியோர்தான் கைது செய்யப்பட்டனர். சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டார்கள். 1976 ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும் தி.மு.க. முக்கிய புள்ளிகளும் கைது செய்யப்பட்டனர். இன்னும் சொல்லப் போனால் அந்த சமயத்தில் கோவை தொகுதியிலும், புதுச்சேரியில் அரியாங்குப்பம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரிக்கு இந்திரா காந்தி வந்தார். காமராஜரும், இந்திரா காந்தியும் ஒரே மேடையை பங்கிட்டு கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். எனவே காமராஜரை கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டது என்பது உண்மையல்ல.
வி.நாராயணன்: மாணவர் பருவத்திலேயே காங்கிரஸில் இருந்திருக்கிறீர்கள். இன்றைய காங்கிரஸ் குறித்து உங்கள் பார்வை என்ன?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள், காமராஜர் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் வழிநடத்திய காங்கிரஸ் பிற்காலத்தில் என்ன ஆனது? சோனியா காந்தி தலைமையில் இயங்க வேண்டிய துர்பாக்கிய நிலை. சோனியா காந்தி 1969-ல் ராஜீவ் காந்தியை மணந்து கொண்டார். ஆனால் அவர் 1983 வரை இந்திய பிரஜையாக மாறாமல் இத்தாலிய பிரஜையாகவே பிரதமர் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்திய நாட்டின் பிரதமர் இல்லத்தில் ஒரு இந்திய பிரஜை அல்லாத பெண்மணி தங்கி இருக்க சட்டத்தில் இடம் இருக்குமா? அப்படி 14 வருடங்களாக இந்திய பிரஜையாக மாற விரும்பாத ஒருவரை காங்கிரஸ் தலைவியாக ஏற்றது பெருங்கொடுமை! தமிழ்நாட்டில் திரு.வி.க.,சத்தியமூர்த்தி, காமராஜர், கக்கன், ஆர் கே என்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் சத்தியமூர்த்தி பவனில் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அடுத்ததாக செல்வப்பெருந்தகையின் படமும் மாட்டப்படும் என்று நினைக்கும் போது எனக்கு நெஞ்சு கொதிக்கிறது. இதற்கு மேல் காங்கிரஸுக்கு பெரிய இழிவு ஏதும் ஏற்படப்போவதில்லை.
(தொடரும்)
தொகுப்பு: எஸ்.ஜே.இதயா

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்