#காவிரிபாசனபிரச்சினைகள்
——————————————-
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரிநீர் கொள்ளிடம் ஆறுகள் வழியாகப் பல டிஎம்சி தண்ணீர் எப்போதும் வீணாகக் கடலில் கலந்து விடுகிறது அதனால் கல்லணைக் கால்வாய் வழியாக கடைமடை ஏரி குளங்களுக்கு தண்ணீர் சென்றடைய முடியாத நிலைமையும் தொடர்ந்து வருகிறது.
காவிரி ஆற்றில் பல லட்சக்கணக்கான கன அடித் தண்ணீர் சென்றாலும் ஏரிகளுக்கு தண்ணீர் வரப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது. சில ஏரிகளில் மழை பெய்தால் தான் தண்ணீர் தேங்குகிறது. கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுக்காக கோடி கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டாலும் மெயின் வாய்க்காலும் ஆறுகளும் மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளன. கிளை வாய்க்கால்களைக் கண்டு கொள்வதே இல்லை.
கல்லணை ஆரம்பத்தில் துவங்கி புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலை வரை 149 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த கல்லணை ஆற்றில் ஏ கால்வாயில் இருந்து பி சி டி இ என 337 கிளை வாய்க்கால்கள் மொத்தம் 1232 கிலோமீட்டர் நீளத்தில் தொடர்கின்றன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாயில் கழிவு நீரும் காட்டாற்று தண்ணீரும் கலக்காத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்கள் சூப்பர் பேஸேஜ் எனப்படும் மேல்நிலை கால்வாய்களும் பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்றுத் தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யூ டாட் எனப்படும் கால்வாய்ச் சுரங்கங்களும்அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீரின் விசையை சீராக வைத்திருக்க 55 இடங்களில் டிராப் எனப்படும் நீர் ஒழுங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கல்லணைக் கால்வாய் மூலம் 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் 694 ஏரி குளங்களும் பயன்பெற்று வரும் நிலையில் ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்வது சங்கிலித் தொடர் போன்ற நிலையாக இருக்கிறது.தற்போது வாய்க்கால்கள் பலவிதமான ஆக்கிரமிப்பினாலும் பல வாய்க்கால்கள் தூர்ந்து போனதாலும் பல ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லாமல் வறண்டும் குறைந்த அளவிலான தண்ணீருமே மிஞ்சுகின்றன. இதனால் ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள திருவோணம் ஊராணிபுரம் மற்றும் பேராவூரணி சேது பாவாச்சத்திரம் போன்ற கடைமடைப் பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் விரக்தியில் இருக்கிறார்கள். மேற்பனைக்காடு ஆற்றில் இருந்து வீரக்குடி பி பிரிவு வாய்க்கால் மூலம் ரெட்ட வயல் மணக்காடு பகுதிகளுக்குச் செல்லும் தண்ணீர் ஏரிகளுக்குள் சென்று பாசத்திற்குப் பயன்படுகிறது. வீரக்குடி வாய்க்காலில் தண்ணீர் பிரிக்கும் கீழ்குமுழி பல ஆண்டுகளாகச் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகள் மனு கொடுத்தும் அது சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாகச் செல்கிறது.நீர்வளத் துறையில் நிதி இல்லை என அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பாசன வாய்க்கால்களை முறையாகத் தூர்வாராததாலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து போனதாலும் ஏரி குளங்களுக்குத் தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பு செட் வைத்துள்ளவரிடம் ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டி இருக்கிறது.
திருவோணம் பகுதியில் உள்ள ஏரிகளும் குளங்களும் நிரம்ப வில்லை கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் பாசனக்காரர்கள் சங்கம் இருந்தபோது விவசாயிகள் ஒன்றிணைந்து நீர்நிலைகளைச் சீரமைத்தார்கள். தற்போது அந்தச் சங்கமும் இல்லை.ஆறுகளைக் கண்காணிக்கும் லஸ்கர் எனப்படும் பணியிடங்களும் இல்லை முற்றிலும் நீர் ஆதாரங்கள் சிதைந்து கிடப்பதை விவசாயம் பாழ்பட்டுப் போனதை எவ்வளவு எடுத்துக் கூறினாலும் இந்த அரசு செவி சாய்க்கிறதா? நீரின்றி அமையாது உலகு. அரசு இந்த நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதைத் தவிர
மக்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக் கேட்கச் செல்வார்கள் என்பது தான் வினோதமாக இருக்கிறது.

No comments:
Post a Comment