Thursday, January 2, 2020

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 17.மார்கழி

" *ஓங்கி,உலகு அளந்த, உம்பர் கோமானே* "

 அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!

அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!

சென்ற பாட்டில் வாயிற் காப்போனைப் பாடினார்கள். 

இந்தப் பாட்டில் கண்ணனின் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்கள்! இதிலிருந்து பாத்துக்குங்க கண்ணன் வீட்டில் எவ்வளவு எளிமை-ன்னு! கெடுபிடிகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! எல்லா அடியவர்களும் அன்போடே நடத்தப்படுவார்கள் அவன் வீட்டில்!

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும் = உடை, தண்ணீர், உணவு என்று மூன்று அறங்களையும் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய் = எம்பெருமானின் தகப்பனாரே! பெருமாளுக்கே பெருமானே! நந்த கோபன் அப்பா (மாமா)! எழுந்திருங்க!

அடிப்படைத் தேவை: உடுக்க அம்பரமே=உடையே! உண்ண சோறே=உணவே!
ஏன் உடையை மொதல்ல சொல்லி, உணவை அப்புறமா சொல்றாரு?

ஏன்னா மனிதனுக்கு மானம் முக்கியம்! பசித்த பசியிலும், சோறு வாங்கத் துணியில்லாம வெளியில் வரமுடியுமா? அதான் முதலில் உடை கொடுத்து, பின்னர் உணவும் கொடுத்து, தர்மங்கள் செய்கிறாராம் நந்தகோபன்! தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரும் தண்ணீர் பந்தல் அறங்களும் செய்கிறார்! எங்கூரு தண்ணி உனக்கு கிடையாது-ன்னு சொல்லாதவர்! 🙂

இன்னொரு பார்வை:
அம்-பரம் = ஓம்! சோ-றே! = நமோ! தண்ணீரே = நாராயணா!

* அம்-பரம் = அந்தப் பரத்துவமான மோட்ச வீடு = ஓம்!
* சோ-றே! = சோற்றைத் தனக்கு-ன்னு சேமிச்சிக்க முடியாது! அழுகிடும்! எனதில்லை = ந+மோ!
* தண்ணீரே = தண்ணீர்/தீர்த்த வடிவாய் இருப்பவன் = நாராயணாய!

நாரணம்=தண்ணீர் 
நீர், கலத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவம் கொள்வது போல், நாரணன் நம் மனத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெய்வ வடிவம் கொள்கிறான்!
மதங்கள் வேறாக இருந்தாலும், அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத என்று கொள்கைகள் வேறாக இருந்தாலும், அவனே பரப்பிரம்மம் என்பது சங்கரர்-இராமானுசர்-மாத்வர் மூன்று ஆச்சார்யர்களின் வாக்கு!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே = பெண்கொடிகளுக்கு எல்லாம் கொழுந்தே! ஆயர் குலத்தின் விளக்கே!
கொழுந்து இலை = அது துளிர் விடும் போது தான் ஒரு உயிரின் அருமை நமக்குத் தெரியுது! அது போல் யசோதை! அவளை வைத்துத் தான் நமக்கு நம்பிக்கையே பிறக்குது!

குலவிளக்கே = கண்ணன் மனித குலச் செல்வம்! அந்தப் புதையலை எப்படித் தேடுவது? விளக்கை வைத்துத் தானே இருளில் தேடணும்? அதான் குலத்தின் விளக்காக அம்மா யசோதை!
மாதா->பிதா->குரு->தெய்வம்! = அன்னை முதல் விளக்கை ஏற்றி அப்பாவைக் காட்ட, அப்பா இரண்டாம் விளக்கை ஏற்றி நல்ல கல்வியைக் காட்ட, குரு மூன்றாம் விளக்கை ஏற்றி, இறைவனைக் காட்டுகிறார்!
இப்படி அத்தனை விளக்குக்கும் முதல் விளக்கு, அம்மா = குல விளக்கு!

எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய் = எம்பெருமானின் தாயாரே! பெருமாளுக்கே பெருமாட்டியே! யசோதாம்மா (அத்தை)! முழிச்சிக்கோங்க! 🙂

அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த = ஆகாசம் என்னும் வெளியை(அம்பரம்) ஊடு அறுத்து, ஓங்கினான்! உலகு அளந்தான்! நம் எல்லாரையும் அளந்தான்!
அவன் பரத்துவம்(அம்-"பரம்")! அந்தப் பரத்தையே நமக்காக ஊடு அறுத்தான்! பரத்தை விட்டுக் கீழிறங்கி வந்து நமக்காக உலகளந்தான்!

உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய் = தேவாதி தேவர்களின் கோமகனே! உறங்கியது போல் உறங்கியது போதும்! நாங்க எல்லாம் வந்திருக்கோம்-ல? எங்களை முதலில் கவனி!

வாமனன் - திரிவிக்ரமன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா? கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி!
* அவதாரங்களிலேயே நடு-நாயகமான அவதாரம்! இது வரை ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் (வாமன-திரிவிக்ரம) இரட்டை அவதாரம்!
* இதற்கு முன்பு விலங்குகள், இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
* நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்! அப்படி நடுவிலே நின்ற அவதாரம்!
* அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது தான்!
* இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன! அதில் மிக முக்கியமான ஒன்று = கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்!
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம்! முருக பக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்! சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா-சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும்! அத்தனை பெருமை இவனுக்கு மட்டும்!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
* முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
* இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த
* மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு!

செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா = செம்பொன்னால் ஆன வீரக் கழல்! அதைத் திருவடியில் மாட்டி இருக்கும் பலதேவா!
பலதேவன் = வாலியோன் என்பது சங்க காலத் தமிழ்ப் பெயர்! இவனுக்குப் பனைமரக் கொடியும், கலப்பையும் கொடுக்குது சங்கத் தமிழ் இலக்கியம்!

ஏன் பலராமன் அவ்வளவு முக்கியம்? அவனுக்கு மட்டும் தனி அவதார அந்தஸ்து ஏன்?
ஏன்-னா அவன் தான் தொண்டின் அடையாளம்!
அவன் தான் சென்ற முறை இலக்குவன்! இந்த முறை பலராமன்!

அன்பு,தொண்டு = இரண்டிலும் சிறந்து விளங்கினான் இலக்குவன்!
மற்றவர்கள் இராமனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தொண்டில் இருந்து சற்றே ஒதுங்கினர்! ஆனால் இவன் மட்டும் தொண்டை விடவே இல்லை! கைங்கர்யம் செய்தே தீருவேன் என்று பெருமாளிடமே சண்டை போட்டு தொண்டு செய்தான்! 🙂

மனசால் அன்பு செய்தால் மட்டும் போதாது! கையாலும் தொண்டு செய்யணும்! இறைவனைப் பேசி/பாடிக் கொண்டும், பதிவு போட்டுக் கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது! மானுடத் தொண்டும் கொஞ்சமாச்சும் செய்யணும்!
* இதைக் காட்டவே இலக்குவனை மட்டும் முன்னிறுத்துகிறான் இறைவன்!
* அதான் அவனுக்கு மட்டும் அடுத்த முறை தனி "அவதார அந்தஸ்து = பலராம அவதாரம்"!

நின்றால் மரவடியாம் = பாதுகை!
அதுவே ஆதிசேஷன்! அதுவே இலக்குவன்! அதுவே பலராமன்!
செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை! தொண்டுக்குக் கிடைத்த பரிசு இது! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!

உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய் = பலராமனைத் தான் கோதை முதலில் சொல்கிறாள்! 

நீயும், உன் தம்பியும் (கண்ணனும்) தூங்காதீர்கள்/தூங்குங்கள் = உறங்கேல்/உறங்கு+ஏல்!
* உறங்கேல் (தூங்காதீர்)+ ஓர் (எண்ணுங்கள்) எம்பாவாய்!
* உறங்கு (தூங்கு)! ஏல்-ஓர் (ஏற்றுக்கொள்-எண்ணுங்கள்) எம்பாவாய்!

 இது என்ன குழப்பமாப் பேசுறாளோ கோதை? காதலன் கண்ணன் பாவமாத் தூங்குறான், சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்-ன்னு விட்டுடறாளோ? 
நாங்க கண்ணன் இல்லம் வந்திருக்கோம்-ல? இப்போ எங்களை ஏல்-ஒர் எம்பாவாய்! ஏல்-ஒர் எம்பாவாய்!

இலக்குவ-பலராம-தொண்டர்கள்-அடியார்கள் திருவடிகளே சரணம்! சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி


ஓமந்தூராரின் சாதுர்யம்.

நேற்று ஓமாந்தூராரை பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தேன். அதை படித்துவிட்டு சிலர் பாராட்டினார்கள். அவர் யாரென்றும் அடையாளம் தெரியாமலும் என்னிடம் கேட்கவும் செய்தார்கள். அப்படி கேட்டது எனக்கே ஏற்பட்ட அவமானமாக கருதுகிறேன். சமூக குற்றமாகவும் கருதுகிறேன். 
Image result for ஓமந்தூரார்"அப்படி கேட்டவர்களுக்கு விகடனுடைய இணைய தளத்தில் திரு. திருமாவேலன் பேசிய காணொளி காட்சியினை அந்த பெரிய உள்ளங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். இதையாவது ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி பார்க்கவும் வேண்டுகின்றேன். 
ஓமாந்தூராரைப் போன்ற மனிதர்களை பொதுவாழ்வில் காண்பது அரிது. அப்படிப்பட்ட பொதுவாழ்வில் ஈடுபட்ட நல்ல உள்ளங்களை துரோகங்களால் அழிக்கப்படலாம். வரலாற்றில் சிலர் அவர்கள் பெயரை என்றும் உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். அதை தடுக்க முடியாது.
#ஓமாந்தூரார்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.12.2019

ஓமாந்தூராரின் சாதுர்யம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.

Wednesday, January 1, 2020

குருவிகளெள்ளாம் உயர பறந்தால்.. பருந்துகள் ஆவதில்லை..



பருந்துகள் உயர பறந்தாலும், கீழேதான் வரவேண்டும். இது எல்லா நிலையிலும் உண்டு.

Ring in the love of truth and right.....

'Ring in the love of truth and right,
Ring in the common love of good.
Ring out old shapes of foul disease;
Ring out the narrowing lust of gold;
Ring out the thousand wars of old,
Ring in the thousand years of peace.'

Lord Alfred Tennyson
Ring Out, Wild Bells
••"Solitude sometimes is best society".



-John Milton, Paradise Lost


Happy New Year!

கலீலியோ #புத்தாண்டு #கிரிகோரியன்_காலண்டர்

#கலீலியோ 
#புத்தாண்டு
#கிரிகோரியன்_காலண்டர்
————————————————
பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்னதற்காக  கலீலியோ தண்டிக்கப்பட்டார். சுமார்   350 ஆண்டுகள் கழித்து  1992ல் கலீலியோ சரியாகதான் சொல்லியிருக்கிறார் என்று ஏற்றுக்கொண்டது அவரை தண்டித்த கத்தோலிக்க  திருச்சபை. பிற் காலத்தில் இதற்க்கு போப் மன்னிப்பும்  கேட்டார்.
****
அடுத்த பத்தாண்டு பூமி அழிவிற்கு வித்திடும் பத்தாண்டாக இருக்கலாம்.....
கவனம் தேவை.
****

நடைமுறையில் , இன்றைய காலண்டர் கிரிகோரியன் காலண்டர். கிரிகோரியன் 
போப் ஆண்டவர் அப்போது பழகத்தில் இருந்த  காலண்டரில்  சீர்திருத்தி மாற்றம் செய்தார்.அது எப்படி என்றால், 1582ல் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்கு அடுத்த நாளை 15ம் தேதியாக மாற்றம் செய்தார். இதனால் தொடர்ந்து வந்த அடுத்த மூன்று ஆண்டுகளிலும் ஒரு நாளைக் கூட்டிக் கொண்டார். இந்த மாற்றமே இன்று வரை ஆங்கில ஆண்டுமுறையில் தொடர்ந்து வருகிறது. 

கடந்த 1582 ஆண்டு ஆங்கில புத்தாண்டும் பொங்கல் ஒரே நாளில் வந்தது. இப்போது புத்தாண்டுக்கும் பொங்கல் 13 நாட்கள் இடைவெளி......

#ksrpost
1-1-2020


திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 16.மார்கழி 

“ *மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்* ” 

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை

மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!

இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த பதினைஞ்சு பாடல்கள்!

 சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, நாராயணா-ன்னு சொல்லியாச்சு
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டிக்கிட்டாச்சு!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாகி விட்டது!
* எல்லாரும் நோன்பில் இருக்கிறாங்க!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்சி!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்சி!
* நேரே கண்ணன் வீட்டுக்குப் போறாங்க அத்தனை பேரும்!

அங்கே சக அடியார்கள் - காவலர்கள்! அவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள் கோதை! அவர்கட்கு முதல் வணக்கம் வைக்கிறாள்!
தங்களுக்குப் பறை தருவதா கண்ணன் நேற்றே சொல்லிட்டானே! இனி இவிங்கள எதுக்கு நாம மதிக்கணும்?-ன்னு அகந்தை காட்டலை! பொறுமை காட்டி, பணிவு காட்டி வணங்குகிறார்கள்! பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து!

சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலுக்குள் போகும் போது, திருவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை எல்லாம் வணங்கிக் கொண்டே செல்வாராம்! அப்புறம் தான் சிவ வணக்கமே!
ஆனால் ஒரே ஒரு நாள், ஏதோ சிந்தனையில் சென்று விட, அப்போது தான் சிவபெருமான் காட்டி அருளினான் - திருத்தொண்டர் தொகை என்னும் அடியார்கள் நூல் பிறந்தது! அடியார்க்கும் அடியேன், அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடினார்!

அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ-ன்னு சாற்றுமுறையில் கூட அடியார்கள் தான் மொதல்ல வருது! அதையே கோதை காட்டுகிறாள் இந்தத் திருப்பாவையில்!
 

நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! - உள் காவலர்கள்!

மணிக் கதவம் தாள் திறவாய் = கதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்-ன்னு

மாயன் = தமிழ்க் கடவுளான மாயோன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்!
(நெருநல் என்பது நேற்றைய காலம்! என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நெருனல் = நென்னல்! ஆண்டாள் தான் வட்டார வழக்கு வித்தகியாச்சே!)

தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்திருக்கோம்!
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ, பள்ளி எழுச்சி பாடுறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிலா! இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை முதலிலேயே ஏதாச்சும் சொல்லி மறுத்துடாதீங்க!

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = தாழ் நீக்கி, திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!

அடியார்கள்
* அவர்கள் கருத்து எந்த வடிவில் இருந்தாலும், அது இறைக் கருத்து அல்லவா!
* அவர்கள் வழி என்னவாக இருந்தாலும், அது இறை வழி அல்லவா!
* சக அடியார்களிடம் துவேஷம் காட்டாது, அன்பும் மதிப்பும் காட்டுவோம்!

"நேயமாய்", நம் மனசின் நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்! ஏல்-ஒர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி


புத்தாண்டு

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளையாடி இன்புற்று இருந்துவாழ்வீர்;
தீமையெல்லாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

...................

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்;

#பாரதி.
---------------------

காலச் சக்கரம் வேகமாக உருண்டோடி கொண்டே உள்ளது அந்த ஓட்டத்தின் ஆட்டத்தில்உனக்கான அடையாளமாய் படைத்தாய் என்பதே ஓர் ஆண்டு தொடங்கும் போதும் முடியும் போது

புத்தாண்டு  வாழ்த்துகள் --2020.

#புத்தாண்டு
#KSRadhakrishnanpostings 
#KSRPostings

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
1-1-2020.
Cartoon-மதி.


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...