Wednesday, January 1, 2020

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 16.மார்கழி 

“ *மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்* ” 

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை

மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!

இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த பதினைஞ்சு பாடல்கள்!

 சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, நாராயணா-ன்னு சொல்லியாச்சு
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டிக்கிட்டாச்சு!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாகி விட்டது!
* எல்லாரும் நோன்பில் இருக்கிறாங்க!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்சி!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்சி!
* நேரே கண்ணன் வீட்டுக்குப் போறாங்க அத்தனை பேரும்!

அங்கே சக அடியார்கள் - காவலர்கள்! அவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள் கோதை! அவர்கட்கு முதல் வணக்கம் வைக்கிறாள்!
தங்களுக்குப் பறை தருவதா கண்ணன் நேற்றே சொல்லிட்டானே! இனி இவிங்கள எதுக்கு நாம மதிக்கணும்?-ன்னு அகந்தை காட்டலை! பொறுமை காட்டி, பணிவு காட்டி வணங்குகிறார்கள்! பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து!

சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலுக்குள் போகும் போது, திருவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை எல்லாம் வணங்கிக் கொண்டே செல்வாராம்! அப்புறம் தான் சிவ வணக்கமே!
ஆனால் ஒரே ஒரு நாள், ஏதோ சிந்தனையில் சென்று விட, அப்போது தான் சிவபெருமான் காட்டி அருளினான் - திருத்தொண்டர் தொகை என்னும் அடியார்கள் நூல் பிறந்தது! அடியார்க்கும் அடியேன், அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடினார்!

அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ-ன்னு சாற்றுமுறையில் கூட அடியார்கள் தான் மொதல்ல வருது! அதையே கோதை காட்டுகிறாள் இந்தத் திருப்பாவையில்!
 

நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! - உள் காவலர்கள்!

மணிக் கதவம் தாள் திறவாய் = கதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்-ன்னு

மாயன் = தமிழ்க் கடவுளான மாயோன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்!
(நெருநல் என்பது நேற்றைய காலம்! என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நெருனல் = நென்னல்! ஆண்டாள் தான் வட்டார வழக்கு வித்தகியாச்சே!)

தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்திருக்கோம்!
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ, பள்ளி எழுச்சி பாடுறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிலா! இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை முதலிலேயே ஏதாச்சும் சொல்லி மறுத்துடாதீங்க!

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = தாழ் நீக்கி, திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!

அடியார்கள்
* அவர்கள் கருத்து எந்த வடிவில் இருந்தாலும், அது இறைக் கருத்து அல்லவா!
* அவர்கள் வழி என்னவாக இருந்தாலும், அது இறை வழி அல்லவா!
* சக அடியார்களிடம் துவேஷம் காட்டாது, அன்பும் மதிப்பும் காட்டுவோம்!

"நேயமாய்", நம் மனசின் நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்! ஏல்-ஒர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...