Wednesday, January 15, 2020

" * #திருப்பாவைநிகழ்ச்சிகள்நிறைவு #வேங்கடவற்கு_என்னை_ #விதிக்கிற்றியே!* "



————————————————
பொதுவா, மார்கழி முடிஞ்சதும், திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடும்! ஆனால் தமிழர் திருநாளான தை-முதல் நாளுக்கு, கோதை பாசுரம் பாடி வச்சிருக்கா-ன்னு பல பேருக்குத் தெரியாது!

தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!

வேகமான பொருள்:

 காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்! சிவ பெருமான் நெற்றிச் சோதியில் பொடியாகிய பொடியா!

தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாவது தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! தை மாசம் என்றாலே நீ வீடு தேடி வரும் வேளையாச்சே! அதான்!

எதற்கு உயிர் வாழ்கிறேன் தெரியுமா? காமன் என்னும் உன்னையும், சாமன் என்னும் உன் தம்பியையும் தொழுதேன்! ஏன் தெரியுமா?
பொறிகள் பறக்கும் அழகிய சக்கரத்தைக் கையில் பிடிச்சிருக்கானே...அந்த வேங்கடவன்! "அவனுக்கு-நான்" என்று விதிப்பாயே!
 

மார்கழி நோன்பு முடிஞ்சதும், இரண்டு மாதங்கள் கழிந்து, பங்குனியில் தான் (பங்குனி உத்திரம்) கோதைத் திருமணம் கொண்டாடுவார்கள் திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்!

ஆனால் வேங்கடவன் அதற்கு முன்னதாகவே கோதைக்கு அருள் செய்கிறான்! எப்படா இவள், "வங்கக்கடல் கடைந்த" கடைசிப் பாசுரம் பாடி முடிக்கப் போகிறாளோ?-ன்னு காத்துக்கிட்டு இருப்பார் போல! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! நோன்பு முடிச்ச கையோடு திருமணம்.

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!
 

அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

*பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
*  தைப்-பொங்கல் நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள்,
திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாடுடைத் தலைவன், அமலனாதிப் பிரான்,
திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...