*உந்தன்னோடு, உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது* ! = " *ஓம்* "
*முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்னவன் முருகன்!
*அன்பினால் சிறுபேர் அழைத்தனமும் சீறாது "அருளுவான்" எந்தை திருமால்!
கடவுளை.....ஏதோ.....
சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன் (சர்வேசன்),
சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன்,
சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு.....பல "சர்வ" போடுகிறோம்!
ஆனால் அப்பேர்ப்பட்ட *கடவுளாலும் முடியாத ஒரே காரியம்.....ஒன்னு இருக்கு* !
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,
உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தாய்! மாறிக்கிட்டே இருக்காங்க!
ஒரு பிறவித் தாய்க்கே இவ்வளவு பாசம்-ன்னா,
எல்லாப் பிறவிக்கும் தாயான தாய்க்கு எவ்வளவு பாசம் இருக்கும்?
உறவுகள் ரெண்டு வகை = சரீர பந்துக்கள்! ஆத்ம பந்து!
*சரீர உறவினர்கள் எப்ப வேணும்னாலும் வருவாங்க! எப்ப வேணும்னாலும் போயிருவாங்க!* * அவங்களைப் பொறுத்த வரை = நீ முதலில் சரீரம்! அப்பறம் தான் உள்ளம்!
* ஆனா ஒரே ஒருத்தருக்குத் தான் = நீ முதலில் உள்ளம், அப்பறம் தான் உன் சரீரம்!
சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க!
இந்த அறிவியல் காலத்தில் கூட, அட்ரெஸ் தெளிவா இல்லீன்னா ஒரு பொருளைக் கொண்டு போய் கொடுப்பது சிரமமா இருக்கு!
பின் கோடு, சிப் கோடு, யூனிக் கோடு-ன்னு பல கோடுகள்! அதில்லாம தபால் அனுப்பினா திவால் தான்!
*ஆனால் பிறவிகள் தோறும்...உன் கர்மாக்கள்...உன் வினைகள்...கரெக்டா உன் கிட்ட வந்து சேருதே? எப்படி* ?
எப்படி ஒரு அடையாளம், Identification, Embedded Chip கூட இல்லாம, புண்ய-பாவக் கணக்குகள், பட்டுவாடா ஆகுது?
* இறைவனைப் பற்றி இறைவனே தான் அறிந்து கொள்ள முடியும்!
* ஒரு குழந்தையை, அதன் தாயே தான் அடையாளம் காட்ட முடியும்!
பிறந்து ரெண்டு நாளே ஆன குழந்தை...
பார்ப்பதற்கு மத்த குழந்தைகளைப் போலவே இருந்தாலும், அதன் தாய்க்குத் தன் குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும் அல்லவா!
* நாம் காட்சியை மட்டும் வைத்து அடையாளம் கண்டால்...
* அம்மா வாசனை, காட்சி, குரல், சுவை, தீண்டல்-ன்னு ஒரே நொடியில் சொல்லிடுவா!
அப்படித் தான் பிறவிகள் தோறும், நம்மை இறைவனும் அடையாளம் கண்டு கொள்கிறான்! Embedded Chip எல்லாம் எதுவும் வைக்காமலேயே! 🙂
இப்பேர்ப்பட்ட இறைவன்...அவனாலும் முடியாத ஒரே காரியம்...
* *நாம்-அவன் என்கிற இந்த உறவை அழிக்கவே முடியாது* !
* *அதை நம்மாலும் அழிக்க முடியாது* ! *அவனாலும் அழிக்க முடியாது* !
பொறந்தாச்சு! இனி..
"நான் அம்மா" இல்லைன்னு சொன்னாலும் = அம்மா, அம்மா தான்!
"நான் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் = புள்ளை, புள்ளை தான்!
*DNA மகத்துவம் அப்படி* !!!
சர்வ சக்தன், சர்வ ஈசன் (சர்வேசன்) ...பல "சர்வ" போட்டாலும்...
கடைசியில்... அவன் சர்வ சரண்யன்!
* உன் தன்னோடு - உறவேல் - நமக்கு
= இங்கு ஒழிக்க ஒழியாது!!!
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எனக்குமான DNA-வை நீயே நினைச்சாலும் ஒன்னுமே பண்ண முடியாது! 🙂
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம் = கறவை மாட்டுக்குப் பின்னாலேயே போய், காட்டிலே மேய விட்டு, பின்னர் சாப்பிடுவோம்!
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து = இப்படி மாடு மேய்க்கும் கூட்டம்! ரொம்ப பெருசா அறிவெல்லாம் இல்லாத ஒரு ஆயர் குலம்!
உன் தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் = அந்த மாதிரியான ஒரு கூட்டத்துக்கு நடுவில், நீ வந்து பொறந்தீயே! என்ன புண்ணியம் செஞ்சோமோ நாங்க?
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா = வெறுமனே குறை இல்லாத கோவிந்தா-ன்னு சொல்ல மனசு ஒப்பலையே!
இன்னிக்கி வேணும்னா குறை இல்லாம இருக்கலாம்! ஆனா நாளைக்கு மாறிடுவாங்களே! நீயோ, குறை "ஒன்றுமே" இல்லாத கோ-விந்தன்!
*உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் ** = *அ+உ+ம = ஓம்!*
*அகரம்=அவன்* ;
*மகரம்=நாம்* ;
*உகரம்=(அவன்-நாம்)உறவு* !
பிரணவ சொருபத்தை இப்பாசுரத்தில் மிக அழகாகக் காட்டுகிறாள் கோதை!
எல்லாரும் பிரணவப் பொருள், பிரணவப் பொருள்-ன்னு சும்மா பேசறோமே தவிர, முருகப் பெருமான் அப்பாவுக்குச் சொன்ன பொருள் தான் என்ன?
* அதை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஏன்? பிரணவம் என்பது ரகசியமா?
* ஆனால் கோதை இதோ சொல்கிறாளே! ஊர் அறியப் போட்டு உடைத்து விட்டாளே!
ஓம் என்னும் பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல் தானே பிரம்மா அவதிப்பட்டார்? ஆசை முருகன் தலையில் குட்டினான்?
தெரியாத பிரம்மனுக்குப் பிறகு சொல்லிக் கொடுத்தானா?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் "இரு செவி" மீதிலும் பகர் என்று ஆனதுவே!
இங்கு ஒழிக்க ஒழியாது = "நீ-நான்" உறவு;
அதை நீயே ஒழிக்க நினைச்சாலும் ஒழியாது!
ஏன் தெரியுமா?
(ஓம்)+நமோ+நாராயணாய = 1+2+5 = 8 = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டெழுத்து!
ஓம் என்பது தமிழில் எழுதும் போது, பார்க்க ஈரெழுத்து போல இருப்பினும், அது ஒரே எழுத்து தான்! அ+உ+ம சப்தம் சேர்ந்த ஏகாட்சரம்!
* உந்தன்னோடு = அ
* உறவேல் = உ
* நமக்கு = ம
அ+உ+ம = ஓம்!
அந்த உறவை, அந்த "ஓம்"-ஐ, உன்னால் கூட அழிக்க முடியுமா?
அழித்தால் உன் அஷ்டாட்சரத்துக்கே பொருள் இல்லாமல் போய் விடுமே?
ஏன்னா, அந்த "ஓம்" என்பதைச் சேர்த்தா தான் எட்டு எழுத்து!
"ஓம்"-ஐ நீக்கிப் பாருங்கள்!
ஏழாகி விடும்! சப்தாட்சரம்-ன்னு ஆயிரும்! 🙂
இப்படி ஓங்காரம் சேர்ந்தே இருக்கும் "ஒரே" மந்திரம் என்பது தானே அஷ்டாட்சரப் பெருமை!
"ஓம்" என்பதைச் சேர்த்தால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி!
* இப்படியான பிரணவம் = உந்தன்னோடு+உறவேல்+நமக்கு! = அ+உ+ம!* அடே பெருமாளே, இப்போ அந்த உறவை ஒழியேன் பார்ப்போம் என்று கோதை சவடால் விடுகிறாள்!
அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்! 🙂
எங்க நல்லது எது-ன்னு எங்களுக்கே தெரியாது! எங்கள் நல்லது நாடும் உள்ளங்களை நாங்களே போட்டுத் தாக்குவோம்!
ஒரு பொருள் - நேற்று நல்லதாகத் தெரியும்!
ஆனா இன்னிக்கு மாறிடும்!
நாளை மீண்டும் நல்லதாத் தெரியும்!
இப்படி "நல்லது" அறியாக் கூட்டம் நாங்க!
அன்பினால் உன் தன்னை = ஏதோ, அன்பாலேயும், உரிமையாலேயும், உன்னை
சிறு பேர் அழைத்தனமும் = என்னென்னமோ சொல்லி இருக்கோம்! எப்படி எப்படியோ திட்டி இருக்கோம்!
சீறி அருளாதே = பூச்சாண்டி காட்டுவது போல் சீறக் கூடச் சீறாதே!
சீறினாலும் அருள்வாய் அல்லவா!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பாய் அல்லவா!
இறைவா, நீ தாராய் பறை = இறைவா! குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா! நீ தான் அபயம்! அபயம்!
இப்போதைக்கு " **நீ-நாங்கள்* " *உறவைப் பிரிக்கவே முடியாது* !
*அதனால் தான்*
" *உன்* " *தன்னைப் பிறவி பெறுந்தனை*
" *உன்* " *தன்னோடு உறவேல் நமக்கு*
" *உன்* " *தன்னைச் சிறு பேர் அழைத்தனமும்*
*என்று மூன்று முறை* " *உன்* , *உன்* , *உன்* " *என்று ஒரே பாட்டில் சொல்லி* ,
"நம்-அவன்" = உறவைக்
கல்வெட்டு போல வெட்டி வைக்கிறாள்..
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
அவள் வழியிலேயே, நானும்...
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய "குறையொன்றுமில்லை" என்னும் அழியாக் காவியமான பாடலின் கரு, இந்தப் பாசுரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது!
குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா = குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment