#காவடி_சிந்து_அண்ணாமலை #ரெட்டியார்
#கழுகுமல
————————————————-
கடந்த 1990 கலைமகள் தீபாவளி மலரில் காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியார் அவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். சென்னிக்குளத்தில் அவரின் குரு பூஜை
தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860-ஆம் ஆண்டு அண்ணாமலை ரெட்டியார் சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்ததைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம். ஒருமுறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்' என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, ""அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?'' என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், ""தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா'' என்று பணிவுடன் கூறினார்.
சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார். தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், ""இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்'' என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.
பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில். இருந்த உ.வே.
சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணியதேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார். திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார். ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார். மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.
""சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே''
என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார். பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா' என்று கூறி மெய்மறந்தனர்.
அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது. வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை. 1891-ஆம் ஆண்டு தைமாதம் அமாவாசையன்று தமது 29-வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இவருடைய சிந்துவை ஐநா மன்றத்தில்
பாடினார். காந்தி, நேரு ரசித்தது.
#காவடி_சிந்து
#அண்ணாமலை_ரெட்டியார்
#கழுகுமலை
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksradhakrishnanposting
#ksrposting
24-1-2020.
No comments:
Post a Comment