Sunday, January 26, 2020

இந்திய_அரசியல்_சாசனம் #Constitution_of_India

#குடியரசு_நாள்
#அரசியலமைப்பு_சட்டம்-71
————————————————-
 இன்று (26-01-2020) அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றி அதை கடந்த 24-01-1950 அன்று ஏற்றுக் கொண்டு முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், கடந்த 26-01-1956ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த நாளை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 

இந்த நிலையில் அரசியல் சாசனம் 124 முறை திருத்தப்பட்டுள்ளது. இன்னும் அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் மூன்று நிலுவையில் உள்ளது. காஷ்மீர் சிறப்பு அதிகாரம் 370ம் திரும்பப் பெறப்பட்டது. இதுவரை பிரிவு 356 கொண்டு 132 முறை மாநில அரசுகளும் மத்திய அரசால் கலைக்கப்பட்டது.

அமெரிக்க அரசியல் சாசனம் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 329 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. அந்த சாசனத்தில் 7 பிரிவுகளில் இதுவரை 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 26 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை பார்த்தால் நமக்கே வேதனையாக இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் எடை 0.600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம் 328 பிரிவுகள் நாடு விடுதலைப் பெற்று 72 ஆண்டுகளில் 101 திருத்தங்கள் வரை நடந்தேறியுள்ளது. இன்னும் சில திருத்தங்கள் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ளது.




நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நெகிழும் தன்மையா? நெகிழாத் தன்மையா? என்பதற்கான பதிலும் இல்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம், இத்தாலியில் பிறந்த குடியரசு என்று இரண்டையும் கொண்டாடுகிறோம். நம் நாடு ஜனநாயக நாடா, குடியரசு நாடா என்று கூட பதிலளிக்க முடியாத நிலை. பிரிட்டன் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றினால் ஜனநாயக மரபியல் தான் நம்மை சாரும். பிறகெப்படி குடியரசு என்று வகைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அமெரிக்காவும், பிரான்சும் குடியரசு நாடுகளாகும். இந்தியா குடியரசு நாடா, ஜனநாயக நாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.

அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.

பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் சமஷ்டி அமைப்பும் (Federal) ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக பௌதிகம் சொல்கிற மாதிரி டைனமிசம் இருக்கும். சென்ட்ரி பியூகல்,சென்ட்ரி பெட்டல்  என்ற வீச்சில் எந்த வகையில் அமைப்பியல் ரீதியிலான ஆட்சி இந்தியாவில் நடத்துகிறோம் என்று தெரிந்தால் தான் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் கூட்டாட்சி சரியாக இயங்கும். இங்கு கூட்டாட்சியும் கேள்விக்குறியாக இருக்கிறது. நல்லாட்சியும் அப்படித்தான் ...........?

#இந்திய_அரசியல்_சாசனம்70
#constitution70
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
26-01-2020
#இந்திய_அரசியல்_சாசனம்
#Constitution_of_India


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...