Wednesday, January 15, 2020

துக்ளக்_50 - சோ

#துக்ளக்_50
-----------------
துக்ளக் இதழ்   சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார். அரசியல் நாளேடு என்றாலும்,நையாண்டியாககருத்துகளைச் சொல்வதும், ராமாயணம், மகாபாரதம் போன்ற மத சம்மந்தமான விளக்க உரைகளும் துக்ளக்கில் வெளிவந்தன. துக்ளக் இதழ் வெளிவந்து இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவாகிறது. 

ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபளானி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காமராஜர், வாஜ்பாய், அத்வானி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் எனப் பலரின் பேட்டிகளை வெளிப்படையாக கேள்விகள் கேட்டு துக்ளக்கில் வெளியிட்டார். 

கடந்த 1971 மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலின்போது,  சோ இராமசாமியோடு அறிமுகம். அப்போது, ஸ்தாபனக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாக. ஜெயகாந்தன்,



நா.பார்த்தசாரதி போன்றோர் எல்லாம் பிரச்சாரத்தில்  இருந்தனர். 
பழ.நெடுமாறன் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டார் என்று நினைவு. 

இலங்கை பிரச்சனைக்குப் பின் சோ அவர்களோடு (1980கள் பின்)தொடர்பு இல்லாமல் ஆகிவிட்டது. அவசர நிலை காலத்தை  கடுமையாக  எதிர்த்தவர். 
துக்ளக் இதழில் நா. பார்த்தசாரதி, ஜெயலலிதா போன்றவர்கள் தொடர் கட்டுரைகள் எழுதியது உண்டு. ஆட்சி கலைப்பு பிரிவு 356, கவர்னர்கள் , நீதித் துறை குறித்த கட்டுரை போன்ற பல தொடர்கள் நன்றாக ஆழமாக   பல செய்திகள்  உட்கொண்டு இருக்கும்.
இராமகாதை, மகாபாரதம் ஆகியவற்றை
இன்றைய போக்கில் எழுதினார்.

கடந்த 1979இல் ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை நா. பார்த்தசாரதி அவர்கள் பழ. நெடுமாறனோடு எழும்பூரில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு பயணமானார். அப்போது பழ.நெடுமாறன் அவர்களை வழியனுப்ப எழும்பூர் இரயில் நிலையத்திற்குச் சென்றபோது, இந்த கட்டுரையை நாளை காலையில் துக்ளக் ஆபிசில் அவசியம் சேர்த்துவிடுங்கள் என்று என்னிடம் கொடுத்து அனுப்பினார். அதற்கு அடுத்த வாரம் அந்த நா.பா.வின் கட்டுரை “நமது புதிய வறுமைகள்” என்ற தலைப்பில் வெளியானது. அதை கீழே பார்க்கவும்.

துக்ளக்ஏட்டில்என்னுடையகட்டுரை
களும்,கருத்துகளும்10,15ஆண்டு
களுக்கு  முன்னர்  வெளிவந்தன. ஜனநாயகத்தின் மாண்பை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை துக்ளக்கிற்கு உண்டு. ஈழத்தமிழர் பிரச்சனையில் துக்ளக்கிற்கு மாற்றுக் கருத்துகள் உண்டு.

கருத்து மாற்றங்கள், எதிர்வினைகள் இருந்தாலும்  50 ஆண்டுகள் கொண்டாடும் துக்ளக்கிற்கு வாழ்த்துகள். 

•நமது புதிய வறுமைகள்•
———————————-
-நா.பார்த்தசாரதி

இந்தியாவையும் இந்திய மக்களையும் பொறுத்து ஏழ்மையும், வயிற்றுப் பசியும் மட்டுமே பெரிய வறுமைகளாக சொல்லப்படுகின்றன. எழுதப்படுகின்றன. ஆனால், உண்மையில் இவற்றைவிட பெரிய இவற்றைவிட பயங்கரமான பல வறுமைகள் நம்மிடம் உள்ளன. வயிற்றுப் பசியையும், வறுமையையும் விட நம்மை அதிகமாக பாதிக்க கூடிய வறுமைகள் அவைதான். நுண்ணுணர்வு இன்மையைவிட பெரிய வறுமை வேறு ஒன்றுமில்லை என்கிற அர்த்தமுள்ள ஒரு தமிழ்ப்பாட்டு இருக்கிறது. இந்த தமிழ்ப் பாட்டின் கருத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது வயிற்றுப் பசியை தவிரவும் வேறு பல வறுமைகள் இருக்க முடியும் என்று தெரிகிறது.
ஒருவரது அறியாமையை மன்னிக்கலாம்; அறிய மறுப்பதை எப்படி மன்னிப்பது? புரியாமையை மன்னிக்கலாம்; புரிந்து கொள்ள மறுப்பதை எப்படி மன்னிப்பது? உணராமையை மன்னிக்கலாம்; உணர்ந்து கொள்ள மறுப்பதை எப்படி மன்னிப்பது?
இன்று உண்மையில் நாம், பலவற்றை அறியாமல் மட்டுமில்லை அறிந்து கொள்ள மறுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இன்றைய நமது புதிய வறுகளில் முதலில் வருவது விரைவாகப் பெருகிவரும் கலாச்சார வறுமை, சிலைகள், கோவில் தேர்களின் பகுதிகள், பஞ்சலோக விக்கிரகங்கள் இவற்றை அந்நிய நாட்டு கடத்தி விற்பவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். சிலர், இவற்றை கடத்தி விற்கும் நம்மவர்களைக் குறை கூறுவதற்குப் பதில் இவற்றை மதித்து விலை கொடுத்து வாங்கும் அந்நியர்களைக் கண்டபடி தூற்றுகிறோம்.
நமது சிலைகள், நமது கலைகள், நமது சங்கீதம், நமது கலாச்சாரம், நமது பரதநாட்டியம், நமது பழஞ்சிறப்புகள் எல்லாவற்றையும் எந்த நிலையிலும், எந்த விலையிலும் விற்றுவிட அல்லது விட்டுவிட நாம் தயாராக இருக்கிறோம். அவற்றை வாங்கவும், பாதுகாக்கவும், இரசிக்கவும், பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் மேற்கு நாட்டுக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். எதையும் வரவேற்று மதிக்கத் தயாராயிருக்கும் மனிதர்கள் ஒரு பக்கம். எதையும் விற்கவும், இழக்கவும் தயாராக இருக்கும் நாம் ஒரு பக்கம்.
நம்முடைய கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி படிப்பவர்களை ஏளனமாக பார்க்கிறோம். ஷேக்ஸ்பியரையும், மில்டனையும் கொண்டாடுகிறோம். கம்பராமாயணம் படிப்பதைப் பெருமையாக நினைப்பதில்லை. தமிழை வாழ்த்துகிறோம். ஆங்கிலத்தை கொண்டாடுகிறோம்.
தாய்மொழியைப் பிழையாகவும், தவறாகவும், படுமோசமாக எழுதுவதற்கு கூசுவது இல்லை. ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்தால் கூட கூசுகிறோம்; கூச வைக்கிறோம். 
உலகின் பல நாடுகளில் நேசத்திலும், நல்லெண்ணத்திலும் வைத்துக் கொள்வதற்காகவும், எல்லா நாடுகளின் கலாச்சார உறவுக்காகவும், கலாச்சார செல்வங்களை மதிப்பதற்காகவும் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு முயல்கின்றன.
நாமோ நமது கலாச்சாரப் பிடிப்புள்ள சங்கீதம், நாடகம், நாட்டியம், கோவில்கள், குளங்கள், தேர், திருவிழா, தெருக்கூத்து கிராமியக் கலைகள் எல்லாவற்றையும் மெல்ல மெல்ல மறந்தும், துறந்தும் வருகிறோம். 
இன்னும் பத்து வருடங்களுக்குப் பின் கர்நாடக சங்கீதத்தின் கதி என்னவாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நாகரீக வளர்ச்சியிலும், நகர வளர்ச்சியிலும் தன் புராதனமான பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் இழக்காத தேசம்தான் மானமுள்ள தேசமாக இருக்க முடியும்.
நமது பேராசிரியர்கள் இங்கர்சாலைப் பற்றியும், சீனப் பேரறிஞன் கன்பூஷியஸைப் பற்றியும் மேடைகளில் பேசுவதை மக்கள் காண்கிறார்கள். 30 வயதுக்குள் ஆதிசங்கரர் பாரத நாடு முழுவதும் ஞான யாத்திரை செய்ததைப் பற்றிப் பேசுவதற்கு மறந்துவிடுகிறார்கள். மிக்சிகன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ரஷ்யா லெனின் கிரேடு பல்கலைக்கழகம், போலந்தின் வார்சா பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் காளிதாசரின் சாகுந்தலத்தையும், சோமதேவரின் கதாசரித் சாகரத்தையும், பவபூதியின் உத்தம ராமசரிதத்தையும் அந்தந்த நாட்டு மாணவர்கள் இந்திய இயலை (Indology) அறிவதற்காக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தென்னிந்திய மாணவனுக்குச் சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்குக் கூட இந்திய இலக்கியத்தை வளப்படுத்திய மேற்படி மகா கவிகளைத் தெரியாது.
ஒரு தென்னிந்திய மாணவனுக்கு, ‘டெட்ராய்டு’ பற்றியும், ‘மான்செஸ்டர்’ பற்றியும் தெரிந்திருக்கும். கிருஷ்ணாபுரத்துச்  சிற்பங்களைப் பற்றியும், திரிகூட ராசப்பர் எழுதிய அற்புதமான திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்காது.
நம்மைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளும் கல்வி போதுமானது இல்லை என்பார்கள். ஆனால் நம்மை பற்றி அறவே தெரிந்து கொள்ளாத கல்வி நியாயமானது இல்லை என்பேன் நான்.
கலைச் செல்வங்களை நமது சொந்தக் கோவில்களை அலட்சியப்படுத்துவது, சொந்தக் காவியங்கள், இலக்கியங்களைக் கிண்டல் செய்வது, தர்க்கம் பேசுவது, நமது மக்களின் பழக்க வழக்கங்களை இகழ்வது, நமது தேசத்து மொழிகளை கேவலப்படுத்துவது, நம்மவர்களின் கிராமிய கலாச்சாரத்தை அருவருப்போடு ஒதுக்கி விலக்கி - நம்மை மட்டும் உயர்வாக நினைத்துக் கொள்வது ஆகிய புதிய வறுமைகள் இன்றைய இளைஞர்களைப் பற்றியிருக்கின்றன. இதை மெல்ல மெல்லமாவது மாற்ற வேண்டும், இல்லாவிடில் பொதுவான வறுமையை விட அபாயத்தை உண்டாக்கக்கூடிய வறுமைகள் ஆகும் அவை.
உழைப்பதை கேவலமாகவும், அவசியமற்றதாகவும் நினைக்கும் மனப்பான்மை இளைஞர்களிடையே உருவாகி வருகிறது. ஏர் பிடித்தி நிலத்தை உழுகிறவனைவிட அவன் அனுப்பும் பணத்தில், வெள்ளைச் சட்டை - அரும்பு மீசை கிருதாவுடன் சினிமாக் கொட்டகை வாசலில் வளையவரும் அவன் மகனான ஒரு மாணவன் மதிப்புக்குரியவன் வரும் என்று நான் சொல்ல மாட்டேன்.
படிப்பு, மனத்தை இளகச் செய்து கருணை மயமாக்க வேண்டும். பிறரை மதிக்க கற்றுத் தரவேண்டும். கடின உழைப்பில் நம்பிக்கைக் கொள்ளச் செய்ய வேண்டும். முரட்டுத்தனத்தை மட்டும் கற்றுத் தருகிற படிப்பில், வெற்றி பிடிவாதத்தை மட்டும் கற்றுத் தருகிற படிப்பில், எங்கே, எதிலோ வறுமை இருக்க வேண்டும்.
சினிமாவில் வருகிற கனவு சீன் மாதிரி ஒட்டாமல் வாழப் பழகிக் கொண்டு வரும் இளம் தலைமுறையை பற்றி நாட்டில் பொறுப்புள்ள யாரும் கவலைப்படவில்லை. சில சமயங்களில் அரசியல் கட்சிகள் சிலவற்றிருக்கும், தலைவர்கள் சிலருக்குமே மாணவர்கள் இப்படி இருப்பது பிரயோஜனமாக இருக்கிறது. அவர்கள் மனதில் எதன் மேலாவது வெறுப்பைத் தூண்டிவிடவும், எதற்காகவாவது பஸ்ஸையும், இரயிலையும் கொளுத்த தூண்டிவிடவும், இந்த நிலை ஏற்றதாக இருப்பதால்தானோ என்னவோ இதை யாரும் மாற்றவில்லை. Poverty Line, பற்றி எல்லாம் பேசுகிறோமே ஒழிய Cultural Line, Below Cultural line பற்றிக் கவலைப்படுவதில்லை. 
கவலையோடும், கவனத்தோடும் சிந்திக்கும் போது நம் நாட்டின் பொது வறுமையை விட இந்த புதிய உரிமைகள் பயப்பட வைக்கின்றன.
கனத்த ஜமுக்காளத்தை ஒத்த போர்வையை மேலே போத்திக் கொண்டு வந்து இறங்கும் வித்தியாசமான உடைகளோடு கூடிய பல்வேறு ஆப்பிரிக்கர்களின் ஹீத்ரு விமான நிலையத்தையும், பஞ்சகச்சம், உச்சிக்குடுமி, நாமம், விபூதியோடு ஒரு சில நாகரீக இளைஞர்களின் மத்தியில் நடந்து போனாலே கேலி செய்யும் நம் நாட்டு மனப்பான்மையையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. உடை, சின்னம், தோற்றம் இவையெல்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சொந்தமான விடயங்கள்.
கருப்பு சிவப்புத் துண்டு, இரட்டை இலை கரை வேஷ்டி உதயசூரியன் கரை வேஷ்டி எல்லாம் எப்படி சின்னங்களோ அப்படித்தான் விபூதிப் பூச்சு, நாமம், தான் வைத்து வேஷ்டி கட்டுவது ஆகியவையும் சிலரது தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்.
பண்பாட்டுக் குறைபாடுகளில் மிகவும் கேவலமான அம்சம் பிறர் உண்பதையும், உடுப்பதையும் கேலி செய்து மகிழ்வது. இன்றைய இளைஞர்களிடம் எதையும் (தெருவில் நடக்கும் பெண்கள், கிரிக்கெட்டில் தங்களுக்குப் பிடிக்காத ஆட்டக்காரர், கற்பிக்கும் ஆசிரியர், படிக்கும் பாடங்கள் இன்னும் பலப்பல) கேலி செய்து மகிழ்கிற பழக்கத்தைப் போல் அநாகரிகமான பழக்கம் வேறொன்று இருக்கமுடியாது.
கலாச்சாரம், இலக்கியம், மொழி, பெண்களின் அழகு, பண்பாடு போன்ற விஷயங்களை நம் இளைஞர்கள் இன்னும் கேலி செய்து சிரித்து மகிழ்வதற்குரிய பண்டங்களாகவே எண்ணி வருகிறார்கள்.
இங்கு உருவாகிவரும் புதிய வறுமையின் அடையாளமே பிறர் கேலி செய்து மகிழும் இந்த பழக்கம் தான். இந்த மாதிரியான போக்கு ஒரு நாட்டுக்கு நல்லதல்ல.

துக்ளக்.
15-04-1979
——————

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
15-01-2020.
#ksrpostings
#ksradhakrishnanpostings
#துக்ளக்_50
#நா_பார்த்தசாரதி
#சோ_ராமசாமி


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...