Tuesday, January 14, 2020

திருப்பாவை #கோதைமொழி 30. மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 30. மார்கழி
———————————————
இன்றோடு மார்கழி நிறைவு. 
பாவை நோன்பு முடிந்து ஆண்டாள் திருக்கல்யாணம். 
#ஆகையால் முப்பதாம் பாசுரம் இன்றே. 

 *செங்கண் திருமுகத்துச்* *செல்வத் திருமாலால்* 
 *எங்கும் திருவருள்* *பெற்று* , *இன்புறுவர்* *எம்* *பாவாய்* !
  
பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு 
கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு துவக்கத்தில் இருக்கும்! 
நூற் பயன் (பல ஸ்ருதி)-ன்னு முடிவில் இருக்கும்!
ஆனால் திருப்பாவைக்குக் கடவுள் வாழ்த்து-ன்னு தனியா இல்லை! 
வாழ்த்து + நூற்பயன் என்று இரண்டையுமே முதலிலேயே சொல்லி விடுகிறாள்!

* கார்மேனி, செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் = கடவுள் வாழ்த்து(தியான சுலோகம்)!
* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = நூற் பயன்(பல ஸ்ருதி)!

இப்படித் துவங்கும் போதே துவங்கி விடுகிறாள்! 
ஆனால், முடிக்கும் போது மட்டும், இன்னொரு முறை, வெளிப்படையாக நூற்பயனைச் சொல்கிறாளே? அதான் முதல் பாட்டிலேயே தியான சுலோகம்+நூற்பயன் சொல்லிட்டாளே!
அப்புறம் எதுக்கு, முப்பதாம் பாட்டில், திருப்பாவைப் பாடல்களால் என்னென்ன பலன் கிடைக்கும்-ன்னு ஒரு லிஸ்ட் போடுகிறாள்?

கோதைக்கு "அவனை"க் காட்டிலும் "அடியார்கள்" தான் முக்கியம்! அடியார்களோடு, "கூடி இருந்து", குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான் அடியார்களுக்கு என்ன தேவை? என்ன கிடைக்கும்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டு, தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்!

* துவங்கும் போதும், நேர் இழையீர்...சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்-ன்னு முதலில் அடியார்களைத் தான் சொல்கிறாள்! அப்புறம் தான் நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம் எல்லாம்!
அதே போல் முடிக்கும் போதும் அடியார்களைக் கொண்டே முடிக்கிறாள்! = எங்கும் திருவருள் பெற்று (அடியார்கள்) இன்புறுவர் எம் பாவாய்! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே படிங்க!

வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!

வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை = கப்பல்கள் செல்லும் கடலைக் கடைந்த மாதவன்-கேசவன்!
ஆகா திருப்பாற்கடலை யார் கடைந்தார்கள்? தேவர்-அசுரர் அல்லவா கடைந்தார்கள்? உழைப்பு அவர்களது! கிரெடிட் ஐயாவுக்கா? 

கர்மன்யேவா அதிகாரஸ்தே - செய்யும் கர்மங்களின் மேல் உனக்கு அதிகாரம் இல்லை என்ற கீதா-சாரத்தைக் கோதா-சாரத்தில் வைக்கிறாள்!

ஆமையாய் நடு நின்ற நடுவன் அவன்! அதனால் தானே கடைய முடிந்தது! மொத்த பாரத்தையும் நடுவில் தாங்கிக் கொண்டான்! தேவர் இழுப்பு, அசுரர் இழுப்பு, மலையின் கனம், பாம்பின் விடம், கடலின் அலை என்று மொத்த பாரமும் அவன் மேல் தான்!

ஏதோ வெளியில் இருந்து பார்க்கும் போது, நாம தான் எல்லாம் கடைவது/செய்வது போல இருக்கும்! ஆனால் உண்மையிலேயே கடைவது/செய்வது மாதவன்-கேசவன் தான்!

சரி, அது என்ன வங்கக் கடல்? வங்கம் = பெரும் கப்பல்! அட, திருப்பாற்கடலில் கப்பல் எல்லாம் போகுமா? இங்கே ஆண்டாள் காட்டும் கப்பல் வேற! நம் மனம் என்னும் கப்பல்! அது உலகக் கடலில் மிதந்தும், அலைகழிந்தும் போகிறது! அப்பர் சுவாமிகளும் மனம் எனும் தோணி என்று பாடுகிறார்!
 
ஆண்டாளும், அப்பர் சுவாமிகளும் பல இடங்களில் ஒரே உவமைகளைக் கையாளுவார்கள்
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணா
உனை எணும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!
 

திங்கள் திரு முகத்து சேய் இழையார் = நிலவைப் போல மதி முகம் கொண்ட பெண்கள்

"சென்று" இறைஞ்சி = தாங்கள் இருந்து இடத்தில் இருந்தே, இறுமாப்பாய் வணங்காது, "சென்று" வணங்குகிறார்கள்! ஏன்? = அடியார்களுடன் கூடி வழிபடணும்! அது தான் கைங்கர்யம்! அது தான் தொண்டு!
இருந்த இடத்தில் இருந்தே கூட இறைவனை வணங்கலாம் தான்! ஆனால் அது தனித்த வழிபாடு! அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = அங்கே, பெருமாளிடம் பறை வாங்கிக் கொண்ட வழியை...
ஆறு=வழி! ஆற்றுப்படை-ன்னு சொல்லுறோம்-ல! இங்கே பறை என்று சொல்லிவிட்டு பெருமாளையே வாங்கும் வழியை அல்லவோ நமக்குச் சொல்லித் தருகிறாள்!

* திருமுருகாற்றுப்படை = முருகப் பரிசில்! 
* ஆண்டாள் ஆற்றுப்படை = பெருமாள் பரிசில்!
அதனால் திருப்பாவையை ஆண்டாள் ஆற்றுப்படை-ன்னு சொல்லலாம் தானே? சரி தானே? திருமாலாற்றுப்படை-ன்னாச்சும் கட்டாயம் சொல்லலாம்!

அணி புதுவை = அழகான புதுவைக் கிராமம், புத்தூர், வில்லிபுத்தூர்!
பைங் கமலத் தண் தெரியல் = பசுமையான குளிர்ச்சியான தாமரை மாலைகள்! தெரியல்-ன்னா தொங்கு மாலை! 

தொங்கல், தொடையல், கண்ணி-ன்னு விதம் விதமான மாலைகள் உண்டு! 
ஆண்டாள் சூடியது + சூடிக் கொடுத்தது = தெரியல் என்னும் தொங்கு மாலை! ஆண்டாள் மாலைன்னே இப்போ பெயர் ஆயிடிச்சி!

பட்டர் பிரான் கோதை சொன்ன = பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்லப் பொண்ணு (கோதை) சொன்ன...
ஆண்டாளுக்கு பொறந்த வீட்டுப் பாசம் ஜாஸ்தி! என்ன தான் கண்ணா, கண்ணா-ன்னு கொஞ்சினாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், தன் பெயர் வரும் போதெல்லாம், தன் இனிஷியல் போட்டுப்பா!:)
பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்வக் குமாரத்தி

சங்கத்தமிழ் மாலை = அவள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை!
சங்க காலம் தான் எப்பவோ முடிஞ்சி போயிடுச்சே! இவள் காலம் அப்புறம் தானே? அப்புறம் என்ன சங்கத் தமிழ்?
* நப்பின்னையை முன் வைத்தாள்!
* பழந்தமிழர் பண்பாடு,
* தமிழில் இறையியல்,
* தமிழ்க் கடவுள் மாயோன்,
* வெட்சி-கரந்தை ஆநிரை காத்தல்
என்றெல்லாம் சங்ககாலத் தமிழ்ச் சமயத்தை, தமிழ்ச் சமூகத்தை அவள் இப்போதும் முன்னிறுத்தி நிலைநாட்டியதால் = சங்கத்தமிழ்!

கோதை, வடமொழி தெரிந்திருந்தும், வடமொழியில் பாடினாள் இல்லை! வடமொழியில் எழுதினால் தான் சபையில் மதிப்பு என்று இருந்த ஒரு காலகட்டத்திலும், நம்மைப் போன்ற எளியவர்களுக்காகத் தெய்வத் தமிழில் பாடினாள்! 
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
 

முப்பதும் தப்பாமே = அந்தக் கோதைத் தமிழ் - முப்பது பாசுரங்கள்! பா+சுரம் = கவிதை+இசை! 
இசைக் கவிதையான திருப்பாவைப் பாடல்களை...

இங்கு இப்பரிசு உரைப்பார் = இங்கே இந்தப் பெருமாள் பரிசைப் பாடுபவர்கள் எல்லாரும்...
அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = பார்த்தீங்களா சொல்லாட்சியை? பொருளாட்சியை?

* அங்கு-அப் பறை = அங்கு, அங்கு-ன்னு மோட்சம் தேடறீங்களா மக்களே?
* இங்கு-இப் பரிசு = இங்கு, இங்கு-ன்னு இங்கேயே இருக்கு!

கையில் வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலையலாமா? "எனக்கு மோட்சம் வேணும், எனக்கு மோட்சம் வேணும்"-ன்னு, சுயநலப் போர்வை போர்த்திக் கொண்டு, கர்மங்களையும், அனுஷ்டானங்களையும் செய்யாதீர்கள்! சுயநலம் இல்லாமல் அனுஷ்டானம் செய்யுங்கள்!

அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = நித்ய கைங்கர்யம்! 
என் கடன் பணி செய்து "கிடப்பதே"! = இதுவே மோட்சம்! இதுவே இன்பம்! இதுவே இறைவன் உள்ள உகப்பு!
* திருவரங்கமே மோட்சம்! திருவேங்கடமே மோட்சம்! திருக்கச்சியே மோட்சம்! மேலக்கோட்டையே மோட்சம்! திவ்ய தேசங்களே மோட்சம்!
* வாழைப் பந்தல் ஆனைக்கருளிய அருளாளப் பெருமாளே (கஜேந்திர வரதராஜப் பெருமாள்) மோட்சம்! அவரவர் அபிமானத் தலம் எல்லாமுமே மோட்சம்!
* அவரவர் அந்தராத்மாவே மோட்சம்! அந்தர்யாமியே மோட்சம்!

திருப்பாவை = ஒரு பரிசு! பெருமாள், தன்னோட பூமிப் பிராட்டியை அனுப்பி, நம்ம எல்லாருக்கும் கொடுத்த பரிசு! அதை ஓதுவார் எல்லாரும், பரிசு உரைப்பார் எல்லாரும்....

இப்போது பாருங்கள், கோதையின் உன்னிப்பான உத்தியை!
* முதல் பாசுரத்தில் = தியான சுலோகம் + நூற் பயன் வைத்தாள்!
* இறுதிப் பாசுரத்தில் = நூற் பயன் + தியான சுலோகம் வைக்கிறாள்!

ஈர் இரண்டு, மால் வரை தோள் = நான்கு பெரும் மலைத் தோள்கள்! 
ஈர்-இரண்டு=நான்கு! மேகம் தங்கும் மலைமுகடு போல, நாம் போய்த் தங்கும் அவன் நான்கு தோள்கள் = சங்கு-சக்கர-அபய-வரதக் கரங்கள்!
செங்கண், திருமுகத்து = செவ்வரி ஓடிய கண்கள்! திவ்யமான திருமுகம்! பால் வடியும் அந்த அழகு முகம்! அய்யோ....
செல்வ+திருமாலால் = திருமகளோடு கூடிய ஸ்ரீ+மன்+நாராயணனால்!

எங்கும் = எங்கும்=எல்லா இடத்திலும், என்றும்=எல்லாக் காலத்திலும்,

திரு-அருள் பெற்று = உலகன்னை மகாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாட்சத்தாலே, அகலகில்லாக் கருணையாலே...

* தமிழ்க் கடவுள் மாயோன் திரு-அருள் பெற்று...
* ஆண்டவன்-அடியார் திருத்தொண்டில்...
இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!

சமயத்தின் முப்பெரும் குறிக்கோள் என்ன?
1. பாதகங்கள் தீர்க்கணும்!
2. பரமன் அடி காட்டணும்!
3. வேதம் அனைத்துக்கும் வித்தாகணும்!
இம்மூன்றும் கோதையின் திருப்பாவை வெகு எளிதாகச் செய்து விடுகிறது!
சாஸ்திர விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களை எல்லாம் கடந்து, எளிய மக்களுக்கும் இதை எடுத்துச் செல்கிறது!

அதனால் தான் திருப்பாவைக்கு மட்டும், எந்தக் காலத்திலும், ஆலயங்களில் தடையில்லை! திருமலையில் வடமொழிச் சுப்ரபாதத்தை நிறுத்தி விட்டு, திருப்பாவையை ஓதுகிறார்கள்!
மந்திரங்களுக்கே உரித்தான மதிப்பு, வேதம் அனைத்துக்கும் வித்து-ன்னு சொன்னாலும்...

!
இந்த வேதம் அனைத்துக்கும் வித்து = திருப்பாவையை மட்டும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானுலும் ஓதிக் கொள்ளலாம்!

இது வைணவச் சொத்து அல்ல! 
சமயச் சொத்து அல்ல! 
குலச் சொத்து அல்ல! 
ஆச்சார சொத்து அல்ல!
திருப்பாவை = பொதுச் சொத்து! அதுவே இதன் நீர்மை-செளலப்பியம்-பெருமை!

ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ஹரி ஓம்!  

* ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!

* அடியேன் திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்கிறேன்!
* அடியார்களான உங்கள் திருவடிகளில் சேவித்துக் கொள்கிறேன்!
* இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...