*இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை*
————————————
பதவி இறக்க விசாரணையில் மாட்டிக்கொண்டிருக்கும் ட்ரம்ப்பும் ஊழல், லஞ்சம், நம்பிக்கைத் துரோகம் ஆகிய குற்றங்களில் விசாரிக்கப்படவிருக்கும் நேத்தன்யாஹுவும் பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாத, தீர்க்க முடியாத இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டார்களாம். ஒரு நூற்றாண்டாகப் பல தலைவர்கள் தீர்த்துவைக்காத இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தான் தீர்த்துவிட்டதாக ட்ரம்ப் எப்போதும் போல் கூறிக்கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்தே அமெரிக்கா யூதர்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது. எல்லாம் அமெரிக்காவில் குடியேறியிருக்கும், வசதிபடைத்த யூதர்கள் அமெரிக்க அரசை ஆட்டிவைப்பதால்தான்.
தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று ஹெர்ஸல் கொடுத்த யோசனையை முழுதாக ஏற்றுக்கொண்டு ஐரோப்பா முழுவதிலுமிருந்த யூதர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் நுழையத் தொடங்கினர். அப்போது முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் எடுத்த முடிவின்படி பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அப்போது பாலஸ்தீனம் முழுவதிலும் அரேபியர்களும், கி.பி. 132-இல் ரோமானியர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தோற்றுப்போய் ரோமானியர்களால் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனத்தைவிட்டே வெளியேறிய பிறகு பாலஸ்தீனத்திலேயே தங்கிவிட்ட சில யூதர்களும் வசித்துவந்தனர். அவர்களின் சம்மதம் இல்லாமலேயே யூதர்கள் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் குடியேறினர். தங்களோடு கொண்டுவந்த செல்வத்தினால் பாலஸ்தீனர்களிடமிருந்து அவர்கள் நிலங்களை வஞ்சகமாக வாங்கிப் போட்டனர். பாலைவனத்தை சோலைவனமாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன. அதற்குமேல் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கத் தன்னால் முடியாது என்று கூறி பாலஸ்தீனத்தை பிரிட்டன் ஐ.நா.விடம் ஒப்படைத்தது.
யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு நாட்டை உருவாக்குவதாக 1917-இல் பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வாக்குக் கொடுத்தது முதல் தவறு. யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது அதை நிறுத்தாதது பிரிட்டனின் அடுத்த தவறு. பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டபோது அதைத் தவிர்க்க பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் இடையே பிரிக்க முடிவுசெய்தது அடுத்த தவறு. அப்போது பாலஸ்தீனத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே யூதர்கள். அவர்களிடம் 7% மட்டுமே நிலம் இருந்தது. இருப்பினும் பாலஸ்தீனத்தில் பாதிக்குமேல் யூதர்களுக்கும் மீதியை அரேபியர்களுக்கும் கொடுக்க பிரிட்டனிடமிருந்து பாலஸ்தீனத்தை எடுத்துக்கொண்ட ஐ.நா. முடிவுசெய்தது. இது அடுத்த தவறு. தங்களுடைய நிலம் பிரிக்கப்பட்டு பாதிக்குமேல் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதை எதிர்த்து அரேபியர்கள் ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காததோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐ.நா.வின் முடிவை உடனடியாக ஏற்றுக்கொண்டு (அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே அவர்களுக்கு நிலம் கிடைத்தால் அதை வேண்டாம் என்றா சொல்வார்கள் இந்த யூதர்கள்?) யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர். தங்களுடைய பாலஸ்தீனத்தைப் பிரித்து யூதர்களுக்குக் கொடுக்க ஐ.நா. செய்த முடிவு தவறென்றும் அந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் முழுப் பாலஸ்தீனத்தையும் பெறுவதற்காகப் போராடப் போவதாகவும் அரேபியர்கள் அன்று செய்த முடிவு இன்று அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து அங்கு காலம் காலமாக வாழ்ந்துவந்த அரேபியர்களை வன்முறைகளாலும் வஞ்சகமாகவும் வெளியே அனுப்பியதோடு அதன் பிறகு யூதர்களுக்கும் – அதாவது இஸ்ரேலுக்கும் – அரேபியர்களுக்கும் நடந்த ஆறு யுத்தங்களிலும் இஸ்ரேலே வெற்றிபெற்றதோடு ஐ.நா.வால் அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் முக்கால் பகுதியை அபகரித்துக்கொண்டது. அரேபியர்களுக்குரிய நிலங்களில் யூதர்கள் தங்கள் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டனர். அமெரிக்கா தன் பக்கம் இருக்கும் ஒரே தைரியத்திலும் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா அளிக்கும் பண உதவியாலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அரேபியர்களின் நிலங்களை எடுத்துக்கொண்டதோடு அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தி வருகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்கா பாலஸ்தீனத்தில் அரேபியர்களுக்குத் தனி நாடு அமைக்கப்படும் என்று சொல்லிவந்தாலும் இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டே போகிறது; இப்போது பாலஸ்தீனத்தின் 2 சதவிகித நிலம்தான் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கிறது. ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் பெரும்பகுதியை 1967 சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்துக்கொண்டு அங்கு இஸ்ரேலியக் குடிமக்களான யூதர்களுக்காக குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போகிறது. இதைத் தடுக்க எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதுவும் செய்யவில்லை; தடுக்க நினைத்த ஒபாமாவாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இப்போது எந்த நியாயத்திற்கும் கட்டுப்படாத ட்ரம்ப் ஒரு புதிய திட்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம். வெஸ்ட் பேங்கில் கட்டப்பட்டிருக்கும் யூதக்குடியிருப்புகள் எல்லாம் இஸ்ரேலுக்குச் சொந்தமாம்; இஸ்ரேல் இப்படி எடுத்தது போக தொடர்ச்சி இல்லாமல் இருக்கும் வெஸ்ட் பேங்க் இடங்கள் பாலஸ்தீன நாடாக அறிவிக்கப்படுமாம். அதிலும் அந்த நாட்டிற்கு ராணுவம் வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் கண்டுபிடிக்காத இந்தத் தீர்வை கண்டுபிடித்துவிட்டாராம் இந்த ட்ரம்ப்! முன்று வருடங்களாக ட்ரம்ப்பும் அவருடைய மருமகன் குஷ்னரும் இந்த ‘நல்ல’ தீர்ப்பைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்! எவ்வளவு திமிர் இவர்களுக்கு? குஷ்னர் இன்னொரு யோசனையையும் கூறியிருக்கிறார். 50 மில்லியன் டாலரை பாலஸ்தீனர்களுக்குரிய பகுதியில் முதலீடு செய்து அவர்களுக்கு உதவப் போகிறார்களாம். இன்று தங்களுக்கு மட்டுமே சொந்தமான பாலஸ்தீனம் முழுவதையும் இழந்துவிட்டு நிற்கும் பாலஸ்தீனர்களை பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார் இந்த குஷ்னர். இந்த முதலீடு எல்லாம் இவருடைய கம்பெனிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் முதலீடாகத்தான் இருக்கும் என்பது இன்னொரு விஷயம்.
ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க நடந்துகொண்டிருக்கும் விசாரணையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதுதான் இந்தத் திட்டத்தை ட்ரம்ப்ப் இப்போது அறிவித்ததற்கு ஒரு முக்கிய காராணம். ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டிக்கொண்டிருக்கும் நேத்தன்யாஹு இஸ்ரேல் மக்களிடம் தான் பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேலிய யூதர்களுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டதாகக் கூறினால் வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் – 2019 மார்ச்சிலும் 2019 செப்டம்பரிலும் நடந்த இரண்டு தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்குக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஒரு ஆண்டில் மூன்றாவது முறையாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது – தேர்தலில் தான் வெற்றிபெற்றுப் பிரதமராகி நாட்டை ஆளும் பொறுப்பிலிருக்கும் பிரதம மந்திரியின்மீது குற்றம் சுமத்த முடியாது என்று சட்டம் கொண்டுவந்து தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியிருக்கும் நேத்தன்யாஹுவுக்கு உதவுவது இந்த முடிவுயே இப்போது ட்ரம்ப் அறிவித்தியுள்ளார்.
No comments:
Post a Comment