Wednesday, May 3, 2023

#மக்கள்தொகையில் உலகில் இந்தியா முதலிடம்



—————————————
மக்கள் தொகையில் உலகில் முதலிடம் 
மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி  இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை  -2023 அண்மையில் வெளியானது. அதில் உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது.கடந்த  200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருந்து வந்தது. 
இந்திய மக்கள்தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 15 முதல் 64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் மக்கள்தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கையே கொண்ட இலங்கையும் (2.2 கோடி) பொருளாதாரரீதியாக மிகப் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் போன்றவற்றின் காரணமாக, தமிழ்நாட்டின்  அளவுக்குக் கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதாரரீதியாக கடும் சவாலை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், 

கரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து  உலக நாடுகளுக்குக் கொடுத்ததுடன் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு  25 மாதங்களுக்கும் மேலாக 5 கிலோ உணவு தானியத்தைத் மத்திய அரசு இலவசமாகக் கொடுத்துள்ளது.
   நமது நாட்டில் 2020- 21 ஆம்   ஆண்டில் சாதனை அளவாக 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தித் செய்யப்பட்டுள்ளது.
  2021-22 இல் வெப்ப அலை போன்றவற்றால் 106.84 மில்லியன் டன்னாக அது குறைந்தது.
  பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 183.96 மில்லியன் டன் பால் உற்பத்தித் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட 50 சதவீதம் அதிகம். சீனாவைவிட 3 மடங்கு அதிகம். ரூ.2,928 கோடி மதிப்பிலான 1.08 லட்சம் டன் பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று பல துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வரும் நிலையில், இன்று மக்கள்தொகை பெருக்கத்திலும் சாதனை படைத்துவிட்டது. 

மத்திய அரசு சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்கான மூலதனச் செலவுகளுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீதம் ஒதுக்கியுள்ளது. 
  அண்மையில் மேம்படுத்தப்பட்ட சென்னை சர்வ தேச விமான நிலையம் போன்று நாடு முழுவதும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் நவீனமயமாக்கப்படுகின்றன. 
  சர்வதேச தரத்தில் நெடுந்தொலைவு சாலைகள் அமைக்கப்படுகின்றன. 
  இணையம் மூலம் பெரும்பாலான சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் கூட இணையப் பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. 
  மத்திய அரசு ஊக்கம் அளித்ததன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாகி உள்ளன. 
வளர்ந்த தேசமாக இந்தியா மாற வேண்டுமெனில், சமூக -பொருளாதார, சுகாதார, அரசியல் சூழ்நிலைகள் அதற்கு சாதகமானதாக இருக்க வேண்டும்.
    நாடு முழுவதும், கடுமையாக உழைக்கக் கூடிய பருவமான 15  வயது முதல் 24 வயது வரை 25.4 கோடி பேர் உள்ளனர்.  இவர்கள் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் உலகின் தொழில்கூடமாக இந்தியா மாற முடியும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்றால் அரசுப் பணியில் பதவி உயர்வு, அரசு மானியங்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடையாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஆகியோர் மக்களை தொகையைக் கட்டுப்படுத்த உரிய சட்டங்களைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே அளவுக்கதிகமாக பிள்ளைகளைப் பெற்றால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற  வரைவு மசோதா  வாஜ்பாய் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஏனோ அது நிறுத்தப்பட்டது.

#மக்கள்தொகையில்_உலகில்_இந்தியா_முதலிடம்
#Poplation of India 


140.76 crores (2021)
19601980200020201.5B1.0B0.5B0


#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
3-5-2023.

Tuesday, May 2, 2023

#இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை உத்திகள்



————————————————————-
 
மாறி வரும் வெளியுறவுக் கொள்கை
****
கடந்த 75 ஆண்டுகளில்,  இந்தியாவின் வளர்ச்சி அடைந்திருக்கிறது;  ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்வேறு உலக அமைப்புகளிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் இணைந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது.  

ஒவ்வொரு நாடும் பிறநாட்டைச் சார்ந்து வாழும் உலகில் வெளியுறவு தொடர்பான காரணிகள் முதன்மை பெறுகின்றன. உலகப் பொருளாதார மாற்றங்கள், உணவுப் பொருள் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய் பரவல், நிலையற்ற அரசியல் சூழல் போன்றவை நமது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு  நாட்டின் சுதந்திரம்,    பஞ்சசீலம், சர்வ தேசியம், உலக அமைதி, சர்ச்சைகளுக்கு நிதானமாக தீர்வு காண்பது ஆகியவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளாக்கினார்.
  காலனி ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடு, மனித உரிமைகளுக்கான குரல், நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிரான நிலைப்பாடு, வளரும் நாடுகளுடன் இணக்கமான ஒற்றுமை ஆகியவற்றை வெளியுறவுக் கொள்கையில் நேரு புகுத்தினார்.  உலக அமைப்புகளிலும் இந்தியா பங்கு பெற்று தீவிரமாக செயல்பட முடியும் என நேரு நம்பினார்.   உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றில் இந்தியா நிறுவன உறுப்பினரானது. 

இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது. 1947, 1949 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் ஆப்ரோ - ஆசிய மாநாட்டை இந்தியா நடத்தியது. 1955-இல் இந்தோனேசியாவுடன் இணைந்து பாண்டுங் உச்சி மாநாட்டை நடத்தியது. இறுதியாக, 1961-இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளின் இயக்கம் உருவானது. அணி சேரா நாடுகள் அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதைத் தடுக்கவில்லை. 
 
1962-இல் சீனாவுடன் போரிட்டு, இந்தியா தோல்வியுற்றது. அப்போதெல்லாம் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆனால் தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்தது.  இந்தியாவின் சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உதவி செய்துள்ளன. பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேரவும் இந்தியா தயங்கவில்லை.      
லால் பகதூர் சாஸ்திரியின் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இரண்டாவது போரை எதிர்கொண்டது. அப்போது சோவியத் யூனியனுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவால், பாகிஸ்தானுடனான தாஷ்கண்ட் ஒப்பந்தம் சாத்தியமானது.   

இந்திரா காந்தி  1971-இல் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான போரில் வெ ற்றி பெற்றதும், வங்கதே ச விடுதலைக்கு இந்தியா உதவியதும் வரலாற்று சாதனைகள். பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுவெடிச் சோதனை மூலம், இந்தியாவின் ஆயுத வலிமை பறைசாற்றப்பட்டது. 

ராஜீவ்  காந்தி பிரதமராக இருந்தபோ து, நாட்டை நவீனமயமாக்குவதும், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதும் வெளியுறவுக் கொள்கையின் இலக்குகளாக மாறின. அதற்காக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த அவர் முனைந்தார்.
 பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, உலக பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் வகையில், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
 
வாஜ்பாய் காலத்தில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

நரசிம்ராவ் காலத்தில்,மன்மோகன் சிங்   இந்தியாவை  உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக ஆக்கினார் என்றாலும் பாகிஸ்தானுடனான நட்புறவு இல்லை.  சீனாவுடனான உறவோ எல்லையில் மோதலாக நீடிக்கிறது. காஷ்மீர் பிரச்னைக்கோ, சீனாவுடனான எல்லைத் தகராறுக்கோ தீர்வு காணும் வாய்ப்பு அண்மையில் தென்படவில்லை. 
அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பது, இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பது, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளும் இலங்கையில் நேரிட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரும் வாய்ப்பு இருப்பது நமது வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பைஏற்படுத்தலாம். அண்டை
நாடுகளில்   நிலையற்ற தன்மை நிலவும்போது, பயங்கரவாதம் பெருகவும், அகதிகள் வருகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. தொலைதூர நாடுகளின் விவகாரங்களால்நாமும்பாதிப்புக்குள்
ளாவோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 

தெற்காசிய புவிசார் அரசியலை கையாள்வதும், முக்கியமாக இந்தியாவிற்கு வடக்கே உள்ள சீனாவையும், மேற்கே உள்ள பாகிஸ்தானை கையாள்வதும் ஒருங்கிணைந்த மற்றும் சிக்கலான வெளியுறவு கொள்கைகளில் அடங்கும்.அதேபோன்று இந்தியாவுடன் பொதுவான வரலாற்று வேர்களை கொண்ட சிறிய நாடுகளான நேபாளம், வங்காள தேசம், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவதும் இதில் அடங்கும்.  
 
சீனா மற்றும் இந்தியாவுடன் இந்நாடுகள் கொண்டிருக்கும் உறவுகள் பெரும் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதார நலன்களுக்கும் இவை முக்கியமானவையாக உள்ளன.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை மோடி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதே வேளையில் வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளையும் நல்ல முறையில் பேணி வருகிறது 

பாகிஸ்தான்: (3,323 கி.மீ.எல்லை)பாகிஸ்தானுடனான உறவில், தற்காப்பு முறையை தவிர்த்து எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன், அதே சமயத்தில் பயங்கரவாத நாடு என்பதில் சமரசம் செய்து கொள்ளாத முறையில் இந்தியா முன்னெடுக்கிறது.   

பாகிஸ்தான் ஒரு முக்கிய பயங்கரவாத உற்பத்தி கூடமாக மாறி, இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது. பாகிஸ்தான் இந்த நிலைமையை மறுக்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மேம்படுவதன் மூலம் அந்நாடுகள் வளர்ந்து, அது இந்தியா-பாகிஸ்தானிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.
செய்ய வேண்டியவை:
1) பாகிஸ்தானின் அனைத்து எல்லை தாண்டிய பயங்கரவாதங்களையும் நிறுத்தச் செய்தல்
2) பன்னாட்டு அரங்குகளில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்புவது நிறுத்துச் செய்தல்.
 
சீனா: ( 3,488 கி.மீ.எல்லை):
சீனாவுடனான உறவுகள், பரஸ்பர சந்தேகம் மற்றும் மோதல் போக்குகளில் இருந்து, ‘போட்டி மற்றும் ஒத்துழைப்பு’ என்ற போக்கிற்கு மாறி வருகிறது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
செய்ய வேண்டியவை:
1) எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
2) ராணுவ மோதல்களைத் தவிர்த்தல்
3) உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கும் ஆதரவைக் குறைத்தல்
4)காஷ்மீர் பிரச்னையில் சீனா நடுநிலை வகித்தல்
5) இந்திய உள்கட்டுமான  திட்டங்களில் சீன முதலீடு, தொழில்நுட்பத்தை அதிகரித்தல்
6) இரு நாடுகளின் வர்த்தகப் பற்றாக்குறையை சமன்படுத்துதல்
 
நேபாளம்: (1,751 கி.மீ.எல்லை)
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்துள்ள நேபாளம் ஒரு அமைதிப் பகுதியாக கருதப்படுகிறது. இந்தியாவின் உள்நோக்கங்கள் பற்றிய சந்தேகம் நேபாளத்திற்கு உள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் நேபாளத்தின் ஆதரவை பெறவும், நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு சாதகமாக நேபாள அரசியல் சாசனத்தை திருத்தி அமைக்கும் முயற்சிகளினாலும் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது.
2015-இல் நேபாளம் மீது இந்தியா விதித்த பொருளாதார தடையினால், இந்தியா மீது பெரும் அதிருப்தி உருவானது. அந்த பொருளாதார தடையினால் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வுகள் ஏற்பட்டதாக ஓ.ஆர்.எப். அமைப்பின் தெற்காசிய வாராந்திர அறிக்கை குழுவின் உறுப்பினரான சோகினி கூறுகிறார். நேபாளத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
செய்ய வேண்டியவை:
1) எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு
2) இந்திய வம்சாவளியினரான நேபாள குடிமக்கள் பாரபட்சமில்லாமல் நேபாளத்தில் நடத்தப்பட
தல்
3) இந்தியாவில் உள்ள நேபாள எதிர்ப்புணர்வுகளை மட்டுப்படுத்துதல்
4) நேபாளத்திற்கு மனிதாபிமான
5) நேபாளத்திற்கு குழாய் இணைப்பு, ரயில்வே தடங்களைக் கட்ட இந்தியா உதவி செய்தல்
6) வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா கடன் உதவி செய்தல்
 
வங்காளதேசம்: ( 4,096 கி.மீ.எல்லை)
இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையே பல பிரச்னைகள் உள்ளன; ஓட்டைகள் மிகுந்த எல்லைகளின் வழியாக அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்குள் மக்கள் நுழைவதும், டீஸ்டா நதி நீரை பகிர்ந்து கொள்வதிலும், மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் பிரச்னையும் இவற்றில் முக்கியமானவை.
டீஸ்டா நதி நீர் ஒப்பந்தம், 2011 செப்டம்பரில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வங்காளதேசம் சென்ற போது கையெழுத்தாக இருந்தது. ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுப்பிய ஆட்சேபனைகளினால், இது கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் பொதுவான 54 நதிகளின் விஷயத்தில், பரஸ்பரம் இரு தரப்பினரும் ஏற்கத் தக்க ஒரு தீர்வை கண்டடைவதில் முன்னேற்றம் காண்போம் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
செய்ய வேண்டியவை:
1) குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை வங்காளதேசத்தை ஏற்கச் செய்தல்
2)  டீஸ்டா நதிப் பிரச்னைக்குத் தீர்வு
3)  இந்தியாவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றம் நிகழ்வதைத் தடுத்தல்
4) முறையான தூதரக உறவுகள் மூலம் ரோஹிங்கியா அகதிகளை அவர்களுடைய சொந்த நாடான மியான்மருக்குத் திருப்பி அனுப்புதல்
5) எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு

இலங்கை:
சமீப வருடங்களில் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கத்தின் காரணமாக, இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா கருதுகிறது.  
உள்கட்டுமான திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றதில் இருந்தும், ஹம்பன்டோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்த விதமும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியது. இறுதியாக, இலங்கைக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை, மோடி அரசை செயலில் இறங்க உந்தியது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புகளுக்கு முன்னரே, இலங்கையில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் சாத்தியங்கள் பற்றி இந்தியா இலங்கையை எச்சரித்தது. இது இந்தியா இலங்கை உறவை பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, பாகிஸ்தானின் ஆதிக்கத்தை எதிர் கொள்ள உதவியது.
செய்ய வேண்டியவை:
1) சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை வெளியேறச் செய்தல்
2)  இலங்கையின் வளர்ச்சிக்கான உதவிகளை இந்தியா அளித்தல்
3)  நேர்மறையான செயலூக்கம் உள்ள இருநாட்டு உறவை மேம்படுத்துதல்.

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்.
2-5-2023.

#எனது சுவடு-20 #K.S.Radhakrishnan #ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை,

#எனது சுவடு-20
#K.S.Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#Congress Party(O) #Congress (R) #ஸ்தாபன காங்கிரஸ். #காமராஜர் #Kamrajar #Tirunelveli circuit house

https://youtu.be/iuvTUdzdI9Y

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-5-2023.

#தமிழக கனிமவளத் திருட்டு!



—————————————
 எந்தவிதமான உரிய முன் அனுமதியும் இல்லாமல் திருநெல்வேலி தென்காசி வழியாக கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல், ஜல்லி, கற்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை புகைப்படத்தோடு சிலநாள்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன். 
  
தென்காசி - செங்கோட்டை வழியாக மட்டுமல்லாமல், கன்னியாகுமரி - களியக்காவிளை வழியாகவும் கேரளாவிற்கு இதுபோன்று கடத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் கம்பம் வழியாக இப்படி சட்டவிரோதமாக இயற்கை வளங்களைக் கடத்துவதும் நடந்து கொண்டே இருக்கிறது.கோவையிலிருந்து  அட்டப்பாடி, பாலக்காட்டை நோக்கியும் தினமும் இப்படிக் கடத்தப்படுவது செய்திகளாக வருகின்றன. 

தமிழக அரசு இதைக் கவனிப்பதும் இல்லை. தமிழக அரசின் ஆசியோடுதான் இது நடக்கிறதா என்பது ஒரு கேள்வி.
 அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள், ‘‘ஒரு யூனிட்டுக்கு ரூ.300 மாமூல் அளித்தால் கடத்தப்படுகின்ற லாரிகள், எளிதாக நகரும்’’ என்று. அப்படி என்றால் ஒரு லாரிக்கு குறைந்தபட்சம் நான்கு யூனிட்டுகள் என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.1200 மாமூல் கிடைக்கின்றது. இந்த பகற்கொள்ளை மூலம் லாபம் அடைபவர்கள் யார் என்று தெரியவில்லை. 
 இப்படி கடத்தப்படுகிற மணல், ஜல்லி, கற்களை கேரளாவில் பல மடங்கு விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளார்கள். கேரளாவுக்கு 

தமிழகத்திலிருந்து நான்கு வழிகளின் வழியாக இப்படி இயற்கை வளங்கள், நமது நீர் ஆதார சிக்கலில்  செல்லும்போது தனிப்பட்ட சிலரும், அதிகார வர்க்கமும் சம்பாதிக்கின்ற பணத்தைக் கணக்கெடுத்தால் அது நமக்கு வேதனையைத் தருகின்றது.

#தமிழக_கனிமவளத்_திருட்டு!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-5-2023

Monday, May 1, 2023

‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்’

'#பாஞ்சாலங்குறிச்சி வீர
சரித்திரம்’ 
————————————-
 எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் அடங்கிய குழு  ஆய்வு செய்தபோது, கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்தது குறித்தான வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வரலாற்றுத் தகவல்களில் 20.10.1799 தேதியிட்ட செப்புப் பட்டயம் ஒன்று உள்ளது. இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் கும்பினியரின் ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன் என்பவர்.




அதில், 
‘கும்பினியார் உத்தரவுப்படி திருநெல்வேலி சீமைகளில் எனது பாளையத்தை இழக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான் கும்பினியாரிடமிருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததால், இவர்களின் பாளையப்பட்டுகளை கும்பினியார் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும் காரியஸ்தனுமான சவுந்தர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது. 
நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களையும், சில முக்கியமான மனிதர்களையும் அவரவர் பாளையப்பட்டுகளில் இருந்து நீக்கி சென்னை பட்டணத்துக்கு அனுப்பும்படியான சூழலும் உண்டானது. 
இந்த பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்து, அதில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், குடியானவர் கைகளில் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்யும் சூழலும் உண்டானது. இது குறித்து முன்பே விளம்பரம் செய்து சனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேஜர் பானர் மேன் துரையவர்கள் நிமித்தமாக இன்னுஞ் சில காரியங்கள் இந்த விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. 
அதாவது, இனிமேல் எந்த பாளையக்காரனும் கோட்டை கொத்தளங்கள் போட்டாலும், பீரங்கிகள், ரேக்குலா வெடிமருந்துகள் வைத்திருந்தாலும், இத்தியாதிகளைச் சம்பாதித்தாலும் அவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளை இழப்பர். அவர்களின் பாளையப்பட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தோணியபடி தண்டிக்கப்படுவர்.

சீமைக்கு நலம் ஏற்படும் வண்ணம் மேலே எழுதப்பட்டிருக்கக் கூடிய சட்டங்களைச் சகல சனங்களும் இனிமேல் என்றென்றும் அறிந்து மனதில் வைத்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் செப்புத் தகட்டிலே எழுதப்பட்டு அந்தந்த பாளையப்பட்டுகளின் தலைமையான கிராமங்களில் பிரபலமான இடங்களில் அடித்து வைக்க உத்தரவிடப்படுகிறது’  
 என்பன போன்ற வாக்கியங்கள் அந்த செப்பு பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன. இச்செப்பேடு வழியாக ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

இதை குறித்த சில குறிப்புகள் நான் தொகுத்த ஜெகவீரபாண்டியனாரின் 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்’ த்தில் சொல்லியுள்ளேன்.

#ஜெகவீரபாண்டியனாரின் '#பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம் ‘

#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட், 
#ksrpost
1-5-2023.


#மேதின வாழ்த்துகள்

#மேதின வாழ்த்துகள்!

சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
சித்திரச் சோலைகளே
முன்னர் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே... 
உங்கள் வேரினிலே...
தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே
சொல்லவோ ஞாலத்திலே 

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ 
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ
பசி தீரும் என்றால் 
உயிர் போகும் எனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ 

கீர்த்தி கொள் போகப் பொருட்புவியே
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர் தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே
உம்மைச் சாரும் புவிப் பொருள் தந்ததெவை
தொழிலாளார் தடக் கைகளே 
நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் 
காண்கிலமே
மாமிகு பாதைகளே
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

(பாவேந்தரின் இந்த வரிகள் அரசியல் கட்சித்  தொண்டருக்கும் பொருந்துவது போலத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? இல்லைக் காலத்தின் கோலமா?)


#மேதினம்... #தொழிலாளர் நாள்! #சென்னை

#மேதினம்... #தொழிலாளர்  நாள்!
#சென்னை
————————————————————-
நூறாண்டுக்கு முன்பு 1923 ஆம் ஆண்டுக்கு முன் சிங்காரவேலர் முயற்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மே தினம் கொண்டாடப்பட்டது. அதன் அடையாளமாக கடினமான பாறையை நான்கு தொழிலாளர்கள் நகர்த்தும் உழைப்பாளர் சிலை, சென்னை கடற்கரை சாலை அருகில் அமைக்கப்பட்டது. தேவி பிரசாத் ராய் சௌத்ரி ஒரு சிற்பி, நல்ல ஓவியர். கடந்த 1954 இல் லலித் கலா அகாடெமி நிறுவியபோது அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். சென்னை ஓவியக் கலைக்கல்லூரி மாணவரான அவர், அதன் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். லலித் கலா அகாடெமியில் பணியாற்றிய காவலர் மற்றும் 3 மாணவர்களை மாடலாக வைத்து இந்த உழைப்பாளர் சிலையை தேவி பிரசாத் ராய் சௌத்ரி உருவாக்கினார். இன்றைக்கு சென்னைக்கு அழகு சேர்க்கும் ஓர் அடையாளமாக அது இருக்கிறது.












 
19 ஆம் நூற்றாண்டில் சென்னை பட்டாளம் பின்னி ஆலையில் பணியாற்றியே 20 ஆயிரம் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க தொழிற்சங்கம் நிறுவப்பட்டு அந்த தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டங்கள் ஸ்ரீ வெங்கடேச குணாம்ருத வர்‌ஷினி சபாவில் நடைபெற்றிருக்கின்றன. அப்போது கோ.செல்வபதி செட்டியார், ஜி.ராமானுஜலு நாயுடு ஆகியோர் தொழிலாளர்களின் பிரச்னைகளைக் கேட்டறிவார்கள். சென்னை வெஸ்ட்லி கல்லூரியில் தலைமைத் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய திரு.வி.க தொழிலாளர் மத்தியில் பேசியிருக்கிறார். இவற்றால் தொழிலாளர் ஒற்றுமைப்பட்டு ஓரணியாகத் திரண்டது உண்டு. இந்த காலகட்டத்தில் செல்வபதியும் ராமானுஜலு நாயுடுவும் அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்தனர். பின் ஹோம்ரூல் இயக்கத்தில் இருந்த வாடியா என்பவரைக் கொண்டு சென்னை தொழிலாளர் சங்கம் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியன் பேட்ரியாட் என்ற இதழும் தொழிலாளர்களின் பிரச்னைகளை மக்கள் முன் கொண்டு சென்றது. தொழிற்சங்கங்கள் வளர கேசவபிள்ளை அதன் முக்கிய பொறுப்பில் இருந்தார், இறுதியாக தொழிற்சங்கம் முறையாக அமைக்கப்பட்டு தலைவராக வாடியாவும், துணைத்தலைவர்களாக திருவிகவும் கேசவபிள்ளையும் வி.சர்க்கரைச் செட்டியாரும் இருந்தனர். பொதுச்‌ செயலாளர்களாக செல்வபதியும் ராமானுஜலு நாயுடுவும்  நியமிக்கப்பட்டார்கள். 
 தொழிற்சங்க சட்டம் 1926 இல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி பிஎன்சி தொழிலாளர்கள் மட்டுமின்றி மற்ற சென்னை நகர தொழிலாளர்களையும் இணைத்து, புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கம் 1932 இல் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தொழிற்சங்க கட்டடமாக செல்வபதி ராமானுஜலு நிலையம் 1931 ஆண்டு வாக்கில் கேசவபிள்ளையால் திறந்து வைக்கப்பட்டது.  செல்வபதி ராமானுஜலு நாயுடு நிலையம் என்று அதற்குப் பெயரும் பொறிக்கப்பட்டது. இன்‌றைக்கு அந்த தொழிற்சங்க அலுவலகம் - செல்வபதி ராமானுஜலு நிலையம் -  மரங்கள் வளர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இச்சங்க கட்டடம் இன்றைக்கும் சென்னை பட்டாளம் 176, ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ளது. பின்னி ஆலை 1999 - இல் நிரந்தரமாக மூடப்பட்ட பின் இந்த தொழிற்சங்க அலுவலகமும் பாதுகாப்பற்றுப் போய்விட்டது. இந்த கட்டடத்தில் தமிழக அரசியல் வரலாறு, தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கங்களின் கடந்த கால கட்டமைப்புகள் குறித்தெல்லாம் பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்ட விடயங்கள் ஏராளம். அவை  நேற்றைய நிகழ்வுகள்... இன்றைய  வரலாறு. 
செல்வபதியின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சாலையோரப் பூங்காவும் மணிக்கூண்டும் 1948 ஆகஸ்ட் நான்காம் தேதி சென்னை மேயர் யு.கிருஷ்ண ராவால் திறந்து வைக்கப்பட்டது. மணிக்கூண்டு கடிகாரத்தை அன்றைக்கு புகழ் வாய்ந்த கனி அண்ட் சன்ஸ் நிறுவனத்தினர் செய்து வழங்கினர்.  இன்றைக்கு செல்வபதி ராமானுஜலு நிலையத்தைப் போன்று மணிக்கூண்டும் செயல்படாமல் போய்விட்டது. நேரங்களைக் காட்டுவதில்லை. இப்படி வரலாற்று தரவுகளை நாம் எட்டி உதைத்துவிட்டோம். இன்றைக்கு தொழிலாளர் நாள்.

Madras is where the country got its first labour union. Today, some straggle, struggle, stumble, still strive: but it is reduced to a symbol: unionism.

#வாடியா #திருவிக #கேசவபிள்ளை #வி_சர்க்கரைச்செட்டியார் 
#செல்வபதி #ராமானுஜலுநாயுடு. 
 #தொழிற்சங்கவரலறு

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#ksrpost
1-5-2023.


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...