Monday, May 1, 2023

#மேதினம்... #தொழிலாளர் நாள்! #சென்னை

#மேதினம்... #தொழிலாளர்  நாள்!
#சென்னை
————————————————————-
நூறாண்டுக்கு முன்பு 1923 ஆம் ஆண்டுக்கு முன் சிங்காரவேலர் முயற்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மே தினம் கொண்டாடப்பட்டது. அதன் அடையாளமாக கடினமான பாறையை நான்கு தொழிலாளர்கள் நகர்த்தும் உழைப்பாளர் சிலை, சென்னை கடற்கரை சாலை அருகில் அமைக்கப்பட்டது. தேவி பிரசாத் ராய் சௌத்ரி ஒரு சிற்பி, நல்ல ஓவியர். கடந்த 1954 இல் லலித் கலா அகாடெமி நிறுவியபோது அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். சென்னை ஓவியக் கலைக்கல்லூரி மாணவரான அவர், அதன் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். லலித் கலா அகாடெமியில் பணியாற்றிய காவலர் மற்றும் 3 மாணவர்களை மாடலாக வைத்து இந்த உழைப்பாளர் சிலையை தேவி பிரசாத் ராய் சௌத்ரி உருவாக்கினார். இன்றைக்கு சென்னைக்கு அழகு சேர்க்கும் ஓர் அடையாளமாக அது இருக்கிறது.












 
19 ஆம் நூற்றாண்டில் சென்னை பட்டாளம் பின்னி ஆலையில் பணியாற்றியே 20 ஆயிரம் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க தொழிற்சங்கம் நிறுவப்பட்டு அந்த தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டங்கள் ஸ்ரீ வெங்கடேச குணாம்ருத வர்‌ஷினி சபாவில் நடைபெற்றிருக்கின்றன. அப்போது கோ.செல்வபதி செட்டியார், ஜி.ராமானுஜலு நாயுடு ஆகியோர் தொழிலாளர்களின் பிரச்னைகளைக் கேட்டறிவார்கள். சென்னை வெஸ்ட்லி கல்லூரியில் தலைமைத் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய திரு.வி.க தொழிலாளர் மத்தியில் பேசியிருக்கிறார். இவற்றால் தொழிலாளர் ஒற்றுமைப்பட்டு ஓரணியாகத் திரண்டது உண்டு. இந்த காலகட்டத்தில் செல்வபதியும் ராமானுஜலு நாயுடுவும் அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்தனர். பின் ஹோம்ரூல் இயக்கத்தில் இருந்த வாடியா என்பவரைக் கொண்டு சென்னை தொழிலாளர் சங்கம் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியன் பேட்ரியாட் என்ற இதழும் தொழிலாளர்களின் பிரச்னைகளை மக்கள் முன் கொண்டு சென்றது. தொழிற்சங்கங்கள் வளர கேசவபிள்ளை அதன் முக்கிய பொறுப்பில் இருந்தார், இறுதியாக தொழிற்சங்கம் முறையாக அமைக்கப்பட்டு தலைவராக வாடியாவும், துணைத்தலைவர்களாக திருவிகவும் கேசவபிள்ளையும் வி.சர்க்கரைச் செட்டியாரும் இருந்தனர். பொதுச்‌ செயலாளர்களாக செல்வபதியும் ராமானுஜலு நாயுடுவும்  நியமிக்கப்பட்டார்கள். 
 தொழிற்சங்க சட்டம் 1926 இல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி பிஎன்சி தொழிலாளர்கள் மட்டுமின்றி மற்ற சென்னை நகர தொழிலாளர்களையும் இணைத்து, புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கம் 1932 இல் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தொழிற்சங்க கட்டடமாக செல்வபதி ராமானுஜலு நிலையம் 1931 ஆண்டு வாக்கில் கேசவபிள்ளையால் திறந்து வைக்கப்பட்டது.  செல்வபதி ராமானுஜலு நாயுடு நிலையம் என்று அதற்குப் பெயரும் பொறிக்கப்பட்டது. இன்‌றைக்கு அந்த தொழிற்சங்க அலுவலகம் - செல்வபதி ராமானுஜலு நிலையம் -  மரங்கள் வளர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இச்சங்க கட்டடம் இன்றைக்கும் சென்னை பட்டாளம் 176, ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ளது. பின்னி ஆலை 1999 - இல் நிரந்தரமாக மூடப்பட்ட பின் இந்த தொழிற்சங்க அலுவலகமும் பாதுகாப்பற்றுப் போய்விட்டது. இந்த கட்டடத்தில் தமிழக அரசியல் வரலாறு, தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கங்களின் கடந்த கால கட்டமைப்புகள் குறித்தெல்லாம் பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்ட விடயங்கள் ஏராளம். அவை  நேற்றைய நிகழ்வுகள்... இன்றைய  வரலாறு. 
செல்வபதியின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சாலையோரப் பூங்காவும் மணிக்கூண்டும் 1948 ஆகஸ்ட் நான்காம் தேதி சென்னை மேயர் யு.கிருஷ்ண ராவால் திறந்து வைக்கப்பட்டது. மணிக்கூண்டு கடிகாரத்தை அன்றைக்கு புகழ் வாய்ந்த கனி அண்ட் சன்ஸ் நிறுவனத்தினர் செய்து வழங்கினர்.  இன்றைக்கு செல்வபதி ராமானுஜலு நிலையத்தைப் போன்று மணிக்கூண்டும் செயல்படாமல் போய்விட்டது. நேரங்களைக் காட்டுவதில்லை. இப்படி வரலாற்று தரவுகளை நாம் எட்டி உதைத்துவிட்டோம். இன்றைக்கு தொழிலாளர் நாள்.

Madras is where the country got its first labour union. Today, some straggle, struggle, stumble, still strive: but it is reduced to a symbol: unionism.

#வாடியா #திருவிக #கேசவபிள்ளை #வி_சர்க்கரைச்செட்டியார் 
#செல்வபதி #ராமானுஜலுநாயுடு. 
 #தொழிற்சங்கவரலறு

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#ksrpost
1-5-2023.


No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...