Friday, May 5, 2023

#ஜாதிவாரி கணக்கெடுப்பு

#ஜாதிவாரி  கணக்கெடுப்பு
———————————————
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடந்த 2019 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆணை வெளியிட்டது. கோவிட் -19 தொற்று நோயின் காரணமாக இந்த கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனது. 
 
காங்கிரஸ் மட்டுமல்ல, மாநிலக் கட்சிகளும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தன. ஜாதி வாரி கணக்கெடுப்பை 2022 - இல்  பீகார் அரசு நடத்த தொடங்கியபோது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக அரசு 2015 - இல் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தியும் அதன் அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. 
 
மத்திய அரசு  2011 - இல் சமூக, பொருளாதார, ஜாதிரீதியிலான மக்கள் தொகைக் கணக்கீட்டை நடத்தியது. ஆனால் அது சரியாக நடத்தப்படவில்லை. அதன் தகவல்கள் பிழையானவை என்பதால் அவற்றை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஜாதிக் கணக்கெடுப்பு நடத்துவதால் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கிடைக்கும் தகவல்கள் மட்டுமே பயனுள்ளவை. 
 
மத்திய அரசு  1953 - இல் நேருகாலத்தில் பிற்பட்டோருக்கான காகா கலேல்கர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்தது. 1979 - இல் மண்டல் கமிஷன் ஜனதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அன்றைக்கு மொரார்ஜி தேசாய் பிரதமர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 1969 - இல் சட்டநாதன் கமிஷன் அமைக்கப்பட்டது. பிற்பட்டோர் யார் என்று ஆய்வு செய்து அது தன்னுடைய அறிக்கையை வழங்கியது. அப்போது கலைஞர் ஆட்சி. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 1983 - இல் அம்பாசங்கர் தலைமையில்  அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த 2022 - இல் தமிழக அரசு வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க ஓய்வு பெற்ற  நீதிபதி குலசேகரன் தலைமையில் இது குறித்தான கமிஷன் அமைக்கப்பட்டது. 

ஒரு பக்கத்தில் ஜாதிகளை ஒழிக்க வேண்டும்; ஜாதிகள் இல்லை; சமதர்ம சமுதாயம் என்று சொல்லிக் கொண்டு ஜாதிகளை வளர்க்கும் வகையில் இம்மாதிரி ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால், எப்படி ஜாதிகளை ஒழிக்க முடியும்? மேலும் ஜாதிகள் வளர்வதற்குத்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் துணை செய்யும். 
 ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மக்களுக்கான நியாயங்களை நிலைநாட்ட வேண்டும். அதற்கான மறுப்பு இல்லை. ஆனால் மறைமுகப் பார்த்தால் இப்படிபட்ட சில நடவடிக்கைகள் மேலும் சாதியை வளர்த்து குழப்பங்கள்தாம் இதனால் அதிகம் விளைகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த உண்மையை பலர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதுதான் யதார்த்தம். 

கடந்த 2021 இல் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் கேள்விகளுக்கு விடையளிக்கும்போது, ‘‘இனிமேல் சாதி வாரிக் கணக்கெடுப்பு கிடையாது; இதுவே மத்திய அரசின் கொள்கை’’ என்று குறிப்பிட்டுள்ளார். 
உண்மையாகவே ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலன் தரக் கூடிய வகையில் உரிமைகளை நிலைநாட்டுவதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அரசியல் கட்சிகள் தேர்தலில் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இம்மாதிரி பம்மாத்து வேலைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன என்பதைச் சொல்ல யாரும் முன்வருவதில்லை.
 இம்மாதிரி நடவடிக்கைகளுக்கு இரண்டு விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.தொடர்ந்து சாதிகள் இருக்க வேண்டும்; அதை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது சாதியற்ற சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டும் என்று இதயசுத்தியோடு நினைக்கின்றார்களா? என்பதுதான் இன்றைக்கு நம்முன் உள்ள வினா.

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்.
4-5-2023.


No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ