Wednesday, May 17, 2023

#*முள்ளிவாய்க்கால்* *மே17- 2009* *இதே நாள் அன்று*…



—————————————
புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் மகள் அருள்நிலா எழுதியது.

17-05-2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம்.

திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் நீங்கள் கவனமா போங்கோ என்று மறுதலிப்புக்கள், பிள்ளைகளுக்கான அறிவுரைகள் என நந்திக்கடல் மனித அவலத்தின் உச்சமாக நிற்கிறது. அங்கே தான் எனது குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தது.

அப்பா, அம்மா, அக்கா, நான் என்று வாழ்ந்த எம் வாழ்க்கை அன்று சின்னாபின்னமாகிப் போவதை என்றும் நினைத்ததில்லை. அப்பாவும், அக்காவும் துப்பாக்கிகளுடனும், நானும் அம்மாவும் ஓரிரண்டு உடைகள் அடங்கிய பையுடனும் விழியில் இருந்து அருவி பெருக்கெடுக்க தவித்து நின்றோம். அப்பா எங்களை உடனடியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நகருமாறு உத்தரவிட்டார். தானும் அக்காவும் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதி தந்தார். மீண்டும் உங்களை நாங்கள் சந்திப்போம் என்றும் வாக்குத் தந்தார்.

குருதியால் தோய்ந்து கிடந்த அந்த நந்திக்கடலடி மண்ணில், அன்று என் அன்பு அப்பாவையும் அக்காவையும் பிரிந்து வந்தோம். விரைவில் வந்து சேர்வோம் என்று சொல்லித் தான் எம்மிருவரையும் வழியனுப்பினார்கள் அவர்கள். ஆனால் இந்தனை ஆண்டுகள் எம் பிரிவு நிலைக்கும் என்று நாம் எண்ணவில்லை. நினைக்க முடியாத வலிகளோடு எங்களின் பிரிவு முடிவிலியாய் தொடர்கிறது.

எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைகள் தான் எனக்கும் இருக்கிறது. என் அப்பாவுடன் இருக்க வேண்டும், அவரின் வழிகாட்டுதலில் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்று. எனது அப்பாவின் அன்பு மிக ஆழமானது; அளவிட முடியாதது; அப்பா கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும் எல்லாத்திலும் முதன்மை பெறவேண்டும் என்று தட்டிக் கொடுப்பார். சிறு வயதில் சுவரில் கிறுக்கியதைக் கூட பார்த்து ரசிப்பார். அந்த அழகிய நினைவுகள் இன்னும் எம் மனதில் அழியாத சித்திரமாய் இருக்கின்றது.

எம்மை அம்மாவும் அப்பாவும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தலைவர் மாமாவையும் மற்றும் எம் மாவீரர்களின் தியாகங்களையும் கூறித்தான் வளர்த்தார்கள். தாயக விடுதலை ஏன் ஆரம்பித்தது? எதற்காக எம் மாவீர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள்? என்பதையும் தான் சென்ற பல கள அனுபவங்களையும் அப்பா எம்மிடம் அடிக்கடி பகிர்த்து கொள்வார். அப்பா அவர் இள வயதில் விடுதலைக்காக சென்றவர். அதைப் போலவே அக்காவும் தலைவர் மாமா வழியில் இறுதிக்களத்தில் போராட போகிறேன் என்று அவர்களுடனே சென்றார். அப்பாவும், அக்காவும் ஒன்றாகத் தான் எம்மை விட்டுப் பிரிந்தார்கள். இன்றுவரை அவர்களை காணாமல் தேடுகின்றோம். ஒன்றாக இருத்த உறவுகளை பிரிவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த உணர்வும், வேதனையும் எதிரிக்கு கூட வரக்கூடாது என்பது தான் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.

அவ்வாறு தொலைத்த நாட்கள் மீண்டும் வராது என்று நினைக்கும் போது மனமே வெடிக்கின்றது. அப்பா உங்களை காணும் அந்த நாளை பல தடவை கற்பனை செய்து பாத்திருக்கிறேன். கண்டவுடன் என்னவெல்லாம் பேச வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பெரிய அட்டவணையையே கற்பனையில் நினைத்து வைத்திருக்கிறேன். உங்களிடம் பல விடயங்கள், பல கதைகள் கூற வேண்டும் ; அக்காவுடன் நான் பல இடங்கள் ஒன்றாக போகவேண்டும்; மீண்டும் எம் மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். நீங்கள் நேசித்த புலிகளின்குரல் மீண்டும் எங்கள் தேசக் காற்றோடு கலந்து வரவேண்டும். அதை உங்களருகில் இருந்து நாம் கேட்க வேண்டும்.

அப்பா உங்களை விட்டு நாம் பிரியும் போது நீங்கள் கூறியவற்றைத் தினம் தினம் நினைக்கின்றேன். என்னை கட்டியணைத்து முத்தம் தந்து பல விடயங்களைக் கூறி அனுப்பினீர்கள். அவ்விடயங்களில் பலவற்றை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன் அப்பா. நாங்கள் என்றோ ஓர் நாள் காண்போம். அந்த நாளில் நிச்சயமாக உங்கள் மனதை மகிழ்விக்கக் கூடியதான வெற்றிச் செய்திகளை நான் உங்களுக்கு கூறுவேன். அப்பா நீங்கள் எனக்கு அப்பாவாக கிடைத்தது நான் செய்த பேறு. உங்களின் மகளாக நான் பிறந்ததையிட்டு பெருமைப்படுகின்றேன்.
#ksrpost
17-5-2023.

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...