Friday, May 5, 2023

Tamilnadu Governor’s interview to Times of India yesterday (5-5-2023)தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலின் தமிழாக்கம்

Tamilnadu Governor’s interview to Times of India yesterday (5-5-2023)தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள்,
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலின் தமிழாக்கம்: #rajbhavantn

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சட்டசபை நெறிமுறைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜெயா மேனனுக்கு அளித்த பேட்டியில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ராஜ் பவனின் நிதி குறியீடு மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் "முழுமையான பொய்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.. ஆளும் திமுகவின் திராவிட மாடலை "ஒரு அரசியல் முழக்கம்" என்றும், "ஒரு பாரதம், ஒரே இந்தியா என்ற எண்ணத்தை பிரதிபலிக்காத ஒரு காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சி" என்றும் ரவி விமர்சித்தார்.




எவ்வாறாயினும், முதல்வருடனான தனிப்பட்ட உறவு "நன்றாக உள்ளது" என்று ஆளுநர் கூறினார். "உண்மையில், அவர் (முதல்வர்) மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. நல்ல மனிதர். நான் அவரிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டேன். அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். தனிப்பட்ட முறையில், எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.” என்று ஆளுநர் தெரிவித்தார்.

திமுக அரசுடன் அடிக்கடி மோதல் மற்றும் ஆட்சியில் தலையிடுவது குறித்த விமர்சனங்கள் குறித்து அவர் கூறியதாவது:

"ஆளுநர் எல்லை மீறுகிறார் என்பது தவறான தகவல். அப்படி சொல்வது முற்றிலும் அபத்தமானது. எனக்குத் தெரிந்தவரை ஆளுநருக்கு ஒரே ஒரு பாதை தான்; அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்த விதிகளை பின்பற்றுவது தான்.' கடந்த. ஜனவரி மாதம் சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது , தமிழ்நாடு "அமைதியின் புகலிடம்" என்ற மாநில அரசின் "கூற்றை" ஆதரிப்பதில்லை" என்ற தனது முடிவை அவர் நியாயப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் நிலவும் சில சட்டம் மற்றும் ஒழுங்கின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசிய ஆளுநர்,: "இவை அனைத்தும் நடக்கும்போது, இது ஒரு 'அமைதியின் புகலிடம்' என்று நான் சொல்ல வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் விருப்ப பயன்பாட்டு நிதியை சிறு தொண்டு நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிதியை ஏழைகளுக்கு வழங்கியதாக சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, "அவர் பொய் சொல்லியுள்ளார். காரணம், நிதி குறியீட்டில் இருந்து 'சிறிய' என்ற வார்த்தை 2000ம் ஆண்டில் நீக்கப்பட்டு விட்டது."

‘திராவிட மாடல் என்று எதுவும் இல்லை... அது காலாவதியான சித்தாந்தம்’

இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே

2022-ம் ஆண்டு சட்டசபையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு, சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் வழக்கம் இல்லை என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், ஆளுநர் வருகை மற்றும் புறப்பாடு, தமிழ் தாய் வாழ்த்து ஆகிய இரு சமயங்களிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் ஆரம்பத்தில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை, ஆனால் புறப்படும் நேரத்தில் இசைத்தனர். பிறகு சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோதும், முறைப்படி மீண்டும் அவரிடம் அதே கோரிக்கையை வைத்தேன். நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளில், தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. எனவே இது பற்றி அவரிடம் வாய்மொழியாகக் கேட்டுவிட்டு, நானும் அவருக்குக் கடிதம் அனுப்புகிறேன் என்று சொன்னேன். பிறகு அவருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பினேன். அவர்கள் தேசிய கீதம் இசைக்கவில்லை.

அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அது பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டிருக்கும். அப்படித்தான் அது இருக்க வேண்டும், அதை ஆளுநர் படிக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் அரசின் கொள்கைகளோ, திட்டங்களோ அல்ல, அது பிரசாரம் போல இருந்தது. அது தவறான தகவல்களையும் பொய்களையும் கொண்டிருந்தது. சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழ்நாடு ‘அமைதிப்பூங்கா’ என்று கூறியிருந்தார்கள். அவர்களிடம் சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டினேன். தமிழ்நாட்டில், பி.எஃப்.ஐ., பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட மறுநாளில் இருந்து, ஐந்து நாட்களாக, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தன. 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போது கோயம்புத்தூரில் ஒரு கோயில் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது. அடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதலை குறிப்பிட்டு கேட்டேன். ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. அது நடந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு, 5,000 பேர் வெகு தொலைவில் இருந்து வந்து, பள்ளியில் கூடி, அதை எரித்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள், நூலகம் அனைத்தையும் எரித்தனர், மாடுகளின் மடிகளை வெட்டினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நடந்தன. இன்னுமொரு சம்பவத்தில், சட்டசபையில் உரையாற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவரை திமுக பிரமுகர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டினார். அந்த புகாரை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் அந்த காலவருக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மாஃபியாக்கள் பற்றி கேள்விப்படுகிறோம். சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்த மணல் மாபியா கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. மேலும், தமிழ்நாடு மற்றும் பாகிஸ்தானில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலுக்கான கும்பல்கள் செயல்படுவதாக மத்திய அமைப்புகள் அரசுக்குத் தெரிவித்துள்ளன. இப்படியெல்லாம் நடக்கும்போது, இது ‘அமைதியின் புகலிடம்’ என்று சொல்லச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

பிறகு, கோயில்களை சிறப்பாக நிர்வகித்ததற்காக நான் பாராட்ட வேண்டும் என்று அரசு விரும்பியது, அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளோம் என்பது. அது ஒரு நல்ல நடவடிக்கைதான். 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது இந்த மீட்பு நடவடிக்கை மிகவும் சிறியதாக உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள். பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறையின் அரசு அலுவலர்கள், பொது தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமணம் தொடர்பாக 8 புகார்களை அளித்தனர். சம்பந்தப்பட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை', கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வைத்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதினேன். இப்போது, ​​அனைத்தும் பின்னணியில் நடக்க, நான் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் அது அதிகம் இல்லையா?

பிறகு அவர்கள் நான் திராவிட ஆட்சிமுறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினர். முதலாவதாக, அத்தகைய திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே, காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சி, 'ஒரு பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை சுவைக்காத ஒரு சித்தாந்தம். தேசிய சுதந்திர இயக்கத்தை மட்டுப்படுத்தும் ஒரு சித்தாந்தம் அது, அந்த இயக்கத்தைப் பற்றி வரலாற்றிலிருந்தும் நினைவிலிருந்தும் அழிக்க முயல்கிறது, தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள், தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் எல்லாவற்றையும் கொடுத்தனர். மாறாக ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்தவர்களை அது மகிமைப்படுத்துகிறது. நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் ஒரு கருத்தியல் அது. வேறு எந்த இந்திய மொழியும் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை. இத்தனைக்கும், சமீபத்திய பட்ஜெட் உரையைப் படித்தால், வேறு எந்த மொழி நூலகங்களும் இல்லாமல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3. 25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மத்திய நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது. அப்படி செய்வது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும். தனக்கான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்கிய ஒரு கருத்தியல். நான் அதை ஆதரிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். இல்லை, நான் அதை செய்ய மாட்டேன், அதனால் நான் மாட்டேன் என்று சொன்னேன். எனது உரைக்குப் பிறகு, சபாநாயகர் தமிழ்ப் பதிப்பைப் படிக்க, நான் காத்திருந்தேன். ஆனால், நெறிமுறைகளுக்கு எதிராக, விதிமுறைகளுக்கு எதிராக, முதல்வர் எழுந்து, சபாநாயகருடன் சேர்ந்து கொண்டு, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரை சபையில் சங்கடப்படுத்த நினைத்தார். அதைச் செய்ய நான் அவர்களை அனுமதிக்கவில்லை. ஆளுநரை அவரை வைத்துக் கொண்டே எப்படி அவமானப்படுத்த முடியும்? எனவே தான் நான் வெளியேறினேன். டாக்டர் அம்பேத்கரை பற்றி எனக்கு அவர்கள் சொல்லித் தர வேண்டாம். அந்த நிகழ்வு ஜனவரியில் நடந்தது. ஆனால், அதற்கு முன்பே நான் அம்பேத்கரின் சிலையை இங்கு நிறுவினேன். என் இதயத்தில் அம்பேத்கர் வாழ்கிறார்.

மத்தியில் ஆளும் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

அதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை.

ஆளுநர், விரைவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திரும்ப அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தங்கள் கருத்து?

இல்லை, அவர்கள் அதை வேறு கண்ணோட்டத்தில் சொல்லியுள்ளனர். இந்த மசோதா சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்பட்டு அங்கு மீண்டும் நிறைவேற்றி விரைவில் அனுப்பினால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. மசோதாவை நிறுத்தி வைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்பும்போது மட்டுமே பொருந்தும்.

தமிழ்நாடு சட்டசபையில் அனுப்பப்பட்ட எத்தனை மசோதாக்கள் இப்போது உங்களிடம் நிலுவையில் உள்ளன?

ஆளுநர் மாளிகையிலோ ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. நான் (செப்டம்பர்) 2021 இல் இங்கு வந்தபோது, 19 மசோதாக்களை கிடைக்கப் பெற்றேன். அதில் 18 அனுப்பினேன். நீட் தேர்வில் ஒன்று, அது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் கருத்துக்காக அனுப்பினேன். 2022ல், 59 மசோதாக்களில் 49 திருப்பி அனுப்பினேன். மூன்று மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஒன்றை மாநில அரசு  வாபஸ் பெற்றுக் கொண்டது, 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது 2022க்கான மசோதா எதுவும் நிலுவையில் இல்லை. 2023ல், ஏழு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளித்துள்ளேன், இந்த மசோதாவை (ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை குறிப்பிட்டு) நிறுத்தி வைத்தால், அது உயிர்ப்புடன் இல்லை என்று ஆளுநர் கூறியதாகப் பலவாறு உருவகப்படுத்தப்பட்டன. மேலும் ஒரு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 200வது பிரிவைப் படிக்கவும். சட்டப் பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலோ, அல்லது சட்டமன்ற மேலவை கூடி இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டாலோ, அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு தாம் ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் அறிவிக்க வேண்டும் அல்லது ஆளுநர் அந்த ஒப்புதலை நிறுத்தி வைக்கிறார் அல்லது குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கிறார். எனவே, பண மசோதா அல்லாத ஒரு மசோதா ஆளுநரிடம் சென்றால், அவருக்கு மூன்று வழிகள் உள்ளன. அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிறார்; ஒப்புதலை நிறுத்தி வைப்பார்; மூன்றாவது, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார். மசோதாவுக்கு ஆளுநர் நிலையிலேயே ஒப்புதல் தராமல் நிறுத்தப்பட்டது என்று நான் கூறும்போது, அந்த மசோதா வலுவிழுந்துவிட்டது. இதில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது. ஆளுநர் முடிவெடுத்தால், அவர் மறுபரிசீலனைக்காக மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம். மறுபரிசீலனைக்கு பிறகு சட்டமன்றம் அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். நான் இரண்டு மசோதாக்கள் விவகாரத்தில் (ஆன்லைன் சூதாட்ட மசோதா உட்பட) அப்படி செய்துள்ளேன்.

 

நீங்கள் நிறுத்தி வைத்திருக்கும் எட்டு மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் தொடர்பானதா?

ஆம். நான் இவற்றைத் தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதால்தான். 1956ம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம் அதிகாரம் மிக்கதாக உள்ளது, மேலும் அது தொடர்பான அம்சங்கள் எல்லா மாநில சட்டத்துடனும் ஒத்துப்போக வேண்டும். இதை உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. பல்கலைக்கழக மாநில சட்டம் மற்றும் விதிமுறைகள், உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றது. தமிழ்நாட்டில் நமது மாநில பல்கலைக்கழகங்கள் துரதிருஷ்டவசமாக அரசுத் துறையாகவே நடத்தப்படுகின்றன. மாநில  அரசு தலைமைச் செயலகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடைபெறுகிறது. சுயாட்சி கிட்டத்தட்ட முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை அரசே நியமிக்காமல் இருப்பதுதான் பாக்கி. குறைந்தபட்சம் துணை வேந்தராவது சரியான நபராக இருக்க வேண்டும். மேலும், அது வேந்தரின் பொறுப்பு. அந்த அதிகாரமும் மாநில முதலமைச்சரிடம் சென்றால் அது முழுக்க முழுக்க அரசியல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். மேலும் இது சாத்தியமில்லை.

 

சித்தா பல்கலைக்கழக மசோதாவின் நிலை என்ன?

சித்தா பல்கலைக் கழக மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அது பல்கலைக்கழக மானிய  சட்டம் மற்றும் விதிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும் என்ற அவதானிப்பில் நான் அதற்கு ஒப்புதல் அளிக்க ஒப்புக்கொண்டேன். அங்கு மீண்டும் வேந்தராக முதல்வர் இருப்பார் என்பது ஒத்திசைவு பட்டியலுடன் தொடர்புடையதாக வருகிறது. எனவே இது சாத்தியமில்லை என்றேன். அதனால், அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிதி குறியீடு மீறல்கள் மற்றும் ஆளுநரின் விருப்பமான நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில்?

அவர்கள் நாகரீகமாகவோ கண்ணியமாகவோ இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். நிதியமைச்சர் (பழனிவேல் தியாக ராஜன்) சொன்னது அப்பட்டமான பொய். முதலாவதாக, நிதிக் குறியீட்டின்படி ஆளுநரின் விருப்பமான மானியம் சிறு தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் என்றும் தரப்படுவதாக அவர் கூறினார். 2000ம் ஆண்டிலேயே நிதி குறியீட்டில் இருந்து ‘சிறிய’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதால் அவர் பொய் சொல்லியிருக்கிறார். 'இருக்கும் பட்ஜெட்டுக்குள் ஒரு வரம்பு இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்று அது கூறுகிறது; அதாவது ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்படக்கூடாது. இரண்டாவதாக, அமைச்சர் அக்ஷய பாத்திரத்தைக் குறிப்பிட்டார். 2000ம் ஆண்டில், ஏழை மாணவர்களின் இடைநிற்றலைக் குறித்து கவலைப்பட்ட அப்போதைய ஆளுநர், ஒரு நாளைக்கு ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பினார், இது இடைநிற்றலைக் குறைக்கும் என்பதால், அவர் மீண்டும் பொய்களைச் சொன்னார். அக்ஷய பத்ரா மிகவும் பிரபலமான என்ஜிஓ. அவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் இருபது லட்சம் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகிறார்கள். அக்ஷய பாத்ரா சென்னை பெருநகர பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க முன்வந்தது. அவர்கள் விரும்பியதெல்லாம் சுகாதாரமான சமையலறை மட்டுமே. அந்த சமையலறையின் மதிப்பீடு 5 கோடி ரூபாய். அப்போதைய ஆளுநர் இந்த தொகையை தனது விருப்ப மானியத்தில் இருந்து அனுமதித்து, அதை தவணையாக விடுவித்து, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அரசின் குழுவை அமைத்தார். ரூபாய் 4.5 லட்சமும், பணி முடிந்தவுடன் 50 லட்சமும் விடுவிக்கப்பட்டது. டிசம்பர் 2021ல், சமையலறை கட்டும் வேலை முடிந்தது. குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்புக்காக மாநகராட்சிக்கு அதன் நிர்வாகத்தினர் சென்றனர். ஆனால், மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. விசாரித்தபோது, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறப்பட்டது, ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் உள்ளன, நீங்கள் சென்று அதை அங்கே தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 16 மாதங்களாக அக்ஷய பாத்ரா நிர்வாகம் முதல்வர் அலுவலகத்துக்கு நடந்து வருகிறது. ஆனால், அவர்களால் முதல்வரை சந்திக்க நேரம் பெற முடியவில்லை. வங்கி பரிவர்த்தனைகள் உள்பட அவர்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன, .

ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்பது இன்னொரு சூட்சுமம். பாரம்பரியமாக, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், ராஜ் பவனில் ‘அட் ஹோம்’ - எனப்படும் வரவேற்பு நிகழ்ச்சி, அது நமது சுதந்திர கொண்டாட்டம் மற்றும் நாடு முழுவதும் நடக்கிறது. முன்னதாக, இந்த நிகழ்ச்சிகள் முக்கியமாக அதிகாரிகள் பங்கேற்பு நிகழ்ச்சியாகவே இருந்தது. நான் அதை மாற்றினேன். சம்பிரதாயமாக பங்கேற்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டு, விவசாயிகள், இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினரையும் பரந்த அளவில் வரவேற்றோம். ‘அட் ஹோம்’ நிகழ்ச்சியில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்து என்று கூறுவது தமிழக மக்களை அவமதிப்பதும், தேசிய தினத்தை கொண்டாடுவதும் ஆகும்.

பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பணம் செலவழிக்கப்படுவதாக தெரிவித்தனர். நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது, தமிழ்நாடு தான் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்று நாம் பல மாநிலங்களுக்கு கீழே இருக்கிறோம். அதனால், வறியநிலை மாணவர்களை தேர்வு செய்து 250 முதல் 300 பேர் வரை வரவழைத்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன், தேர்வுகளுக்கு எப்படி தயார்படுத்திக் கொள்வது என அவர்களுக்கு வழிகாட்டுகிறேன். பல மணி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை பசியுடன் என்னால் திருப்பி அனுப்ப முடியும்? நான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இதைப் பற்றி அரசாங்கம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எல்லாம் அவர் (PTR) பொய்களை சொன்னார்.

அவர் (பிடிஆர்) ஊட்டியில், ஆளுநர் தேநீர் விருந்து நடத்தி சில லட்ச ரூபாய் செலவு செய்தார் என்கிறார். இந்த தேநீர் விருந்து என்ன என்பது தெரியுமா... அதில் பங்கேற்றவர்கள் பழங்குடி மக்கள், அதுவும் அவர்கள் அனைவரும் நீலகிரியின் பழங்குடியினர். அவர்கள் என் விருந்தினர்கள். மாலை முழுவதையும் அவர்களுடன் செலவிட்டு அவர்களை கேட்டறிந்தோம். ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன், பெள்ளி அந்த விருதை வாங்குவதற்கு முன்பும், அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு வரழைக்கப்பட்டனர். எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவுக் கட்டணத்தை கூட நானே செலுத்துகிறேன். ஆளுநரின் சலுகைகள் விதியின் கீழ் ஒரு ஆளுநர் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் உணவுக் கட்டணத்தை கூட தவறாமல் செலுத்துகிறேன். அவர்களால் என்னை நோக்கி விரலை உயர்த்த முடியாது.

 

தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது?

அதற்குக் காரணம், நமது கல்வியின் தரம் மிகவும் மோசமாகப் போய்விட்டது. 1950கள், 1960கள், 1970களின் முற்பகுதியில் நமது பல்கலைக்கழகங்களின் தரம் உயர்ந்ததாக இருந்தது. மெட்ராஸ் பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களுக்குள் இருந்தது. இன்று 100வது இடத்தைப் பிடித்துள்ளது. துரதிருஷ்டவசமாக, நமது பல்கலைக்கழகங்கள் எதுவும் தலைசிறந்த பிரிவில் இடம்பெறவில்லை. கல்வி, அடிப்படை அறிவு, வாசிப்பு, எழுத்து, எண்கணிதம் பரவுவது இன்று போதாது. இது போட்டி நிறைந்த உலகம். உங்கள் கற்பித்தல் மற்றும் கல்வி தரமானதாக இருக்க வேண்டும். நம் சிறுவர் சிறுமிகளுக்கு அது மறுக்கப்படுகிறது. இன்று, தமிழ்நாட்டில் நம் இளைஞர்கள் முற்றிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர், அவர்கள் மாநிலத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு  போதிய வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இவை எல்லாம் சிவில் சேவை தேர்ச்சி விஷயத்தில் மோசமான செயல்திறன் வடிவில் பிரதிபலிக்கிறது.

 

சனாதன தர்மம் பற்றி நீங்கள் பேசியது வருணாசிரம தர்மத்துடன் பார்க்கப்படுகிறது. இதை விட வேறொன்றும் கிடையாதா?

இது இந்திய மதசார்பின்மைக்கு ஒரு குறும்புத்தனமான விளக்கம். மேலும், இது தன்னல நோக்குடைய குழுக்களால் செய்யப்படுகிறது.  அரசியலமைப்பை உருவாக்கும் போது, அதில் மதசார்பின்மை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் உறுப்பினர் ஒருவரான கே.டி.ஷா இந்த பிரச்சனையை எழுப்பினார். மதசார்பின்மை என்பது தேவாலயத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பகைமையால் உருவான ஐரோப்பிய கருத்தாக்கம் என்று முழு அரசியலமைப்பு சபையும் ஒருமனதாகக் கூறியது. நமது மதசார்பின்மை என்பது அனைவருக்கும் சமமான மரியாதையை உறுதிப்படுத்துவது. எனவே, நமது ஆளுநர்கள் மதத்தை பற்றி பேசக்கூடாது, தர்மத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்வது தவறான கருத்து. மேலும் அனைவருக்கும் சமமான மரியாதை பற்றி பேசும்போது அதுவே சனாதன தர்மம் என்கிறோம். அதை சாதி, மதம் என்ற கண்ணோட்டத்தில் ஏன் விளக்க வேண்டும்? அப்படி செய்வது குறும்புத்தனமான திரிபுகள்.

உண்மையில், சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனாக நான் எந்த மதத்திலிருந்தும் விலகியிருப்பவன் கிடையாது. அது இஸ்லாமிய மதமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி. அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று ஒருவேளை நான் சொல்லத் தொடங்கினால் அந்தக் கணமே நான் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை அற்றவனாகி விடுகிறேன். ஏனென்றால் விலக்கி வைக்கப்படுவது என்ற ஒரு கேள்வியே சனதான தர்மத்தில் இல்லை.

 

‘திமுக ஃபைல்ஸ்’ குறித்து விசாரணை நடத்த பாஜக பிரதிநிதிகள் உங்களை கேட்டுக் கொண்டுள்ளனர். நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

அது முறையாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால், உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

 

பல்வேறு பிரிவினருடன் நீங்கள் நடத்திய சந்திப்புகளால் ராஜ் பவன் காஃபி ஷாப்பாக மாறிவிட்டது என்று உங்கள் விமர்சகர்கள் கூறுகிறார்களே?

ராஜ் பவன் என்ற வார்த்தை காலனித்துவ காலத்தின் ஒரு சின்னம். ஜனநாயகத்தில், அரசியலமைப்பு அலுவலகமே ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. ஆளுநர் என்பவர் ராஜா அல்ல. அது சரியல்ல. உண்மையில், இப்போது, ராஜ் பவன் பெயரை மாற்றுவது பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன். நான் அதை 'லோக் பவன்' (மக்கள் பவன்) என்று அழைக்க விரும்புகிறேன். அது பொதுமக்கள் இடமாகவே இருக்க வேண்டும். பெயரை மாற்ற ஒரு நெறிமுறை உள்ளது, அதை நான் மாற்றுவேன்.

மக்களைச் சந்திப்பதைப் பொறுத்த வரையில், தனக்கு இருக்கும் அரசியல் சாசன பொறுப்பை ஆளுநர் முடிவு செய்கிறார். மாநில மக்களின் நலனுக்கான சக்தியாக ஆளுநர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் நான் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள் போன்றவர்களை சந்திக்கிறேன். உண்மையில், சமீபத்தில் திருநங்கைகளை அழைத்திருந்தேன். அவர்களும் நம்மில் ஒருவர் என்பதால் அவர்களுக்கு விருந்து அளித்தோம்.

 

நீங்கள் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. தமிழ்நாட்டில் காவல் துறை ஆற்றும் பணி குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ்நாடு போலீஸ் மிகவும் புத்திசாலித்தனமானது, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் நியாயமான முறையில் நடந்து கொள்ளக்கூடியது. ஆனால் அது மிக ஆழமான அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது, நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். . நான் (ஏப்ரல் 2022 இல்) தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, நான் (எனது கான்வாய்) கற்களால் தாக்கப்பட்டேன். இரண்டாவதாக, சில அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இருந்தன. இரண்டு விவகாரத்திலும், ஆளுநர் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) புகார் செய்தும், காவல்துறையினர் அதை பதிவு செய்யவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். ஒரு ஆளுநரால் எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியவில்லை என்றால், அது காவல்துறையின் செயல்திறனைப் பற்றி நன்றாகப் பேசாது.

 

திமுக அரசின் ஒட்டுமொத்த ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

அரசின் செயல்பாடு குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாக இருக்காது. மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே கவலை என்ன என்று என்னிடம் கேட்டால், அது நமது மனித ஆற்றல் தரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு. என்னிடம் சரியான தரவு இல்லை, நாம் (தமிழ்நாடு) நாட்டிலேயே அதிக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக இருக்கலாம். ஆனால், தொழில்துறை பிரதிநிதிகளை சந்தித்தபோது, ஏன் விரிவாக்கம் செய்யவில்லை என்று கேட்டேன். இந்த ஆண்டு எங்கள் பொறியாளர்களில் 90% பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அவர்கள் கூறினர். தரம் என்று வரும்போது பல்கலைக்கழகங்களில் சரிவு ஏற்படுகிறது. நான் 12 முதல் 15 ஆண்டுகள் கற்பித்த அனுபவம் வாய்ந்த இணை பேராசிரியர்களை சந்தித்தேன். ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். எனது ஆர்வம் என்பது நமது தேசத்தைக் கட்டியெழுப்புவது. நமது குடிமக்கள், அறிவாற்றல் மற்றும் திறன்களில் சிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும். ஒரு காலத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக இறுந்தது. இன்று நாம் செங்குத்தாக கீழே சறுக்குகிறோம். எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பது முக்கியமில்லை. நமது தேசம் வளர வேண்டும், நமது குடிமக்கள் திறமையாக இருந்தால் மட்டுமே அது வளர முடியும், அதற்காக நீங்கள் தரமான கல்வியில் முதலீடு செய்ய வேண்டும்.

 

தமிழ் மக்களுடன் நீங்கள் எவ்வாறு இணைந்திருக்கிறீர்கள்?

தமிழ் மக்களுடனான எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் மிகவும் பண்பட்டவர்கள், ஆழ்ந்த ஆன்மிகம் மற்றும் மிகவும் விருந்தோம்பல் பண்பு நிறைந்தவர்கள் என சொல்வேன். தமிழ் இலக்கியம் என்று வரும்போது எனக்கு அது பற்றிய ஞானம் குறைவு. ஆனாலும், நான் நவீன இலக்கியம் - சங்க இலக்கியம், பெரும்பாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தமிழ் மொழி சிந்தனையின் ஆழத்தையும் இலக்கியச் செழுமையையும் கண்டு வியந்தேன்.

பிறகு திருக்குறளில் கவனம் செலுத்தினேன். அதை அடிதொட்டு வியக்கிறேன். திருக்குறள் ஒரு நம்பமுடியாத பொக்கிஷம் - அது தர்ம சாஸ்திரம் மற்றும் நீதி சாஸ்திரத்தின் தனித்துவமான கலவையாகும். தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை தெய்வீக பாக்கியமாக உணர்கிறேன். ஆழ்ந்த நாகரிகம், பண்பாடு, ஆன்மிகம், பெரிய மனிதர்களின் பங்களிப்புகள், இலக்கியம் போன்றவற்றின் செழுமை என்னை வியக்க வைக்கிறது. மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கும், அரசியல் எப்படி இருக்கிறது என்பதற்கும் இடையே வேறுபாடு தெரிகிறது. மக்களுக்கும் அரசியலுக்கும் இடையில் நான் வித்தியாசமான உணர்வைப் பெறுகிறேன். இங்குள்ள அரசியலில் இருந்து நாகரிகத்தையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது. மாறாக, மக்களிடம் சென்றால் அவை நிறையவே கிடைக்கும்.

No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...