Friday, May 26, 2023

நெல்லையின் மாமனிதர் சோமயாஜுலு

#நெல்லையின்மாமனிதர்சோமயாஜுலு!
 ————————————————————நாட்டின் சுதந்திரத்திற்காக, லட்சோட்ப லட்சம் மக்கள், வீறு  கொண்டு எழுந்தமைக்கு அவர்களை வழி நடத்திய, நம் தேசத் தலைவர்களில் ஒருவரான, டாக்டர் சோமயாஜுலு போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. அவரது தேச பக்தியும், நாட்டின் சுதந்திரத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும், இன்றைய தலைமுறைக்குக் தெரிவிக்கப்பட வேண்டும்.  
சோமயாஜுலு, 1902 டிசம்பர், 28 இல், திருநெல்வேலியில் பிறந்தார்.  தீவிர எண்ணங்கள் மூலமே, நாட்டின் சுதந்திரம் வாய்க்கும் என, அவர் முதலில் கருதினார்.  பின், மஹாத்மா காந்தியின், அஹிம்சா கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சாத்வீத்க முறையில் சுதந்திரம் அடையும் முயற்சியில் ஈடுபட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தம், 1931 இல் ஏற்பட்டபோது, அதை எதிர்த்து  நடத்திய போராட்டங்களால், சோமயாஜுலு கைது செய்யப்பட்டார்.  அவருக்குக் ஆதரவாக நீதிமன்றத்தில், வ.உ.சி., சோமசுந்தர பாரதி மற்றும் கிருஷ்ணசுவாமி பாரதி போன்றவர்கள் வாதாடினர். பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சி., தீரர் சத்தி யமூர்த்தி , பெருந்தலைவர் காமராஜர்,  ஈ.வெ.ரா., ஜீவா போன்றவர்களின் நெருங்கிய நண்பராக விளங்கினார். அன்றைய, நெல்லை வாழ் மக்கள், சோமயாஜுலுவை, 'எங்கள் நெல்லை அண்ணா' என்பர்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் உச்சச் கட்ட அடக்குமுறையை நிகழ்த்தியதில், கர்னல் நீல் என்பவன் முதன்மை பெறுவான். அவனது சிலை, சென்னையில், தற்போது உள்ள, 'ஸ்பென்சர்'  சந்திப்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கொடுங்கோலன் சிலையை அகற்றும் பணியில், முழுமூச்சாக ஈடுபட்டு , வெற்றியும் பெற்றார், சோமயாஜு லு.மூதறிஞர் ராஜாஜி, 1937- இல், சென்னை ராஜஸ்தானியின் பிரதமராக பதவியேற்றவுடன், கர்னர்  நீல் சிலையை, அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தார். அன்று முதல், சோமயாஜுலு, 'நீல் சிலையை அகற்றிய வீரர்'  என, போற்றப்பட்டார். அவரது போராட்டக் குணத்தால், 'தென்னகத்துத் நெப்போலியன்' என்றும் அவரை அழைப்பர்.
மறைந்த தமிழக முதல்வர்,  எம்.ஜி.ஆர்., 'எல்லை வீரர்'  என்ற பட்டத்தையும் அளித்தார்.உப்பு சத்தியாக்கிரக போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி , பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு, சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார்.  அவரின் தமிழ்ஆற்றல், சொல்வன்மை, இலக்கிய நயம் அவரின் பேச்சில் வெளிப்படும்.திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில், ரசிகமணி டி.கே.சி., முன்னிலையில், கம்பன் கவிதையை கடகடவென முழங்கினார். எழுத்தாற்றல் மிக்கவர்,  பத்திரிகையாளர் என பல முகம்  கொண்டவர் அவர். 1924 - இல், ஈழத் தமிழர்,  நெல்லைச் செய்தி, விஜயா போன்ற இதழ்கள் மற்றும் பத்திரிகைகளின்ஆசிரியர்,  வெளியீட்டாளர் பொறுப்புகளை  அலங்கரித்தவர்.நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு; மதுரை  மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு; விசுவாமித்திரர் போன்ற பல நூல்களை, சோமயாஜுலு எழுதினார். அவர் படைப்புகளை, நாட்டுடைமையாக்கும்படி,  அவரது குடும்பத்தினர், 2013 - இல், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்;  இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சிறந்த மொழிபெயர்ப்பாளரான அவர், பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும், 'கவிக்குயில்' சரோஜினி தேவியின் மேடைப் பேச்சு, ஆங்கில உரையை தெள்ளத் தெளிவாக, அதே உணர்ச்சியுடன், தமிழில் மொழிபெயர்த்து, மக்களின் ஏகோபித்த கரவொலியைப் பெற்றவர். ஜாதி, மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்ந்த அவர்,  தீண்டாமை ஒழிய பாடுபட்டவர்.  தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கிக் வைக்கப்பட்ட மக்கள், ஆலய  பிரவேசம் செய்ய, உறுதுணையாய் இருந்தவர்.
ஒரு முறை நான்,  சோமயாஜு லுவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவரின் சுதந்திர போராட்ட அனுபவங்களை கேட்டு, பிரமித்துப் போனேன். அப்போது அவர்,  தன் முதுகை எனக்குக் காட்டினார்;  வரி வரியாக தழும்புகள் இருந்தன .அவற்றை, 'தியாகத் தழும்புகள்' என்றார். ஆங்கிலேயருக்குக் எதிராகப் போராடியதால்,  சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆங்கிலேய அரசு, அவருக்குக் கொடுத்த  சாட்டையடியே, முதுகில் தழும்புகளாக இருந்தன. 
எட்டயபுரத்தில், பாரதியார் மணிமண்டபம் அமைய அரும்பாடு பட்டவர்.  பாரதி பாடல்களை, பாரெங்கும் பரப்பினார்.  பாரதியாரும், சோமயாஜுலு மீது பற்றும், பாசமும் வைத்திருந்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தி , எட்டயபுரத்தில், பாரதி மணி மண்டபம் அமைக்க நினைத்தபோது, அப்பொறுப்பை, சோமயாஜு லுவிடமே வழங்கினார்;  பாரதி மணி மண்டபம் கம்பீரமாக நிறுவப்பட்டது. இந்த நிகழ்வை, கல்கி, 'ஸ்ரீரங்கத்தில் பூதங்கள் வந்து, ஒரே நாள் இரவில் கோபுரம் கட்டிவிட்டு  போனதாகச் சொல்வரே... அது மாதிரி அல்லவா இருக்கிறது, சோமயாஜுலுவின்  உழைப்பால் உருவான, பாரதி மணி மண்டபம்... இதற்காக, அவருக்கு உருவச்சிலை வைக்க வேண்டும். வசதி இல்லாததால், அவரை அட்டைப் படத்தில் போட்டு திருப்தியடைகிறேன்' என்றார்.
சோமயாஜு லு, ஒரு தொழிற்சங்கவாதி. பல தொழிற்சங்கங்களுக்குத் தலைவராகவும், ஆலோசகராகவும், தொழிலாளர் நலன் மேம்பட சேவை செய்தவர்.கடந்த 1952 - 1957 ஆம்ஆண்டில், சென்னை மாகாணத்தின், சட்டசபை உறுப்பினராகத் திறம்பட பணியாற்றியவர். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின், தலைவராகவும் பணியாற்றினார். நாடக ஆசிரியராகவும், நாடக நடிகராகவும், சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார்.  சித்திரகுப்தன் வேடம் ஏற்று சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த அவர்,  அனல் கக்க , வீர உரையும் ஆற்றுவார். மற்றவர்களின் சிறந்த செயல்களைப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. அவரது, 'சாவடி அருணாசலம்' என்ற கட்டுரை, நமது சமுதாயத்திற்கு தெரிந்தும், தெரியாத ஒரு சிறந்த, தேச பக்தரை அடையாளம் காட்டியது. சாவடி அருணாசலம், வேறு யாருமல்ல... மணியாச்சி ரயில் நிலையத்தில், அப்போதைய, ஆங்கிலேய கலெக்டர், ஆஷ்துரையை, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு , கடைசி வரை வழித்துணையாக இருந்த மாமனிதர்.
சோமயாஜுலு, எந்தவொரு பதவியையும், தன் குடும்பத்தாருக்கு கேட்டு பெறாத சீரிய செம்மல். இது பற்றி அவர் கூறும்  போது, 'சுதந்திர போராட்டத்தில் நான் ஈடுபட்டது, நாட்டின் சுதந்திரம்  வேண்டியே தவிர, என் குடும்பத்தார் பயனடைவதற்கு அல்ல' என்றார். அவர் போலவே, அவரது வாரிசுகளும், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுய முயற்சியால்,  படிப்பால் உயர்ந்து , நல்லதொரு வாழ்வை நடத்தித் கொண்டிருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பிராகஆக பணி செய்யும் போதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை தாமிரபரணி நதி கரையோரம் உண்டு மக்கள் நல சமுதாய பணியாற்றியவர்  வியத்தகு செயலாற்றிய, சோமயாஜு லு, 1990, ஜனவரி 9 இல், காலமானர்.அவரை இக்காலத்தவர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.


No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...