Saturday, October 28, 2023

#*இப்போது நீட்தேர்வு* *போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..*



—————————————
நேற்று இந்திய  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை  வந்த போது
 தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரைச்சந்தித்து அகில இந்திய மருத்துவத் துறைக்கான நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் அதன் இடர்பாட்டால் தகுதியான மாணவர்கள் பலர் மருத்துவத் துறைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்று ஒரு உருக்கமான மனுவைக் கொடுத்திருக்கிறார்.சரி நீட்டை முதலில் கொண்டு வந்தவர்கள் யார்?

அதெல்லாம் சரிதான் நானும் கூட நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பவன் அல்ல. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏக மனதாய் நீட் தேர்வை ஆதரித்து மசோதா தாக்கல் நிறைவேறிய பின்பு அதில்  ஜனாதிபதியும் கையெழுத்து போட்ட பிறகு அவரிடம் போய் இம் மனுவைக் கொடுப்பது பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. நானும் நீட்டை எதிர்ப்பவன்தான்… ஆனால் இன்றைய நிலையில் நீக்க முடியுமா?

இந்த முறை நாங்கள் தேர்தலில் ஜெயித்து வந்தால் முதலில் நீட் தேர்வை நீக்குவதற்கு தான் முதல் கையெழுத்திடுவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். ஆட்சிக்கு
வந்தவுடன்  அந்த முதல் கையெழுத்து என்ன ஆனது? முதல்வர் அவர்களே..
அது எவ்வாறு சட்ட வடிவானது என்று அவர்களுக்குத் தெரியாதா? ஏமாந்தவர்கள் தமிழர்கள் என்றால் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதா? அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது எந்த வகையில் அதைச் சட்டத்தின் மூலம் கோர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் போகிற போக்கில் விருந்தாளியாய் வந்த இடத்தில் கோரிக்கை வைப்பது அபத்தமாக படவில்லையா?

நீட்டை மாற்ற முடியாது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் துறை இன்னும் பலவாறானத் தகுதி தேர்வுகள் அடிப்படையில் அது உறுதியான சட்டமாக்கப்பட்டு விட்டது. பல மேல் முறையீடுகளை வழக்குகளை தாக்கல் செய்தபின்பும் அதைப் பலவறாக அலசி ஆராய்ந்த இந்தியத்தலைமை உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு அவசியமானதே  அதை நீக்க இயலாது என்று தீர்ப்பளித்து விட்ட பிறகு ஜனாதிபதியிடம் மனு கொடுப்பது ஜால அரசியலாகத்தான் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா கொண்டுவரப்பட்டு அந்த மசோதா  பின்னர் ஒப்புதலை பெற்று சட்ட வடிவைப் பெற்றது.ஆட்சிக்கு 2021 வந்த உடன் உங்க
கைசாத்து எங்கே

ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி நீட் ஒழிக்க முடியும் என்றால்
கோடி கையெழுத்து வாங்கி தர தாய்மார்கள் ரெடி...
டாஸ்மாக் ஒழிப்பார்களா? 

ஒரு குற்றவாளியை முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்து சிறைச்சாலையில் தள்ளிய பிறகு அவரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொல்வது வெற்று வீம்பு தானே. நான் நீட் தேர்வை குற்றவாளி போலச் சொல்லவில்லை உவமையாகவும் ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. இந்த மனு வெறும் கண்துடைப்பு தான். இரண்டரை வருடம் ஆகியும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு தான் தந்த வாக்குறுதியை மறைக்கவே இந்த நாடகத்தை ஆடுகிறது. ஓட்டு வாங்க எதையும் சொல்லலாம்!ஆனால் அதை நடத்துவதற்கு திராணி வேண்டும். இந்த அரசு தேர்தலுக்கு முன்பு தன்கட்சி சார்ந்து தந்த வாக்குறுதிகளை முதலில் முறையாக பரிசீலிக்க வேண்டும்! சரியாக அதை நடைமுறைப்படுத்த முடியுமா? அதற்கான பொருளாதார பின்னணிகள் தேசிய வரவீனங்கள் யாவற்றையும் வைத்து மதிப்பிட்டு  பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில்தான் வாக்குறுதிகளைத் தர வேண்டுமே ஒழிய வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது! .முதலில்  நமது முதுகிற்குப்  பின் என்ன இருக்கிறது என்பதைப்பற்றித்தான்  யோசிக்க வேண்டும் .பிறகு தான் நீட் தேர்வை பற்றி எல்லாம் பேச நமக்கு உரிமை இருக்கிறது.

நீட் தேர்வு ஒழித்து விடுவோம் என்று இனிமேலாவது பொய் உரைக்காமல் இருப்பது நல்லது. போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..

#நீட்தேர்வு
#neetexam

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

#*சென்னை பவளக்காரதெரு யூதர்கள் வாழ்ந்த இடம்!* #பாலஸ்தீனம் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும்! *2009 மே மாதம் ஈழம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலக நாடுகள் மௌனித்தது ஏன்?* *ஒரு நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஜனநாயகத்தைக் காக்க மக்களுக்கு செய்திகளைக் கலப்பற்று கொண்டு சேர்ப்பது மற்றும் பிரச்சினைகளின் மூலம் அறிந்து அதற்கான விடைகளையும் தேடி பயணிப்பதும் தான் தமிழ் அகம் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கமாகும்*.

#palastine #israel #eelam #ltte #KSR #ksradhakrishnan 

#*சென்னை பவளக்காரதெரு யூதர்கள் வாழ்ந்த இடம்!*

#பாலஸ்தீனம் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும்!

*2009 மே மாதம் ஈழம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலக நாடுகள் மௌனித்தது ஏன்?*

*ஒரு நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஜனநாயகத்தைக் காக்க மக்களுக்கு செய்திகளைக் கலப்பற்று கொண்டு சேர்ப்பது மற்றும் பிரச்சினைகளின் மூலம் அறிந்து அதற்கான விடைகளையும் தேடி பயணிப்பதும் தான் தமிழ் அகம் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கமாகும்*.

#tamilagamtv  #tamilagam #tamilagamchannel #tamilagamtelevison https://youtu.be/ztFFVXMOEuA?si=l6OXsuQO49znAd1g

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

Friday, October 27, 2023

#*மாற்றங்கள் தேவை ஆனால்* *நம்அடிப்படை அற,நெறிமுறைகளை மரபுகளை மாற்றவோ புறம் தள்ளவோமுடியாது*



—————————————
நேற்று கோவையில் நரசிம்ம நாயகன் பாளையம் சகோதரர் பத்மாலாய சீனவாசன் அனபு புதல்வி  பிரீதிதா மற்றும் ஆனந்த திருமண விழாவுக்கு சென்ற போது அரசியல் கட்சி நண்பர்கள், கோவை நகர பிரமுகர்களை சந்திக்க முடிந்தது.
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களை சந்தித்தேன். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். 



பத்மாலாய சீனவாசனின் தம்பி தாமோதரன் மனைவி மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சிறப்பு மருத்துவரான  டாக்டர் சசித்ரா தாமோதரன், திருப்பாவை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அருமையாக படைத்துள்ளார்.திருப்பாவைக்கு உரை எழுதிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அவரது நூலை நான் வாசித்துள்ளேன் அதில் திருப்பாவை என்பது வெறும் பாவை நோன்பு மட்டுமல்ல ஒரே சமயத்தில் பக்தியைக் கருவியாக கொண்டு மறுபுறத்தில் பெண்களின் உரிமைகள் பெண்களுடைய விருப்ப உறுதிகள் பெண்களுக்கு ஆன உயிரியல் அரசியல் போன்றவற்றின் பொருத்தப்பாடுகளை திருப்பாவையை வைத்து டாக்டர் சசித்ரா தாமோதரன்  புதிதாக நவீனமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.பெண்னெனும் பெரும் உயிரியல் சம்பவம்  இன்றி இந்த உலகத்திற்கு ஆழ்ந்த பொருளும் இல்லை அதைத்தொடர்ந்த இயக்கமும் இல்லை என்பதுதான் மெய்ப்பாடு.

பெண்ணின் பெருந்தக்க யாவுள என்றான் வள்ளுவன் அத்தோடு மெய் வாய் கண் மூக்கு செவிமனம் என்னும் ஐம்புலனும் பெண் கண்டோடி உள  என்றவனும் அவன் தான் . இன்பத் துன்பத்தின் பரபக்கமும் மறுபக்கமும் அவள் தான்.  அங்கே கடைக்கண் வைத்தாள் பராசக்தி என்று பெண்வழிச் சேரலின்  அறபதத்தைப் பாடிப் பாடி சரணாகதியில் பித்துநிலை கொண்டு மகிழ்ந்திருந்தான் மகாகவி பாரதி.!  

அதன் அடிப்படையில் எனக்கு சில யோசனைகள் தோன்றின. மாற்றம் என்பது மிக அவசியம் மாற்றத்திற்கு ஏற்றவாறு சமூக சிந்தனைகள் செயல்பாடுகள் கலாச்சாரம் பண்பாடு யாவும் தன்னளவில் சிதைந்தும் உயிர்ப்பித்தும் இந்த உலகத்தினுடைய தகவமைப்போடு இணைந்து ஏதோ ஒரு வகையில் தன்னை தற்காத்துக் கொள்ளவே முயல்கிறது என்றாலும் கூட சில மனித மாண்புகள் அதனுடைய அடிப்படை உரிமைகள் அது உருவான வரலாற்று பாத்திரங்களில் இருந்து பெற்றுக் கொண்ட அறம் சார்ந்த உண்மைகள் எப்போதும் நமது வாழ்விடத்தில் புழங்கிய வண்ணம் தான் இருக்கின்றன. அதை வெளியில் இருந்தோ உள்ளில் இருந்தோ வேறு எந்த அதிகாரமும்  வேரோடு  பிடுங்க இயலவில்லை என்பதைத் தான் உலகமெங்கும் பரந்துபட்டு வாழும் பல்வேறு மக்கள் குலங்களின் சொந்த பட்டறிவாகவும் அதன் அறம் சார்ந்த விழுமியமாகவும் இருக்கிறது என்பதை  நான் அதிகம் விளக்க விரும்பவில்லை. முரண்பாடுகளோ இயக்கங்களோ பிறகு அதற்கான அமைப்புகளோ ஒரு இயக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவியல்ப் பூர்வமாக உணர்ந்த மக்கள் சமூகம்தான் இன்றளவும் அரசியலாகவும் தற்சார்பாகவும் நீடித்துவருகிறது அதிகம் அது உயிரியல் பண்பை தான் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் வாழ்வில் ஒரு தத்துவ நிலைப்பாட்டை எய்தி விடுகிறார்கள்.

ஆக மாற்றங்கள்  அதன்விளை பயன்கள் தொடர்ச்சியான மோதல்கள் முரண்பாடுகள் இவற்றின் இடையே நாம் நமக்கு கிடைத்திருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களை  உலகில் எந்த பகுதியில் வாழ நேர்ந்தாலும் இழந்து விட முடியாது என்பதுதான் இறுதி மெய்நிலைச் செய்தியாகிறது. மாற்றங்கள் தேவை ஆனால்
நம் அடிப்படை அற நெறி முறைகளை, மரபுகளை மாற்றவோ புறம் தள்ள முடியாது. மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து,  

நமக்கு மக்கள் வாழ்வின் மீது அறம் சார்ந்து இருத்தல் தான் முக்கியம் அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய எந்த ஒரு கொள்கையையும் அதன் அரசியல் அறம் நிறைவேற்றி தர வேண்டும்.

மனித வாழ்க்கை இந்த பூமியின் மீது ஒரு ஒப்பந்தம் மட்டுமே.  நிலம் தனது பல்வேறு பல்லுயிர் பெருகங்களுக்கு இயற்கையை சார்பாக்கி இயங்குகிறது. மனிதனுடைய கடமை அதனுடன்  இணைந்து  வாழவும் இயற்கையோடு ஒன்றித்து இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தாம் பழங்கியது போக பின்வரும் தலைமுறைகளுக்கு அதன் புத்திளம் உயிர்களுக்கு இந்த உலகத்தை மறு புழக்கத்திற்கென விட்டுச் செல்லவும்  வேண்டும் என்பதுதான் சூழலியல் அறம் நன்றி தங்களுடைய உடைமைகளை பெருக்கிக் கொள்வது மட்டும் அல்ல.

வயது ஆக ஆக, முதிர்ச்சி கூடி வாழ்க்கை கடினமற்றதாக இலகுவாக ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிக்கிறோம் ஆனால் நிகழ்வுகள் நினைவுகளாகப் படிப்படிய அதன் கனங்களில் , அட்லஸ் ஷ்ரக்டு( Atlas shrugged) என்கிற அய்ன் ரேண்டின் படிமம் போல  அழுந்திக் கொண்டே இருக்கிறோம். (அந்த நாவல் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியாது நான் படித்ததில்லை) என காலபிரியா சொல்கிறர்.Tk Kalapria

உலகைத் தூக்கிச் சுமக்கின்ற அட்லஸ் தன் தோளைக்குலுக்கி கீழேயிறக்கி விட்டுவிடவேண்டுமென்கிறது அய்ன் ரேண்ட் தத்துவம். படிக்கும் போதும் நினைக்கும் தோறும் அறிவு விம்முகிறது,விழைகிறது. முடிவதில்லை.

" I swear - by my life and my love of it - that I will never live for the sake of another man , nor ask another man to live for mine . " 
-  மொத்த நாவலுமே இதைத்தான் சொல்கிறது .

இதையே பின் நவீனத்துவம் அதிகாரத்தை எதிர்த்து உண்மையை  நோக்கி சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்புகிறது என்பதை வாசித்து வருகிறேன். உலகத்தை  எவ்வாறு வரையறுத்து தீர்ப்பது என்கிற அனைத்தும் மீண்டும் மீண்டும் தீர்ப்புக்கு உள்ளாகிறது என்பதை புரிந்து கொண்டால்  மனித அறமும் விழுமியங்களும் வாழ்வின் அற்ப சேகரிப்புகளுக்கு அப்பால்  எவ்வளவு முக்கியமானது என்று என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.

#செய்ந்நன்றி கொன்ற மகற்கு….. (மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்) கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

#செய்ந்நன்றி கொன்ற மகற்கு…..
 (மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்)
------------------------------------
                         -  #கல்கிப்ரியன்-
      கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.. இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு தொகுப்புக்காக இந்த  சம்பவம் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டன. அந்த நிகழ்வு பற்றி வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய "மனித உரிமைகள் என்றால் என்ன?'" என்ற சிறு கையேட்டில் படித்ததாக ஞாபகம். எனவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன்.

அதைத் தேடும்போது ராதா எழுதிய "ஈழத் தமிழர் பிரச்னை- சில குறிப்புகள்" என்ற புத்தகம் கண்ணில் பட்டது. 2012 ஆகஸ்டில்
திமுக நடத்திய  "தமிழ் ஈழம் ஆதரவாளர்கள்"(TESO) மாநாட்டை ஒட்டி வெளியிட்ட புத்தகம்.  இந்த புத்தகத்துக்கு நான்  பிழை திருத்தியது நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்த கலைஞர் வழிகாட்டுதலில் ராதா கிருஷ்ணன் கால நேரம் பார்க்காத கடின உழைப்பும் நினைவு அடுக்குகளில் பளிச்சிட்டது.
      
ஈழ விவகாரத்தில் திமுகவை குறித்த மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட காலகட்டம் அது.எதோ திமுகவே ஈழத்திற்கு படைகளை அனுப்பி தமிழர்களை இனஅழிப்பு செய்து விட்டதாக ஜெயலலலிதா, வைகோ, சீமான்,  இன்னும் பலர் ஆவேசமாக பரப்புரை செய்து வந்தார்கள். ஓட்டு அரசியலில் இந்த விமர்சனங்கள் உண்டாக்கிய பாதிப்பை சரியாக அளவிட முடியாவிட்டாலும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே திமுகவுக்கு  மிகப் பெரிய அவப்பெயரை அந்த  விமர்சனங்கள் உண்டாக்கின.
      
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு தர்மசங்கடமான நேரமது.

திமுகவின் மீது பூசப்பட்ட கறையை முற்றிலுமாக நீக்க முடியா விட்டாலும் சேதத்தை குறைக்க முயன்று கொண்டிருந்தார் அவர்.  அப்போது அவருக்கு உதவியாகவும் உறுதுணையாகவும்  இருந்தவர் தான் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பிரபாகரன் முதற்கொண்டு அனைத்து ஈழப் பிரமுகர்களோடும் 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட உறவு முறையை பராமரித்து வந்தவர். கேஎஸ்ஆர் திருமணத்தில் தான் பிரபாகரனைப் முதலில் பார்க்கிறார் கலைஞர்.மயிலை சாலைத் தெருவில் பிரபாகரன் ராதாவுடன் இருந்தபோது லட்சிய வெறியோடு வலம் வந்து கொண்டிருந்த பிரபாகரனை நானும் பார்த்திருக்கிறேன்.
       
தனது ஈழத்தொடர்பை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமல்லாது இலங்கையிலிருந்த முக்கிய தமிழ் பிரமுகர்களிடமும் கலைஞரின் எண்ண ஓட்டங்களை எடுத்து வைத்தார் கேஎஸ்ஆர். ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரின் கடிதங்கள், கட்டுரைகள்,திமுகவின் தீர்மானங்கள் ஆகியவற்றை தொகுத்து "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற புத்தகத்தையும்  வெளியிட்டார் ராதா .
       
12-08-2012 அன்று "டெசோ" மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டுககாக "கருத்துரு விளக்கம்" என்ற கையேட்டையும் தயாரித்தார் கேஎஸ்ஆர் . கலைஞரின் வழிகாட்டுதலில் ராதாகிருஷ்ணன் என்ற தனிமனிதனின் உழைப்பு தான் அந்த மாநாடு.அது முடிந்த பின்  ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்துக்கு ஸ்டாலின் போனார் . அப்படியே லண்டனுக்கும் போனார்கள் அவர்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஈழத்தமிழர் பிடிஎப் ஏற்பாடு செய்த மாநாட்டில்,புலம் பெயர்ந்த தமிழீழ பிரமுகர்களைச் சந்தித்து திமுகவின் நிலைப்பாட்டை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு  கேஎஸ்ஆர் மூலம் கிடைத்தது.இதை எல்லாம் பலர் மறந்து விட்டனர்

ராதாவின் அயராத  செயல்பாடுகள் காரணமாக தமிழர்களிடையே  ஈழ விவகாரத்தில் திமுகவின் மீதிருந்த கசப்புணர்வும் வெறுப்புணர்வும் ஓரளவு குறைந்தது என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல.
  
ஆனால் வைகோ, சீமான் போன்றவர்கள் 2016 தேர்தலுக்கு பிறகும் கூட அந்த வெறுப்பணர்வை விசிறிவிட்டுக்கொண்டுதானிருந்
தார்கள். அரசியல் தட்பவெப்ப நிலை  திமுகவையும் வைகோவையும் நெருங்க வைத்திருக்கிறதது. அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆககியிருக்கிறது. .அதற்கு அவர் தகுதியானவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
திமுகவின் மீது சீமான் மற்றும் பல்வேறு சிறு குழு தலைவர்களின் விமர்சனங்கள் தொடரும் . முள்ளி வாய்க்கால் நினைவு நாளின்போது அவைகளின டெசிபல் அதிகமாகும்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பின்னால் அரசியலுக்கு வந்து fast trackல் ஏற்றம் பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. 1989சட்டமன்ற தேர்தலில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நின்ற போது பிரச்சாரத்தை   பற்றி கல்கிக்கு எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.அப்போது அவருக்கு உதவியாளராக இருந்தவர் கூட எம்.பி.ஆகும்  அதிசயம் நடந்தது.

கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது  என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

ராதாவைப் பொறுத்தவரை "கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே" என்பது "விதி"யாகி விட்டது.அவரே அடிக்கடி சொல்வது போல " தகுதியே  தடை". அறிவார்ந்தவராக இருப்பது மட்டுமல்லாமல் அவர் கட்டிக்காக்கும் சுயமரியாதை கூட அவருக்கு எதிராக  சமயங்களில் சதி செய்யும்.

ஆனால் கேஎஸ்ஆர்  இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்கிறார். இலங்கை மீது போர்  குற்ற விசாரணை, தமிழ் நாட்டு நலன்; தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சி,  நதிநீர் பிரச்சனைகள், சுற்று சூழல், தூக்கு தண்டனை எதிராக, தேர்தல் சீர்திருத்தம் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பொது நல வழக்குகள்-சட்டப் போராட்டங்கள் மூலம் சமர் செய்து வருகிறார்.

இந்த சூழலில் திமுகவிலிருந்த தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..கலைஞர் மறைவுக்கு பிறகு  கேஎஸ்ஆருக்கும் திமுக தலைமைக்கும்  உறவு சுமூகமாக இல்லை என்பது வெளிப்படையான விவகாரம். புதிய அதிகார மையங்களுக்கு கேஎஸ்ஆர் பன்முகத் திறமை தெரியவில்லையா அல்லது அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ராதா நடக்கவில்லையா என்ற பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை. 

எனவே அவரின் " நீக்கல்" விவகாரத்தை ஒதுக்கி வைப்போம்.
ஆனால் ராதா போன்றவர்கள் கட்சியில் இருந்தால்-அவர்கள் பயன்படுத்தப்பட்டால்-- கட்சிக்குதான் வலிமை என்பது என் கருத்து.இதை கலைஞர் புரிந்து கொண்டிருந்தார். பல பிரச்னைகளில், பின்னணியில் இருந்து செய்யப்படும் யுக்திகளின் மூலம் கட்சிக்கு சாதகமான நிலைப்பாடுகளை உருவாக்கலாம்.அதற்கேற்ற உலக நாடுகள் , டில்லி, பலமாநிலங்கள் தமிழக வரை தொடர்புகளோடும் பரந்துபட்ட பார்வையோடும் இருந்தவர் கேஎஸ்ஆர் . தற்போது திமுக  சந்திக்கும் சில பிரச்சனைகளை சமாளிக்க ராதாவின் ஐம்பது வருட மேலான அரசியல் அனுபவம் உதவியாக இருக்கும்.

ஜெயலலிதா ஊழல் வழக்கை பங்களூருக்கு மாற்றியது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது  அந்த காட்சியை உள்ளடிக்கிய வீடியோ காஸட்டை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி க்கு கொண்டு சேர்த்தது;
அறிவாலயம் வெளிகேட்டை உடைத்து உள்ளே போக முயற்சித்த கமிஷனர் முத்துகருப்பனை தடுத்து நிறுத்தியது; மனத உரிமை மீறல்களுக்காக புகார் கொடுக்க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்களை சம்பந்தப்பட்ட  மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது;  அண்ணா நகர் ரமேஷ் பிரச்சனை,சைதை-ஆண்டிபட்டி இடைத்தேர்தகளில் ,திமுகவினர் மீது அடக்குமறையை கையாண்ட துணை கமிஷனரை நடுசாலையில் தைரியமாக எதிர் கொண்டது----இப்படி கட்சிசார்ந்த ராதாகிருஷணனின் பங்களிப்புகள் நிறையவே உண்டு.

இதில் பலவற்றை நான் கல்கி இதழில் பதிவு செய்திருக்கிறேன்.ஒருமுறை மறைந்த முரசொலி மாறன் கட்சி பொதுக்குழுவில் பேசும்போது "அறிவாலயத்தைநான் எப்போது தொடர்பு கொண்டாலும் ராதாகிருஷ்ணன்தான் பதில் சொல்கிறார்; மற்றவர்கள் தலைவர் வரும்போது மட்டும் "பிலிம்" காட்டுகிறார்கள்" என்று பேசி விட்டார்.
அன்றிலிருந்து இரு சீனியர்கள் ராதாவுக்கு எதிராக தங்கள் "வேலை களை" காட்டத்துவங்கி விட்டனர்.மாறன் இருந்திருந்தால் கேஎஸ்ஆர்  டில்லி அரசியல் வரை ஏற்றம் பெற்றிருப்பார். இவைகள் பழைய கதைகளாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதோ.... முதல் பத்தியில் சொன்ன,  எனக்கு  வேண்டிய புத்தகம் கண்ணில் படும் முன் ராதாவின் மற்றொரு புத்தகம் தென்படுகிறது. 2014ல்  ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தை முன்னிட்டு அவர் எழதிய கலைஞரின் அணிந்துரை இருந்த ஆங்கிலப் புத்தகம்: Impunity in Sri Lanka
இலங்கை மீது போர் குற்றங்களுக்காக "பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை ஏன்  தேவை " என்பதை ஆதாரபூர்வமாக விளக்கும் புத்தகம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல.
இத்தனை வருட அனுபவத்தில், தனது அறிவுசார் தளத்தில்   தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவரே ஒரு  இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
-கல்கி ப்ரியன்
                    
                        ---------------+--+----+++++


Thursday, October 26, 2023

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி*

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி* 
—————————————
மனித வாழ்க்கையை நீண்ட காலம் கவனித்து வருகின்ற முறையில் எனக்கு சில விஷயங்கள்  முதலில் பிடிபட மறுத்தது. அல்லது அதை ஏற்பதில் சங்கட உணர்ச்சிகளையும் அடைந்திருந்தேன். ஆனால் இதுவரை நான் பழகிய மனிதர்களையும் அவர்களின் பல்வேறு அரசியல் செயல்பாடுகள் மற்றும் பொதுவான விஷயங்களில் கூட நான் பழகிப் பார்த்தபோது எத்தனை கீழ்மையான மனிதர்களோடு நாம் நம்மை அறியாமல் பழகி இருக்கிறோம்.அதுதான் போகட்டும் எனில் அதில் எத்தனை தூய்மையானவர்களை இழந்திருக்கிறோம்  என்கிற துக்கம் தான் ஏற்பட்டது . தனிமனிதர்களின் உளவியல் சிக்கல்கள்  எழுதத் தூண்டும் காரணிகளாக இருக்கின்றன.

இன்று கோவையில் என் நண்பர் வி சுந்தர் உடைய ஆர் எஸ் புரம் இல்லத்திற்கு சென்ற போது  அவர் வீட்டைவிட்டுக் காணாமல் போய் 35 வருடங்கள் ஆகிவிட்டது என்பது உறைத்தது. மிக வசதியான செல்வ செழிப்பான குடும்பம் மனைவி ஏராளமான  சொத்துகள் எல்லாம் இருந்தும் அவர் போயேவிட்டார். மிக அருமையானவர் பண்பானவர் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடியவர். சுவாமி விவேகானந்தர் மீது பற்று கொண்டவர். என்னுடன் பி எல் படித்தார். சட்டம் மட்டுமல்ல  தமிழ் இலக்க்கியம் என இந்த வாழ்வின் கதியை முழுவதும் புரிந்து கொண்டவர்தான் ஆனால் ஏனோ அவ்வளவு வசதிகளையும் செல்வாக்கையும் விட்டுவிட்டு எங்கோ காணாமல் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

குடும்ப நண்பர் என்கிற முறையில்  அங்கே எனக்கு இன்று உணவு தயாரித்து ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கென்னவோ மனம் கேட்கவில்லை. சுந்தரின் முகம் தான் திரும்பத் திரும்ப மனதில் வந்தது. ஏன் அப்படி போனார் என்று கேள்வியுடன் மனபாரத்துடன் திரும்பி விட்டேன். 

இது மட்டும் அல்லாது   பி இ பொறியல் படித்து அதன் மூலம்  தனியாக தொழில் செய்து கொண்டிருந்த  எனது சொந்த கிராமத்தை சர்ந்தவர். கோவில்பட்டியை சேர்ந்தவர்…எஸ். வெங்கடசாமி  என்ற அருமையான மனிதர்.  1960ல் எனக்கு கோவை விவசாயக் கல்லூரியில் படிக்க  நேர்முக தேர்வுக்கு சென்ற  போது முதல் காந்திபுரம் திருவள்ளுவர்ப் பேருந்து நிலையத்திலும்,  கோவை ரயில் நிலையத்திலும் வந்து காத்திருந்து  பிறகு என்னை அழைத்துக் கொண்டு செல்வார் .அவரும் பிறகொரு  நாளில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ காணாமல் போய்விட்டார். .எல்லா விதமான பிரச்சனைகளையும் என்னிடம் மனம் விட்டு பேசக்கூடியவர் மிகச் சிறந்த அறிவாளி! நுட்பமானவர்! அவருக்கு எல்லாம் கிடைத்துத்தான் இருந்தது. ஆனாலும்  அவரும் எங்கோ போய்விட்டார். இதுவரை இருக்கும் இடம் கூட தெரியவில்லை. எனக்குத் தெரிய இப்படி பல மனிதர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். யாருக்கும் தெரியவில்லை இவர்கள் யாரும் இன்று உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? இருந்தால் எங்கே இருக்கிறார்கள்?

ஐஏஎஸ் அதிகாரியான திருமதி ஷீலா ராணி சுங்கத் அவருடைய கணவர் சுங்கத் அவர் ஐஏஎஸ் . வீட்டை விட்டு போய்விட்டார்.அவர் சில நாட்கள் காணாமல் போய் விட்டார். ஏன் 
இப்படியான முடிவுகள் என தெரியவில்லை.

ஏன் அப்படி போய்விடுகிறார்கள்.
நல்ல படிப்பு அதற்கேற்ற பணி செல்வாக்கு வசதி வாய்ப்புகள் மனைவி தாம்பத்தியம் நட்பு சுற்றம் உறவினர்கள் இன்னும் எல்லாம் இருந்தும் இவர்களுக்கு ஏன் மனம் இவ்வாறு முடிவெடுத்து விடுகிறது சித்தார்த்தன் என்ற கௌதம் புததர் அரச வாழ்வையும் துறந்து மனைவியையும் தன் குழந்தைகளையும் விட்டு ஏன் வெளியேறிக் காணாமல் போனார்?  உண்மையில் அவர் எதைத்தேடிப் போனார்?. இப்படியான வெளிப் போக்கின் விசித்திரத்தை  ஒரு வகையான தத்துவத் தளத்தில் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் இவ்வாறு பலரும் காணாமல் போய்விடுவது ஒரு அதிசயமான 
ஆய்விற்குரிய சம்பவங்கள் தான். நளன் நிலை…?

இன்று வரை இந்தியாவில் 3 லட்சத்துக்கும்  அதிகம் பேர்கள் எந்த முகவரி அற்றும் எங்கு இருக்கிறாரகள் என்று தேட இயலாதபடிக்கும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் அனந்தகிருஷ்ணன் மலேசியாவில் இரட்டைக் கோபுரங்களை கட்டியவர் அவரது ஒரே மகனான சிறு வயது பையன் 10 வயதில் வீட்டை விட்டு எங்கோ தொலைந்து போகிறான் .தேடி அலைந்து பத்து வருடங்களுக்கு பிறகு அவன் திபெத்தில் இருக்கக்கூடிய ஒரு  புத்தத் துறவிகளின் மடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே போய் மகனை சந்திக்கிறார்.கூட  வருமாறு அழைக்கிறார் உமது பணம் உங்களுடைய வசதி செல்வாக்கு வாய்ப்பு எதுவும் எனக்கு வேண்டாம் நான் அமைதியாக இந்த துறவு மடத்திலிருந்து வாழ்நாளை சாத்வீகமாக கழித்து விடுகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டான். எவ்வளவோ சொல்லியும் அவனை அவர் அழைத்துப் போக இயலவில்லை.

இந்த இக போக வாழ்க்கை மீதான மொத்த பரிணாமங்களையும் புரிந்து கொண்டபின்புதான் அல்லது அதில் இருக்கும் இன்மையையும் வெறுமையும் அறிந்து கொண்ட பின்தான் இவர்கள்  இப்படிக் கிளம்பிச் சென்று விடுகிறார்கள் என்று  தோன்றுகிறது.

மனிதர்கள் தன் விடுமுறையைக் கழிக்க வந்து போகும் இடம் தான் இந்த பூமி என்று தோன்றுகிறது.  இதற்குத்தான் பிறவி வாழ்வு இன்று பெயரிட்டுக் கொள்கிறோம்.

அமெரிக்காவிலும் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தால் கொடிகட்டிப்பறந்த சிவகாசி அய்ய நாடார்  வாரிசான அதிபன் போஸ் கூட இன்றைய வாழ்நாளில் "இறை பணிக்காக நான் திரும்பி என் வாழ்நாள் முழுவதும் அதற்கு ஒப்படைத்து விட்டேன்" என்று சொல்கிறார். அவருக்கு நான் வழக்கறிஞர் கூட.

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் கூட "பணத்தால் எனக்கு ஒரு பலனும் இல்லை" என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.

இதையெல்லாம் ஒரு பக்கம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விசுவாசத்தையும் பணிவையும் காட்டி பிறர் கால்களை நக்கி பிழைக்கும் ஒரு கூட்டம் இன்னும் தங்கள் வாழ்க்கை மிக மதிப்புக்குரியது பாரம்பரியமிக்கது என்றெல்லாம்  தறுதலைகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் கொடிபிடிப்பான் என்பது போல இவையெல்லாம் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதையும் உணர்ந்து கொண்டுதான் இந்த லௌகீக வாழ்வின் துக்கங்களில் சுமைகளில் இருந்து அவர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள் போல. 
"நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவது" என்று ஒரு பழமொழியே இருக்கிறது.

 இன்றைக்கு மேசையில் இருந்த  சின்னாளபட்டிக்கவிஞர் யவனிகா ஸ்ரீ ராமின் கவிதை தொகுப்பை தற்செயலாக புரட்டிக் கொண்டிருந்தபோது  ஒரு கவிதை எனக்குக் கண்ணில் பட்டது இந்தப் பதிவிற்கு அது ஏதோ ஒரு வகையில் பொருத்தமாக இருப்பதாய்ப் பட்டதால் அதை இங்கே பதிவு செய்கிறேன்.

பருவம் தவறுவது

இடைவெட்டாய்ப் பக்கவாட்டில் அலையாதே
காட்சிகளை ஒரு கேமராவைப் போல சேகரிக்க முடியவில்லை
எதிரில் பிணம் வந்தால் நல்லது என்கிறார்கள்
நமக்குக் கோடைகாலம்
 தோல்ப் புண்களோடு திமிரையும் கொண்டு வருகிறது
கால்நடைகளை அது கழிச்சலுக்கு உள்ளாக்குகிறது
பருவம் தவறுவது நம்மைச் சுயநலம் ஆக்குவதற்குத் தான்
இல்லையெனில் மழைக்காலத்தில் தானியங்களின் விலை ஏன் கூடுகிறது
நம்மில் பலர் இறந்து போனவர்களைப் போல ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்
தயவுசெய்து பக்கவாட்டில் இருந்து எப்போதும் அழைக்காதே
அது மரணத்தை ஞாபகப்படுத்துகிறது
அம்புக்குறிபோல் முன்னோக்கிச் சென்றிருந்த ஒரு பறவை கூட்டத்தை ஏதோ ஒன்று சரேலென  தனது பக்கவாட்டில் இழுத்து மறைத்ததை இன்று நான் வானத்தில் பார்த்தேன்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.


*காவேரி* #*பூட்டிக்கிடக்கும் நீதியின் வாயிலில்...* - Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை.. (தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)

#*காவேரி*

#*பூட்டிக்கிடக்கும்
நீதியின் வாயிலில்...*
- Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை..



(தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)
•••••


குடமலையில் தோன்றிய
குணவதியாள்
தலைக்காவிரியாய்
புறப்பட்ட தவழ்கொடியாள்
தான்பாய்கின்ற வழியெங்கும்
பசுமை வளர்த்து
நிலமகளின் தாகங் தீர்க்கும்
காவிரித் தாயானாள்

எம்மாநிலமாயினும்
எம் பாரதத் தாயின் திருமண்ணே
என்பதை மறந்த
பாரபட்ச அரசியலாளர்களால்
பாசிச எண்ணங் கொண்டவர்களால்
மனமிருந்தும்
தவழ்ந்தோட வழியின்றித்
தோங்கிக் கிடக்கிறாள்
தாய்மையைத் தனக்குள்
பூட்டிக்கொண்டு
மனம் வெதும்பிக் கிடக்கிறாள்

நீரின்றிப் பயிர்களெல்லாம் 
வாடிக்கிடக்க
உழுது விதைத்து காத்துநின்றவர்
கண்ணீர் உகுத்து உகுத்து
அவர்தம் கண்விழிகளும்
காய்ந்து போயின

முளைத்த பயிர்கள் 
வேரூன்றி 
தன்மீது தழைத்துவளர வழியின்றி
தவியாகத் தவிக்கிறாள்
தலைவிரித்தாடும் வறட்சியின்
நீள்குழல் ஏந்திய
காவிரி டெல்டாவின்
மண்மகள்

பரவசமாய்ப் பாய்ந்தோடி
பயிர்கள் செழிக்கப் பார்த்து 
மகிழ்ந்திருந்த காவிரித் தாயோ
கனத்துக் கிடக்கிறாள்

அடைத்து வைத்து
அகங்காரங் காட்டும் மூடர்களின் 
மூளையின் மூலையில்
சிறுவெளிச்சம் பாய்ந்து
தன் ஆன்ம ஓட்டம்
தாழ்திறவும் கணங்களுக்காக
காத்துக் கிடக்கிறாள்

நீதியுணர்த்தி 
அநீதி களைந்திட
நீதிமன்றக்கதவைத் தட்டினர் 
எண்பதுகளின் தொடக்கந்தொட்டு
இன்றுவரை
மன்னை ரங்கநாதன்
கருப்பையா மூப்பனார்
முரசொலி மாறன்
கோ. சி. மணி
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
போன்ற பெருமகனார்கள் பலர்
பேதங்கள் ஏதுமின்றி

தேங்கிக் கிடக்கும் காவிரி போலவும்
ஏங்கிக் கிடக்கும் பயிர்களைப் போலவும்
ஏக்கங்களை ஏந்தி 
வறுமையைத் தாங்கி
தேங்கிக் கிடக்கிறது
காவிரி டெல்டா விவசாயிகளின்
வாழ்வாதாரம்

பூட்டிக் கிடக்கும்
நீதியின் வாயிலில்
காலங்கள் பல கடந்தபின்பும்!

- வானதி சந்திரசேகரன்
@vanathichandrsekaran




Wednesday, October 25, 2023

தென் குமரிக் கடற்பரப்பிலும்,,, கதிரவன் உதயத்தில்….. என் வானம் அழகானது தான் !

*அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே ?
அவனை விட்டு விடுங்களேன்,,,,, !
அவனைச் சுமந்த நதிமகள் கண்ணீர்உகுக்கின்றாள் ,,,,,,,,,

அதுவொரு போர்க்களம்,,,  ?*
நவ நாட்கள்  கடந்து விட்டது,,, !
உறவுகளே,,ஒன்றையொன்று வெட்டிச் சாய்த்து குருதிச்சுவை ருசித்துக் கொண்டிருக்கிறது !

அவன் குருதி கொஞ்சம் ருசி அதிகம்,,,,!
இல்லையில்லை,,இவன் குருதி தான் ருசி அதிகம்,,,,



வல்லூறுகளும், கழுகுகளும், தந்திர நரிகளும்,,,,களமெங்கும், ஊடாடிக் கொண்டிருக்கின்றன ! 



அதுவென்னவோ ? இயல்பு தானே ?
களமென்றால் குருதி சிந்தும் தான் !
சிந்துகிற குருதியினை ருசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்,,, காத்திருக்கத்தான் செய்யும்,,,

குருதி சிந்தி மரித்தவனை விட,,,,
மரித்துக் கொண்டிருக்கிறவனின் செங்குருதி கொப்பளிக்கிற தருணங்களில்,,,
அந்தக் குருதி,,,ஆஹா,,,
என்ன ருசி,,,என்ன ருசி,,
சுவை நரம்புகள் சப்புக் கொட்டிட,,,,,
சுவை பின்னதே உலகம்,,,என்று சும்மாவா ? சொன்னார்கள்,,,,,,

பத்தாவது நாள்,,,,,, !
அவன் எய்த அம்புகள்,,,,சர மழையாய்,,,,,,,,,,,,, !
கை வில் உடைந்து போகிறது ! பார்த்தனே,,,,,
உன் சரமழையினைப் பார்க்கும் போதெல்லாம், கைதட்டத் தோன்றுகிறதடா ?
ஆனால்,,,,
என் கை வில்லினை விட்டுவிட்டு,,,,,,
இக்களத்தினில்,,உன்னைப் போற்றினால்,,,,, ? ஹாஹாஹா,,,,
இப்பூவுலகு சிரிக்குமடா,,,,,,,,,,, !

நான் வளர்த்த பிள்ளை,,,
என் கைகளில் விளையாடிய பிள்ளை,,,நீ !
உன் அம்புகள் அற்புதமானவையடா !
உன் விழிகள் எங்கு நோக்குகின்றனவோ ? அங்கெல்லாம் சரமழை !

துரோணரின் வித்தையது !
என் துரோணரின் வித்தையது !
என் விழிகள் விரிகின்றன கண்மணி,,,, !
ஆனால்,,,,,
என் முன்னே சிகண்டியினை முன்னிறுத்தி எய்த அம்புகள்,,,,,, ?
நான் தோற்றுப் போனேனடா ! பார்த்தனே,,,,,,

உனக்கு ஸ்ரீகிருஷ்ணனென்ன ? 
அந்த சிவன் கூட வந்து தேரோட்டுவான் !
ஆம்,,,
அத்தகைய வல்லமை மிக்கவன் நீ !
நான் அறிவேன்,,,,
ஆனால்,,,,,
இன்று நான் வீழ்ந்து கிடக்கிறேன்,,,, ! 

என் உடல் மண்ணில் படவில்லை,,,,
என் மேனியினை மண் தீண்டும் நாள் இன்னும் வரவில்லையடா ? கண்மணி!

எந்தை சந்தனு இருந்திருந்தால்,,,,?
அழுது புலம்பி இருப்பான்,,, !

நீயென்ன தியாகியா ?
தியாகி போல நடிக்காதே ?
என்கிறாயா ?

 அம்பை அம்பிகா, அம்பாலிகா, என அப்பாவிப் பெண்களைக் கவர்ந்து வந்த கிழவனல்லவா ?  நீ !
வந்தவளில் ஒருத்தி மணந்து கொள் என்று கால் பிடித்து நின்ற போது , உதறித் தள்ளியவன் நீ தானே ? என்கிறாயா ?

அவள் துகிலுறிந்து நின்ற போது , கண் பொத்திக் கொண்டாயா ? கண்ணீர் விட்டு மறைத்துக் கொண்டாயா ? 
அன்று குத்திக் கொன்றிருக்கலாமே ? எதுவும் செய்யாமலிருந்தவர்களில் நீ முதல்வன் அல்லவா ? என்கிறாயா ?

நீ எய்த அம்புகள்,,,
என் உடலெங்கும்,,,,குத்திக் கொண்டிருக்கிறது !
நானென் உடல் சாய்த்து விடத்தான் நினைக்கிறேன் ?

ஆனால்,,,,
எந்தை செய்த செயலினை நானும் செய்தால்,,,,? உத்திராயணம் வரட்டும் பிள்ளாய்,,,,,,,,,,,,,,,, நதிமகள் சொல்கின்றாள் !
அவள் விதியின் பிடியில் தவிக்கின்றாள் !

அந்தக் களத்தில்,,,,,
நீ எய்த அம்புகள் மட்டுமே தரை தொட்டிருக்கிறது,,,! கண்மணீ !
ஆயினும்,,இப்போது என்னைப் பார் !
என் தலை தொங்கிக் கிடக்கிறது,,,,,,,,,,,,,,,, என்கிறேன்,,,,,,

அதோ !
என்னாயிற்று என்றபடி , 
என் சொல் கேட்டு பஞ்சணை கொண்டு வருகிறார்கள் ?
அவர்களுக்குத் தெரியாது,,,,? நான் வேண்டுவது எதுவென்று,,,,?

நீ அறிவாய் !
உன்னை இயக்குகிற ஸ்ரீகிருஷ்ணனவன் அறிவான் !
மீண்டும்,,,,
வில்லெடு,,, !
சரத்தினை வை,,,, பார்த்தா !
நாண் இழு !
ம்ம்,,,,இழு,,இன்னும்,,,கொஞ்சம்,,,இழுத்து,,,விடு,,,

இப்போது எய்து விடு ! பார்த்தா.
முச்சரங்கள்,,
என் தலை தாங்கட்டும்,,,,,,,  !

அதோ,,,!
அவர்கள் ஏன் ? பக்கத்தில் வருகிறார்கள்,,,,,?

உபதேசிக்கவா ?
உபதேசம் செய்யவா ?
எதுவும்,,,உனக்கு வேண்டாம்,,, !

ஆமாமடா !
குந்திக்கும், உன்னைப் பிடிக்கும்,,,!
பாஞ்சாலிக்கும், உன்னைப் பிடிக்கும்,,,,!
ஆனால்,,,,
விதி,,,!
என்னைத்தான் எவருக்குமே ? பிடிக்காமற் போய் விட்டது,,,,  ?

எல்லோரும், நதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது,,,,,
நான் மட்டுமே ? விதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தேன் ! 
அது தவறு என்பது,,,இப்போது புரிகிறதடா ?

இப்போது புரிந்தென்ன ? லாபம்,,,,!
வேண்டுமானால்,,,,,,,,,,,,,, ஆயிரம் போற்றி சொல்லலாம்,,,கேட்கலாம்,,, !
ஆஹா,,
இவர் பீஷ்மர் அல்லவா ! என்ற புகழ் மொழிகளில் மயங்கியே,,,,
புத்தி கெட்டுப் போனேனோ ? அறியவில்லையடா,,,, !

நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
உன்னை இயக்குகிற, அந்த ஸ்ரீ கிருஷ்ணனிடம் சொல்,,,, 
உன் விஸ்வரூபதரிசனம் பார்க்க ஆசைபடவில்லையடா ! என்று,,,,

சொன்னாலும், கேட்க மாட்டான் ! அவன்,,,,
ஆஹா,,,
அந்த கிழவனுக்கே,,,
அல்ல அல்ல,,அந்த பீஷ்மனுக்கே விஸ்வரூபதரிசனம் காட்டி விட்டேன் பார்த்தாயா ? பார்த்தா ! என்று தனக்குத்தானே ? தோள் தட்டிக் கொள்ளவாவது,,, அவன் விஸ்வரூப தரிசனம் காட்டத்தான் செய்வான் !
ஆனால்,,
அதுவல்ல,,,
நான் எதிர்ப்பார்ப்பது ?
எதிர்பார்த்தது,,,,?
எல்லோரும், இன்புற்று இருக்க நினைத்த விரதன் ! நான் ,,
அதுவும், தேவ விரதன் நான்,,,,,
பீஷ்மன் எனச்சொல்லிச் சொல்லி,,,நான் வீழ்ந்து விட்டேன்,,,,!

இனி அழுது புலம்பி ஆவதொன்றுமில்லை தான்,,, !
ஆயினும்,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,,
உடலெங்கும்,,
,உன் அம்புகள் குத்தியதால் கொப்பளிக்கும் குருதியோட்டம்,,,, தகிக்கிறது !
உன் அம்பின் மெல்லிய விடநுனிகள் மெல்ல மெல்ல என்னைக் கொன்று கொண்டிருக்கின்றன தான்,,,,,
ஆனாலும்,,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
இந்த முதுகிழவன் கொஞ்சம் இளைப்பாறுகின்றேனே,,,,,,,,,,,,,, !
கொஞ்சம் இளைப்பாறுகிறேனே ! பார்த்தா !
நீ உன் பணி தொடர் !
இனி வெற்றி உன் பக்கலில் தான்,,,,,

வீழ்ந்த முதுகிழவன்,,,,
இனி ,,
எழுவதற்கான வாய்ப்பில்லை,,,,, !

அதோ !
நதிமகள் அழுகின்றாள் !
அவள் கண்ணீர் அந்த கங்கை நதியிலேயே மரணித்து விடும்,,,
விதிமகளின் கண்ணீரல்லவா ? அது,,,, !

கொஞ்சம்,,அழுது விடேன் என்கிறாள் ! அவள்,,,!
அவளுக்குத் தெரியாது,,,,?
என் கண்ணீர் தான் அவள் பேர் தாங்கி நதியானதென்று,,,,,
பாவம் நதிமகள் ! விதிமகளின் கைப்பாவையாய்,,,,,,,,,,,,,,

இப்போது,,,
கொஞ்சம் தள்ளித்தான் நில்லுங்களேன்,,,, !
காற்று வரட்டும்,,, ! எவரோ சொல்கிறார்கள்,,,,

கதவைத் திறந்தால் தான் காற்று வருமாவென்ன ?
கொஞ்சம் தள்ளி நின்றால் கூட காற்று வரும் தான் !
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டும்,,,
வெகுதூரம் பயணித்து விட்டான் !
வெகுநேரம் பயணித்து விட்டான் !
அவனுக்கான காலம் வரும் வரைக்கும் , 
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே,,,,,,,,,,,,,, !

அவனுக்கான காலமா ? 
அவனுக்கான காலனா ?

ஹாஹாஹா,,,,,,,,,,,,
ஏதோவொன்று,,,,
 வரும் வரைக்கும்,,,
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே !

அவனுக்காக,,,,
அவன் மட்டுமே ? அழுது தீர்ப்பான் ! அழுது தீர்த்துக் கொள்வான் !
மண்ணில் எவரும் அவனுக்காய் அழ வேண்டாம்,,, ! 
அப்படித்தானே ? பிள்ளாய்,,,,,,,,,,,,,

ஹாஹாஹா

•••••••

தென்  குமரிக் கடற்பரப்பிலும்,,, 
கதிரவன் உதயத்தில்…..
என் வானம் அழகானது தான் !

Velu Pillai சொல்லி கேட்டது.




#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...