Friday, October 27, 2023

#*மாற்றங்கள் தேவை ஆனால்* *நம்அடிப்படை அற,நெறிமுறைகளை மரபுகளை மாற்றவோ புறம் தள்ளவோமுடியாது*



—————————————
நேற்று கோவையில் நரசிம்ம நாயகன் பாளையம் சகோதரர் பத்மாலாய சீனவாசன் அனபு புதல்வி  பிரீதிதா மற்றும் ஆனந்த திருமண விழாவுக்கு சென்ற போது அரசியல் கட்சி நண்பர்கள், கோவை நகர பிரமுகர்களை சந்திக்க முடிந்தது.
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களை சந்தித்தேன். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். 



பத்மாலாய சீனவாசனின் தம்பி தாமோதரன் மனைவி மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சிறப்பு மருத்துவரான  டாக்டர் சசித்ரா தாமோதரன், திருப்பாவை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அருமையாக படைத்துள்ளார்.திருப்பாவைக்கு உரை எழுதிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அவரது நூலை நான் வாசித்துள்ளேன் அதில் திருப்பாவை என்பது வெறும் பாவை நோன்பு மட்டுமல்ல ஒரே சமயத்தில் பக்தியைக் கருவியாக கொண்டு மறுபுறத்தில் பெண்களின் உரிமைகள் பெண்களுடைய விருப்ப உறுதிகள் பெண்களுக்கு ஆன உயிரியல் அரசியல் போன்றவற்றின் பொருத்தப்பாடுகளை திருப்பாவையை வைத்து டாக்டர் சசித்ரா தாமோதரன்  புதிதாக நவீனமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.பெண்னெனும் பெரும் உயிரியல் சம்பவம்  இன்றி இந்த உலகத்திற்கு ஆழ்ந்த பொருளும் இல்லை அதைத்தொடர்ந்த இயக்கமும் இல்லை என்பதுதான் மெய்ப்பாடு.

பெண்ணின் பெருந்தக்க யாவுள என்றான் வள்ளுவன் அத்தோடு மெய் வாய் கண் மூக்கு செவிமனம் என்னும் ஐம்புலனும் பெண் கண்டோடி உள  என்றவனும் அவன் தான் . இன்பத் துன்பத்தின் பரபக்கமும் மறுபக்கமும் அவள் தான்.  அங்கே கடைக்கண் வைத்தாள் பராசக்தி என்று பெண்வழிச் சேரலின்  அறபதத்தைப் பாடிப் பாடி சரணாகதியில் பித்துநிலை கொண்டு மகிழ்ந்திருந்தான் மகாகவி பாரதி.!  

அதன் அடிப்படையில் எனக்கு சில யோசனைகள் தோன்றின. மாற்றம் என்பது மிக அவசியம் மாற்றத்திற்கு ஏற்றவாறு சமூக சிந்தனைகள் செயல்பாடுகள் கலாச்சாரம் பண்பாடு யாவும் தன்னளவில் சிதைந்தும் உயிர்ப்பித்தும் இந்த உலகத்தினுடைய தகவமைப்போடு இணைந்து ஏதோ ஒரு வகையில் தன்னை தற்காத்துக் கொள்ளவே முயல்கிறது என்றாலும் கூட சில மனித மாண்புகள் அதனுடைய அடிப்படை உரிமைகள் அது உருவான வரலாற்று பாத்திரங்களில் இருந்து பெற்றுக் கொண்ட அறம் சார்ந்த உண்மைகள் எப்போதும் நமது வாழ்விடத்தில் புழங்கிய வண்ணம் தான் இருக்கின்றன. அதை வெளியில் இருந்தோ உள்ளில் இருந்தோ வேறு எந்த அதிகாரமும்  வேரோடு  பிடுங்க இயலவில்லை என்பதைத் தான் உலகமெங்கும் பரந்துபட்டு வாழும் பல்வேறு மக்கள் குலங்களின் சொந்த பட்டறிவாகவும் அதன் அறம் சார்ந்த விழுமியமாகவும் இருக்கிறது என்பதை  நான் அதிகம் விளக்க விரும்பவில்லை. முரண்பாடுகளோ இயக்கங்களோ பிறகு அதற்கான அமைப்புகளோ ஒரு இயக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவியல்ப் பூர்வமாக உணர்ந்த மக்கள் சமூகம்தான் இன்றளவும் அரசியலாகவும் தற்சார்பாகவும் நீடித்துவருகிறது அதிகம் அது உயிரியல் பண்பை தான் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் வாழ்வில் ஒரு தத்துவ நிலைப்பாட்டை எய்தி விடுகிறார்கள்.

ஆக மாற்றங்கள்  அதன்விளை பயன்கள் தொடர்ச்சியான மோதல்கள் முரண்பாடுகள் இவற்றின் இடையே நாம் நமக்கு கிடைத்திருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களை  உலகில் எந்த பகுதியில் வாழ நேர்ந்தாலும் இழந்து விட முடியாது என்பதுதான் இறுதி மெய்நிலைச் செய்தியாகிறது. மாற்றங்கள் தேவை ஆனால்
நம் அடிப்படை அற நெறி முறைகளை, மரபுகளை மாற்றவோ புறம் தள்ள முடியாது. மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து,  

நமக்கு மக்கள் வாழ்வின் மீது அறம் சார்ந்து இருத்தல் தான் முக்கியம் அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய எந்த ஒரு கொள்கையையும் அதன் அரசியல் அறம் நிறைவேற்றி தர வேண்டும்.

மனித வாழ்க்கை இந்த பூமியின் மீது ஒரு ஒப்பந்தம் மட்டுமே.  நிலம் தனது பல்வேறு பல்லுயிர் பெருகங்களுக்கு இயற்கையை சார்பாக்கி இயங்குகிறது. மனிதனுடைய கடமை அதனுடன்  இணைந்து  வாழவும் இயற்கையோடு ஒன்றித்து இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தாம் பழங்கியது போக பின்வரும் தலைமுறைகளுக்கு அதன் புத்திளம் உயிர்களுக்கு இந்த உலகத்தை மறு புழக்கத்திற்கென விட்டுச் செல்லவும்  வேண்டும் என்பதுதான் சூழலியல் அறம் நன்றி தங்களுடைய உடைமைகளை பெருக்கிக் கொள்வது மட்டும் அல்ல.

வயது ஆக ஆக, முதிர்ச்சி கூடி வாழ்க்கை கடினமற்றதாக இலகுவாக ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிக்கிறோம் ஆனால் நிகழ்வுகள் நினைவுகளாகப் படிப்படிய அதன் கனங்களில் , அட்லஸ் ஷ்ரக்டு( Atlas shrugged) என்கிற அய்ன் ரேண்டின் படிமம் போல  அழுந்திக் கொண்டே இருக்கிறோம். (அந்த நாவல் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியாது நான் படித்ததில்லை) என காலபிரியா சொல்கிறர்.Tk Kalapria

உலகைத் தூக்கிச் சுமக்கின்ற அட்லஸ் தன் தோளைக்குலுக்கி கீழேயிறக்கி விட்டுவிடவேண்டுமென்கிறது அய்ன் ரேண்ட் தத்துவம். படிக்கும் போதும் நினைக்கும் தோறும் அறிவு விம்முகிறது,விழைகிறது. முடிவதில்லை.

" I swear - by my life and my love of it - that I will never live for the sake of another man , nor ask another man to live for mine . " 
-  மொத்த நாவலுமே இதைத்தான் சொல்கிறது .

இதையே பின் நவீனத்துவம் அதிகாரத்தை எதிர்த்து உண்மையை  நோக்கி சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்புகிறது என்பதை வாசித்து வருகிறேன். உலகத்தை  எவ்வாறு வரையறுத்து தீர்ப்பது என்கிற அனைத்தும் மீண்டும் மீண்டும் தீர்ப்புக்கு உள்ளாகிறது என்பதை புரிந்து கொண்டால்  மனித அறமும் விழுமியங்களும் வாழ்வின் அற்ப சேகரிப்புகளுக்கு அப்பால்  எவ்வளவு முக்கியமானது என்று என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...