Monday, October 16, 2023

விருதுநகர் -#*ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு*

#*ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு*
—————————————
 இந்த  2023 ஆவது வருடம் மறைந்த ஏவிபி ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது. 

திமுகவின் முன்னணி தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்.  பெருந்தலைவர் காமராஜர் ஊர் எனபதால் இவரை காமராஜருக்கு நன்கு  அறிமுகம்.ஆயிரம் விளக்கு (1957-62) எழும்பூர் (1967-1971) ஆகிய தொகுதிகள் இரு முறை திமுக சட்டமன்ற உறுப்பினர்;  திமுக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்(1977-79)



அவரது குடும்பம் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கம் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என பாரம்பரியமாகவே கழகத்திற்காக பாடுபட்டது என்பதால்  அதன் நீண்ட நெடிய வழித்தோன்றலாய்  மதிப்பிற்குரிய ஏவிபி ஆசைத் தம்பி  இருந்தார்.

அவரைப் பற்றி தெரியாத விஷயங்கள்' ஒரு காலத்தில் அவர் மாடர்ன் தியேட்டரில் சில திரைப்படங்களுக்கு சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தார். நாற்பது புத்தகங்களுக்கு மேல் நாவல், சிறுகதை, அரசியல்,  இலக்கியப் படைப்புகளை எழுதி நூலாக வெளியிட்டார். அக்காலங்களில் அவை பரவலாக வாசிக்கப்பட்டன. அவை
யெல்லாம் இன்று மறு பதிப்பு கூட காணவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

திராவிட இயக்கத்தின் இதழ்கள் பலவற்றில் எழுதி வந்த ஆசைத்தம்பி, 1948ஆம் ஆண்டில் ‘தனி அரசு’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கினார்.அதில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். சில ஆண்டுகளில் அவ்விதழை மாதமிருமுறை இதழாக மாற்றினார்.1948 பின்னர் 1958ஆம்  ஆண்டு முதல் 1963ஆம் 1963 ஆண்டு வரை நாளிதழாக வெளியிட்டார். மேலும் திராவிட சினிமா என்னும் இதழையும் நடத்தினார்.

அறிஞர் அண்ணாவுடன்  மிக அணுக்கமாக இருந்தவர் .அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மிகச் சிறந்த நண்பராகவும் அவருக்கு விளங்கினார். சிறந்த பேச்சாளர் இலக்கிய நயம் தெறிக்கும் பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்பியவர்.

மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்வார். மிகவும் வெளிப்படையானவர். அதனாலே அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்.
ரயில் பயணங்களின் போது இடையிடை அவரை நான் சந்திப்பதுண்டு அவரும் என்னை நலம் விசாரிப்பார். அப்போது நான் தினமணி  கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன் .அதை வாசித்து விட்டு மனம் திறந்து பாராட்டுவார் அத்தகைய கட்டுரைகளில் இருக்க கூடிய முக்கியமான குறிப்புகளை தர்க்கங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துவார். அவரது பக்கத்து ஊரான விருதுநகர் என்கிற முறையில் என் மீது பிரியமாகவும் இருப்பார்.

கலைஞருடனும்  நட்பு கொண்டவர்.  கலைஞர் முன்னிலையிலே புகை பிடிப்பார்.அதிகம் புகைபிடிக்க்கூடியவர். கலைஞர் வீட்டிற்கு அவர் வரும்போது சிகரெட் துண்டுகளை ஆங்காங்கே போட்டு விடுவார் என்பதற்காகவே அவரது வீட்டில் ஒரு (ஆஸ்ட்ரே) சாம்பல் கிண்ணம் கொடுக்கப்பட்டதும் உண்டு. 

30 ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் இருந்த அவரது சொந்த இடத்தில் தான் இப்பொழுது வேலு மெஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1979ல் அந்தமான் தீவிற்கான பயணத்தின் போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பழுது ஏற்பட்டு அடைப்புகளால் இருதயம் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணம் அடைந்தார்.
அவர் காலமானபோது முதல்வர் எம்ஜிஆருக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்த போதும் கூட எம்ஜிஆர்  அவரது உடலை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டு வர முழு மனதுடன் ஏற்பாடு செய்தார்.
அரசியல் நாகரிகங்களும் செயல் பூர்வமான நாணயங்களும் மதிப்பிற்குரிய நடைமுறைகளும்  அன்று இப்படித்தான் இருந்தன.

இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு விழாவாக மலர்கிறது.
சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்து காட்டியவர்கள் என்றும் கொண்டாடப்படுவார்கள் என்பதற்கு அவர் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

நம்ம ஊரு விருதுநகர்(virudhunagar)
Virudunagar

#ஏவிபி_ஆசைதம்பி_நூற்றாண்டு
#திமுக #DMK
#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
16-10-2023

(படம் -2 இல்,  முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,  திமுக முன்னாள் அமைப்பு செயலாளர் விருத்தாசலம் செல்வராஜ் என அண்ணா காலத்து அன்றைய தென் ஆற்காடு மாவட்ட
சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பெயர்கள் உள்ளன)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...