Tuesday, October 10, 2023

#*பத்திரிக்காதர்மம்* …❓

#*பத்திரிக்காதர்மம்* …❓
—————————————
காலம் என்று ஒன்று இருந்தது. எந்த ஒரு கருத்தையும் கட்சி சார்ந்து இல்லாமல் நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்தார்கள். அதை எழுத்தாக்கி மக்களுக்கு கொடுப்பது போக ஒரு கட்சியோ ஒரு அமைப்போ தங்களது நிலைப்பாட்டில் தவறும் போது அதை எடுத்துரைத்து அது எவ்வாறு மக்கள் விரோதம் போக்காக மாறும் என்பதையெல்லாம் முன்கூட்டியே விமர்சனம் செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை கட்டி எழுப்பியவர்களும் அவர்களே..

தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், கல்கி கி ராஜேந்திரன், விகடன் பாலசுப்பிரமணியம் போன்றோர் எனக்கு தனிப்பட்ட வகையில் என நெருக்கம்  உண்டு. இவர்கள் காலத்தில் எழுதிய எழுத்துக்களை எல்லாம் மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது இன்று தங்களை நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிற பலரை  நாம் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஒரு காலத்தில் அவர்களுக்கெல்லாம் நான் நண்பராக இருந்திருக்கிறேன் என்பது இன்னமும் பெருமைப்பட வேண்டிய சங்கதி.

இன்று ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பிரச்சாரங்களிலும் பலர் தங்களை நடுநிலை வாதிகள் என்று சொல்லிக் கொண்டு பேசுகிற பலரும் ஏதேனும் ஒரு கட்சிக்கு முட்டு கொடுத்துக்கொண்டு ஏதோ அந்த கட்சியின் வட்ட செயலாளர்கள் போலவும் அல்லது அந்தக் கட்சிக்கு  சார்பாக ஒரு சர்க்கிள் தலைவர் போல 
எதுக்கெடுத்தாலும்  நடுநிலையற்ற விதண்டாவாதங்கள், தன் சுயநிலை விவாதம், மெய்யற்ற தர்க்கம் என்று பேசிக்கொண்டு தன்னை இழந்து வாழ்கிறார்கள்.

இன்றைய மக்களாட்சி தத்துவத்தில் இவ்வாறான  பிழைகளே மலிந்து கிடக்கின்றன. அறமற்ற காட்சி பிழைகள்…
இவர்கள் பத்திரிக்கையாளர்களா❓ பத்திரிக்கா தர்மம்❓ஆனால் இங்கு சிலர் நேர்மையாக இருக்கும்  பத்திரிக்கை நண்பர்கள்  இன்றும் உண்டு. அவர்களை போற்ற வேண்டும்

பத்திரிக்கா தர்மம் என்பது என்ன
1.உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும்
2.ஒரு உண்மையான பத்திரிக்கையாளன் துல்லியமான, தகவல்களை கொடுக்க வேண்டும். அதில் தைரியமாக இருக்க வேண்டும்.
3.நேரடி ஆதாரங்களிலிருந்து தகவல்களை திரட்ட வேண்டும்.
4.அவசரமும், நடைமுறைகளும் துல்லியத்திற்கு எதிராக இருக்கக்கூடாது.
5. சுதந்திரமாக செயல்பட வேண்டும்
6. சார்பின்மையின்றி நடுநிலமையுடன் செய்தி வெளியிட வேண்டும்
7. விமர்சனங்களையும், குறைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
8.செய்திகளால் வரும் ஆபத்துகளை ம்னதில் கொண்டு குறைக்க முயற்சி கொள்ளவேண்டும்.
9. பிறர் கொடுக்கும் செய்திகளை பார்வைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
10.அன்பளிப்பு,சார்பு, பணமுடிப்பு, சிறப்பு சலுகை, இலவசங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
11. பிறர்மனம் புண்படும் செய்திகளில் கவனம் தேவை.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-10-2023.

No comments:

Post a Comment