Wednesday, October 18, 2023

“சில சமயங்களில் மனிதர்கள் தம் காதலை முறித்துக்கொள்வதற்கான காரணம்

“சில சமயங்களில் மனிதர்கள் தம் காதலை முறித்துக்கொள்வதற்கான காரணம் அது தாங்கிக்கொள்ள முடியாத அழகுடன் மிளிர்ந்து அவர்களை அச்சுறுத்துவதினால்தான். சில சமயங்களில் அவர்கள் விலகிச் செல்வதற்கான காரணம், உறவுப் பிணைப்பானது அவர்களது இருண்ட மனத்தின் மூலைகளில் ஒளியைப் பாய்ச்சுவதினாலும் அதற்கான தயார் மனநிலையை வளர்த்துக்கொள்ளாததும்தான். சில நேரங்களில் காதலிலிருந்து அவர்கள் தப்பித்து ஓடுவதற்கான காரணம் இன்னொருவருடன் வாழ்வைப் பகிர்ந்துகொள்வதற்கு மனதளவில் பக்குவப்படாததே. முதலில் தங்களது ஆளுமையை மெருகேற்றும் பணியை அவர்கள் மேற்கொள்ளட்டும். சில நேரங்களில் அவர்தம் வாழ்வில் காதல் எனும் விஷயம் முதன்மையானதாக இருக்காது. அவர்கள் ஆற்றவேண்டிய வேறுசில பணிகளும் லட்சியங்களும் குறுக்கிட்டு இருக்கலாம். சில தருணங்களில் தன்னுணர்வு மிக்கக் கனவுக் காதலைக் காட்டிலும் தங்களது அன்றாடத்தைப் பாதிக்காத, தரையில் கால் பாவிய யதார்த்தக் காதலை மேலானதாகக் கருதி உறவை முடித்துக்கொண்டிருப்பார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்கள் காதலில் அவமானத்தைச் சுமந்தலைகிறோம். ஏனெனில், நம்மைப் பிரிந்துசெல்கிறவர்களையும் பொருட்டாக மதிக்காதவர்களையும் ஒதுக்குகிறவர்களையும் நினைத்து அந்தரங்கமாகக் காயப்படுகிறோம். அதை நம்முடைய குற்றமாகக் கருதுகிறோம். ஆனால், அது எப்போதும் உண்மையல்ல. சில சமயங்களில் காதல் முறிவுக்கு நாம் பொறுப்பல்ல. நமது காதலை நெஞ்சோடு அணைத்துப் பத்திரப்படுத்திப் பாதுகாக்கும் அளவுக்கு விலகிப் போனவர்கள் தயாராகவில்லை என்றே அதற்குப் பொருள். சில சமயங்களில் அவர்கள் அறிந்த உண்மையை நாம் உணராமலும் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட தருணத்தில், நேரத்தில் காதலில் தங்களது குறுகிய எல்லையை அவர்கள் அறிந்திருந்தனர் எனும் நிதர்சனமே அது.

உண்மையான காதலைக் கைக்கொள்வது அத்தனை எளிதல்ல. அது கடினமான பாதை. ஆகவே, விலகியவர்களை நினைத்துக் காயப்படாமல் ஒருவித விலக்கத்துடன் வருத்தமுறுவோம். காதலன்/காதலி இல்லாத நேரத்தில் நம்மை நாமே காதலிப்பதற்குக் கற்றுக்கொள்வோம்.”

ஜெஃப் பிரவுன்.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...