Thursday, October 12, 2023

*நிரந்தரமில்லா வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட முடிவுக்காய்!* *கொண்டவன் துணை இருந்தால் கூரையேறி கோழி பிடிப்பவர்கள் எல்லாம் குறி சொல்லத் தொடங்கி விட்டார்கள்*

#*நிரந்தரமில்லா வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட முடிவுக்காய்!*

*கொண்டவன் துணை இருந்தால்  கூரையேறி கோழி பிடிப்பவர்கள் எல்லாம்   குறி சொல்லத் தொடங்கி விட்டார்கள்*
—————————————
இன்றைக்கு காலையில் ஒரு அமைச்ர் விரிவுரையாளரைப் போல நீண்ட நேரமாக எனக்கு வகுப்பெடுத்தார். நீங்கள் அங்கே போயிருக்கக்கூடாது இங்கே போயிருக்க்கூடாது என்று பல ஆலோசனைகளையும் கூறினார்.

விசுவாசித்தவர்களுக்கு கடவுள் மேட்டு நிலங்களையே வழங்குவார் என்பது மாதிரி அவர் தனது விசுவாசத்தின் பெயராலே தகுதி திறமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு போகிற போக்கில் மந்திரியுமானவர். அதற்கான நலன்களையும் அனுபவித்தவர்.அவரிடமிருந்து எனக்குத்தான் எவ்வளவு அருமையான விரிவுரைகள்.

கொண்டவன் துணை இருந்தால்  கூரையேறி கோழி பிடிப்பவர்கள் எல்லாம்   குறி சொல்லத் தொடங்கி விட்டார்கள்

நாம் ஒருவருக்கு உதவியாக இருந்தும் அதில் ஏதேனும் நமக்கு பின்னடைவு  ஏற்பட்டு பிரச்சனைகள் வந்தால் உதவி பெற்றவர் உயரத்தில் இருப்பார். நாம் பாதாளத்தில் தான் இன்று அதை பார்த்துக் கொண்டிருப்போம். இதில் பரிகாசங்கள் வேறு. அந்த நிலையிலும் நம் 
பிரச்சனைக்கு நாம்தான் தீர்வு, யாருடைய ஆலோசனை தேவையும் இல்லை. நெருப்பை தொட்டவனுக்கு மட்டும் அக்கினியின் ரணம் தெரியும்.

எனக்கு கேட்க தோன்றுவதெல்லாம் ஒன்றுதான்.எத்தனை அடிப்படை வேலைகளைச் செய்து கொடுத்தாலும் எவ்வளவு சரியாக நிர்வாக அமைப்பில் பணியாற்றினாலும் உண்மையில் என் திறமைக்கு யார்தான் மதிப்பு கொடுத்தார்கள்?.அல்லது நான் எங்கிருந்த போதும் யார் தான் எனக்கு சட்டமன்ற பதவி அல்லது நாடாளுமன்ற பதவிகளைப் பரிந்துரைத்தார்கள். எல்லாம்
வெற்றுப் பாவனைகள்.

 எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும்  என்னளவில் அதற்கு நான் முழுமூச்சுடன் பாடுபட்டு இருக்கிறேன். அந்த திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது.
இன்னும் அப்படியான முயற்சிகளில் என் மனநிலை ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறது.அதை நான் எங்கிருந்து போதும் செய்து கொண்டுதான் வருகிறேன் வருவேன்..

இந்தக் கால அரசியலைப்போல யார் காலையாவது பிடித்து பதவிக்கு வர வேண்டியது அல்லது வாரிசுகளிடம் போய் நின்று பல்லிளிப்புச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வது போன்ற செயல்களை எனது சுயமரியாதையும் இயங்காற்றலும் ஏற்றுக்கொள்ளாது.

எத்தனை உதவிகள் செய்தாலும் எத்தனை இடர்பாடுகளில் உடன் இருந்தாலும் அதை நம்மிடம் பெற்றவர்கள்  சலுகை அடைந்துவிடும் போது அல்லது பதவிக்கு வந்த எக்காளத்தில் ஏணியை உதைப்பது உலக வழக்கம்தான். பொது வாழ்வு என்பது பணம் பொருள் சேர்க்கு வியாபாரம் அல்ல.இன்று நிலை என்ன? அனைவரும் அறிவர்….ஓட்டு பணம் கொடுத்து வாங்கிற சரக்கு ஆகியும் விட்டது.

இதையெல்லாம் 50 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். எனக்கு எந்த அனுதாப விரிவுரைகளும் தேவையில்லை
நடப்பவை நல்லவையாகட்டும் . நான் என்றும் 
துயரற்று அமைதியாக இருக்கிறேன். படுத்தவுடன் நிம்மதியாக நித்திரை கொள்கிறேன். ஆனாலும் என் பணி என்றும் போல சுதந்திரமாக நடக்கிறது. என்னை பற்றி காலநேரம் வர்த்தமானம் நிச்சயமாக எடுத்துரைக்கும்… பதவிகள் வரும் போகும் …
நம் பெயர்,  நம் உழைப்பு வரலாறு என்ற ஏட்டில் இடம் பெறும்  நம்பிக்கை உள்ளது. 

•••
தளிர்களின் துளிர்ப்பில்
வம்சக் கிளைகள் 
புதிதாய் 
நாளும் விரவிட

காலமெனும் கிளைதனில்
காத்திருக்கிறோம்
இலைகளாய்

நிரந்தரமில்லா வாழ்க்கையில்
நிச்சயிக்கப்பட்ட 
முடிவுக்காய்!

(ஆனா என்றும் நம் முத்திரை நிரந்தரம்….)
Vanathi Chandharasekaranவானதி_சந்திரசேகரன்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
12-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...