Friday, October 24, 2014

ஜெயலலிதா வழக்கின் துவக்க நிலை செய்திகள்

ஜெயலலிதா வழக்கின் துவக்க நிலை செய்திகள்
--------------------------------------------------------------------------------------
வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு குறித்த விவாதம் 1993இலேயே துவங்கி விட்டது. இதுபற்றியும், கும்பகோணம் மகாமகம் குளத்தில் நடந்த மனித சாவுகளும், வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், கே.எம். விஜயன் ஆகியோர் தாக்கப்பட்டது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கு, ஆடிட்டர் ராஜசேகர் தாக்கப்பட்டது ஆகியவை குறித்து அப்போது தி.மு.க. கூட்டங்களில் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.




ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு குறித்து அப்போது தமிழக ஆளுநராக இருந்த பீஷ்மநாராயண் சிங் கண்டுகொள்ளாது பாராமுகமாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த அவரின் நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு விரும்பவில்லை. அன்றைக்கு பிரதமர் நரசிம்மராவ். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, எனக்கும் பிரதமர் நரசிம்மராவுக்கும் தலைமுறை இடைவெளி உள்ளதாக சொன்னது டில்லியை கோபமடையச் செய்தது. பீஷ்மநாராயண் சிங் தமிழக ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, சென்னா ரெட்டி பதவிக்கு வந்தார். 

அவர் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. சற்று நினைவில் உள்ளது; ஜெயலலிதா ஊழல் குறித்து, தி.மு.க. ஆளுநரிடம் முறையீட்டு மனுவும் அளித்தது. ம.தி.மு.க.வில் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் நான் இருந்தபொழுது, ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வழக்கு தொடுக்க அனுமதி கோரி, நானும் நண்பர்களும் சேர்ந்து நூறு பக்க அளவிலான மனுவை தயாரித்தோம். 

வைகோ, எல்.கணேசன், பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அடியேன் மற்றும் வேலூர் விஸ்வநாதன், எஸ்.ஆர். ராதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஒரு மாலைப் பொழுதில் சென்னா ரெட்டியை சந்தித்து, அந்த மனுவை அளித்து அனுமதி கேட்டோம். அதுபோன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், தீரனும் ஆளுநரை சந்தித்ததாக செய்திகள் வந்தன. சுப்பிரமணிய சுவாமி அளித்த மனுவுக்கு ஆளுநர் வழக்குத் தொடுக்க அனுமதி வழங்கினார். அவரும் வழக்குத் தொடுத்தார்.

ஆளுநர் சென்னாரெட்டி புதுவை செல்லும்போது அவரது வாகனம் ஆளும் அ.தி.மு.க.வினரால் திட்டமிட்டு தாக்கப்பட்டது. சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சட்டமன்றத்தில் கூறிய ஜெயலலிதா, பின்னர் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டார். அன்றைக்கு பிரதமர் நரசிம்மராவ் தமிழகம் வருகை தந்தபோது, ஆளுநர் சென்னாரெட்டியும், முதல்வர் ஜெயலலிதாவும் தனித்தனியாக வரவேற்ற காட்சியும் நடந்தேறியது. 


தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் டில்லியிருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த விடுதியிலும் ரகளை நடந்தது. அதே காலகட்டத்தில், சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றம் செல்லும் போது, அ.தி.மு.க. மகளிரணியினர் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதெல்லாம் அந்த கால செய்திகள். அப்போது ‘தினமணி’யில் நான் எழுதிய கட்டுரையை இப்போது படித்து பார்த்தால், இந்த காலகட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


------------------------------------------------------------------------------------
ஆளுநர் - முதல்வர் உறவுகள்
-------------------------------------------------------------------------------------


தமிழகத்தில் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பனிப்போர் நடந்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக தமிழக முதல்வரே இருக்கும் வண்ணம் வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்பொழுது சென்னா ரெட்டி தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார். பிரதமர் நரசிம்மராவ் சென்னை வந்தபோது, அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் தனித்தனியாக பந்தல்கள் அமைத்து முதல்வரும், ஆளுநரும் வரவேற்றனர். இத்தகைய மரபுகள் என்றும் நடைபெற்றதில்லை.





சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்வினை உடனே ஆளுநருக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் தமிழக முதல்வரின் (நிர்வாகத்தின்) மேல் உண்டு.


அதேபோல் மகாராஷ்டிர பூகம்ப நிவாரண நிதிக்கு தமிழகத்தின் சார்பில் ஆளுநரும், முதல்வரும் தனித்தனியாக நன்கொடைகளை மக்களிடமிருந்து பெறத் தொடங்கினர். தமிழக அரசிடமிருந்து ஆளுநருக்கு செல்லும் கோப்புகள் உடனடியாக திரும்பி வருவதில்லை என்றக் குற்றச்சாட்டை முதல்வர் சார்பில் வைக்கப்பட்டது. 


ஆளுநர் மாளிகை புதுப்பிக்க சுமார் ரூ.17.90 இலட்ச மதிப்பீட்டில் திட்ட சம்பந்தப்பட்ட கோப்பு ஆளுநரிடமிருந்து தமிழக அரசுக்கு அனுப்பி பலநாள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தமிழக அரசின் மீது ஆளுநரின் தரப்பில் ஏடுத்து வைக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினையில், தமிழக அரசின் சார்பில் சட்டப் பேரவையின் தலைவர், குடியரசுத் தலைவருக்கு எடுத்துக் கூறினார். இவ்வாறு ஆளுநருக்கும், முதல்வருக்கும் உள்ள பிரச்சினைகளால் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத் திட்டங்கள் சம்பந்தமான கோப்புகள் மீது முடிவெடுக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.


இந்தியாவில் பல அரசியல் கட்சிகள், ஆளுநர் பதவி இந்திய அரசியல் அமைப்பில் தேவையற்றது என ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. மத்திய அரசை ஆளுகின்ற கட்சியினர், ஒரு சில தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற பதவிதான் ஆளுநர் பதவி என்றும், மாநில அமைச்சரவை பரிந்துரை செய்யும் கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பெற்றவர் ஆளுநர் என்ற அலங்காரப் பதவியில் இருப்பவர் என்றும், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆளுநர் பதவியைப் பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


கடந்த காலங்களில் இராமாராவின் அமைச்சரவை நீக்கப்படும்போது, ஆளுநருடைய பதவிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், ஜனநாயக முறைகேடுகள் நடந்தன. அந்த நேரத்தில் என்.டி.ஆர். ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற தீவிர கருத்து கொண்டார்.


ஆளுநர்கள், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்திலும், மாநில அரசுகள் கலைக்கும்போதும் தங்களுடைய பங்கு முக்கியமானது என்று கருதுகின்றனர். மேலும், ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர் மத்திய அரசின் கீழ்ப்பட்டவர் அல்லது மத்திய அரசின் கண்காணிப்பிற்கு உட்பட்டவர் என்ற வகையில் இல்லை. ஆனால், அவர் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பின் அங்கமாகவும், மாநில அரசின் அமைப்பில் தலைமையை ஏற்பவர் எனவும், கர்நாடக அரசு 1980இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக் கூறுகிறது.


 மத்திய - மாநில உறவை ஆராயும் சர்க்காரியா குழு ஆளுநரைப் பற்றித் தனியாக குறிப்பிட்டுள்ளது. அதில் ஆளுநருடைய பொறுப்பு மிக முக்கியமானது என்றும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பாரபட்சமற்றவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் அண்மைக் காலம் வரை ஈடுபட்ட அரசியல்வாதியாக இருந்தவரை ஆளுநர் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதுமட்டுமல்ல, சர்க்காரியா கமிஷனில் ஆளுநர் பற்றிய முக்கியமான பரிந்துரைகளை கீழ்வருமாறு தொகுக்கலாம். 

அதாவது, மத்திய அரசிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்தவர், மாற்று கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு நியமிக்கக் கூடாது. குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட மாநிலங்களின் முதல்வரை அவசியம் ஆலோசித்த பின்பு ஆளுநரை நியமிக்க வேண்டும். இதனை முறைப்படுத்தும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 120வது பிரிவை திருத்த வேண்டும். ஆளுநர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு உரியது என ஆக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து விருப்பப்படி விடுவிக்கக் கூடாது. ஒருவரை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பு அவரின் விளக்கத்தைப் பெற்றபின் விலக்கப்பட வேண்டும். 

ஓர் ஆளுநரை பதவியில் இருந்து விலக்க நேர்ந்தாலோ, மாற்றப்பட்டாலோ அதற்கென காரணங்களை நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுநர் அதைப்பற்றி விளக்கங்கள் அளித்து இருந்தால் மக்களவை உறுப்பினர்கள் கவனத்திற்கு அதையும் கொண்டுவர வேண்டும். ஆளுநர் பதவி வகிக்கின்றவர் வருமானம் தரும் எந்த பதவியையும் ஏற்கக் கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும். கோப்புகள் பற்றி விளக்கம் பெற, மாநில அரசின் ஆலோசனை பெற அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. கொள்கைத் திட்டங்களை மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல. அதைப்போல பெரும்பான்மை ஆதரவு ஓர் அரசியல் கட்சிக்கு இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில் தான் சோதிக்க வேண்டுமேயொழிய ராஜ்பவனில் ஆளுநர் சோதனையில் ஈடுபடக் கூடாது.

இதுதான் ஆளுநரைப் பற்றி சர்க்காரியா வழங்கிய சுருக்கமான தொகுப்புரை ஆகும். ஆனால் நாட்டில் நடப்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?
தமிழக முன்னாள் ஆளுநர் குரானா திருமதி. ஜானதி இராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது எழுந்த சிக்கலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டக் கோரினார். அரசியல் சாசனம் பெரும்பான்மையைப் பற்றி விரிவாக குறிப்பிடப் படவில்லை. மக்களவைக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. இதுவரை சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுத்தான் ஆட்சியமைக்கும் மரபு நடைமுறையில் உள்ளது. 


ஆனால் 1960இல் திருவிதாங்கூரில் பட்டம் தாணுபிள்ளை அமைச்சரவை அமைத்தார். அவரது கட்சியில் 19 உறுப்பினர்களே இருந்தனர். பல மடங்ககு மாற்றுக் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு பட்டம் தாணுபிள்ளை தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு திருமதி இந்திரா காந்தி மத்தியில் சிறுபான்மை பலத்தை பெற்று இருந்தாலும், மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார். எனவே, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுகிறபோது குடியரசுத் தலைவர், ஆளுநரின் முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஆளுநர் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமெயொழிய அதற்கு மீறிச் செயல்படுவது நல்லதல்ல.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பிரகாசா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்ததால், முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாகக் காரணமாக இருந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகும்.


ஆளுநர் மத்திய அரசின் கீழுள்ள ஏஜெண்டாகவோ அல்லது இரப்பர் ஸ்டாம்பாகவோ செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது வெறும் அலங்காரத்திற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மட்டும் என்று இல்லாமல், மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு பாலமாக இருந்து மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு ஆற்றினால், மக்கள் பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு. அத்தோடு மத்திய - மாநில உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் கவனித்துக் கொள்வதிலும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி இல்லாதபோது அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அரசை அகற்ற, ஆளுநரின் பரிந்துரை முக்கியமானது ஆகும். இச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது.


தமிழகத்தில் சமீபத்தில் நடந்து வருகின்ற ஆளுநர் - முதலமைச்சர் மோதல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சட்டமன்றத்தில் ஆளுநருடைய உரை, ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்த்தப்படுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு, வீணான பிரச்சினைகளை உருவாக்காமல் ஆளுநருடைய உரையுடன் சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம். ஆளுநரும் மாநில அரசு அனுப்பிய பல கோப்புகளின் மேல் பரிசீலனை செய்து அனுப்ப வேண்டும்.


Governor is to be formally Constitutional Head with strictly limited powers whose discharge shown all functions would be required to follow the advice of the Ministry எனத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆளுநர், கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியமான அங்கம் வகிக்கின்றவராகவும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் இல்லாத நேரத்தை அந்த நிருவாகத்தை நடத்துகின்ற பொறுப்பை உடையவராகவும் இருக்கிறார் எனவும், வழக்கறிஞர் திரு. சோலி சோரப்ஜி கூறுகின்றார். ஆளுநர் குறிப்பிட்ட அதிகாரத்துடன் மாநில அமைச்சரவை பரிந்துரைக்கும் அரசின் நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளார்.


கடந்த காலங்களில் ஆளுநர்களை நியமிக்கும்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுநரை நியமிக்கும்போது பல பிரச்சினைகள் எழுந்தன. இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஆளுநராக நியமிக்க இருந்த ராமலாலுக்கு எதிரானக் கண்டனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ஆளுநரை நியமிக்கும்போது மத்திய அரசு பாரபட்சமாகவும் தங்களுடைய கட்சியில் உள்ள ஒரு சிலரை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநருடைய முற்கால அரசியல் வரலாற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமலும், அடிப்படையில் அவருடைய நேர்மையை ஆராயாமலும் நியமிக்கப்படுவது நல்லதல்ல.


ஆளுநரை நியமிக்கும்போது, சம்பந்தபட்ட மாநில முதல்வருடைய ஆலோசனை கேட்ட பிறகு நியமித்தால், ஆளுநரும் மாநில முதல்வர் தலைமையில் இயங்கும் அரசும் எந்தவித பிரச்சினைகள் இல்லாமல் இயங்கும். ஆளுநராக நியமிக்கப்படுபவர் தங்களுக்கென தனியாக அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில் செயல்படவோ, வீணான ஜம்பத்திற்கு ராஜபவனத்தில் செலவுகள் செய்து மக்களுடைய வரிப்பணத்தைப் பாழ்படுத்துவதைத் தவிர்த்து எளிமையாக இருக்க வேண்டும்.


கடந்த காலத்தில் ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோது பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் காந்தியவாதி. சென்னை ராஜ்பவனில் மது, புகை பிடிப்பதை அறவே தடுத்துவிட்டார். அந்தப் பிரச்சினையால் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பட்வாரி விலக்கப்பட்டார். தமிழகத்தில் ஆளுநராக இருந்த பர்னாலாவிடம் தி.மு.க. அரசைக் கலைக்க பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு கேட்டபோது மறுத்துவிட்டார். அதனால் அவர் பதவியை விட்டு விலகினார். 


மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்படுபவர், தாங்கள் விரும்பும் ஒருவரை தங்களின் ஏஜெண்ட் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவதோ அல்லது விரும்பாதபோது பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதோ கூடாது. ஆளுநர், அரசியல் காரணத்தினால் மத்திய அரசால் அகற்ற நேர்ந்தால் அதற்கு தடையாக “As a friend, Phliosapher, guide to the State Government and defender of the Constitution. The Office of the Governer assumes crucial role in a Federal set up. He will be called upon to exercise his discriminary powers in the event of the broke down of the constitutional machinery in the State (Soli J. Sorabjee)” ஆளுநர் ஒரு மாநில நிர்வாகத்தில் நண்பராகவும், அதை வழி நடத்திச் செல்லக்கூடிய வழி காட்டியாகவும் மாநில அரசுக்காக வாதிடுபவராகவும், அரசியல் அமைப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளார். இன்றைக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைவிட எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பல உள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருடைய அதிகாரங்கள் 154, 160, 161, 162 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. 356 பிரிவில் இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும்போது, ஆளுநருடைய பங்கு மிக முக்கியமானது ஆகும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...