Sunday, October 26, 2014

தமிழக நீர் நிலைகள்

தமிழக நீர் நிலைகள்
------------------------------------------
நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீர நாராயணன் ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் எப்படி அமைத்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. மதுரையிலுள்ள  வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பது, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

                     

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம். வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.  இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா என்பதுதான் இன்றைய கேள்வி. ஆம்;  அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை:

பழமை என்று நினைக்காமல் காலம் காலமாக தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆறுகளில் சமூக விரோதிகள் அள்ளும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அள்ளும் மணலில் 80 சதவீதம் வேறு மாநிலங்களுக்கு, சுயநலவாதிகள் விற்று விடுகின்ற வேதனையான நிலைப்பாடு தற்போது உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் தான் தமிழகத்திற்கு பயன்படுகிறது. அதுவும் கொள்ளை லாபத்தில் மணலை விற்கின்றனர்.

மழைக் காலங்களில் வரும் வெள்ளத்தை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி நீரை சேமிக்கலாம். காவிரியில் மட்டும் 60 தடுப்பு அணைகள் கட்டலாம்.

கிராமங்களில் ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டுறவோடு, ஒரு காலத்தில், தங்கள் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர் வாறியதுண்டு. அப்பாவி விவசாயி, விவசாய நிலத்திற்கு மாட்டு வண்டியில், தற்போது வண்டல் எடுக்க முடியவில்லை. அதற்கு சட்டம் தடை போடுகின்றது. ஆனால், மணல் கொள்ளையர்கள் லாரி லாரியாக அள்ள இன்றைக்கு சட்டம் வழி செய்கின்றது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதால் குளங்களும், ஏரிகளும் தூர் வாறப்பட்டு நீரின் கொள்ளளவைக் கூட்டி, தேவையற்ற தாவரங்கள் அழிக்கப்பட்டு, தண்ணீரின் அளவு நீர் நிலைகளில் அதிகமாகும். வண்டலும் விவசாயத்திற்கு பயன்படும். இதற்கு அரசின் தடைகள் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தூர் வாறப்பட்ட குளங்களும், ஏரிகளும் அதற்கு பின் இதுவரை முழுமையாக தூர் வாறப்படவில்லை. அப்படியே தூர் வாறினாலும் அதில் ஊழலால் சரியான பணிகள் நடப்பதில்லை. அதிலும், அரசு பல தடைகளை போட்டுள்ளது.

           

அய்.நா. மன்றம், எதிர்காலத்தில் உலகில் 1.8 பில்லியன் மக்கள் சுகாதாரமான தண்ணீர் இல்லாமல், வறட்சியில் தவிப்பார்கள் என்று ஒரு அறிக்கையில் சொல்லி உள்ளது. குறிப்பாக தமிழக பகுதிகளும் இதில் அடங்கியுள்ளது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பகத்தோப்பு; முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, காவிரி, ஒக்கேனக்கல், பாலாறு, பொன்னியாறு என்று கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுடன் பல நதி நீர் பிரச்சினைகள் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு, எப்பொழுது தீர்வு கிடைக்குமோ என்று தெரியவில்லை. தமிழகத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி மட்டும்தான் நமக்கு முழுமையாக பயன் அளிக்கிறது.  மழை வெள்ளத்தால் வருகின்ற தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்த கூடிய நிலையில் நம்முடைய நீர் நிலைகள் தயாராக இல்லை. இதனை நாம் சரியாக கவனிக்க தவறுவோமானால் தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தான நிலையை தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

மழை நீர் 40 சதவீதம் கடலுக்கும், 35 சதவீதம்  பூமி வெப்பத்தினால் ஈர்க்கப்படுகிறது. 10 சதவீதம் நிலத்தடி நீராகிறது. இப்படி ஒரு புள்ளி விவரம் இன்றைக்கு உள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் குறைவது மட்டுமல்லாது சுவை தன்மை மாறி, சவர் தண்ணீராகிறது.

பிரம்மபுத்திராவிலிருந்து 18,437 கன மீட்டர் தண்ணீர் வீணாகிறது. அதேபோல், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் படுகையிலிருந்து 3,640 கன மீட்டரும், மகாநதியில் 2,546 கன மீட்டரும், காவிரியில் 660 கன மீட்டர் தண்ணீர் கடலுக்கு செல்கின்றது. இந்தியாவில் கடலுக்கு செல்லும் நதி நீரில் பாதியை, நீர் நிலைகளில் சேமித்தால் எதிர்காலத்தில் விவசாயத் தொழில், மற்றைய தேவைகளுக்கு பயன்படும். நீர் மேலாண்மையும் அதன் பயன்பாட்டிலும் விவசாயம் மற்றும் குடிநீர், தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில்  ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு, முறையான நீர் மேலாண்மை உத்திகளை வகுக்க வேண்டும். இச்சிக்கலில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நமக்கு பெரும் கேடு விளையும் என்பதை உணர வேண்டும். மக்கள் தொகை பெருக்கமும், தேவைகளும் அதிகரிக்கின்ற நிலையில் இப்பிரச்சினையில் இதயசுத்தியோடு கடமைகளை ஆற்ற வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
இது அவசியம்! அவசரமும்கூட.. ..

 -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...