Sunday, October 26, 2014

ஓமந்தூரார்

ஓமந்தூரார்
--------------------------------------
பொது வாழ்விலும், அரசியலிலும் தகுதியும், தரமும் தடையாக அக்காலத்திலேயே இருந்தது என மறைந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.மாரிசாமி என்னிடம் அடிக்கடி சொல்வார். அதற்கு சாட்சியாக ஒரு சம்பத்தை சொன்னார்.

                       

நேர்மையாளர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின் பிரதமராக (அப்போது முதல்வரை பிரதமர் என அழைப்பர்) இருந்த பொழுது நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் பணி, பொது வாழ்வில் தூய்மை என்பதை பிசகாமல் பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியினர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை குறை சொல்லி அவரை அவதூறாக பேசியதாகவும், அவரை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என பலர் மெனக்கெட்டதாகவும், நிலைமைகள் மோசமாகி பிரச்சினைகள் கிளம்பி அவருக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் பண்டித நேருவிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்றனர். பெருந்தலைவர் காமராஜருக்கும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்றும் மாரிசாமி சொன்னார்.
                           
                             

எஸ்.எஸ். மாரிசாமி கூறியது: தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், பிரச்சினைகள் முற்றிவிட்டது. ஓமந்தூரார் பதவி விலக வேண்டும். ஒரிசா கவர்னராக இருக்கும் குமாரசாமி ராஜாவை சென்னை ராஜதானிக்கு பிரதமராக்கி விடலாம் என்று முடிவுகள் மேற்கொள்ளபட்டு, ஓமந்தூராரை டி.எஸ்.சொக்கலிங்கம் சந்தித்த போது, அவரிடம் ஓமாந்தூரார் ‘எனக்கு எந்த கசமுசாவும் பிடிக்காது. தப்பு செய்கிறது யாராக இருந்தாலும் விட மாட்டேன். கட்சி எனக்குப் பெரிதில்லை. ஒழுக்கமும் சத்தியமும் தர்மமும்தான் எனது குறிக்கோள். இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த பெரிய பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என படபடத்தார்.  நேர்மையாளரான ஓமாந்தூராரை பதவியில் இருக்க விடாமல், சில ஆதிக்க சக்திகளால் ஏற்பட்ட பிரச்சினையில், வில்லை முறித்து போட்டுவிட்டு, திருதிராஷ்டிரன் சபையிலிருந்து விதுரர் விலகியதுபோல அசால்டாக விலகினார். இந்த தைரியமும் நடவடிக்கையும் யாருக்கு வரும்? பதவியை விட்டு விலகியவுடன், தன்னுடைய பிரதமர் இல்லமான ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள கூவம் ஹவுசுக்கு வந்தார். அண்ணா சாலையில், தர்பார் ஓட்டலுக்கு எதிரே உள்ள டாக்சி ஸ்டாண்டில் ஒரு காரை பிடித்தார். பிரதமராக இருப்பவர் பதவி விலகினாலும், அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த ஊர் வரை பயன்படுத்தலாம். ஆனால் பதவி விலகிய அடுத்த நிமிடமே அரசு சலுகைகளை உதறி தள்ளினார். கூவம் ஹவுசிலிருந்த தனது துணிமணிகளையும், தனது புத்தகங்களையும், தனக்கு சொந்தமான பாய், தலையணைகளையும் எடுத்து கொண்டு வடலூருக்கு பயணமானார் என்று எஸ்.எஸ்.மாரிசாமி கூறினார்.

இதைப் பார்க்கும் பொழுது, இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை பற்றி அறிந்திருப்பர். ரஜினியையும், விஜய்யையும் பற்றி பேசும் இளைய சமுதாயம் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒழுக்கத்தின் அடையாளம், நேர்மையின் இலக்கணம், தியாக சுடர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு இந்த தமிழகம் வரலாற்றில் உரிய இடத்தை அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
சென்னை ராஜதானிக்கு பிரதமராக இருந்த ஓ.பி.ஆர், திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அரசு சின்னமாக்கினார். உண்மைகளை சொல்லத் தயங்கக் கூடாது, உள்ளது உள்ளபடி பதிவுகளை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பத்தியின் நோக்கம். நான் குறிப்பிட்ட இந்த செய்திகளை மறைந்த எஸ்.எஸ்.மாரிசாமியே, 29.9.1995 அன்றைய தினமணியில் ‘ரெட்டியார் ஒரு கர்மயோகி’ என்ற கட்டுரையில் இதைவிட தெளிவாக எழுதியுள்ளார். விவசாயிகளின் முதல்வர்; கண்ணியமான தலைவர்; உத்தமர் காந்தியின் சீடர்; கிராமத்து பிரஜை; நாட்டுக்கு உழைத்தவர். எஸ்.எஸ்.மாரிசாமி சொன்ன சில செய்திகளை நாகரிகம் கருதி, பலரை புண்படுத்தும் என்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை. பொது வாழ்வில் நல்லவர்களுக்கு என்றும் தடையும், தடங்கலும்தான். பொது வாழ்வு போராளிகள் இதைக் கண்டு அஞ்சுவது இல்லை.
ஓமந்தூராரின் புகழ் என்றும் ஓங்க வேண்டும்.

 - 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...