Friday, October 24, 2014

சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஆபத்தா?

சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஆபத்தா?
-----------------------------------------------------------------------------

இந்தியப் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்புக்கும் சவாலாக சீனா இருக்கின்றது. வங்கக் கடலிலும், இந்து மகா சமுத்திரத்தில் நீர் வழியாகவும் , இந்தியாவின் வடகிழக்கே துவங்கி வட மேற்கே ஆப்கானிஸ்தான், பல்ஜிஸ்தான் , பாகிஸ்தான் , குஜராத் வரை தரை மார்க்கமாகவும் வியாபார ரீதியான சீனா, சில்க்வே அமைத்து வருவதை பல சமயம் என்னுடைய கட்டுரைகளிலும், முகநூலிலும் ஆதாரத்தோடு சொல்லியுள்ளேன்.
இன்றைய (29.09.2014) ‘நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் 2ம் பக்கத்தில் “Dragon Devours Sivakasi” எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட சிவகாசியில், தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில்கள் கடந்த 80 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. அத்தொழில்களையும் சீன டிராகன் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முன்னோட்டமாக சீனாவிலிருந்து ஐந்து சிறிய வகை பட்டாசுகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு தடை செய்துள்ள சீன பட்டாசுகள் 700 வாகனங்களில் இந்தியாவினுள் வந்து இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சீன பட்டாசுகள் குறைவான விலையில் விற்கப்படுவதால், சிவகாசியில் தயாரிக்கப்படுகின்ற பட்டாசுகளின் விற்பனை குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. இது பட்டாசு தொழிலில் ஈடுபட்டு தங்களது அன்றாட வாழ்க்கையை கழிக்கும் சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கின்ற நிலையாகும்.

இயந்திரமயத்தால் தீப்பெட்டித் தொழிலும் அங்கு முடங்கிவிட்டது. அச்சுத் தொழிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. சாத்தூரில் பேனா நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகமாக இருந்தன. அவை கடந்த 1980களில் மூடப்பட்டு விட்டது. வானம் பார்த்த கரிசல் மண் பூமியான சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கைகொடுத்த இந்த சிறுதொழில்கள் மூடப்படுவதால் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை மத்திய அரசு உணருமா?

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...