Sunday, October 26, 2014

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதம்
----------------------------------
சாகித்திய அகடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம்.  பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தான்), 1919ஆம் ஆண்டு கர்தார் சிங் ஹித்காரியின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியர் பணியோடு இலக்கியம், படைப்பாற்றல்வாதியாக திகழ்ந்தார். 1948ஆம் ஆண்டு டெஹ்ராடூனிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்தார் நிறைமாத கர்ப்பிணியான அம்ரிதா ப்ரீதம். ரயிலின் வேகமும், சப்தமும் அவரை எரிமலையாய் குமுறச் செய்தது. காரணம் இதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, அவர் பாகிஸ்தானிலிருந்து டில்லிக்கு பயணம் செய்ய வைத்தது. இந்த பிரிவினைக்கு சாட்சியாக உணரப்பட்ட அவர், இதற்கு முன் அகதியாய் லாகூரிலிருந்து டில்லிக்கு உயிர் தப்பி ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

                           

டெஹ்ராடூன் - டில்லி ரயில் பயணத்தின் போது, ‘அஜ் அகான் வாரிஸ் ஷா’  என்ற வரிகளில் தொடங்கும் கவிதையை எழுதினார். அந்த பஞ்சாபி கவிதை, இந்திய பிரிவினையின் கோரத்தை கடுமையாக கூறியது. 1943ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில், ஆயிரகணக்கானோர் மாண்டதை கேள்விப்பட்ட அம்ரிதா ப்ரீதம், ‘லோக் பித்’ (மக்கள் கோபம்) என்ற படைப்பை வெளியிட்டார். அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர், 1960ல் தனது கணவரிடமிருந்து பிரிந்து, தனது திருமண வாழ்வின் கசப்பை கதைகளாக எழுதினார். புகழ்பெற்ற ஓவியரான இம்ராஸோடு இறுதிவரை இணைந்து வாழ்ந்தார்.

இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், ஜப்பானிய மொழிகளில் வந்துள்ளது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக டாக்டர் தேவ், கோரே ககாஸ், உன்சாஸ்தின், சாகர் அவுர் சீபியான், ரங் கா பட்டா, தில்லி கி காலியான், தேராவன் சூரஸ், யாத்ரி, ஜில்லாவதன் போன்றவற்றை கூறலாம். காலா குலாப், ராசிதி டிக்கெட், அக்ஷரான் கோ சாயீ ஆகியவை அவரது சுயசரிதைகளாக கருதப்படுகின்றன. கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள இவர் நாக்மணி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பஞ்சாப் ரத்தன் விருது, 1956இல் சாகித்திய அகடமி, 1969இல் பத்மஸ்ரீ, 1973இல் டில்லி மற்றும் பஞ்சாப் பல்கலை கழகங்கள் வழங்கிய இலக்கிய விருது, 1979இல் பல்கேரிய அரசின் உயர்ந்த விருது, 1982இல் ஞானபீடம், 1987இல் விஸ்வபாரதி, பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருது, பத்ம விபூஷண், 2004இல் சாகிதிய அகடமியின் பெல்லோஷிப்  என இவரின் இலக்கியத்திற்கு கிடைத்த விருதுகள் ஏராளம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1986-92 கால கட்டத்தில் இருந்தார்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கால் ‘இலக்கியத்தின் ராணி’ என்று அழைக்கப்பட்ட அம்ரிதா ப்ரீதம், தனது 86ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு காலமானார். இலக்கியத்தில் சாதித்த பெண். வாழ்க்கையில் சோகமும், மகிழ்ச்சியும் இல்லாத நிலையில், நல்ல இலக்கிய வரவுகளை நாட்டிற்கு அளித்த இந்த பெண் ஆளுமையை நாம் அனைவரும் அறிய வேண்டும். இரண்டு வரிகளில் கவிதை எழுதி விட்டாலே, சிலர் மேலுக்கும் கீழுக்கும் குதிக்கும் இந்த உலகில், பல அற்புதங்களை படைத்த அம்ரிதா ப்ரீதம் ஒரு அமைதியான நதி!

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".