Friday, October 24, 2014

நீதித்துறையை மதிப்பது நல்லது!

நீதித்துறையை மதிப்பது நல்லது!
--------------------------------------------------------------------------------
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த மூலவழக்கின் காரணமாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு வந்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். சட்டத்தின் ஆட்சி என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். இவற்றையெல்லாம் சரியான புரிதல் இல்லாமல், ஏதோ காழ்ப்புணர்ச்சியில் யாரோ சதி செய்து தண்டனை கொடுத்ததுபோல ஒரு சிலர் பேசுவதும், நடந்து கொள்வதும் அபத்தமாக உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேலாக, மேல் முறையீடு மனுவையும், சிறையிலிருந்து பிணையில் வெளிவருவதற்கான மனுவையும் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்யலாம். இதுதான் முறை. இது அவரின் உரிமை. இதை விட்டுவிட்டு வேறு யாரோ சதி செய்து விட்டார்கள் என்பதுபோல் பேசுவது அர்த்தமற்றது. சட்டங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்க வேண்டிய இவர்கள், வரம்புக்கு மீறி பேசுவது தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். லாலுபிரசாத் யாதவ், சிபிசோரன், உமாபாரதி, சௌதாலா, ரஷீத் மசூத் போன்ற அரசியல் புள்ளிகள் நீதிமன்ற ஆணைக்குக் கட்டுப்பட்டனர். தண்டனையை ஏற்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்கள் யாரும் வரம்பு மீறவில்லை.

சட்டத்திற்கு மேல் மானிட நடவடிக்கை
கள் எதுவும் இல்லை என்பது வரலாற்று காலத்திலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில், மனுநீதி சோழன் முடிவு, கிரேக்கம், ரோம ஜனநாயக மரபுகள் ஆனாலும் ஒன்றுதான். இங்கிலாந்தில், மகாசாசனம் நடப்புக்கு வந்த காலத்திலிருந்து சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டம் தன் கடமையை செய்யும். ஜனநாயக ஆட்சியில் இது பற்றியெல்லாம் சற்றும் புரிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடத்தினார்கள்.
வேலூர் நகர மன்றத்திலும் அத்தீர்ப்பை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Nungambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...