Thursday, May 21, 2015

திராவிட இயக்கம் - Dravidian Movement. தலைவர் கலைஞர் அண்ணாச்சி வை.கோ சந்திப்பு.






நேற்று தலைவர் கலைஞர் அவர்களுடைய சகோதரியும், மறைந்த அண்ணன் முரசொலி மாறனுடைய அன்னையுமான, சண்முக சுந்தரம்மாள் மறைவுக்கு நேரடியாக அண்ணாச்சி வைகோ அவர்கள் கோபாலபுரம் வந்து தனது இறுதி மரியாதையை செலுத்திவிட்டு, ஒன்பதாண்டுகளுக்குப் பின் தலைவர் கலைஞர் அவர்களை, தளபதி அவர்கள் உடனிருக்கும்போது சந்தித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

அதைப்போலவே கடந்த 17-05-2015 அன்று, மாண்புமிகு தளபதி அவர்கள் அண்ணாச்சி வைகோ அவர்களைச் சந்தித்தது திராவிடத் தோழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைக்கு திராவிட இயக்கங்கள் மேல் தேவையற்ற தவறான விமர்சனங்களைப் சிலர்  பரப்பி வருகின்றனர். இந்த கட்டத்தில் திராவிட இயக்கத்தை மேலும் வலுப்பெற ஒற்றுமையும், கூட்டு உணர்வும், உறவும் அவசியமும்  அவசரமும் ஆகும்.

திராவிட இயக்கம், சமூக நீதி கொள்கையிலும், மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழிப் பாதுகாப்புக்காகவும்
தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழியில் போராடி அவற்றை மீட்டெடுத்தது.

தலைவர்களுடைய இந்த சந்திப்பு ஒரு நல்ல துவக்கம். திராவிட இயக்கம் என்பது ஏதோ இன்றைக்குநேற்று முளைத்தது போல வரலாற்றுப் புரிதல் இல்லாமல் பேசுபவர்களுக்கு, திராவிடம் என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டது என்பதற்கு தரவுகளோடு உள்ள  எனது  கட்டுரையை அவர்கள் படித்து பார்ப்பது அவசியம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-05-2015.

.

********
திராவிடம் - Dravidian Concept. (எனது பத்தி)
________________________________

திராவிடம் என்ற பதம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்ற ஆளுமைகள் பயன்படுத்தும்  இன்றுநேற்று வந்த சொல் அல்ல.  தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். , ரபிந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தில்  “திராவிட உத்கல வங்கா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்பாடலை ஆந்திரத்தில் உள்ள மதனபள்ளியில் இறுதிசெய்து முடித்தார் என்றும் சிலர் சொல்வார்கள்.

இவர்களுக்கும் முன்பே திராவிடம் என்ற கருத்தியல் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. கார்டுவெல் பிஷப்பும், திராவிட மொழிகளின் இலக்கணத்தைப் பற்றியும் ஆய்வுகள் செய்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திராவிடம் என்ற வார்த்தை  அச்சில்  வெளிவந்தாலும், அதற்கு முன்பே  சுவடிகளிலும் திராவிடம் என்ற சொல்லாடல் இடம்பெற்றிருக்கின்றது.

’மனு ஸ்மிருதி’யிலிருந்து நாம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அதில் திராவிடம் என்ற சொல் ஒரு பகுதியைக் குறிக்கக் கையாடப்பட்டுள்ளது.

        “ தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹூ
                                                     ஆஸ்வாத்ய தவயத்”

                                                                -ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரி -10.

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் துவாரகம்’ சொல்கிறது என்றும் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றார்.


பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீர் சுவட்டில் தென்னாட்டு பிராமணர்களை திராவிட பிராமணர்கள் என்று குறிபிட்டுள்ளது. பார்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள்  ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றார் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல பாகவதம் என்ற நூலிலும்  திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது  அழைக்கப்பட்ட 56நாடுகளில் திராவிட நாடும் ஒன்று. விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன்முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் உள்ளோம்.

இராமானுஜர் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், திருக்கோளூர்  ‘பெண்பிள்ளை இரகசியத்தில்’ இராமானுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப்  பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே  அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

 “திரமிளம்”, “திராவிடம்” என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ”திரமிள சங்கம்” மதுரை சமண முனிவர் வஜ்ர நதியால் கி.பி 470ல் நிறுவப்பட்டது.  திரமிள் என்பது திராவிட என்றப் பொருளைத்தான் குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 “திரமிள” என்ற பிராகிருதச் சொல் சமஸ்கிருதத்தில்  “திரவிட” என்று குறிப்பிடப்பட்டு, தமிழில்  “திராவிடம்” என்று கையாளப்பட்டது. இப்படியாக வர்ணாசிரத்தை ஆதரிக்கும் பண்டைய சுவடிகளில் சொல்லப்பட்ட கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள  மாட்டோம் என்றாலும், திராவிடம் என்ற சொல்புழக்கத்தை நாம் பழமையிலிருந்து அறிகிறோம்.

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில், பயன்படுத்தப்பட்ட தெலுங்கு இலக்கண நூலில்,”காம்பல்” என்பவர் திராவிடத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.   பிஷப். கார்டுவெல் 1856ல் திராவிட- தென்னிந்திய
மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் திராவிடம் என்ற பதம் நிலைநாட்டப்பட்டது. அதே காலக் கட்டத்தில் அயோத்தி தாசர், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பையும் தொடங்கினார்.

பிஷப் கார்டுவெல்லுக்கு முன்பு, மனோன்மணியம் சுந்தரனார்,
 “திராவிட நல் திருநாடு” என்று குறிப்பிட்டதும், எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907ல் “திராவிடாபிமானி” என்ற தனி வார இதழை தொடங்கினதும்,  இரபிந்திர நாத் தாகூரின் தேசியகீதத்தின் மூலமாகவும்  திராவிடம் என்ற சொல் ஆதியிலிருந்து புழக்கத்தில் இருந்தது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.

தந்தைப் பெரியார், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போதும், தலைவர் கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்லும் போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழமையை  இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

மேற்குறிப்பிட்டவாறு, ஆதிசங்கரர், இராமானுஜர்,  சமஸ்கிருத, பாலி மொழிச் சுவடுகள், சமண, பௌத்த மதங்கள் நிலைத்த காலங்கள் ஆகியவற்றுக்கும் பின்னும் தாயுமானவர் (18ம் நூற்றாண்டு),    கார்டுவெல்(1856),  மனோன்மணியம் சுந்தரனார் (1891), இரபீந்திரநாத் தாகூர் (1911),
மறைமலை அடிகள், போன்றோர் “திராவிடம்” என்ற சொல்லை பயன்படுத்திய செய்திகளும் தகவல்களும் உள்ளன.

திராவிடம் என்பது 19ம் நூற்றாண்டில் புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல் என்பது இதன்மூலம் நமக்குத் தெரியவருகின்றது. இவை குறித்து மேலும் நாம் ஆய்வுகள் செய்யவேண்டும்.  பிறகு எப்படி தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், தாய்த்தமிழிலிருந்து  தோன்றியிருக்க முடியும்?.

”கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே......


-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
19/04/2015.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...