Saturday, May 30, 2015

நன்றிகெட்ட நாய்? - Thankless Dog?.



இன்று நடைபயிற்சி சென்ற பொழுது உயர்நீதிமன்ற ஓய்வு  பெற்ற நீதிபதியும், சென்னை சட்டக்கல்லூரி சகாக்களில் ஒருவருமான,  உடன் வந்த நண்பர்,  தந்தை பெரியார் மீது வைக்கும் விமர்சனங்களைப் பற்றி  கவலையுடன் பேசிக் கொண்டு வந்தார்.

“தந்தை பெரியார் இல்லையென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி என்னும் நிலையை தான் அடைந்திருக்கமுடியாது” என்றும்  நன்றிகெட்ட........  சில இப்படி பெரியாரைக் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.

நான் சொன்னேன், “எந்த நாயும் பழகி அதை பராமரித்து உபசரித்தால் அதைவிட நன்றியுள்ள உயிரினம் வேறு எதுவும் இல்லை” என்று பதில் கூறினேன்.  “இதோ பாருங்கள் எத்தனையோபேர் சின்னவயதில் என்வீட்டிலே வளர்ந்து ஆளாக்கி முழுமைபெற்றனர். பொதுவாழ்வில் நான் இறக்கம் கண்டுவிட்டேன் என்று நன்றியில்லாமல் என்னைவிட்டு ஒதுங்கி ஓடியவர்களும் உண்டு.

சிக்கலான நேரத்தில் மனிதர்களுக்கு ஏணியாக இருந்து உயர்த்துவோம். மேலே சென்றுவிட்டு நம்மையே தரையில் தள்ளிவிடும் மனிதர்களும் உண்டு. அந்த நிலையில் நாய்கள் நாம் போடு ரொட்டித் துண்டுகளுக்கு நம்மைப் பார்க்கும் போதெல்லாம் தலைவணக்கி வாலாட்டும் போது அதை எப்படி நன்றிகெட்ட நாய் என்று சொல்லமுடியும்” என்றேன்.

மனிதர்கள் பலவிதம். நன்றி என்பதை இன்றைக்குள்ள காலகட்டத்தில் சிலரிடம் எதிர்பார்க்கமுடியாது. எல்லா மானிடரும் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் தவறான கருத்துக்கும் வந்துவிடமுடியாது.  நல்ல மேன்மையான மக்களும் சமுதாயத்தில் உண்டு.

எந்தக் கடமையும் பொறுப்பையும் நன்றியை எதிர்பார்த்து நாம் செய்வதில்லை. ஆனாலும் சில நன்றியற்றவர்களின் போக்குகள் நம்மை வாட்டத்தான் செய்கின்றன.

“பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேசமடா
நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா”

வாழ்க்கைப் படகு என்ற படத்தில் வரும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது..


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2015.



No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...