இந்த புகைப்படம் 1930-40 களில் நாகர்கோவிலிலிருந்து , திருநெல்வேலிவரை செல்லும் அன்றைய பேருந்து. அன்றைக்குக் குமரி முனைக்கு இரயில் போக்குவரத்து வசதி கிடையாது. வடக்கே மதுரையிலிருந்தும், தூத்துக்குடி திருநெல்வேலியிலிருந்தும் இந்தப் பேருந்தில் பயணித்துத் தான் கன்னியாகுமரி செல்லமுடியும்.
திருவனந்தபுரம் செல்பவர்கள் கூட இந்தப் பேருந்தில் சென்று நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்து மாறிப் பயணிக்கவேண்டும்.
நாகர்கோவிலிலிருந்து வள்ளியூர் வழியாக திருநெல்வேலி வந்தடைய அன்றைக்கு நான்கிலிருந்து ஐந்து மணிநேரம் பயணிக்க வேண்டும். இன்றைக்கு சாலைவசதிகளின் காரணமாக, ஒருமணி நேரத்தில் நாகர்கோவிலுக்குச் சென்று விட முடியும்.
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலைதான் முதன்முதலாக சிமெண்ட் மற்றும் ஜல்லி காங்க்ரீட் சாலையாக, திருவனந்தபுர சமஸ்தான திவான் சி.பி. இராமசாமி ஐயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
அந்த சாலை அமைக்கப்பட்டதை அதிசயமான செய்தியாக அன்றைய
நாளேடுகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த வழிப்பாதை குண்டும் குழியுமாக பயணிக்கவே முடியவில்லை என்பது குமரி மாவட்ட மக்களின் வேதனை.
மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கோ, திருவனந்தபுரத்திற்கோ செல்லவேண்டி வரும்போது இந்த சாலை சீர்கெட்டிருப்பதால் பயணிக்கும் நேரமும் அதிகமாகிறது.
திரும்பவும் புகைப்படம்பற்றிய விஷயத்திற்கு வருகிறேன். காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக போட்டியிடும்போது, இந்தப் படத்தை நாகர்கோவில் நண்பர்.கோ.முத்துக்கருப்பன் (கவியரசு கண்ணதாசனுக்கு மிக நெருங்கியவர்) வீட்டில் பார்த்த நினைவு.
குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டுமென்று பல தியாகங்களைச் செய்த மறைந்த திரு.பி.எஸ்.மணி அவர்களிடம் இதுபோல குமரிமாவட்டம் சம்பந்தமான பழைய படங்களை அதிகம் பார்த்ததுண்டு.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-05-2015.
No comments:
Post a Comment