Saturday, May 23, 2015

அன்பார்ந்த கோவில்பட்டி அன்பர்களுக்கு - KOVILPATTI

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்துவரும் கோவில்பட்டி நகருக்கு  மூன்று முக்கியப் பணிகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால யோசனை.
 அவை...





1. பேரறிஞர். அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை  1949 ல் செப்டம்பர் 18ம் நாள் மாலை நான்கு மணிக்கு, கொட்டும் மழையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் துவங்கினார். அதன்பின்னர் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைவர்.கலைஞர் அவர்கள் அறுபத்துஐந்து  ஆண்டுகள் முன்னால்  கோவில்பட்டியில் துவங்கி வைத்தார்.  அடுத்த ஆண்டு 1950 ஆகஸ்டு 26,27 ஆகிய இரண்டு நாட்கள். திருநெல்வேலி மாவட்ட திமுக முதல் மாநாட்டை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.  அந்த இருநாட்களும் முறையே சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் கூட்டம் திரண்டிருந்தது.

இம்மாநாட்டில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் “சந்திரமோகன்” நாடகத்திலும் நடித்தார். நாவலர் இரா.நெடுஞ்செழியன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இனமானப் பேராசிரியர், ஈ.வி.கே.சம்பத், மதியழகன், என்.வி.நடநாசன், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.இராமசாமி, தத்துவமேதை சி.கே.சீனிவாசன் (மாநாட்டுத் திறப்பாளர்), இராம.அரங்கண்ணல், இளம்பரிதி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கோவில்பட்டி மாநாடு வெற்றிபெற டபிள்யூ.டி.துரைசாமி
ஏர்வாடி அலிஷேக் மன்சூர் ( மும்பை மாநில செயலாளர்
அலிஷேக் மீரான் அவரகளின்தந்தையார் ) (மாநாட்டுச் செயலாளர்) பாலகிருஷ்ணன், ஈ.வே.அ.வள்ளிமுத்து (வரவேற்புக்குழுத் தலைவர்- அன்றைய நகர்மன்றத் தலைவர்), எஸ்.நடராஜன், கலிங்கன் (துணைச் செயலாளர்கள்) கலைமணி காசி, ஆ.திராவிடமணி, (விளம்பரக்குழு உறுப்பினர்) எச்.பி.துரைசாமி (பொருளாளர்) ஆகியோர் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகளும் சேர்ந்து பெரும்பணி ஆற்றினர்.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில், மாவீரன் கே.வி.கே.சாமி, சி.பா.ஆதித்தனார், நீதிபதி. இரத்தினவேல் பாண்டியன், வை.கோ எம்.எஸ்.சிவசாமி, தினகரன் நிறுவனர் கே.பி.கே., தங்கபழம், நீதிமாணிக்கம், அழகிய நம்பி, நெல்லை மஸ்தான், தூத்துக்குடி இரா.கிருஷ்ணன், ஏ.எல்.சுப்பிரமணியம், கடையநல்லூர் ஆ.திராவிடமணி, கா.மு.கதிரவன், சங்கரன்கோவில் சி.ஆர்.சுப்பிரமணியம், தம்பிதுரை, தூத்துக்குடி அய்யாச்சாமி,லக்குமணன், புளியங்குடி பழனிசாமி, வெள்ளைத்துரை பாண்டியன், கேப்டன் என்.நடராஜன், நெல்லை மஜீத், களந்தை ஜின்னா, பக்கீரப்பா, டாக்டர் பத்மநாபன், தென்காசி திரவியம், என்.நடராஜன், ரத்தினம், ஏர்வாடி அப்துல்காதர், அ.பு.இளங்கோவன், தூத்துக்குடி ஜோசப், கோவில்பட்டி பெரியசாமி, புதுப்பட்டி செல்வம், இ.நம்பி, சிவகிரி சுபகணேசன், சிங்கை கந்தசாமி, கீழப்பாவூர் இராமநாதன், கோவில்பட்டி தமிழரசன், நாசரேத் ஜெயபால், சாமித்துரை, திருச்செந்தூர் நல்லகண்ணு, தென்திருப்பேரை பன்னீர்செல்வம், களந்தை லாரன்ஸ், கடையநல்லூர் எஸ்.எஸ்.சாகுல் அமீது, புளியங்குடி சேதுராஜ், டாக்டர் உசேன், தாழையூத்து புல்லையா, திசையன்விளை திருவிடைமுத்து, சிலாத்திகுளம் நம்பி, திருக்குறுங்குடி துரை போன்ற கழகத்தைக் காத்த எண்ணற்ற பலரின் கழகப் பணிகள் வரலாற்றில் இன்றைக்கும் உள்ளது.

அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள்  கோவில்பட்டியில் தி.மு.க-வை துவக்கி வைத்ததையும்,  திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தி.மு.க மாநாடு கோவில்பட்டியிலே நடைபெற்றதையும்  நினைவுபடுத்தும் வகையில் அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நிலையில் கல்வெட்டு அமைக்கவும் இருக்கின்றோம்.

எட்டையபுரம் பாரதி இல்லத்தை நினைவு இல்லமாக தலைவர் கலைஞர் அறிவித்த  கல்வெட்டை அரசு அப்புறப்படுத்தியது. அடியேன் முயற்சியில்  2009ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் பாரதி பிறந்தநாள் அன்று எட்டையபுரத்தில் பாரதி இல்லத்தில் திரும்பவும் அக்கல்வெட்டை வைத்தது முக்கிய நிகழ்வாக இன்றைக்கும் கருதுகிறேன். இதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் போராடியது ஒரு பெரும் கதை.

2. கோவில்பட்டி விவசாயிகள் போராட்டத்தில்  கேந்திர நகரமாக மட்டுமில்லாமல், உயிரோட்டமான தளமாகவும் அமைத்தது. விவசாயிகள் போராட்ட காலக்கட்டத்தில் துப்பாக்கிச்சூடுகளால் கோவில்பட்டி மயான பூமியாகக் காட்சியளித்தது. கலைமணி காசி அவர்களின் உணவுவிடுதி அருகே பெரும் கலவரமும் வெடித்தது. இப்படியான முதல்கட்டப் போராட்டத்தினால்  நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கம் வீறுகொண்டு எழுந்தது.

 1971 முதல் 1991வரை விவசாயிகள் பலர் இந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். அந்த போராட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தலைவர்.கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. விவசாயப் போராட்டங்களின் தலைவராக இருந்த சி. நாராயணசாமி நாயுடு 1984ல் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் காலமானார். அவரது பேட்டியை நண்பர் கல்கி பிரியன் அவர்கள் கல்கியில் வெளியிட்டார். அதுதான் அவரது கடைசிகால பேட்டியாகும்.
ச்விவசாயிகள் சங்கத் தலைவர். சி.நாராயணசாமி நாயுடு நினைவாக கோவில்பட்டியில் திருவுருவச் சிலையை லட்சுமி ஆலை அருகில் நிறுவவேண்டும். அதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

3. கோவில்பட்டி மெயின்ரோடு இளையரசனேந்தல் சந்திப்பில்,  திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ் எதிர்புறம் அருமை நண்பர், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.  ச.தங்கவேலு., அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயரமான ஹைமாஸ் விளக்கு  அமைக்க உள்ளோம்.

தேர்தல் அரசியலில் என்னை இவ்வட்டார மக்கள் அங்கீகரித்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இந்த மூன்று பணிகளையும் எந்த அரசியல் லாபநோக்கமும் இல்லாமல், தேர்தலை மனதில் கொள்ளாமலும் இந்நகருக்குச் செய்கின்ற முக்கிய கடமையும் பொறுப்புமாக கருதுகின்றேன். நீண்டகாலமாக இது திட்டமிட்ட பணியாகும்.

கோவில்பட்டியைக் குறித்து, 2004ல் நான் எழுதி வெளியிட்ட நூலான,  “நிமிரவைக்கும் நெல்லை”-யில் விரிவான பதிவுகளைச் செய்துள்ளேன்.
மேலும், திராவிட இயக்கம், காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சிகள், சுதந்திரா கட்சி என அனைத்து கட்சிகளும் 1950-60-70 காலக்கட்டங்களில் நடத்திய நிகழ்ச்சிகள், கோவில்பட்டியின் தொன்மை, இலக்கியத் தொடர்புகள், மற்றைய சிறப்புகளைக் குறித்து ஒரு ஆய்வுத் தொடர் இத்தளத்தில் எழுத இருக்கின்றேன்.






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-05-2015.


















No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...