இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த சுயாதீன அறிக்கை, ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
26 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த சிவில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் முதற் தடவையாக அந்த நாட்டின் மனித உரிமை நிலைப்பாடுகள் குறித்து இந்த சுயாதீன அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் எனவும், இராணுவப் பிரசன்னதுக்கு அவர்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதோடு பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் புறந்தள்ளலுக்கும் உள்ளாகிறார்கள் என்றும், இது இன்னொரு வகை மௌன யுத்தம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை.
அரச இராணுவத்தினராலும் பிரிவினை கோரிய தீவிரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் எடுத்த முயற்சிகளுக்கு இலங்கை அரசு இடம் தரவில்லை எனவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.
இந்த அறிக்கை தொடர்பாக மனித உரிமைகள் மற்றும் காணி விவகாரங்களில் சர்வதேச நிபுணத்துவம் பெற்ற அனுருத்த மித்தாலினாலும், ஓக்லாண்ட் மையத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளரினாலும் 2014 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பல களப் பணிகளையும் நூற்றுக்கணக்கான நேர்காணல்களையும் உள்ளடக்கியதாய் அமைந்தது.
இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் முகாம்களில் வசிக்கிறார்கள்
இதுவே போர் முடிவுக்குப் பின்னரான முதலாவது தேடலாக அமைந்தது. அறிவு சார்ந்ததாக அமைந்த இந்த விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்து புதிய அரசாங்கத்தை பாராட்டி ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கும் பின்னணியில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போரின் நீண்ட நிழல் என்ற தலைப்போடும் இலங்கைப் போரின் பின்னரான நீதிக்கான பாடுகள் என்ற உபதலைப்போடும் வெளியாகி இருக்கும் இவ்வறிக்கையில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனபோதிலும் தமிழரின் பாரம்பரியப்பிரதேசத்தில் 160,000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்லனர். அங்கு வாழும் தமிழரின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டுபார்த்தால் ஆறு தமிழருக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற வகையில் இது அமைந்திருக்கிறது என ஓக்லாந்து நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இராணுவத்தினர் பெருமெடுப்பிலான கட்டுமானப் பணிகளிலும், உல்லாச விடுதிகள் அமைப்பது உள்ளிட்ட வியாபரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். நிலமிழந்த மக்கள் இடப்பெயர்வு வாழ்வில் தவிக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த முறையான பதில்கள் கிடைக்கவில்லை. காணாமல் போனவர்கள் குறித்த முறையான பதில்கள் கிடைக்கவில்லை.
ஒருசில பௌத்தர்களே இருக்கக் கூடிய தமிழர் வாழ்விடங்களில் போர் வெற்றிச் சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் அரச அனுசரணையோடு அமைப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாசரம், வரலாறு அகியன திட்டமிட்ட வகையில் நசுக்கப்படுகிறது, இதுவும் மௌனப் போரின் ஒரு அறிகுறியே என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதியான அரசாங்க மாற்றத்தின் பின்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன இப்பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அரசியல் ஆளுமை கொண்டவரா என்ற கேள்வியையும் ஓக்லாண்ட் இன்ஸ்ட்டியூட் எழுப்பியுள்ளது.
பல தீவிர மனித உரிமை மீறல்களை இறுதிப் போரில் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் 54 ஆம் படையணியை வழி நடத்திய ஜகத் டயசுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளில் ஒன்றான மேஜர் ஜெனரல் பதவியை புதிய அரசாங்கம் வழங்கி இருப்பதானது, புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகளை பொறுப்போடும் ஜனநாயக வழியிலும் நடத்துமா என்கிற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாக இந்த அறிக்கையை தயாரித்துள்ள அனுராதா மிட்டல் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் இருப்பதாகவும், இலங்கை அதன் வட கிழக்குப்பகுதிகளின் பலவந்த குடியேற்றங்களை நிறுத்தவும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டவற்றை மீள பெறுதலும், குற்றங்களுக்கு பொறுப்புக் கூறத் தலைப்படுதலும் ஆகிய நடவடிக்கைகள் நடக்கும் வரை தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நியாயப் படி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும் என்று இந்த அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.
அரசியல் நாடகங்களை நிறுத்தி சர்வதேச சமூகம் இலங்கை சிறுபான்மையினருக்கு மனித மற்றும் நில உரிமைகளை பெற்றுக் கொடுப்ப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
- Courtesy : BBC Tamil .
No comments:
Post a Comment