Monday, April 22, 2024

மதுரை வரும் அழகரை தூங்காநகர் வரவேற்கிறது.

மதுரை வரும் அழகரை தூங்காநகர்  வரவேற்கிறது. 









ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண் அம்மையும் அவர்களோடு செவ்வேளும்...






ஊரெல்லாம் மீனாட்சி! அன்பின் அரசாட்சி!மதுரை…








***

அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள காட்சிகள் அதிகம்…!!!







மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள…



தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். 

அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி  பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.

வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 
 
இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும் கல்யாணந்தேன். ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவய்ங்களுக்கு சுருக்குனு இருக்கும். இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

ராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” *கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு லட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க….. ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன லட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா தோப்பறையில தண்ணிய நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்… 

விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், லட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து “ *கோவிந்தாஆஆஆஆ*…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு… 

எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி, பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு. 

திருப்பதி ஏழுமலையானும், திருவனந்தபுரம் பத்மநாபசாமியும் என்னதான் கட்டி கட்டியாக தங்கமும், கட்டுக்கட்டாக பணமும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவரும் திருமாலிருஞ்சாேலை அழகரை நெருங்கக் கூட முடியாது.

 " ஏனெனில் அழகுமலையான் மக்களைத் தேடி வரும் தெய்வம், எளியவர்களின் தெய்வம் "

" திருவிழாக்களின் தலைநகரம் மதுரை "  



கோவிந்தா….!!! கோவிந்தா!!!


(1915 pic of the Temple street in Madurai)

#மதுரைசித்திரைதிருவிழா
#MaduraiMeenakshi

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...