Monday, May 5, 2025

#முதுகுளத்தூர்_கலவரம்_பகுதி_2:

 https://www.facebook.com/share/p/19iLZ4HSYD/ #பகுதி_1

இந்தியா முழுமைக்கும் எதிர்க்கட்சியே இல்லாத ஒரு நிலையை நேரு உருவாக்க விரும்பினார். அதன் ஒரு செயல்பாடாக 1955 ஏப்ரலில் காங்கிரஸ் கட்சியுடன் பார்வர்டு பிளாக்கை இணைக்கும் முயற்சியை நேரு மேற்கொண்ட பொழுது அதனை முழுமையாக எதிர்த்து தேவர் வெற்றிகண்டார். இந்த நிகழ்வு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிகாரர்களை தேவரை எதிரியாக பார்க்க வைத்தது. 1957ம் ஆண்டுப் பொதுத்தேர்தல் பல்வேறு புதிய பரிணாமங்களுடன், பரிமாணங்களுடனும் நடைபெற்றது. மாநில எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதும், காமராசர் முதலமைச்சராக இருந்து கொண்டு இந்தத் தேர்தலைச் சந்தித்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். எனவே ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனங்களை எதிர்க்கட்சிகள் சந்திக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்தது.
1956 ஏப்ரல் 3ம் நாள் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்து தேதாஜியைப் பற்றி தேவர் வெளியிட்ட கருத்துக்கள் நேருவிற்கு நெருக்கடியைக் கொடுத்தது. தேவரின் முயற்சியால் 1957 ஜனவரி 17ல் எச்.டி.ராஜாவின் தலைமையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை உருவாக்கினார். இது தமிழ்நாட்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது. எனவே தேவர் தேசிய அளவிலும், தமிழக மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் எதிர்ப்பு சக்தியாகத் தோன்றினார். 1957ம் ஆண்டுத் தேர்தலைப் பயன்படுத்தி தேவரின் அரசியல் செல்வாக்கை அழிப்பதில் காங்கிரஸ் கட்சி மிகுந்த அக்கறை காட்டியது.
தேவர் எல்லா பொதுத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தொகுதியிலும் நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு சேர வெற்றியடைவார். அதைத் தடுக்கும் முயற்சியாக அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டு அதனுடைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. இதில் நாடார் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டன, தேவரே சொல்லியது போல தொகுதியைத்தான் இவர்களால் மாற்ற முடிந்ததே தவிர மனிதமனங்கள் தேவரின் மீது வைத்திருந்த அபிமானத்தை, இவர்களால் மாற்றமுடியவில்லை. 1957ம் ஆண்டு தேர்தலிலும் இரண்டு தொகுதியில் தேவர் அமோக வெற்றி பெற்றதும், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை எதிர்கட்சியாக்கியதும் காங்கிரஸ் கட்சிக்குத் தேவரின் மீது பழிவாங்கும் எண்ணத்தை மேலும் அதிகப்படுத்தியது.
1957ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலும், கலவரமும்
இரண்டு தொகுதிகளிலும் உறுப்பினராகத் தொடர முடியாது என்ற அரசியல் சட்ட நியதியின் அடிப்படையில் தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
தேவர் இராஜினாமா செய்த முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்தே முதுகுளத்தூர் பகுதி அக்கினிப்பிழம்பாக விளங்கத் தொடங்கியது. முதுகுளத்தூர் ஒன்றியம், கமுதி ஒன்றியம், அருப்புக்கோட்டை ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேதி 01.07.1957 என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
1937லிருந்து முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் தேவருடைய வெற்றி முகத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. அதனால் 1957ம் ஆண்டு இடைத்தேர்தலில் தேவரின் வேட்பாளரான சசிவர்ணத் தேவரை தோல்வியடையச் செய்வதன் மூலம் தேவரின் வெற்றித் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தனர்.
1957ம் ஆண்டு இடைத்தேர்தலின்போது பெரும்பாலான மறவர்கள் பார்வர்டு பிளாக்கைச் சேர்ந்தவர்களாகவும் நாடார்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அதனால் வெற்றியை தீர்மானிக்ககூடிய வாக்குகளாக அரிசனங்களின் வாக்குகள் இருந்தன. தேவரையும், பார்வர்டு பிளாக் கட்சியையும் அரிசனங்களின் எதிரியாக ஆக்குவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வெற்றியடையச் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். இதற்கான பிரச்சாரங்களில், செயல்களில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது. நாடார்களின் வாக்குகளைச் சேகரிக் சாதிய அடிப்படையிலான அணுகுமுறைகளைக் கையாண்டது.
1952 மற்றும் 1957ம் ஆண்டுகளில் நடந்த பொது தேர்தல்களில் இரட்டைத் தொகுதியாக விளங்கிய முதுகுளத்தூர் சட்டமன்றத் தனித்தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக
போட்டியிட்ட அரிசன வேட்பாளர்களே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் அரிசன மக்களின் வாக்குகளை எளிதாக தேவருக்கு எதிராக திருப்பிவிட முடியாத சூழலில் ஜாதி துவேஷங்களை ஆயுதங்களாகக் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. காங்கிரஸ் கட்சியின் ஊழியராக இமானுவேல் சேகரன் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரிசன வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திரட்டி வந்தார். 1957ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்ற தனித் தொகுதி உறுப்பினராக பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோப்படைப்பட்டி ஏ.பெருமாள், பார்வர்டு பிளாக் கட்சிக்கு அரிசன வாக்குகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். வேளாண்மை செய்து உழைத்துப் பிழைக்கும் நல்ல அரிசனங்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்று சீர்திருத்த காங்கிரஸ் மாநாட்டில் தேவர் பேசும் போது சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்று நூறு சதவித அரசியல் பின்னணி கொண்ட இப் பிரச்சனை இடைத்தேர்தலுக்குப் பின் சாதியக் கலவரமாக திரித்துவிடப்பட்டது. ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது கிறித்துவ அரிசனங்கள் இமானுவேலுக்கு ஆதரவாகவும், இந்து அரிசனங்கள் தோப்புடைப்பட்டி ஏ.பெருமாள் பின்னும் திரண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
இந்தத் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் இப்பகுதி மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்கின்றார்கள். குறிப்பாக காமராசர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பக்தவச்சலம் மிகவும் தரக்குறைவாக தேவரை விமர்சனம் செய்துள்ளார். கண்ணதாசன் சொன்னது போல அப்பழுக்கற்ற பிரமச்சரியத்திற்கு சொந்தக்காரரான தேவரை பிரம்மச்சரியத்திற்கான காரணத்தை பக்தவச்சலம் பேசும் பொழுது மிகவும் கொச்சைபடுத்தி பேசினார்.
இந்தப் பொதுகூட்டத்திற்குப் பின் நியாய உணர்வுள்ள
அத்தனை பிரிவு மக்களும் சாதிய வேறுபாடின்றி காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்புக் கொள்ள ஆரம்பித்தனர்.
தேர்தல் களத்திலும் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி முக்குலத்தோர் பிரிவிலேயே பிளவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. முக்குலத்தோரில் ஒரு பிரிவான அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் வாக்காளர்களை குழப்பும் முயற்சியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு பொதுவாக ஒதுக்கப்படும் சிங்கம் சின்னம் சுயேட்சையாக நிறுத்தப்பட்ட நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. இப்படி சாதிய அடிப்படையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி தேவரை சாதியவாதியாகக் காட்ட முயற்சி செய்தது.
சாதிய வெறுப்புணர்வுகளை அடிப்படையாக வைத்து இந்த இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் தேவர் பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிகமான வாக்குக்களைப் பெற்று தேவர் நிறுத்திய வேட்பாளர் சசிவர்ணத்தேவரை வெற்றியடையச் செய்தார்.
இப்படி முழுமையான அரசியல் சதுரங்க விளையாட்டில் முதுகுளத்தூர் பகுதியில் சமூகப் பதட்டம் உருவாகியது. அது சாதிய மோதலாக உருவானது, மறவர்களுக்கும் நாடார்களுக்குமிடையே ஆலய நுழைவுப் போராட்டம் தொடர்பாக பிரச்சனைகள் இக்கலவரத்திற்கு முன்பே இருந்து வந்துள்ளது. ஆனால் விடுதலைப் போராட்ட காலங்களில், விடுதலைப் போராட்டத்தில் இந்த இரு பிரிவினரும் இணைந்தே நின்றுள்ளனர். தொடக்க காலங்களில் தேவரும் காமராசரும் இணைந்தே நின்றுள்ளனர். பின்பு தேவர் பார்வர்டு பிளாக் கட்சியிலும், காமராஜர் காங்கிரஸ் கட்சியிலுமாக பிரிந்தனர். தேவரும் அவரைச் சார்ந்தவர்களும் அதிகாரவர்க்க எதிர்ப்பு அணியில் இருந்தனர். ஆனால் நாடார்களில் ஒரு பிரிவினர் வெள்ளை ஏகாதிபத்தியம் ஆட்சியில் இருந்த போது கிறித்துவ சமய ஏற்பாளர்களாகவும், டி.எம்.சௌந்தர பாண்டியன் நாடார் செல்வாக்குப் பெற்ற நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது நீதிக்கட்சியையும், காமராசர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் காங்கிரசாரையும் ஆதரித்தனர். எனவே அதிகாரவர்க்கத்தின் எதிர்ப்பாளர்களாக மறவர்கள், அதிகாரவர்க்கத்தின் தொடர்ந்த ஆதரவாளர்களாக நாடார்கள் என்ற நிலையில் இருவரும் முரண்பட்டே இருந்தனர்.
தமிழகத்தின் முதல்வராக காமராசர் பொறுப்பேற்ற பின் உழவர்களின் பிரச்சனைகளுக்காகத் தேவர் போராடிய பொழுது, அது வியாபாரிகளுக்கு எதிரான போராக மாறியது. வியாபாரிகள் ஆளும் வர்க்கமாகவும், உழவர்கள் ஆளப்படும் வர்க்கமாகவும் மாறி வர்க்கப் போராட்டம், சாதியப் போராட்டமாக மாறியது. இதனால் பெரும்பாலும் வேளாண்மையையே நம்பியிருந்த மக்களை சுரண்டும் வியாபாரிகளாக நாடார்கள் மாறிவிட்டதாக உழவர்கள் நம்பினார்கள். உழவர்களுக்காக தேவர் போராடிய பொழுது அது நாடார்களுக்கு எதிரான போராட்டமாக விமர்சிக்கப்பட்டது. பாரம்பரியமாக வேளாண்மை செய்துவந்த விவசாயிகளின் வாழ்வில் பெரிய பொருளாதார மாற்றங்கள் உருவாகாதபோது வியாபாரிகள், செல்வம் கொழிக்கும் வர்க்கமாக மாறினர். இதனால் இந்த இருபிரிவினரிடமும் மோதல்கள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறியது.
தொடர்வோம்..........

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்