Saturday, August 30, 2025

12 august

இன்று (12-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது
பேட்டி-2
—————————————————————————-
கேள்வி: நெடுமாறனுக்கு மிக நெருக்கமாக இருந்த நீங்கள் அவரை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்தது எப்படி?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன: 1986ல் டெஸோ மாநாடு மதுரையில் நடந்து முடிந்த பின் கி.வீரமணி எம்ஜியாரோடு நெருக்கமாகி விட்டார். அதனால் அவர் கருணாநிதியுடன் சுமூக உறவில் இல்லை. அந்நிலையில் மு.க.முத்துவின் புதல்வருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அழைப்பிதழ் எல்லாம் வழங்கப்பட்டு விட்டன. சரியாக அதே தினத்தில் டெஸோவின் போராட்டத்தை நடத்த கி.வீரமணி தேதி குறித்தார். நானும் வைகோவும் வீரமணியை சந்தித்து 'அன்று கலைஞர் வீட்டில் திருமணம் இருக்கிறது. அன்றைய தினம் போராட்டத்தை வைப்பது சரியல்ல' என்று கூறினோம். பிற்பாடு நான் நெடுமாறனையும் சந்தித்து அதே கோரிக்கையை வைத்தேன். ஆனாலும் தேதியை மாற்ற வீரமணி முன்வரவில்லை. எம் ஜி ஆரை சந்திக்க வீரமணி நெடுமாறனை அழைத்து சென்று விட்டார். டெசோ அதோடு முடிந்த காரணத்தினால் நான் நெடுமாறனை விட்டு கலைஞரின் வேண்டுகோளுக்கினங்க தி.மு.க.வில் இணைந்தேன்.
கேள்வி: நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் நீங்கள் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஆக முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: 1987 இறுதியில் தி.மு.க.வில் இணைந்ததும், எனக்கு 1989-ல் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. என்னை எதிர்த்து நின்ற சிபிஐ வேட்பாளர் அழகிரிசாமி எளிமையானவர். சைக்கிளில்தான் செல்வார். 30 வருட சட்டமன்ற அனுபவமிக்கவர். எனக்கு குரு மாதிரி. அவரிடம் நான் தோற்றுப் போனேன். என்னுடைய தொகுதியில், மற்ற தொகுதிகள் போல பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை. நானும் அழகிரிசாமியும் மட்டும் களத்தில் இருந்தோம். அந்த தேர்தலில் மட்டும் நான் வெற்றி பெற்றிருந்தால் 89-ல் அமைந்த தி.மு.க. அமைச்சரவையில் நானும் ஒரு அமைச்சராக இருந்திருப்பேன். என் அரசியல் வாழ்வே வேறு மாதிரி போயிருக்கும். இன்று நான் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருப்பேன். இதைத்தான் ஊழ் என்கிறார்கள்.
கேள்வி: தி.மு.க.வை. விட்டு வைகோவுடன் போனதற்கு என்ன காரணம்? பிறகு அவரை விட்டு விலகி மீண்டும் தி.மு.க.விற்கே வந்து விட என்ன காரணம்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: ஈழ அரசியலில் வைகோவிற்கு பிரபாகரனை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர் நாடாளுமன்றம் செல்வதற்கு நெடுமாறன் போன்றோருடைய வாக்குகளையும் வாங்கி தந்தேன். எங்கள் பக்கத்து ஊர்காரர். அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அவருடன் சென்று விட்டேன். 1996 தேர்தலில் 180 இடங்களில் ம.தி.மு.க. போட்டியிட்டது. வைகோ சிவகாசி மக்களவைத் தொகுதியிலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்தபோது ஐந்து இடங்களில் மட்டும்தான் டெபாஸிட் பெற்றது மதிமுக. வைகோ சுமார் 29 ஆயிரம் வாக்குகள் பெற்றார். நான் 31 ஆயிரத்திற்கு மேல் அந்த கட்சியில் அதிகமான வாக்குகளை கோவிபட்டியில் பெற்றேன். ஆனால் அதன் பின்பும் வைகோ எனக்கு உரிய அங்கீகாரத்தை தரவில்லை. 1998-ல் மக்களவைத் தேர்தல் வந்தது. அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க. என்று அந்த தேர்தலில் பலமான கூட்டணி அமைந்தது. ம.தி.மு.க.விற்கு எட்டு ஸீட்டுகள் கேட்டு 5தான் கிடைத்தது. வடசென்னை எனக்கு என்று முடிவு செய்யப்பட்டது. வடசென்னையை ஜெயக்குமாருக்கு வழங்குவதற்கு ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ஆனால் அங்கு ம.தி.மு.க. சார்பில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்றதும், அவர் அந்த ஸீட்டை மாற்றி ம.தி.மு.க.விற்கு கொடுக்க முன் வந்தார். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நல்ல பழக்கமுண்டு. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது எம்.ஜி.ஆர். என்னை ஃபோனில் அழைத்து 'விடுதலைப்புலி பிரபாகரனை அம்மு சந்திக்க விரும்புகிறார். நீங்கள் அவரது இல்லத்துக்கு பிரபாகரனை அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். பிரபாகரனுக்கும் எனக்கும் அவரே அசைவ உணவு பரிமாறினார். அவருடன் நன்கு அறிமுகம் இருந்ததால் வடசென்னை தொகுதியை எனக்காக விட்டுக் கொடுத்தார். ஒப்பந்தத்தை முடித்து விட்டு தாயகத்திற்கு வந்து விட்டோம். திடீரென்று வைகோ எல்லாரையும் வைத்துக் கொண்டு வடசென்னையை ராதாவுக்கு தர முடியாது' என்றார். உடனே கண்ணப்பன், செஞ்சி இராமசந்திரன், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் பதறி, 'ஏன்? அவரை எப்படி விட முடியும்? அவர் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்?' என்று கேட்டார்கள். உடனே வைகோ 'அவரும் நாயுடு; நானும் நாயுடு. எனவே நாங்களே இரண்டு ஸீட்டுகளை எடுத்துக் கொண்டால் விமர்சனங்கள் வரக்கூடும்' என்றார். உடனே கண்ணப்பன் 'அவரை ஏன் நாயுடுவாக பார்க்கிறீர்கள்? அவர் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்? எவ்வளவு காலம் உங்களை நம்பி பயணித்திருக்கிறார்?' என்று எனக்காக வாதிட்டார். உடனே வைகோ 'அப்படியானால் அவர் மட்டும் போட்டியிடட்டும். நான் விலகிக் கொள்கிறேன்' என்றார். ஒரு தலைவரே 'நான் விலகிக் கொள்கிறேன்' என்று சொல்லும்போது வேறு வழியில்லாமல் நானும், மற்றவர்களும் அமைதி காக்க வேண்டியதாகிற்று.
இறுதியில் வைகோ நான்கு வேட்பாளர்களை மட்டும் அறிவித்தார். இரண்டு நாயுடு வேட்பாளர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று கூறிய அவரது பட்டியலில் செஞ்சி ராமச்சந்திரன், சபாபதி மோகன் என்று இரண்டு வன்னியர்கள் மற்றும் கண்ணப்பன், கணேசமூர்த்தி என்று இரண்டு கவுண்டர் வேட்பாளர்களை அறிவித்தார். எவ்வளவு முரண்படுகிறார் வைகோ? அப்போது மட்டும் கட்சி தொண்டர்களோ, பொதுமக்களோ அவரை தப்பாக நினைக்க மாட்டார்களா? இரண்டு நாயுடுகள் என்றால் மட்டும்தான் தப்பாக நினைப்பார்களா? என்ன ஒரு ஏமாற்று வேலை! வைகோவிற்காக 1993லிருந்து 2001 வரை என் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு, ஐ.நா. சபையில் கிடைத்த பெரிய பொறுப்பையும் புறக்கணித்துவிட்டு, மாதாமாதம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் எனக்கு செலவும் என் இளமை காலத்தையும் வீணடித்தது தான் மிச்சம்.
1999-ல் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியை கலைத்ததும் இங்கு பா.ஜ.க.- தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது. எந்த தி.மு.க.வை எதிர்த்து வெளியேறி வைகோ புதுக்கட்சி கண்டாரோ, அதே தி.மு.க. கூட்டணியில் மீண்டும் இடம்பெற்றார். அந்த முறையும் எனக்கு ஸீட் வழங்கவில்லை. 2001-ஆம் ஆண்டு வரை அந்தக் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. 2001-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு 21 ஸீட்டுகள் என்று முடிவாகி, அதற்கான ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திட்டார். எனக்கும் கோவில்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ வைகோ டெல்லியில் யாரை சந்தித்தாரோ தெரியாது. திடீரென்று 'தி.மு.க.வுடன் கூட்டணியில்லை' என்று அறிவித்துவிட்டார். என்னை பரிகாசமாகப் பேசியதால் மீண்டும் தி.மு.க.விற்கே செல்ல நேர்ந்தது.
கேள்வி: தமிழகத்தில் வைகோவின் அரசியல் எடுபடாமல் போனதற்கு என்ன காரணம்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: 2001-ல் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டு ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு, பிறகு பல்டி அடித்த பின் 2002ல் இருந்து 2006 வரை மீண்டும் தி.மு.க.வுடன் இணக்கமாக இருந்தார் வைகோ. 2006ல் தி.மு.க. மாநாடு திருச்சியில் நடைபெற இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞரை சந்திக்கிறார் வைகோ. 'அண்ணே நீங்க முன்னால போங்க. நான் பின்னாடியே மாநாட்டிற்கு வந்து விடுகிறேன்' என்று சொல்கிறார். மாநாட்டில் வைகோவிற்கும் கட்அவுட் வைக்கப்படுகிறது. ஆனால் மாநாட்டிற்கு செல்லாமல் அன்று காலையிலேயே ஜெயலலிதா வீட்டிற்கு சென்று விட்டார். இன்றைக்கு அந்த சம்பவத்தை குறிப்பிட்டு 'அந்த தவறை நான் செய்திருக்கக் கூடாது' என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் வைகோ, 2001-ஆம் ஆண்டு திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துரோகம் செய்ததற்காக ஏன் வருத்தப்படவில்லை? ஜெயலலிதா வைகோவை பொடா சட்டத்தில் சுமார் 18 மாத காலம் தொடர்ந்து சிறையில் வைத்திருந்தார். ஆனால் அது குறித்தெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் 35 ஸீட்டுகள் என்றதும் அதே ஜெயலலிதாவுடன் 24 மணி நேரத்தில் கூட்டணிக்கு சென்று விட்டார். இதெல்லாம் ஒரு அரசியலா? திடீரென்று போயஸ் கார்டன் போனவுடன் ஸீட் பேரம் பேசி, தொகுதிகளை முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட முடியுமா? அப்படியென்றால் ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன என்றுதான் அர்த்தம். இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஜெயலலிதாவிடமும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இப்படி இரட்டை வேடம் போடும் மனிதர் தான் வைகோ. 2001 முதல் பல ஆண்டுகள் அவருடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தேன். 2014-ல் என் மனைவி சரளா இறந்தபோது ஒரு உறவினர் என்பதால் துக்கம் விசாரிக்க வந்தார். அதன் பிறகு நான் 2015 வாக்கில் கலைஞரிடம் 'வைகோவை மீண்டும் நம் கூட்டணிக்கு கொண்டு வரலாமே' என்று கேட்டேன். அப்போது அவர் 'ஏன்யா உனக்கு இந்த வேலை?' என்றார். நான் நான்கு நாட்கள் தொடர்ந்து வற்புறுத்தியதும் 'சரி ஃபோனை போடுய்யா, பேசுவோம்' என்று கூறினார். உடனே வைகோவை ஃபோனில் பிடித்து இருவரையும் பேச வைத்தேன். 'சரி நடந்ததாக இருக்கட்டும். தமிழரசு பையனுக்கு திருமணம். ராதாவுடன் ஸ்டாலினையும், தமிழரசையும் அனுப்பி வைக்கிறேன், அழைப்பிதழ் கொடுக்க! திருமணத்துக்கு வந்து விடுங்கள்' என்றார் கலைஞர். இந்த திருமணத்திற்கும் வைகோ வந்தார். மேடையில் கலைஞரை ஓஹோ என்று புகழ்ந்து பேசினார். பின்னர் முரசொலி மாறனின் அம்மா (கலைஞரின் சகோதரி) மறைந்து போனார். அதற்கும் வைகோ கோபாலபுரத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கலைஞர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் 'நாங்க இரண்டு பேரும் இணைவதில் என்ன தவறு?' என்கிற மாதிரி பேட்டியும் கொடுத்து விட்டார். இது எல்லாமே வைகோ தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சம்மதித்து விட்டார் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த பத்து நாளில் வைகோ திடீரென்று ஃபோன் செய்து 'ஸாரி ராதா, நான் தி.மு.க. கூட்டணிக்கு வர இயலாது. நானும், இரண்டு கம்யூனிஸ்ட்களும், திருமாவளவனும் தனி அணி அமைக்க முடிவு செய்து விட்டோம்' என்று கூறினார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கலைஞர் 'வைகோ வேண்டாம்' என்று சொல்லியும் நான்தான் வற்புறுத்தி இருவரையும் பேச வைத்தேன். இப்போது திடீரென்று இவர் இப்படி சொல்கிறாரே? இதை எப்படி கலைஞரிடம் போய் சொல்வது? என்று நான் நான்கு நாட்களாக அறிவாலயம் பக்கமே போகவில்லை. ஆனால் கலைஞருக்கே விஷயம் தெரிந்து விட, அவர் ஃபோன் போட்டு வரச் சொன்னார். வேறு வழியில்லாமல் போனேன். 'நான்தான் அப்போதே சொன்னேனே.. அந்த ஆள் வேண்டாம் என்று. கேட்டாயா? இப்போது என்னையும் அவரோடு பேச வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டாய் பார்' என்று கடிந்து கொண்டார். நானும் வருத்தப்பட்டேன். பொடாவில் சிறையிலிருந்த வைகோவை சிறைக்கு சென்று சந்தித்தார் கலைஞர். கலைஞரைப் பார்த்ததும் அவரை எவ்வளவு சந்தோஷமாக வைகோ எதிர்கொண்டிருக்க வேண்டும்? மாறாக 'அண்ணே உங்க பேர்ல ஒரு வருத்தம். நீங்க ராதாகிருஷ்ணனை கட்சியில் சேர்த்து இருக்கக் கூடாது' என்று பேச்சை ஆரம்பித்தால் அது எவ்வளவு பெரிய அநியாயம்? என்று புரியாமல் வோகோவிற்காக நீ வாதாடுவது உனக்கே நல்லது இல்லை என்று தெரியவில்லையா என்றார் கலைஞ்சர். ஏதோ நான் ஒருவன்தான் அவரை விட்டு விலகினேனா?
ஆயிரக் கணக்கில் குறிப்பாக பொன்.முத்துராமலிங்கம், மதுரை செ.ராமச்சந்திரன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், மு கண்ணப்பன் இன்னும் எத்தனை எத்தனை பேர்? எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டாக சேர்ந்து வெளியேறியிருந்தால் கூட அது ஒரு சதி திட்டம் என்று கூறலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வைகோவால் காயப்பட்டு தனித்தனியாக வெளியேறினால், தவறு அவர் மேல் என்றுதானே அர்த்தம்? இது வைகோவே தேடிக்கொண்டது. எனவே வைகோவின் அரசியல் அநியாய அரசியல். அதனால்தான் அது எடுபடவில்லை.
கேள்வி: இன்று தி.மு.க.வை விட்டும் நீங்கள் விலகி நிற்க என்ன காரணம்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: 2011-ல் கலைஞர் எனக்கு கோவில்பட்டி தொகுதியை கொடுக்க விரும்பினார். ஆனால் ஸ்டாலின் குறுக்கே புகுந்து சம்பந்தமே இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஸீட் ஒதுக்கினார். பா.ம.க.விற்கு கோவில்பட்டியில் ஒரு கொடிமரம் கிடையாது; ஒரு அலுவலகம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு தொகுதியை, கோவில்பட்டியில் தி.மு.க.வின் முகமாக இருந்த எனக்கு கொடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பா.ம.க.விற்கு ஸ்டாலின் ஒதுக்கினார். அதேபோல் சண்முகநாதனும், கலைஞரும் என்னை ராஜ்யசபாக்கு அனுப்ப முனைந்த போதும் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டார். என் வளர்ச்சிக்கு தி.மு.க.வில் பெரும் தடையாக இருந்தது மறைந்த தூத்துக்குடி பெரியசாமியும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும்தான். அந்த இருவரும் நான் அந்த பகுதியில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். 2016-லும் ஸ்டாலின் எனக்கு ஸீட் கொடுக்காமல் சுப்பிரமணியம் என்ற முன்னாள் சைக்கிள் கடைக்காரர் ஒருவருக்கு ஸீட் கொடுத்து விட்டார். அதன் பிறகு 2019-ல் நான் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எதிர்பார்த்து இருந்தபோது கனிமொழி அங்கே வந்து விட்டார். இப்படியாக என்னுடைய அரசியல் வாழ்வையே நாசம் பண்ணி விட்டனர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் சிலர். என்னைப் பொறுத்த வரை தகுதியே தடை.
(அடுத்த இதழில் முடியும்)
தொகுப்பு: எஸ்.ஜே.இதயா


 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்