Sunday, October 26, 2014

ஓமந்தூரார்

ஓமந்தூரார்
--------------------------------------
பொது வாழ்விலும், அரசியலிலும் தகுதியும், தரமும் தடையாக அக்காலத்திலேயே இருந்தது என மறைந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.மாரிசாமி என்னிடம் அடிக்கடி சொல்வார். அதற்கு சாட்சியாக ஒரு சம்பத்தை சொன்னார்.

                       

நேர்மையாளர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின் பிரதமராக (அப்போது முதல்வரை பிரதமர் என அழைப்பர்) இருந்த பொழுது நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் பணி, பொது வாழ்வில் தூய்மை என்பதை பிசகாமல் பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியினர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை குறை சொல்லி அவரை அவதூறாக பேசியதாகவும், அவரை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என பலர் மெனக்கெட்டதாகவும், நிலைமைகள் மோசமாகி பிரச்சினைகள் கிளம்பி அவருக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் பண்டித நேருவிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்றனர். பெருந்தலைவர் காமராஜருக்கும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்றும் மாரிசாமி சொன்னார்.
                           
                             

எஸ்.எஸ். மாரிசாமி கூறியது: தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், பிரச்சினைகள் முற்றிவிட்டது. ஓமந்தூரார் பதவி விலக வேண்டும். ஒரிசா கவர்னராக இருக்கும் குமாரசாமி ராஜாவை சென்னை ராஜதானிக்கு பிரதமராக்கி விடலாம் என்று முடிவுகள் மேற்கொள்ளபட்டு, ஓமந்தூராரை டி.எஸ்.சொக்கலிங்கம் சந்தித்த போது, அவரிடம் ஓமாந்தூரார் ‘எனக்கு எந்த கசமுசாவும் பிடிக்காது. தப்பு செய்கிறது யாராக இருந்தாலும் விட மாட்டேன். கட்சி எனக்குப் பெரிதில்லை. ஒழுக்கமும் சத்தியமும் தர்மமும்தான் எனது குறிக்கோள். இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த பெரிய பொறுப்பில் இருக்க மாட்டேன்’ என படபடத்தார்.  நேர்மையாளரான ஓமாந்தூராரை பதவியில் இருக்க விடாமல், சில ஆதிக்க சக்திகளால் ஏற்பட்ட பிரச்சினையில், வில்லை முறித்து போட்டுவிட்டு, திருதிராஷ்டிரன் சபையிலிருந்து விதுரர் விலகியதுபோல அசால்டாக விலகினார். இந்த தைரியமும் நடவடிக்கையும் யாருக்கு வரும்? பதவியை விட்டு விலகியவுடன், தன்னுடைய பிரதமர் இல்லமான ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள கூவம் ஹவுசுக்கு வந்தார். அண்ணா சாலையில், தர்பார் ஓட்டலுக்கு எதிரே உள்ள டாக்சி ஸ்டாண்டில் ஒரு காரை பிடித்தார். பிரதமராக இருப்பவர் பதவி விலகினாலும், அரசு வாகனத்தை தன்னுடைய சொந்த ஊர் வரை பயன்படுத்தலாம். ஆனால் பதவி விலகிய அடுத்த நிமிடமே அரசு சலுகைகளை உதறி தள்ளினார். கூவம் ஹவுசிலிருந்த தனது துணிமணிகளையும், தனது புத்தகங்களையும், தனக்கு சொந்தமான பாய், தலையணைகளையும் எடுத்து கொண்டு வடலூருக்கு பயணமானார் என்று எஸ்.எஸ்.மாரிசாமி கூறினார்.

இதைப் பார்க்கும் பொழுது, இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை பற்றி அறிந்திருப்பர். ரஜினியையும், விஜய்யையும் பற்றி பேசும் இளைய சமுதாயம் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒழுக்கத்தின் அடையாளம், நேர்மையின் இலக்கணம், தியாக சுடர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு இந்த தமிழகம் வரலாற்றில் உரிய இடத்தை அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
சென்னை ராஜதானிக்கு பிரதமராக இருந்த ஓ.பி.ஆர், திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அரசு சின்னமாக்கினார். உண்மைகளை சொல்லத் தயங்கக் கூடாது, உள்ளது உள்ளபடி பதிவுகளை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பத்தியின் நோக்கம். நான் குறிப்பிட்ட இந்த செய்திகளை மறைந்த எஸ்.எஸ்.மாரிசாமியே, 29.9.1995 அன்றைய தினமணியில் ‘ரெட்டியார் ஒரு கர்மயோகி’ என்ற கட்டுரையில் இதைவிட தெளிவாக எழுதியுள்ளார். விவசாயிகளின் முதல்வர்; கண்ணியமான தலைவர்; உத்தமர் காந்தியின் சீடர்; கிராமத்து பிரஜை; நாட்டுக்கு உழைத்தவர். எஸ்.எஸ்.மாரிசாமி சொன்ன சில செய்திகளை நாகரிகம் கருதி, பலரை புண்படுத்தும் என்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை. பொது வாழ்வில் நல்லவர்களுக்கு என்றும் தடையும், தடங்கலும்தான். பொது வாழ்வு போராளிகள் இதைக் கண்டு அஞ்சுவது இல்லை.
ஓமந்தூராரின் புகழ் என்றும் ஓங்க வேண்டும்.

 - 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, லீ செஸ்ட்டின் போன்ற நாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைப் பற்றி டெல்லியிருந்து வெளிவரும் பயணியர் ஏட்டின் தலைப்புச் செய்தி.

தமிழக நீர் நிலைகள்

தமிழக நீர் நிலைகள்
------------------------------------------
நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீர நாராயணன் ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் எப்படி அமைத்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. மதுரையிலுள்ள  வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பது, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

                     

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம். வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.  இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது பாதுகாக்க வேண்டாமா என்பதுதான் இன்றைய கேள்வி. ஆம்;  அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை:

பழமை என்று நினைக்காமல் காலம் காலமாக தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆறுகளில் சமூக விரோதிகள் அள்ளும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அள்ளும் மணலில் 80 சதவீதம் வேறு மாநிலங்களுக்கு, சுயநலவாதிகள் விற்று விடுகின்ற வேதனையான நிலைப்பாடு தற்போது உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் தான் தமிழகத்திற்கு பயன்படுகிறது. அதுவும் கொள்ளை லாபத்தில் மணலை விற்கின்றனர்.

மழைக் காலங்களில் வரும் வெள்ளத்தை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி நீரை சேமிக்கலாம். காவிரியில் மட்டும் 60 தடுப்பு அணைகள் கட்டலாம்.

கிராமங்களில் ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டுறவோடு, ஒரு காலத்தில், தங்கள் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர் வாறியதுண்டு. அப்பாவி விவசாயி, விவசாய நிலத்திற்கு மாட்டு வண்டியில், தற்போது வண்டல் எடுக்க முடியவில்லை. அதற்கு சட்டம் தடை போடுகின்றது. ஆனால், மணல் கொள்ளையர்கள் லாரி லாரியாக அள்ள இன்றைக்கு சட்டம் வழி செய்கின்றது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதால் குளங்களும், ஏரிகளும் தூர் வாறப்பட்டு நீரின் கொள்ளளவைக் கூட்டி, தேவையற்ற தாவரங்கள் அழிக்கப்பட்டு, தண்ணீரின் அளவு நீர் நிலைகளில் அதிகமாகும். வண்டலும் விவசாயத்திற்கு பயன்படும். இதற்கு அரசின் தடைகள் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தூர் வாறப்பட்ட குளங்களும், ஏரிகளும் அதற்கு பின் இதுவரை முழுமையாக தூர் வாறப்படவில்லை. அப்படியே தூர் வாறினாலும் அதில் ஊழலால் சரியான பணிகள் நடப்பதில்லை. அதிலும், அரசு பல தடைகளை போட்டுள்ளது.

           

அய்.நா. மன்றம், எதிர்காலத்தில் உலகில் 1.8 பில்லியன் மக்கள் சுகாதாரமான தண்ணீர் இல்லாமல், வறட்சியில் தவிப்பார்கள் என்று ஒரு அறிக்கையில் சொல்லி உள்ளது. குறிப்பாக தமிழக பகுதிகளும் இதில் அடங்கியுள்ளது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பகத்தோப்பு; முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, காவிரி, ஒக்கேனக்கல், பாலாறு, பொன்னியாறு என்று கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுடன் பல நதி நீர் பிரச்சினைகள் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு, எப்பொழுது தீர்வு கிடைக்குமோ என்று தெரியவில்லை. தமிழகத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி மட்டும்தான் நமக்கு முழுமையாக பயன் அளிக்கிறது.  மழை வெள்ளத்தால் வருகின்ற தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்த கூடிய நிலையில் நம்முடைய நீர் நிலைகள் தயாராக இல்லை. இதனை நாம் சரியாக கவனிக்க தவறுவோமானால் தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தான நிலையை தமிழகம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

மழை நீர் 40 சதவீதம் கடலுக்கும், 35 சதவீதம்  பூமி வெப்பத்தினால் ஈர்க்கப்படுகிறது. 10 சதவீதம் நிலத்தடி நீராகிறது. இப்படி ஒரு புள்ளி விவரம் இன்றைக்கு உள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் குறைவது மட்டுமல்லாது சுவை தன்மை மாறி, சவர் தண்ணீராகிறது.

பிரம்மபுத்திராவிலிருந்து 18,437 கன மீட்டர் தண்ணீர் வீணாகிறது. அதேபோல், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் படுகையிலிருந்து 3,640 கன மீட்டரும், மகாநதியில் 2,546 கன மீட்டரும், காவிரியில் 660 கன மீட்டர் தண்ணீர் கடலுக்கு செல்கின்றது. இந்தியாவில் கடலுக்கு செல்லும் நதி நீரில் பாதியை, நீர் நிலைகளில் சேமித்தால் எதிர்காலத்தில் விவசாயத் தொழில், மற்றைய தேவைகளுக்கு பயன்படும். நீர் மேலாண்மையும் அதன் பயன்பாட்டிலும் விவசாயம் மற்றும் குடிநீர், தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில்  ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு, முறையான நீர் மேலாண்மை உத்திகளை வகுக்க வேண்டும். இச்சிக்கலில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நமக்கு பெரும் கேடு விளையும் என்பதை உணர வேண்டும். மக்கள் தொகை பெருக்கமும், தேவைகளும் அதிகரிக்கின்ற நிலையில் இப்பிரச்சினையில் இதயசுத்தியோடு கடமைகளை ஆற்ற வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
இது அவசியம்! அவசரமும்கூட.. ..

 -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதம்
----------------------------------
சாகித்திய அகடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம்.  பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தான்), 1919ஆம் ஆண்டு கர்தார் சிங் ஹித்காரியின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியர் பணியோடு இலக்கியம், படைப்பாற்றல்வாதியாக திகழ்ந்தார். 1948ஆம் ஆண்டு டெஹ்ராடூனிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்தார் நிறைமாத கர்ப்பிணியான அம்ரிதா ப்ரீதம். ரயிலின் வேகமும், சப்தமும் அவரை எரிமலையாய் குமுறச் செய்தது. காரணம் இதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, அவர் பாகிஸ்தானிலிருந்து டில்லிக்கு பயணம் செய்ய வைத்தது. இந்த பிரிவினைக்கு சாட்சியாக உணரப்பட்ட அவர், இதற்கு முன் அகதியாய் லாகூரிலிருந்து டில்லிக்கு உயிர் தப்பி ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

                           

டெஹ்ராடூன் - டில்லி ரயில் பயணத்தின் போது, ‘அஜ் அகான் வாரிஸ் ஷா’  என்ற வரிகளில் தொடங்கும் கவிதையை எழுதினார். அந்த பஞ்சாபி கவிதை, இந்திய பிரிவினையின் கோரத்தை கடுமையாக கூறியது. 1943ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில், ஆயிரகணக்கானோர் மாண்டதை கேள்விப்பட்ட அம்ரிதா ப்ரீதம், ‘லோக் பித்’ (மக்கள் கோபம்) என்ற படைப்பை வெளியிட்டார். அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர், 1960ல் தனது கணவரிடமிருந்து பிரிந்து, தனது திருமண வாழ்வின் கசப்பை கதைகளாக எழுதினார். புகழ்பெற்ற ஓவியரான இம்ராஸோடு இறுதிவரை இணைந்து வாழ்ந்தார்.

இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், ஜப்பானிய மொழிகளில் வந்துள்ளது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக டாக்டர் தேவ், கோரே ககாஸ், உன்சாஸ்தின், சாகர் அவுர் சீபியான், ரங் கா பட்டா, தில்லி கி காலியான், தேராவன் சூரஸ், யாத்ரி, ஜில்லாவதன் போன்றவற்றை கூறலாம். காலா குலாப், ராசிதி டிக்கெட், அக்ஷரான் கோ சாயீ ஆகியவை அவரது சுயசரிதைகளாக கருதப்படுகின்றன. கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள இவர் நாக்மணி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பஞ்சாப் ரத்தன் விருது, 1956இல் சாகித்திய அகடமி, 1969இல் பத்மஸ்ரீ, 1973இல் டில்லி மற்றும் பஞ்சாப் பல்கலை கழகங்கள் வழங்கிய இலக்கிய விருது, 1979இல் பல்கேரிய அரசின் உயர்ந்த விருது, 1982இல் ஞானபீடம், 1987இல் விஸ்வபாரதி, பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருது, பத்ம விபூஷண், 2004இல் சாகிதிய அகடமியின் பெல்லோஷிப்  என இவரின் இலக்கியத்திற்கு கிடைத்த விருதுகள் ஏராளம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1986-92 கால கட்டத்தில் இருந்தார்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கால் ‘இலக்கியத்தின் ராணி’ என்று அழைக்கப்பட்ட அம்ரிதா ப்ரீதம், தனது 86ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு காலமானார். இலக்கியத்தில் சாதித்த பெண். வாழ்க்கையில் சோகமும், மகிழ்ச்சியும் இல்லாத நிலையில், நல்ல இலக்கிய வரவுகளை நாட்டிற்கு அளித்த இந்த பெண் ஆளுமையை நாம் அனைவரும் அறிய வேண்டும். இரண்டு வரிகளில் கவிதை எழுதி விட்டாலே, சிலர் மேலுக்கும் கீழுக்கும் குதிக்கும் இந்த உலகில், பல அற்புதங்களை படைத்த அம்ரிதா ப்ரீதம் ஒரு அமைதியான நதி!

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு
--------------------
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, திருவிழாக் காலங்களில் கோவில்களில் நடத்தப்படுகிறது. இதில் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில், பேச்சு மொழியில் கடவுள்களின் வரலாற்றை இசைப்பார்கள். கிராமங்களில் சிறு தெய்வங்களுக்கு நடத்தப்படும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டே பிரதானமாக இருக்கும். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரசப் புலவர் இதனை உருவாக்கியவர் என்றும், அருதக்குட்டிப் புலவரே வில்லிசையை தருவித்தவர் என்றும் இரு கருத்து நிலவுகிறது. வில்லுப்பாட்டின் எளிமை, இனிமை போன்றவை நம்மை ஈர்க்கும். வில்லிசைக் குழுவில் வலது பக்கப் பாட்டுக்காரர், பின்பாட்டுக்காரர், குடம் அடிப்பவர், ஆர்மோனியம் வாசிப்பவர், தபேலா இசைப்பவர், ஜால்ரா அடிப்பவர், ஒடுக்கு அடிப்பவர் என ஏழு பேர் அங்கம் வகிப்பர்.

வில்லை வளைச்சு
அம்பை மாட்டினா
சொல்லும் செயலாகும் - தம்பி
சொல்லும் செயலாகும்
என்ற நாட்டார் பாடல், இக்கலைக்கு வில்லுப்பாட்டு என்று பெயர் வர காரணமாக கூறுகிறது.


                       

வில்லுப்பாட்டுக் கலைக்குத் தேவைப்படும் கருவிகளில் மூலக்கருவியாக கருதப்படுவது விற்கதிராகும். இது பனங்கம்பு, பிரம்பு அல்லது முங்கில் வகைகளால் செய்யப்படுகிறது. இதன் இரண்டு முனைகளிலும் வண்ணத் துணிகள் கட்டப் பட்டிருக்கும். இந்த இரண்டு முனைகளைவும் இழுத்து நாண் கட்டப்பட்டு, இரு பக்கமும் பக்கத்திற்கு நான்கு என இரும்பு வளையம் பொறுத்தப் பட்டிருக்கும். கதைகளை ஆவேசமாக வெளிப்படுத்த உதவுவது உடுக்கு கருவி.
சிறு தெய்வக் கதைகளே பெரும்பாலும் பாடப்படுகிறது. அய்யனார், நீலி, சுடலைமாடன்; மேலும் சீதா கல்யாணம், கிருஷ்ணன் கதை; கலப்பு மணம், சாதி தீங்கை  சொல்லும் முத்துப்பட்டன், தோட்டுக்காரியம்மன், வன்னியடி மறவன் போன்ற சமுதாயக் கதைகளும்; ராஜாக்கள் கால கதைகளில் ஐவர் ராஜாக்கள் கதை, இரவிக் குட்டிப் பிள்ளை போர் போன்றவை அதிகமாக பாடப்படுகின்றன. கோவில்களில் மட்டுமே பாடப்பட்டு வந்த இக்கலை, பின்பு பொது மேடைகளிலும் பாடப்பட்டது. பொதுவுடைமை மேடைகளில் பிரசார சாதனமாக இக்கலை பயன்படுத்தப்பட்டது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தோவானை சுந்தரம் பிள்ளை, புன்னார்குளம் கோலப் பிள்ளை போன்றவர்களால் வில்லுப்பாட்டு திரைப்படத் துறையிலும் தன் தடம் பதித்தது. கலைவாணர் தனது வில்லுப்பாட்டில் பழைய உடுக்கு, குடம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஆர்மோனியம், டோலக், பம்பை, கிளாரினட் பயன்படுத்தியதுடன், வில்லுப்பாட்டுக்கே உரிய சோக ரசத்தை மாற்றி, தன்னியல்பான நகைச்சுவையாக பாடினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லிசைக்கு தனி மவுசு உண்டு. நட்சத்திரக் கலைஞர் அவர். பழைய பாரம்பரியத்துடன் நவீன உத்திகளை வில்லுப்பாட்டில் புகுத்தியவர் செவல்குளம் தங்கையா புலவர் ஆவார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சீடர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு குழு, தற்பொழுது நவீன வில்லுப்பாட்டுக் குழுவாக திகழ்கின்றது. கலைமாமணி ராஜலட்சுமி, நெல்லை பாக்கிய லட்சுமி, சுப்பராயபுரம் வேல்கனி போன்ற பெண் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். வில்லிசையில் இன்னும் பல கலைஞர்களை நினைவு கூறவேண்டும்.

 -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

Saturday, October 25, 2014

கலாசேத்ரா

கலாசேத்ரா
--------------------------
                         

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. என்.கோபால்சாமி தலைமையில் கலாசேத்ரா நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ருக்மணி அருண்டேலின் முயற்சியாலும், உழைப்பாலும் நிறுவப்பட்டது இந்த ஒப்பற்ற நிறுவனம். உலக அளவில் சென்னை மாநகருக்கு கலாசேத்ரா ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. இதன் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் சமீப காலங்களில் நடந்தன. திரு. என்.கோபால்சாமி தற்போது பொறுப்பேற்றுள்ளார். நேர்மையான அதிகாரி. இவர் தலைமையில் கலாசேத்ராவிற்கு நல்ல நிர்வாகமும், அதன் கலைப் பணிகள் நல்லபடியாக அமையும் என்றும் நம்புகிறோம்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு
-------------------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலையையும், அமைதி பள்ளத் தாக்கையும் பாதுகாக்க மாதவ காட்கில், அதன்பின் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழுக்கள் அமைக்கப் பட்டன. இந்த குழுக்களின் அறிக்கையும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் வழங்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்த அறிக்கைகளை அமல்படுத்தக் கூடாது என பல போராட்டங்களும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் 1,29,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும், 37 சதவீத பகுதிகளின் சுற்றுச் சூழல் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கல்குவாரி நடத்துபவர்களும், இயற்கை வளங்களை சுரண்டுபவர்களும், மரங்களை வெட்டுபவர்களும், வனங்களில் மாளிகைகள் கட்டுபவர்களும் சுயநலத்திற்காக காட்கில், கஸ்தூரிரங்கன் அறிக்கைகளை எதிர்த்து போராடினர். தனிப்பட்டோரின் சுயநலத்தை கருத்தில் கொண்டு மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கைகளை கிடப்பில் போட்டது. அதே நடவடிக்கையை மோடி அரசும் கடைப்பிடிக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

                                     



இயற்கை என்பது ஒரு அமைப்பு. இயற்கையை சுரண்டவோ, அழிக்கவோ மானுடத்திற்கு உரிமை இல்லை. இயற்கையை சுரண்டுவதன் மூலம் மழை வளம், தூய்மையான காற்று போன்ற அருட்கொடைகளை இழந்து வருகின்றோம். யானைகள் போன்ற வன விலங்குகள் இயற்கை அழிக்கப்படுவதால் மக்களின் வசிப்பிடங்களுக்கு வலசைகள் மாறி வருகின்றன. மானுடம் இதை சிந்திக்க வேண்டும். மனித நேயத்தை எப்படி மதிக்கிறோமோ, அதேபோன்று இயற்கையையும் அதன் வளங்களையும் மதிக்க வேண்டும். டார்வின் கோட்பாடுகளை மனதில் கொண்டு இயற்கையை பேணி காக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து காட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பதுகாக்கப்பட்ட கருப்பு பணம்

பதுகாக்கப்பட்ட கருப்பு பணம்
-------------------------------------


சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு வழங்க இருப்பதாக தெரிகின்றது. நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் இப்பிரச்சினை முடிவுக்கு வருகின்றது. சட்டத்திற்கு புறம்பாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும். சுவிட்சர்லாந்து HSBC வங்கியில் கருப்பு பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் 20 பேரின் பெயர்கள் மத்திய அரசின் கைவசம் உள்ளது. கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்துள்ள, கிட்டத்தட்ட 136 பேர்கள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஆதாரமற்ற செய்தியாக வெளியே வந்துள்ளது. இன்னும் இதில் தொடர்புடையவர்கள் எத்தனை பெயரோ தெரியவில்லை. கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய எவருக்கும் கருணை காட்டாமல், எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன்


இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன்
-------------------------------------------------
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன், தனது 86ஆவது வயதில் இன்று காலமானார். 48 வயதில் சினிமா உலகில் நுழைந்து, பராசக்தி, மனோகரா, சிவகங்கைச் சீமை, ஆலயமணி, ரத்தக்கண்ணீர், ராஜா தேசிங்கு, பூம்புகார், மணிமகுடம், காஞ்சித் தலைவன், குமுதம், முதலாளி, அவன் பித்தனா, முத்து மண்டபம், தைப் பிறந்தால் வழி பிறக்கும், குலதெய்வம், வானம்பாடி, கைகொடுத்த தெய்வம் போன்ற மக்களின் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். தெளிவான தமிழ் உச்சரிப்போடும், புராணப் படங்களில் நடிக்கக் கூடாது என்ற அணுகுமுறையில் பிடிவாதமாக இருந்தவர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்தியாவில் நடிகர் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக ஆனது எஸ்.எஸ்.ஆர்.தான். எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
                                  

1980களின் துவக்கத்தில் சேடப்பட்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது திரு. பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜர்) கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். எனக்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தரவேண்டுமென்று, 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுமாறன் விரும்பியபோது, விளாத்திகுளம் தொகுதி கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் போட்டியிடுவது சிரமம் என்று நான் மறுத்துவிட்டேன். அப்போது நெடுமாறன் அவர்கள், பரவாயில்லை. ராதாவுக்கு நாடாளுமன்றம் தான் பொறுந்தும். அடுத்தத் தேர்தலில்.. .. என்று மானசீகமாக சொன்னார். நெடுமாறனை விட்டு வெளியே வந்தபின், நான் யாரை நம்பி உழைத்தேனோ, அந்த தலைமை என் பெயரை சொல்லி நாடாளுமன்றத் தொகுதியை வாங்கிக் கொண்டபின், வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளும் எனது உழைப்பை சுரண்டிய தலைமை. ஏனெனில், ‘தகுதியே தடை’. அது வேறு விஷயம். அந்தச் சூழலில் நெடுமாறன் மதுரை மத்திய தொகுதி, தஞ்சை ராமமூர்த்தி தஞ்சை தொகுதி, ஏ.எஸ். பொன்னம்மாள் நிலக்கோட்டைத் தொகுதி, பாரமலை மானாமதுரை தொகுதி, திண்டுக்கல் அழகிரிசாமி வேடச்சந்தூர் சட்டமன்றத் தொகுதி, சேடப்பட்டித் தொகுதியில் செல்வராஜூம் வேறு பலரும் போட்டியிட்டனர்.

தேர்தல் பணிப் பொறுப்பின் காரணமாக சேடப்பட்டி தொகுதிக்கு போகும் போது டி.வி. நாராயணசாமி அவர்களை டி.கல்லுபட்டியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. டி.வி. நாராயணசாமி எங்கள் கோவில்பட்டி பகுதியில் உள்ள எஸ்.துரைசாமிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர். அவர், அருகிலிருந்த எஸ்.எஸ்.ஆரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அன்று வெளிவந்த தினமணியில் நடுபக்க கட்டுரையாக எனது சேதுக் கால்வாய் பற்றிய பத்தி வந்திருந்தது. உடனே எஸ்.எஸ்.ஆர். உங்கள் கட்டுரையை தினமணியில் படித்தேன். அண்ணாவின் திட்டத்தை விவரமாக எழுதி உள்ளீர்கள் என்று சொன்னார். அன்றைய அறிமுகத்திலிருந்து பல நேரங்களில் அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. என்னுடைய நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அவரை அழைப்பேன். அவரோ, வேண்டாம் தம்பி என்பார். ஆனால் நூல்களை படித்துவிட்டு, கருத்துகளை சொல்ல நேரில் வருமாறு அழைப்பார்.

அண்ணா வெளிநாடுகளுக்கு செல்லும்பொழுது அவருக்குத் தேவையான கோர்ட், பேண்ட்ஸ் போன்றவைகளை எஸ்.எஸ்.ஆரே பொறுப்பெடுத்து கவனத்துடன் தைத்துக் கொடுப்பார். இதனை கண்டு அண்ணா சொன்னாராம்; உன்னுடைய பழைய கோர்ட் சட்டைகளை தானே சரி செய்து தர சொன்னேன். ஏன் புதிதாக தைத்தாய் என அன்பாக கடிந்து கொண்டாராம். ஒரே ஒரு கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, இந்திரா காந்தி கொண்டு வந்த ராஜமானியம் ஒழிப்பு மசோதா விவாதத்தின்போது அவையிலிருந்து வெளியேறினார். காரணம் கேட்டதற்கு, கழிப்பறைக்கு சென்றேன் என இவர் விளக்கம் சொன்னது ஏன் என்று தெரியவில்லை.

எல்டாம்ஸ் ரோடில் உள்ள தன்னுடைய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு தமிழகத்தில் உள்ள அனைவரையும் அழைத்து, மாநாடு போல நடத்தி விருந்து படைத்தார் எஸ்.எஸ்.ஆர். வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சில வேதனைகளை விழுங்கிக் கொண்டு, நண்பர்களிடம் இன்முகத்துடன் பேசுவார். பழைய நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எம்.ஆர். ராதா, பாலாஜி, முத்துராமன், கல்யாண குமார் போன்ற நவரச நடிகர்களின் வரிசையில் இருந்த எஸ்.எஸ். ஆரும் இறுதியாக நம்மிடமிருந்து சென்று விட்டார்.



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

என்று தணியும் இந்த சினிமா மோகம்?

என்று தணியும் இந்த சினிமா மோகம்? 
-------------------------------------------------------
இன்றைய தமிழ் தி இந்துவில், ப.முரளிதரன் எழுதிய என்று தணியும் இந்த சினிமா மோகம்? என்ற பத்தி யதார்த்தமானதாகும். உள்ளது உள்ளபடி சொல்லி உள்ளார். தமிழகத்தில் சினிமாவும், தொலைக்காட்சித் தொடர்களும், அரசியல் முதல் சகலத்தையும் முடிவு செய்வதாக உள்ளது. இது வேடிக்கையான, ஆபத்தான நிலைமையாகும்.



கல்வியறிவு குறைந்துள்ள பீகாரில் சத்ருகன் சின்ஹாவின் அலை கிடையாது. ஆந்திராவில் ஒரு காலத்தில் சினிமா மோகம் மக்களின் முடிவுகளில் இருந்தது. இப்போது அங்கு அது குறைந்துவிட்டது. கர்நாடகத்தில் ராஜ்குமார், கேரளாவில் பிரேம் நசீர், இந்தி மண்ணில் தர்மேந்திரா, கபூர்கள், ஷாருக்கான் போன்றோரின் தாக்கத்தை, அங்குள்ள மக்கள் வேறு விஷயங்களிலும் பிரச்சினைகளிலும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த மோகம்? என்று தணியும் இந்த தாக்கம்? விதியே தமிழ் சாதியை என் செய்ய என்னும் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

போபாசீமா

போபாசீமா
---------------------


30 ஆண்டுகளுக்கு மேலாகியும், போபால் விஷ வாயு விபத்திலிருந்து மக்கள் விடுபட முடியவில்லை. போபாசீமா என்ற கொடிய நிகழ்வு இன்று வரை போபால் மக்களை ஆட்டிப் படைக்கிறது. இதற்கு விடியல் எப்போது என்று தெரியவில்லை? அரக்கத்தனமான சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பி நிம்மதியாக உலகம் சுற்றுகின்றனர். போபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் மூலையில் முடங்கி கிடக்கின்றனர். என்ன அறமோ?

REVISITING POLITICAL THEORY AND THOUGHT

REVISITING POLITICAL THEORY AND THOUGHT
---------------------------------------------------


கல்கத்தாவைச் சேர்ந்த அன்புக்குரியத் தோழி சுக்லபா சக்ரவர்த்தி, பண்டைய கிரேக்க, ரோம, இந்திய, இங்கிலாந்து அரசியலிலிருந்து துவங்கி இன்றைக்குள்ள அரசியல் கோட்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் REVISITING POLITICAL THEORY AND THOUGHT என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை புரோகிரஸ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர். மிகவும் பயனுள்ள நூல். அரசியல் கோட்பாடுகளை அறிய விரும்புபவர்கள் அவசியம் இந்த நூலை படிக்க வேண்டும். அரசு என்றால் என்ன? அரசு எப்படி அமையும்? என்பதிலிருந்து இன்றைக்கு பேசப்படும் சுயநிர்ணய உரிமை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவரை பாராட்ட வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ஆவுடையக்காள்

ஆவுடையக்காள்
-----------------------


நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவுடையக்காள் குறித்து ஒரு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பாரதியின் ஆதர்ச பெண் கவியான ஆவுடையக்காள் குறித்து அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

மது போதையில் விமான ஓட்டி

மது போதையில் விமான ஓட்டி
-------------------------------------------------


ரஷ்யாவில் எதிர்பாராத வேதனையான செய்தியாக ஒரு விமான ஓட்டி, குடித்துவிட்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்கியுள்ளார். குடி போதையில் இருக்கும் ஒருவர் விமானத்தை ஓட்ட எப்படி அனுமதிக்கப்பட்டார்? இது உலக அளவில் முக்கியப் பிரச்சினையாக கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

சென்னை வானொலி நிலையம்

சென்னை வானொலி நிலையம்
-------------------------------------------------
1930இல் ரிப்பன் கட்டடத்தில் துவக்கப்பட்ட சென்னை வானொலி நிலையம், 1938இல் இங்கு காட்டப்பட்டுள்ள எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இன்றைக்கு எழும்பூரில் உள்ள அந்த கட்டடத்தை செஞ்சிலுவை சங்கம் பயன்படுத்தி வருகின்றது. 1950களில் இலங்கை வானொலியில் விளம்பரத்தோடு ஒலிபரப்பிய திரைகானங்கள் தமிழக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இலங்கை வானொலியில் ஹமீது, அவருடைய சகோரர் ஹமீன் இருவரும் இணைந்து நடத்திய இந்த விளம்பர நிகழ்ச்சியை தமிழக பட்டி தொட்டி வரை கேட்கலாம். சென்னை வானொலி அந்தளவு வரவேற்பை பெறவில்லை.



சென்னை வானொலி நிலையம் 1967இல் விவிதபாரதி நிகழ்ச்சி மூலமாக விளம்பர நிகழ்ச்சிகளை நடத்த துவங்கியது. இன்றைக்கு தொலைக்காட்சிகள் அதிகமாக வந்ததால், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை பலர் கவனிக்காமல் இருக்கின்றனர். வானொலி தரமான நிகழ்ச்சிகளை தர வேண்டும். பெரிய வானொலி பெட்டிகள், அதன்பின் டிரான்ஸிஸ்டர்கள், கையளவு டிரான்சிஸ்டர்கள், கிராமப்புறங்களில் பஞ்சாயத்து ரேடியோக்கள் என இருந்த அந்த கால மோகம் இன்றைக்கும் மனதில் மலரும் நினைவுகளாக உள்ளது.

சேதுக் கால்வாய்

சேதுக் கால்வாய்
---------------------------------


50 ஆண்டுகளுக்கு முன், 22.10.1964 அன்று, அன்றைய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ்பகதூர் தூத்துக்குடிக்கு வந்து, சேதுக் கால்வாய் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். ஆர். வெங்கட்ராமன், கே.டி.கோசல்ராம், ஏ.பி.சி. வீரபாகு, ராஜாஜி குஞ்சிதபாதம் போன்றோர் மத்திய அமைச்சருக்கு மேளதாளத்துடன், வ.உ.சி. கல்லூரி அருகே சிறப்பான வரவேற்பை அளித்தனர். அப்போது அவர், ரூ.21 கோடி அளவில் இந்த சேது சமுத்திர திட்டம் நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்தார். இவ்வாறு 50 ஆண்டுகளுக்கு மேல் பல நடவடிக்கைகளுக்குப் பிறகும், இந்த 160 வருட திட்டம் நிறைவேறவில்லை.

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்




தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்
----------------------------------------------------------------------------
இந்தியாவில் முதன் முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண். இன்றைக்கு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் முறை வாக்காளர்களுக்கு உள்ளது.





பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது. தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது குறித்து, 1993 தினமணியில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை, எனது உரிமைக்குக்கு குரல் கொடுப்போம் நூலில் உள்ளது.

அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது :

#தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதி மொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான். தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும் (Right to Recall) உரிமை மக்களுக்குத் தரப்பட வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டின் மக்களே ஆவார்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.

திரும்ப அழைத்தல் என்ற முறை ஜோன்ஸ் ஙண் ஹாரியான் (Tex Ch. App. 109 SW - 21 - 251,254 Black Law Dictionary 1989 Edition, Jones Vs Harian) என்ற வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், இலஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் (Nepotism) போன்ற ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாடு ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் லோக்பால் என்ற மசோதா, ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில், முதன் முதலில் திரும்ப அழைத்தல் என்ற கோட்பாட்டுக்கு குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான்.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டுமானால், காவிரிப் பிரச்சினையில் காவிரி விசாரணை தீர்ப்பாணை இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரியும், கர்நாடக அரசு சற்றும் சிந்திக்காமல் மௌம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரிப் பிரச்சினையில் காவிரி தீர்ப்பாணயம், இடைக்கால நிவாரணம் அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்படிப்பட்ட சாதகமான தீர்ப்பு இருந்தும், தமிழக அரசு அதை சற்றும் சிற்திக்காமல் இருந்தது. தற்பொழுது, முதலமைச்சர் காலங்கடந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால்கூட ஆட்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் முறை ஜனநாயகத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.
இதேபோல மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுகொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு பல குழுக்களை அமைத்தும், இந்தக் குழுக்களின் அறிக்கையினை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பொழுதும், மத்திய அரசு இந்தத் திட்டத்தைப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் ஆகும். இப்படிப்பட்ட செயலுக்குக் கூட, மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களால் திரும்ப அழைக்கும் உரிமையை ஒரு கொள்கையளவில் செயல்படுத்தலாம்.

இதுமட்டுமன்று, ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு வாய்ப்பாக Checks and Balances இருக்கும்.

சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106இல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு, கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.
திரும்ப அழைக்கும் செயல்முறையை நம் தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும். சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறிவிட்டால், தன்னுடைய பதவியை இழக்கிறார். அதேபோல தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்குப் பணியாற்றத் தவறினால், தங்களுடைய பதவியை இழக்கக் கூடிய தன்மையை, நம் இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். சமீபத்தில் நீதித் துறையிலும் ஊழலென்று தினமும் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள், அஞ்சித் தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குப்படுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.
திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். ஆனால், இந்தக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுமா என்று இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.

இதுவரை நடைப்படுத்தாத பயனற்ற நமது சட்டங்கள் எழுநூறா?

இதுவரை நடைப்படுத்தாத பயனற்ற நமது சட்டங்கள் எழுநூறா?
---------------------------------------------------------------------------------
நமது நாட்டில் கறிக்குதவாத, நடைமுறையில் இல்லாத கிட்டத்தட்ட 700 சட்டங்கள் வெறும் எழுத்துக்களாகவே நூற்றாண்டுக்கு மேல் இருக்கின்றன. இதில் 200 சட்டங்கள் இன்றைக்கு செயல்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று, பிரதமர் அலுவலக முன்னாள் செயலாளர் ஆர்.ராமானுஜம் தலைமையில் அமைந்த குழு ஆய்ந்து கண்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 248வது சட்டக் கமிஷன் அறிக்கையும் இதுகுறித்து பரிந்துரை செய்துள்ளது.

வெறும் சட்டங்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லாமல், மக்கள் நல அரசுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் பிரச்சினைகள், நாட்டில் இன்றைக்கு சவாலாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நதி நீர் வாரிய சட்டத்தை (River Board Act) இதுவரை நடைமுறைப்பபடுத்தவே இல்லை. அந்த சட்டம் அமல்படுத்தப் பட்டிருந்தால் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். இதுவரை பயனளிக்காத சட்டப் புத்தகங்களை சட்ட அமைச்சகத்தில் அடுக்கி வைத்துக் கொண்டும், பயனுள்ள சட்டங்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.




R. Ramanujan, Former Secretary in the Prime Minister’s office, headed a committee which identified more than 200 laws which are irrelevant today. Law Minister Ravi Shankar Prasad is even more enthusiastic. He says 287 laws. Some of which are a century and a halt old. Will be scrapped this winter. He wants ro remove another 700 acts of Parliament which have permitted the government of the day to spend money from the Consolidated Fund of India.

ராஜபக்ஷேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகிறேன் - இலங்கை உச்சசிநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா

ராஜபக்ஷேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகிறேன் - இலங்கை உச்சசிநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா
------------------------------------------------------------------------------------------------

கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சரத் என். சில்வா, 2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹம்பந்தோட்டா வழக்கில் ராஜபக்ஷே தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கின் ஆதாரங்கள் தொடர்பான சந்தேகத்தின் பலனால் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். அவ்வாறு இல்லாது, அவர் அப்போது தண்டிக்கப்பட்டிருந்தால் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகி இருக்க முடியாது என்று கூறினார். அதில் நான் சரியாக அணுகவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார். ராஜபக்ஷேவின் தற்போதைய நடவடிக்கைகளையும் சரத் என். சில்வா கண்டித்துள்ளார்.

ராஜபக்சே துவக்கிவைத்த யாழ் தொடர்வண்டி நேற்று கவிழ்ந்து விட்டது.


Yaal express which was launched by Rajapaksa in Srilanka,the train service from Jaftna to Colombo has been derailed.





ராஜபக்சே துவக்கிவைத்த யாழ் தொடர்வண்டி நேற்று கவிழ்ந்து விட்டது.

Friday, October 24, 2014

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்
---------------------------------------------------

இரண்டு நாள்களுக்கு முன்னால் நடைபெற்ற கட்டபொம்மன் நினைவு நாளில், ஜெகவீரபாண்டியனாரின் ‘பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’ நூலை வெளியிட திட்டமிட்டிருந்தேன். 2010லிருந்தே இதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தாலும் என்னுடைய வேகத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியிட முடியவில்லை. இதற்கான ஏற்பாடுகளை செய்தும் ஒத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளபட்டேன்.

புதுவை அதிகாரி பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ

புதுவை அதிகாரி பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ
---------------------------------------------------------------------
கிராமியப் பொருளாதாரத்தை நன்கு அறிந்த வி.ஏ.வாசுதேவ ராஜூ அய்.ஏ.எஸ்., புதுவை அரசில் பணியாற்றியவர். அவர் எழுதிய Face to Face with Readers என்ற நூலை பற்றி இந்த வார இந்தியா டுடே தமிழ் இதழின் நூல் அறிமுகம் பகுதியில் பார்த்தேன். இவர் திறமையான அதிகாரி மட்டுமல்லாது, பொருளாதார துறையில் சில காலம் கோவில்பட்டி வேங்கடசாமி கல்லூரியில் பணி செய்தார் என்றும் நினைக்கின்றேன். 1980களில் இவரை சந்தித்தபோது நாட்டின் பல பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக பேசினார்.


நேரு, ராஜாஜி, காமராசர், பேரறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, கலைஞர், சி.சுப்பிரமணியம் போன்ற ஆளுமைகளுடன், இந்தியாவின் திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதித்தவர் என்ற செய்திகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த முயற்சிக்கு பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ அவர்களை பாராட்ட வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
--------------------------------------------------------------------------------
அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், தனது 91வது வயதில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மயங்கி விழுந்து காலமாகி விட்டார். 1952இலிருந்து 1967 வரை பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பணியாற்றி உள்ளார். வள்ளலார் கொள்கையை பின்பற்றும் காந்தியாவாதியாக இருந்தவர். மக்களுக்கு பயன்படும் வகையில், குறைந்த விலையில், பல நூல்களை பதிப்பித்தவர். மனித நேயம், எவருக்கும் உதவும் சிந்தனை, தொழில், கல்வி, விவசாயம், இலக்கியம், நூற்பதிப்பு என பல்வேறு வகையில், தமிழ்கூறும் நல் உலகிற்கு நற்பணி ஆற்றியவர். சக்தி ஏட்டில் அவர் எழுதும் கட்டுரைகள் படிக்க ஆர்வத்தைத் தூண்டும்.



பல நேரங்களில் நான் அவரை சந்தித்தது உண்டு. அப்போதெல்லாம் என்னிடம், “என்ன தம்பி, இப்படி நல்ல எண்ணத்தில் பலருக்காக, பல ஆண்டுகளாக உழைக்கிறீர்கள். இதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் உழைப்பைப் பெற்றவர்கள் உங்களைக் கண்டு கொள்ளவில்லையே” என வருத்தத்தோடு கூறியுள்ளார்.

என்னுடைய ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற தினமணி போன்ற ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு, 17.11.1994இல் அணிந்துரை வழங்கினார். அதில் என்னைப் பற்றி குறிப்பிடுகையில், ‘ஆர்வத்தோடும், துடிப்போடும் உழைப்பவர்’ என்று அவர் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பழகிய காலத்தில், அவர் இளைஞர்களை ஊக்குவித்ததை பார்க்க நேர்ந்ததுண்டு. வயது வித்தியாசம் பார்க்காமல் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனமாக கேட்பார்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தேர்தல் ஆணையத்தின் திடீர் உத்தரவு....


தேர்தல் ஆணையத்தின் திடீர் உத்தரவு....
--------------------------------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 324ன்படி தேர்தல் நடைமுறைகள், கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்றவைக் குறித்து, 29.09.2014 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கட்சிகளில் வரவு செலவுகள், தேர்தல் செலவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 01.10.2014 முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. தேர்தல் நியாயமான முறையிலும், பாதுகாப்போடும் நடைபெறுவதற்கு கீழ்காணும் வரையறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பொருளாளர்கள் அனைத்து மாநிலங்களிலும், வங்கிகளில் கணக்கை தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு விவரங்கள், கட்சியின் தலைமையிடம் இருக்க வேண்டும்.
வங்கி கணக்குகள் அவ்வப்போது தேவை ஏற்பட்டால், அரசு அங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் தணிக்கை செய்யவும், வருமான வரித் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
செலவுக்காக ரூ.20,000-/= வரை ரொக்கமாக வழங்கலாம். அதற்கு மேற்பட்ட தொகை காசோலைகள் மூலம் மேற்கொள்ள வேண்டும். பணமாக வழங்கக் கூடாது.
கட்சி அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன், பிற பணப் பட்டுவாடாக்கள் ரொக்கமாக வழங்காமல், வங்கி மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட மீறி செலவு செய்யக் கூடாது.
நன்கொடைகள் போன்றவை வங்கியில் அங்கீகாரம் பெற்ற காசோலை, வரைவோலை மூலமாகத்தான் பரிவர்த்தனை நடைபெற வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாக வழங்கக் கூடாது. காசோலை எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் அனைத்து வகையிலான வரவு செலவுகள், அந்தந்த ஆண்டிற்கு அரசால் அங்கீகரிகக்கப்பட்ட தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.
அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் அந்தந்த மாநில தேர்தல் ஆணையரிடம் இந்த கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள், முழுமையான வரவு செலவு அறிக்கையை அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்.
பொதுக் கூட்டங்களில் உண்டியல் மூலம் திரட்டப்படும் நிதி குறித்த வரவு செலவை, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
மக்களைவை தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேச தொகுதி எனில் ரூ.54 லட்சம் வரை செலவு செய்யலாம். மாநில சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரையும், யூனியன் பிரதேச சட்டமன்ற வேட்பாளர் ரூ.20 லட்சம் வரை செலவு செய்யலாம் என வரையறுக்கப் பட்டுள்ளது.
1998 கால கட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மறைந்த இந்திரஜித் குப்தா தலைமையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, தென் கொரியா போன்ற நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்கின்றது.
அதுபோன்று இந்தியாவிலும் செயல்படுத்த முடியுமா என ஆராய அமைக்கப்பட்ட குழு சென்னை வந்து, தலைமைச் செயலகமான கோட்டையில் அரசியல் கட்சிகளை சந்தித்து கருத்து கேட்டபொழுது, பல நாடுகளில் வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை விளக்கி விரிவான மனுவை அளித்தேன். அந்த மனுவில், மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தேர்தல் நடைமுறைகள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து சொல்லி இருந்தேன். இதனைப் படித்துவிட்டு, குழுவின் தலைவரான இந்திரஜித் குப்தா, விவரமான மனு இது என குறிப்பிட்டார்.
அக்குழு இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு, அரசியல் கட்சி, அறிஞர்கள், என பல தரப்பினரிடம் கருத்து கேட்டும் அறிக்கையை சமர்ப்பித்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்த அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை குப்பைக் கூடைக்குப் போய் விட்டதா?




Press Release

ECI transparency guidelines to political parties for party funds and election

expenditure effective from Oct 01, 2014

New Delhi: The transparency guidelines issued by the Election Commission of India to all political

parties for party funds and election expenditure became effective from yesterday, October 01, 2014.

The Election Commission of India (ECI) on 29th August, 2014, issued guidelines to all the political parties

listing ways to increase transparency and accountability in party funds and election expenditure not

only during elections but also in other times. The ECI stated that “Concerns have been expressed in

various quarters that money power is disturbing the level playing field and vitiating the purity of

elections”. Hence, in order to curb the abuse of money power, the ECI had, on 3rd October, 2013,

sought suggestions and inputs from all recognised parties, most of which supported the need for

transparency while a few had other suggestions and views.

Based on the suggestions received from the political parties, the ECI has stated that effective from 1st

October, 2014, all political parties are required to keep and maintain books of accounts and

documents so as to enable calculation of the parties’ income. The parties are required to maintain

accounts based on the guidance note issued by Institute of Chartered Accountants of India (ICAI) and

that the accounts need to be audited and certified by qualified practicing Chartered Accountants.

These accounts are to be submitted annually to the ECI along with a copy of the Auditor’s report by

Another important guideline issued states that “...no deduction shall be allowed on the contributions

made in cash by any person or company to a political party”. It also states that the parties need to

maintain details of donors donating specifically during public rallies, except petty sums. Similarly, if

the expenditure incurred by the parties exceeds Rs 20,000, then the payment should be made by

cheque/draft and not by cash unless there is a lack of banking facility or towards payment of party

While providing lumpsum amounts to candidates for campaigning during elections, political parties

shall not exceed the ceiling prescribed for expenditure by the candidate and that the paymentshould

be made only through crossed cheque/ draft or bank transfer.

It was not mandatory for the unrecognised political parties to submit their election expenditure

statement to the ECI but the circulated guidelines also state that the unrecognised parties shall file

their expenditure statements with the Chief Electoral Officer (CEO) of the state where the party’s

The copies of these guidelines were not only circulated among all political parties but were also copied

to the CEOs of all states, the Chairman of the Central Bureau of Direct Taxes (CBDT) and to the

President of the ICAI. For a copy of the circulated guidelines, click here.

With Haryana and Maharashtra Assembly Elections scheduled to be held on 15th October, 2014,

financial transparency during elections, especially poll funding is important. While analysing the

election expenditure incurred by the national parties during the Assembly Elections in 2009, ADR had

reported that a total of Rs 49.99 crores was collected by the national parties by cash during Maharashtra Assembly Elections while the parties collected a total of Rs 11.47 by cash during

Haryana Assembly Elections held in 2009.

ADR has also filed a petition with the Delhi High Court requesting for a process of regular submission of election expenditure statements by political parties and that it should commence a year prior to

the polling date announced by the ECI till the results are declared. ADR, in its petition, has recommended the implementation of the recommendations made in the 170th Law Commission

Report on Electoral Reforms, to introduce a ceiling on expenditure by parties and also that the parties

submit their statements of income and expenditure a month before declaration of elections and once a week during elections.

செங்கோட்டை பெண் கவிஞர் ஆவுடையக்காள்

செங்கோட்டை பெண் கவிஞர் ஆவுடையக்காள்
--------------------------------------------------------------------
செங்கோட்டை ஆவுடையக்காள் பெண் கவிஞர் காரைக்கால் அம்மையார் போன்று சீர்திருத்தக் கருத்துக்களை சொன்னவர். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அக்காலத்தில், தைரியமாக கருத்துகளை வெளிப்படுத்தியவர். இந்த ஆவுடையக்காளை எத்தனைப் பேருக்குத் தெரியும்? என தெரியவில்லை.


ஆவுடையக்காளின் கவிதை மீது கொண்ட உணர்வால், தனக்கு கவிதைகள் மீது ஈர்ப்பு வந்ததாக மகாகவி பாரதி கூறியுள்ளார். 2012ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு சென்றபோது, அங்குள்ள தென் கிழக்கு ஆசிய மையத்தில், இவரைப் பற்றி என்னிடம் விசாரித்ததும் உண்டு. எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் ஆவுடையக்காள் பற்றிய பதிவு வருமாறு:


தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பெண் ஞானிகளில் ஒருவர் ஆவுடை அக்காள். 350 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டையில் பிறந்து மிக இளம் வயதிலேயே உயர்ந்த ஞான யோக அனுபவங்களைப் பெற்றார். ஆவுடை அக்காள் இளமையில் விதவையாகி விட்டதால் அவருக்கு ஏற்பட்ட வைராக்கியத்தின் காரணத்தால், மெய்ஞானத்தில் ஆர்வம் செலுத்தினார். தமிழகத்தில் அவ்வையார், காரைக்கால் அம்மையார் போன்று ஆவுடை அக்காளும் பாக்கள் புனைவதில் ஒப்பற்றவராவார். இவருடைய பாக்கள் ஏடுகளாகச் சிதறிக் கிடந்தன. அதை ஸ்ரீ ஞானானந்த தபோவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
ஆவுடை அக்காளைப் பற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ சிறப்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. குற்றாலம் மலையேறிச் சென்றவர் திரும்பவில்லை. இவருடைய பாடல்களைச் சிறுசிறு குழுக்களாகச் செங்கோட்டை, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்பள்ளம், தென்காசி, சங்கரன்கோவில், திருவைகுண்டம், திருச்செந்தூர், நாகர்கோவில், சுசீந்திரம் போன்ற பகுதிகளில் மதிய உணவுக்குப் பின்பு பாடுவார்கள். திருவைகுண்டம் கோமதி ராஜாங்கம் அவர்கள், ஆவுடை அக்காள் பற்றிய பாடல்களையும் வாழ்க்கைக் குறிப்பையும் வெளிக்கொணர்ந்தார். ஆவுடையக்காளின் வேதாந்தக் குறவஞ்சி, வேதாந்தப்பள்ளு, சூடாமலைக்கும்மி என்ற பல பாக்களை நெல்லைத் தமிழில் கிராமப்புற இலக்கியங்கள் போன்று படைத்துள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைக்கு உள்ள சமுதாயச் சூழலில் புரட்சிகரமான கருத்துக்களை கவிதைகள் மூலமாக வெளியிட்டது சாதாரண செய்தி அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா

தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா
-------------------------------------------------------------------
நேற்று (02.10.2014) வெளிவந்த ‘தி இந்து’ தமிழ் பதிப்பில், திரு. எஸ்.இராமகிருஷ்ணன் ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ ஆங்கில ஏடு பற்றி பதிவை செய்துள்ளார். இல்லஸ்டிரேட்டட் வீக்லி படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். மறைந்த குஷ்வந்த் சிங் போன்ற நாம் விரும்பும் படைப்பாளிகள் இந்த இதழின் ஆசிரியர்களாக பணியாற்றி உள்ளனர். இந்த ஏடு 1990களின் துவக்கத்தில் நின்று விட்டது. கடைசி பத்தாண்டுகளாக வெளிவந்த இதழ்களை பைண்டு செய்து வைத்துள்ளேன். அவற்றை எடுத்து திரும்ப படிக்கும்பொழுது, ஆர்.கே. நாராயணன் படைப்புகளை படிப்பது போல, ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.

இந்த இதழின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளேன். பிரிட்டிஷ் நந்தி இல்லஸ்டிரேட்டட் வீக்லியின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த காலத்தில், நண்பர் கே.பி. சுனில், தமிழ்நாடு சிறப்பு செய்தியாளராக இருந்தார். கே.பி.சுனில், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சசிகலா நடராஜனின் நடவடிக்கைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். இது நடந்தது 1992ம் ஆண்டு என நினைக்கின்றேன். அந்த கட்டுரையை எதிர்த்து மான நஷ்ட வழக்கு ஒன்றை சென்னை எழும்பூர் பெருநகர் முதன்மை நீதிமன்றத்தில் எம்.நடராசன் தொடுத்தார். அந்த வழக்கில் ஆஜராகி, நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு, நந்தி மற்றும் கே.பி.சுனில் விடுதலை ஆனார்கள்.


பிரிட்டிஷ் நந்தி சென்னைக்கு வந்தால் என்னை சந்திப்பதும் உண்டு. அவர் திரைத் துறையிலும், இலக்கியத் துறையிலும், ஆங்கில கவிதை உலகிலும் சிறந்து விளங்குகிறார். அவர் காலத்தில், இல்லஸ்டிரேட்டட் வீக்லி டேபிளாய்ட் சைசுக்கு மாற்றப்பட்டது. இந்த ஏடு வெளிவராமல் போனது, அதை வாசிக்கும் இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் இழப்பாக அமைந்தது.

ஈழ இனப்படுகொலை குறித்த ஆவணங்களை ஐ.நா.வுக்கு அனுப்புங்கள்!

ஈழ இனப்படுகொலை குறித்த ஆவணங்களை ஐ.நா.வுக்கு அனுப்புங்கள்!
----------------------------------------------------------------------------------


ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் துவங்கி உள்ளது. இதுதொடர்பான மனுக்களை, ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் அனுப்பலாம். வருகின்ற 30.10.2014 தேதிக்குள் இந்த மனுக்களை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனோடு ஆதாரங்களாக நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் இருந்தாலும் அனுப்பலாம்.

OHCHR INVESTIGATION ON SRI LANKA
UNOG - OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland.

தமிழில் புகார்களை அனுப்புபவர்கள் பிரிட்டனில் உள்ள கீழ்க்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்
224, Basement Office
Preston Road,
Wembley HA9 8NF UK.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, ஈழ பிரச்சினையில் நாம் விரும்பிய தீர்வு கிடைக்கவில்லையென்றாலும், தற்போது கிடைத்துள்ள, ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் இந்த விசாரணையை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...