Friday, May 1, 2015

மங்கலதேவி கண்ணகி கோட்டம் - Kannaki Kottam - Cumbam.

நாளை மறுநாள்  03-05-2015 சித்திரா பௌர்ணமி. இதையொட்டி கம்பம் பள்ளத்தாக்கில்  வண்ணாத்திப் பாறை அருகே அமைந்துள்ள “கண்ணகி கோட்டத்திற்கு” தமிழகத்திலிருந்து பயணிகள் செல்வது வாடிக்கை.

1975லிருந்து கேரளா கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டு,  இங்கே வழிபடச் செல்லும் தமிழக மக்களை கேரள காவல் துறையினர் தாக்குவதும்,  தடுப்பதுமாக தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருந்தனர்.

தேவையில்லாத பதட்டங்களை உருவாக்கி, வழிபடச் செல்லும் தமிழர்களை பீதிக்கு உட்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக கேரள காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனை தீவிரத்தை அடைந்த போது, கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது என்ற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன்.


சென்னை உயர்நீதிமன்றமும் என்னுடைய வழக்கை விசாரித்து,
“அங்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, அமைதியாக வழிபாடு நடத்தவும் உரிய நடவடிக்கைகள் இருக்கவேண்டும் ” என்று கருத்தைத் தெரிவித்தது. இதன்பின்  கேரள காவல்துறையினர் தங்கள் அத்துமீறல்களை நிறுத்திவிட்டு அடக்கி வாசித்தனர்.

அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கிற்கு இந்தப் பிரச்சனையில் தலையிடும்படி கடிதம் எழுதினார்.

இந்த சமயத்தில் பழ.நெடுமாறன் அவர்களோடு நானும் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, கண்ணகி கோட்டத்திற்கே சென்று சேதாரமான கண்ணகி சிலையினை தூக்கி நிறுத்தி, வழிபாட்டுக்கு உரிய தேவைகளை சீர்செய்தோம். இந்நிகழ்வில்  குமரி அனந்தனும் திடீரென எங்களோடு இடையில் வந்து  கலந்துகொண்டார்.
இந்த செய்தி அன்றைய பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக வெளிவந்தன.

இன்றைக்கும் கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இப்பகுதி தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தும், கேரளா அது தங்களுடைய மாநில எல்கைக்குட்பட்ட பகுதி என்று நாட்டாண்மை செய்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதில் வேதனை என்னவென்றால், இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 07-04-15 அன்று  தேக்கடி வனத்துறை விருந்தினர் விடுதியில் நடத்திய கண்ணகி கோட்டம் சம்பந்தமான கூட்டத்தில்,  தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த கூட்டத்தில்,  இடுக்கி மாவட்ட ஆட்சியர் சதீஷ், கண்ணகி கோட்டம் கேரளாவுக்குச் சொந்தமானது என்று சொன்னபோது, தேனி மாவட்ட ஆட்சியர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தது இன்னும் வேதனையைத் தருகின்றது.

1965 காலகட்டத்திலிருந்து சிரமமில்லாமல் கண்ணகி கோட்டத்திற்குச் சென்று ஏழு நாட்கள் தமிழர்கள் விழா நடத்தினார்கள். 1980லிருந்து கேரள அரசு ஏழுநாட்கள் நடைபெற்ற விழாவை மூன்று நாட்களாகக் குறைத்தது. 1986லிருந்து ஒருநாள் விழாவாகக் குறைத்து கடுமையான சோதனைகளை மேற்கொண்டு, ஒருகட்டத்தில் தமிழர்கள் மீது லத்தி சார்ஜும் செய்தார்கள் கேரள காவல்துறையினர்.

இப்படியாக தொடர்ந்து  முறையற்ற தன்மையில் நடந்துகொள்ளும் கேரளக் காவல் துறையோடு தமிழகம் ஏன் இணங்கிப் போகவேண்டும்?. இது மேலும் நம் உரிமைகளை இழக்கின்ற நிலைப்பாட்டுக்கே இட்டுச் செல்லும்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட சர்வேகளில் கூட கண்ணகி கோட்டம்  தமிழகத்தைச் சேர்ந்த பூமி என்றே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. 1913 மற்றும் 1915ம் ஆண்டுகளில் ஆங்கில அரசு வெளியிட்ட வரைபடங்களிலும் தமிழகத்தில் எல்லைகளிலேயே கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது.

நாடு விடுதலைக்குப்பின் 1976ம் ஆண்டு தமிழக, கேரளா அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயில் கூட, கண்ணகி கோட்டம் தமிழக எல்கைக்குள் அமைந்தது என்றுதான் முடிவெடுத்தனர்.

இவ்வளவு அடிப்படை ஆதாரங்கள் இருந்தும், கேரளா அரசு முல்லைப்பெரியாரிலும், நெய்யாறிலும், பம்பாறு  போன்ற நீராதாரப் பிரச்சனைகளில் காட்டுகின்ற அராஜகப் போக்கையே கண்ணகிக் கோட்டத்திலும் காட்டுகின்றது.

தினமணியில் 25-04-2008 அன்று கண்ணகி கோட்டம்  குறித்து,
நான் எழுதிய கட்டுரையும் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் ஆவணங்களையும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-05-2015.

*******************************************************************************







 மங்கல தேவி கண்ணகி கோட்டம் - தினமணி கட்டுரை

சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் நீதிகேட்டு,கணவனை இழந்த துக்கத்தில் கம்பம் அருகே உள்ள குமுளி மலை உச்சியில் கண்ணகி தன்னை மாய்த்துக் கொண்டதாக வரலாறு.

பின்பு சேரன் செங்குட்டுவனால் குமுளி மலையுச்சியில் 1337 மீட்டர் உயரத்தில் கண்ணகிக்கு சிலை அமைக்கப்பட்டது.  அந்த இடமே  மங்கலதேவி கண்ணகிக் கோட்டமாக விளங்குகின்றது.


 “மங்கலமடந்தைக் கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர்வரைச்
சேணுயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கற் பிடர்தலை திரம்பிய
அணியகம் பலவுல ஆங்கவை
அடையது
கடிப்பகை நுண்கலும் கவரிதழ்க்
குறுங்கலும
இடிகலப்பு அன்னா இழைந்துரு நீரும்
உண்டோர் கணை”
 
(சிலப்பதிகாரம், வரந்தரு காதை)

 “மதுரை மாநகரை அழித்த பின்பு கண்ணகி கணவனால் வானூர்தி மூலம் அழைத்துச் சென்ற காட்சியைக் குறவர்கள் கண்டு செங்குட்டுவனிடம் கூறினார்கள். இமயத்திலிருந்து சேரன் செங்குட்டுவன் கல் கொண்டு வந்து செங்குன்ற மலையில், யானை போன்ற குன்றின் கழுத்துப் பக்கத்திலுள்ள வேங்கை மலைச் சோலைகளின் நடுவில், நீர்ச்சுனைகள் அருகில் கண்ணகிக் கோட்டத்தை அமைத்தான்” என்கிறது சிலப்பதிகாரம்.

சோழ நாட்டிலுள்ள காவிரிப் பூம்பட்டினத்தை விட்டுக் கணவனுடனும் கௌந்தியடிகளுடனும்  புறப்பட்ட கண்ணகி, மதுரையிலுள்ள ஆயர் கோயில் மாதரை என்பாளிடம் வந்து சேர்கிறாள்.

சிலம்பு விற்க மதுரை சென்ற கோவலன், ஊழ்வினை காரணமாக மதுரையை ஆண்ட பாண்டிய அரசனால் கொலை செய்யப்படுகிறான். செய்தியறிந்த கண்ணகி, தன் கணவன் கள்வனல்ல என்பதைப் பாண்டிய மன்னனுக்கு உணர்த்திவிட்டு, கொண்ட கோபம் தணியாது தனது இடது மார்பைத் திருகி எடுத்து மதுரை மீது வீசி எறித்து நகரைத் தீக்கிரையாக்கினாள்.

மதுரை நகரின் கிழக்கு வாயில் வழியாகத் தன் கணவனோடு உள்ளே நுழைந்த கண்ணகி, தன்னந்தனியாக மேற்கு வாயில் வழியாக வெளியில் வந்து, பேரியாற்றங்கரையின் வழியாக 14 நாள்கள் நடந்து திருச்செங்குன்றம் என்ற நெடுவேள் குன்றம் என்னும் சுருளிமலையின் தொடர் சிகரத்தை அடைகிறாள். சுருளிமலை என்பது இராவண சம்ஹாரத்துக்காகத் தேவர்கள் கூடி இரகசியம் பேசிய தலம் என்று புராணம் கூறுகிறது.

சுருளிமலையின் தொடர்ச்சியான நெடுவேள் குன்றத்தின் உச்சியிலுள்ள சமவெளிப் பகுதியில், வேங்கை மரத்தடியில் நின்ற கண்ணகியை மலைவாழ் மக்கள் பார்த்து பயபக்தியோடு ‘தாங்கள் யாரோ?’ என்று வினவ, ‘கணவனை இழந்தவள்’ என்ற ஒரே பதிலுடன் தனது பேச்சை நிறுத்திக்கொண்டாள்.

அந்த சமயம், வான்வழியாகப் புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துக் கொண்டு வானுலகை அடைந்து விட்டான். இதைக் கண்ட மலைவாழ் மக்கள், இந்த அம்மையார் யாரோ ஒரு தெய்வம் என்றெண்ணி, அவளை, ‘மங்கலதேவி’ என்கிற பெயரைச் சூட்டி வழிபட ஆரம்பித்தனர். ஆகவேதான், அம்மலைக்கு ‘மங்கலதேவி மலை’ என்ற பெயரும் ஏற்பட்டது.

கண்ணகி  எரித்து மதுரை அழித்த பின்பு, அந்த நகரமே மழையில்லாமல் துன்பத்திற்கு ஆட்பட்டதாகவும்.  மதுரை எரிந்தது போன்று சேர நாட்டிற்கும் ஏதும் தீங்கு நேரக் கூடாதென்று செங்குட்டுவன் அஞ்சியதாகவும் தெரிகிறது. எனவே மங்கலதேவி மலையில் சேரன் செங்குட்டுவன்  இந்தக் கண்ணகிக் கோட்டத்தினை அமைக்கின்றான்.
சேரன் கட்டிய கோட்டத்திற்கு இராஜராஜ சோழன் முதன் முதலாகத் திருப்பணி செய்தான் என இலங்கை வரலாற்று நூலான ‘குளவம்சம்’ கூறுகிறது.

இராஜ ராஜ சோழனையடுத்து, பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியன், கனக வீர தொண்டைமான் ஆகியோர் இக்கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.  நாயக்க மன்னர்கள் காலத்தில், புன்செய் ஆற்றுத் தம்பிரான்கள் வழிவந்தவர்கள் மானியங்களும், திருப்பணிகளும் இக்கோயிலுக்குச் செய்துள்ளனர்.  இங்குள்ள  சேதமடைந்த கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் இன்றும் பளிச்சென தெளிவாகத் தெரியும் நிலையில் உள்ளன.

பிற்காலக் கல்வெட்டுகளில் கண்ணகி பூரணி என்று அழைக்கப்படுகிறாள். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கண்ணகி என்ற பத்தினித் தெய்வ வழிபாடு பூரண சந்திர (பௌர்ணமி) நாளில் நடக்கிறது. கன்னட நாட்டில், கண்ணகி கதையில் சந்திரா என்ற பெயரில் கண்ணகியைக் கூறுகின்றனர். இப்படிப் பல செவிவழிச் செய்திகளும் இலக்கியத் தரவுகளும் கண்ணகிக் கோட்டம் பற்றி நமக்கு கிடைத்துள்ளன.

கி.பி.1672ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலத்தில்,  காட்டூர் பகுதியில் நடந்த போரில் இக்கோவில் தமிழகத்தைச் சார்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. 1883ஆம் ஆண்டு கூடலூர் மக்கள் அரசு அனுமதி பெற்று இக்கோட்டத்திற்கு செல்லும் பாதையைப் புதுப்பித்தனர்.

1839 மற்றும் 1896 ஆகிய நில அளவை ஆவணங்கள், 1893ஆம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம், 1916ஆம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட், அரசு ஆணை 182 (1.5.1918) சென்னை, பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின்படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி இது தமிழகத்திலுள்ளதே என முடிவு செய்தனர். அதன் பின்பு தமிழக அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் இப்பிரச்சினையையொட்டி சர்வே செய்து, கண்ணகி கோட்டம்,  தமிழகத்தில் அமைந்துள்ளது என்று தெளிவாக்கியுள்ளனர்.

1959 வரை கண்ணகி கோவிலை கவனிக்காத கேரள அரசு, 1976லிருந்து ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கியது.   வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகி கோட்டம்  பிரச்சினையில் கேரளாவோடு எவ்வித தீர்வும் ஏற்படாததால்,  1986ல் கண்ணகிக் கோட்டத்தில் 90 வருடங்களுக்கு முன்பு,  உடைந்த சிலையை சீர் செய்து, பளியங்குடி- கண்ணகி கோவில் சாலையை அமைக்க வேண்டும் என்றும், தமிழக பயணிகள் கண்ணகிக் கோட்டம் செல்லும்பொழுது கேரள காவல்துறையினரால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், கண்ணகி கோட்டம் தமிழகத்திற்கு சொந்தம் என்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுவை (W.P.No 8758/1988) பொதுநல வழக்காகத் தாக்கல் செய்தேன். நீதிமன்றம் குறிப்பிட்ட ரிட் மனுவை விசாரித்து, தமிழகப் பயணிகளுக்கு பாதிப்புக் கூடாது என்று கருத்து தெரிவித்தது.

1,850 ஆண்டுகளுக்கு முன்னே அமைந்த கண்ணகி கோட்டத்திற்கு,  சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காலம் காலமாக சித்திரா பௌர்ணமி அன்று சென்று கண்ணகியை பத்தினி தெய்வமாக வழிபட்டு வருவது தொடர்கின்றது.

4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணகிக் கோட்டம் இதமான குளிரில் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில், ஒரே பரப்பளவில் அமைந்துள்ளது. கல்கூரையுடன் பழைய கட்டடக் கலையுடன் நான்கு கட்டிடங்கள் அமைந்துள்ளன.  கட்டிடங்களின் முகப்பு பகுதி மதுரையைப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.

கண்ணகி வழிபாடு என்பது, நாட்டுப்புற திராவிடத் தெய்வ வழிபாடாகும். கண்ணகியைத் துர்க்கையம்மன், பகவதியம்மன் போன்ற நாட்டுப்புற தெய்வங்கள் போல மங்கலதேவி என்றும் பலர் அழைக்கின்றனர். மங்கல தேவி வழிபாடுகள் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. இலங்கையில் வைகாசி மாதத்தில் மங்கல தேவி வழிபாடுகள் இன்றும் நடக்கின்றன.


இக்கோட்டத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து இரண்டு பாதைகள் வழியாகச் செல்லலாம். மற்றொரு பாதையாகக் குமுளி வழியாகப் பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து தேக்கடி வரை சென்று காட்டுப் பாதை வழியாக கண்ணகி கோட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

குமுளியிலிருந்து கண்ணகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு மலைமீது  12கி.மீ பயணிக்க வேண்டும். இதில் 9கி.மீ செங்குத்தான மலைப்பயணம்,  மேலும் 6 கி.மீ அடர்ந்த காட்டுப் பகுதி.



தமிழக எல்லையிலிருந்த கண்ணகி கோட்டம் திட்டமிட்டு மத்திய அரசாலும், கேரள அரசாலும் கேரள மாநிலத்துக்குச் சொந்தமான இடம் என்று சொல்லிக்கொள்வது கயைமையான செய்தியாகும்.

ஒருகாலத்தில் வண்டிப்பாதை எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வந்த கேரளா, இன்றைக்கு கண்ணகி கோட்டமே எங்களுக்குச் சொந்தம் என்று உரிமைகொண்டாடும் நிலைப்பாட்டில் உள்ளது.

கேரளா, தமிழகத்திடமிருந்து அரிசி காய்கறிகள், பால், இறைச்சி, முட்டை,  வைக்கோல், மணல் போன்ற அத்யாவசியப் பொருட்களை எல்லாம் பெற்றுக் கொண்டு நன்றியில்லாமல் வஞ்சிக்கின்றது.


குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லைமாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு அணை, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி மற்றும் அச்சன் கோவில்-பம்பை -தமிழக வைப்பாற்றோடு இணைப்பு போன்ற பல நீராதாரத் திட்டங்களுக்கு தமிழகத்தோடு வம்பு செய்யும் கேரளா, கண்ணகி கோட்டத்திலும் அதே போக்கை கடைபிடிப்பது தான் ஒரு சமஸ்டி அமைப்பின் முறையா?  தேசிய ஒருமைப்பாடும், பன்மையில் ஒருமை என்பதும் வெறும் எழுத்தில் மட்டும் தானா?

 -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
 தினமணி
 25-04-2008.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...