Wednesday, March 30, 2016

Cauvery

தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்

காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது.

     

            காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.
 

       2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.
 
       2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.
 
       2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
 
       இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.
 
       கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.
 
       உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.
 
       கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.
 
       28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக்  கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.
 
       காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?
 
        தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.
 
       காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுக.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...