வாங்கிய கடனுக்காக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கைக் காட்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி அழகர். தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கொண்டுதான் ஜீவனம் நடத்தியிருக்கிறார்.
இவர், 2013-ம் ஆண்டு சோழ மண்டலம் ஃபைனான்ஸ் மூலமாக கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார்.
வட்டியுடன் சேர்ந்து மொத்த தொகை 7 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய். இதுவரை ரூ. 5 லட்சம் வரை கடன் அடைத்துள்ளார். டிராக்டரில் மணல் கொண்டு செல்ல அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும், வறட்சியின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறாததாலும், டிராக்டர் மூலம் வருமானம் ஈட்ட முடியாமல் மிகவும் சிரமத்தில் இருந்திருக்கிறார் அழகர்.
இதனால் கடந்த 3 மாதங்களாக தவணை செலுத்த முடியவில்லை. கடன் தவணைக்கான காலம் 2016 -ம் ஆண்டு ஜூலை மாதத்துடன்தான் முடிவடைகிறது. ஆனாலும் கூட 3 மாதங்கள் தவணை கட்ட தாமதம் ஆனது என்பதால், நேற்று முன் தினம் டிராக்டரை ஜப்தி செய்ய அழகர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள் சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள்.
அழகரி அம்மா காசாம்புதான் வீட்டில் இருந்திருக்கிறார். அழகர் கடைத்தெருவில் இருப்பதை விசாரித்து அங்கு சென்ற ஃபைனான்ஸ் ஊழியர்கள், அவரை வீட்டிற்கு அழைத்து வந்து டிராக்டரை ஜப்தி செய்திருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அழகர், உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, நேற்றுக் காலை விஷம் அருந்தியுள்ளார். மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மரணமடைந்திருக்கிறார் அழகர். தனது மகனின் மரணத்திற்கு சோழ மண்டலம் ஃபைனான்ஸ் அதிகாரிகள்தான் காரணம் என்கிறார் அழகரின் தந்தை ஆறுமுகம்.
கடந்த 6-ம் தேதியன்றுதான், தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் டிராக்டர் வாங்கியதற்காக பெற்ற கடனுக்கான சில தவணைகளை கட்ட தாமதமானதால்,டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து, அவரை கடுமையாக தாக்கினார்கள்.
இச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் எடுத்த வீடியோ கடந்த 9-ம் தேதியன்று வாட்ஸ் அப்பில் வெகுவேகமாக பரவி விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாது, மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.
இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள், அதே டிராக்டர் கடன் தவணை தாமதத்திற்காக விவசாயி ஒருவர் தற்கொலை .
No comments:
Post a Comment